90) தக்பீர்களுக்கு இடையே ஓத வேண்டியவை

நூல்கள்: ஜனாஸாவின் சட்டங்கள்

நான்கு அல்லது ஐந்து தடவை தக்பீர் கூற வேண்டும் என்றால் தொடர்ச்சியாக இடைவெளியில்லாமல் தக்பீர் கூற வேண்டும் என்று புரிந்து கொள்ளக் கூடாது.

மாறாக ஒரு தக்பீருக்கும், இன்னொரு தக்பீருக்கும் இடையே கூற வேண்டிய திக்ருகள் உள்ளன. அவற்றை அந்தந்த இடங்களில் கூறிக் கொள்ள வேண்டும்.

முதல் தக்பீருக்குப் பின்…

1 . முதல் தக்பீர் கூறிய பின் அல்ஹம்து அத்தியாயத்தை ஓத வேண்டும்.

நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களைப் பின்பற்றி ஜனாஸா தொழுகை தொழுதேன். அவர்கள் அல்ஹம்து அத்தியாயத்தை (சப்தமாக) ஓதினார்கள். ‘இதை நபிவழி என்று மக்கள் அறிந்து கொள்வதற்காகவே (சப்தமாக) ஓதினேன்’ என்று கூறினார்கள்.

நூல்: (புகாரி: 1335) 

2 . இத்துடன் நமக்குத் தெரிந்த ஏதேனும் அத்தியாயத்தை ஓத வேண்டும்.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் பின்னால் ஒரு ஜனாஸா தொழுகையில் கலந்து கொண்டேன். அவர்கள் அல்ஹம்து அத்தியாயத்தையும், இன்னொரு அத்தியாயத்தையும் எங்களுக்குக் கேட்கும் அளவுக்கு சப்தமாக ஓதினார்கள். தொழுது முடித்ததும் அவர்களின் கையைப் பிடித்துக் கொண்டு இது பற்றிக் கேட்டேன். அதற்கவர்கள் ‘இது நபிவழியும், உண்மையும் ஆகும்’ என்று விடையளித்தார்கள்.

அறிவிப்பவர்: தல்ஹா பின் அப்துல்லாஹ்

நூல்: (நஸாயீ: 1987) (1961)

முதல் தக்பீருக்குப் பின் அல்ஹம்து அத்தியாயத்தை மனதுக்குள் ஓதுவதும், பின்னர் மூன்று தடவை தக்பீர் கூறுவதும், கடைசியில் ஸலாம் கொடுப்பதும் நபிவழியாகும்.

அறிவிப்பவர்: அபூ உமாமா (ரலி)

நூல்: (நஸாயீ: 1989) (1963) 

இரண்டாவது தக்பீருக்குப் பின்…

இரண்டாவது தக்பீர் கூறிய பின் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீது ஸலவாத் கூற வேண்டும்.

முதலில் இமாம் தக்பீர் கூறுவதும், பின்னர் முதல் தக்பீருக்குப் பின் அல்ஹம்து அத்தியாயத்தை மனதுக்குள் ஓதுவதும், பின்னர் உள்ள தக்பீர்களில் குர்ஆனிலிருந்து எதனையும் ஓதாமல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீது ஸலவாத் கூறி, இறந்தவருக்காகத் தூய்மையான முறையில் துஆச் செய்வதும், மனதுக்குள் ஸலாம் கூறுவதும் ஜனாஸாத் தொழுகையில் நபிவழியாகும் என்று ஒரு நபித் தோழர் கூறியதாக அபூ உமாமா அறிவிக்கிறார்.

நூல்: குப்ரா பைஹகீ-6959 , (4/39)

மேற்கூறிய ஹதீஸில் ஸலவாத், துஆ என்ற வரிசையில் சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதால் இரண்டாம் தக்பீருக்குப் பின்னால் ஸலவாத் ஓத வேண்டும்.

ஒவ்வொரு தக்பீருக்குப் பின் இதை ஓத வேண்டும் என்ற கருத்தில் வருகின்ற ஹதீஸ்கள் அனைத்தும் பலவீனமாகும்.

தொழுகையில் ஓதுவதற்காக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கற்றுத் தந்த ஸலவாத்தை ஓதுவது தான் நல்லது.

அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் கமா ஸல்லைத்த அலா இப்ராஹீம வஅலா ஆலி இப்ராஹீம இன்னக்க ஹமீதும் மஜீத்.

அல்லாஹும்ம பாரிக் அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் கமா பாரக்த்த அலா இப்ராஹீம வஅலா ஆலி இப்ராஹீம இன்னக்க ஹமீதும் மஜீத்.

மூன்றாவது, நான்காவது தக்பீருக்குப் பின்…

மூன்றாவது மற்றும் நான்காவது தக்பீருக்குப் பின் இறந்தவரின் பாவமன்னிப்புக்காகவும், மறுமை நன்மைக்காகவும் துஆச் செய்ய வேண்டும்.

ஜனாஸா தொழுகையின் போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பல்வேறு துஆக்களை ஓதியுள்ளனர். அவை அனைத்தையுமோ, அவற்றில் இயன்றதையோ நாம் ஓதிக் கொள்ளலாம்.

அத்துடன் நாம் விரும்பும் வகையில் நமது தாய் மொழியில் இறந்தவருக்காக துஆச் செய்யலாம்.