88) தக்பீர் கூறுதல்

நூல்கள்: ஜனாஸாவின் சட்டங்கள்

ஜனாஸா தொழுகையில் ருகூவு, ஸஜ்தா போன்றவை கிடையாது. நின்ற நிலையில் சில பிரார்த்தனைகளைச் செய்வது தான் ஜனாஸா தொழுகையாகும்.

அதில் முக்கியமானது அல்லாஹு அக்பர்’ என்று கூறி மற்ற தொழுகைளைத் துவக்குவது போலவே அல்லாஹு அக்பர்’ எனக் கூறி துவக்க வேண்டும்.

‘தொழுகையின் திறவு கோல் தூய்மை (உளூ) ஆகும். அதன் துவக்கம் தஹ்ரீமா (அல்லாஹு அக்பர் கூறுவது) அதனை முடிப்பது தஸ்லீம் (ஸலாம் கொடுப்பது)’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அலீ (ரலி)

நூல்கள்: அபூ தாவூத் 56, 523 திர்மிதி 3, 221,(இப்னு மாஜா: 271),(அஹ்மத்: 957, 1019)

நான்கு தடவை தக்பீர் கூறுதல்

நஜ்ஜாஷி மன்னருக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஜனாஸா தொழுகை நடத்திய போது அவருக்காக நான்கு தடவை தக்பீர் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)

(புகாரி: 1245, 1318, 1319, 1328, 1334, 1333, 3881, 3879)

ஐந்து தடவை தக்பீர் கூறுதல்

ஐந்து தடவை தக்பீர்கள் கூறுவதற்கும் நபிவழியில் ஆதாரம் உள்ளது.

ஸைத் (ரலி) அவர்கள் எங்கள் ஜனாஸாக்களுக்கு நான்கு தக்பீர் கூறி தொழுவிப்பார். ஒரு தடவை ஐந்து தடவை தக்பீர் கூறினார். இது பற்றி அவரிடம் நான் கேட்டேன். அதற்கவர்கள், ‘நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஐந்து தடவையும் தக்பீர் கூறியிருக்கிறார்கள்’ என்று விடையளித்தார்கள்.

அறிவிப்பவர்: அப்துர் ரஹ்மான் பின் அபீலைலா

(முஸ்லிம்: 1589)

நான்கு தக்பீர் கூறுவது தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழக்கமாக இருந்துள்ளது என்பதையும், மிக அரிதாக ஐந்து தக்பீர்கள் கூறியுள்ளனர் என்பதையும் இதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.