ஜோதிடர்களின் மாநாடும் புரட்டுகளும்

பயான் குறிப்புகள்: தற்காலிக நிகழ்வுகள்

ஜோதிடர்களின் மாநாடும் புரட்டுகளும்

அகில இந்திய ஜோதிடர்களின் மாநாடு மதுரையில் இரண்டு நாள் நடந்து முடிந்துள்ளது. இந்த ஜோதிடர்களின் மாநாட்டில் உயர்நீதி மன்ற நீதிபதி, முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆகியோர் கலந்து கொண்டதால் இதற்கு ஊடகங்களும் முக்கியத்துவம் கொடுத்து செய்தி வெளியிட்டிருந்தன. ஜோதிடம் என்பதே ஒரு பித்தலாட்டமாகும். இந்த பித்தலாட்டத்தை தோலுரிக்கும் வகையில் ஊடகங்கள் விழிப்புணர்வு செய்திகளை வெளியிட வேண்டுமேயல்லாது ஜோதிடத்தையும், ஜோதிடர்களையும் நம்பும் வகையில் செய்தி வெளியிடுதல் கூடாது.

ஜோதிடம் என்பது அறிவியலுக்கு எதிரானது. அப்படி இருக்கும் போய் தான் நியூசிலாந்து நாட்டின் நிலப்பகுதியும், அதன் தொடர்ச்சியாக கடலில் மூழ்கியுள்ள பகுதியும் ஒரு கண்டம் என்பதைக் கூட ஜோதிடத்தால் வெளிப்படுத்த முடியவில்லை. ஜிலேண்டியா என்ற ஒரு கண்டம் இருப்பதையே ஜோதிடத்தாலும், ஜோதிடர்களாலும் கண்டு பிடித்து சொல்ல முடியவில்லை எனும் போது இவர்களால் வேறு எதை கண்டு பிடித்து சொல்ல முடியும்? என்பதை மக்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்.

ஜாதகம், கைரேகை மூலம் சம்பந்தப்பட்ட மனிதனின் ரத்த சர்க்கரை அளவு, ரத்த அழுத்தம், ஸ்கேன் மூலம் கண்டு பிடிக்கப் படும் அடைப்புகள் என எதையும் அறிய முடியாது எனும் போது அதை வைத்து எதிர்காலத்தை எப்படி கணிக்க முடியும்? என்பதை மனிதன் எண்ணிப் பார்க்க வேண்டும். உலகில் எவ்வளவோ நில நடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. எரிமலைகள் வெடித்துள்ளன. சுனாமி வந்துள்ளது. இதை எந்த ஜோதிடனாவது முன்கூட்டியே கணித்து சொன்னது உண்டா? இவற்றை முன்கூட்டியே கணிக்க முடியவில்லை எனும் போது ஜோதிடம் ஒரு புரட்டு என விளங்கவில்லையா?

குற்ற வழக்குகளில் துப்பு கிடைக்காமல் போலீசார் திணறும் போது அந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. அல்லது சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற வேண்டும் என மக்கள் கோருகிறார்களே தவிர ஜோதிடர்க்காரர்களிடம் குறி கேட்டு குற்றவாளிகளை அடையாளம் காண வேண்டும் என ஒருவரும் சொல்வதில்லை. காரணம் ஜோதிடம் ஒரு புரட்டு. அவற்றால் உண்மைக் குற்றவாளிகளை கண்டு பிடிக்கமுடியாது என்று மக்கள் விளக்கி வைத்திருக்கிறார்கள். அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா இருந்த போது நடந்தது என்ன?

என்று எந்த ஜோதிடனாவது சொல்ல முடியுமா? அப்படி சொல்ல முடியாது என்பதால் தானே ஆறுமுகச்சாமி விசாரணை ஆணையமே அமைக்கப்பட்டுள்ளது. ஜோதிடர்களால் உண்மையைக் கண்டறிய முடியும் என்று இருந்தால் தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டை விசாரிப்பதற்கு நீதிபதி அருணா தலைமையில் ஏன் விசாரணை ஆணையத்தை அமைக்க வேண்டும்? வெற்றிலையில் மை போட்டு கண்டு பிடிக்க வேண்டியது தானே! தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரிப்பதற்கு பதிலாக பத்திரிகைகளில் ஜோதிட குறிப்புகளை எழுதும் ஜோதிடர்களைக் கொண்டு, இதை விசாரிக்கச் செய்திருக்கலாமே!

இதைச் செய்யவில்லை என்பதை வைத்து ஜோதிடம் ஒரு புரட்டு என மக்களின் ஆழ்மனதில் பதிந்துள்ளது என விளங்கவில்லையா? மனிதனின் அறிவை அறியாமை என்ற இருள் மூடியுள்ளது. அந்த அறியாமையின் ஒரு வடிவம் தான் ஜோதிடம். இதை ஊடகங்கள் மக்கள் மத்தியில் பரப்பி, விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். அதை விடுத்து ஊடகங்கள் தங்கள் கடமையை மறந்து, ஜோதிடம் உண்மை என்பது போல் செய்திகளை வெளியிட்டு வருகின்றன. ஜோதிட நம்பிக்கை மனிதனை நரகத்தில் தள்ளியுள்ளது என்பதற்கு ஆயிரம் உதாரணங்களைச் சொல்லமுடியும். மனிதனை ஜோதிடம் நல்வழிப் படுத்தியது என்பதற்கு ஒரு உதாரணத்தையாவது யாராவது சொல்ல முடியுமா?

சாதாரண மனிதன் புலனால் அறியக் கூடிய ஒன்றைத் தான் ஜோதிடனாலும் அறிய முடியும். இதைத் தாண்டி வேறு எதையும் ஜோதிடனால் அறிய முடியாது. மாறாக இறைவனால் மட்டுமே மறைவானவற்றை அறிய முடியும். இதுதான் உண்மையான ஆன்மீகம். இந்த ஆன்மீகத்தை ஊடகங்கள் மக்கள் மத்தியில் பரப்புவதை விடுத்து, ஜோதிடத்தை ஆன்மீகமாக சித்தரிப்பது எந்த வகையிலும் நியாயமல்ல. இந்த நியாயத்தை ஊடகங்கள் ஏற்று, செயல்பட ஆரம்பிக்கும் போது நிச்சயம் நாட்டில் நல்லதொரு மாற்றம் ஏற்படும். இந்த மாற்றத்திற்கு ஊடகங்கள் தங்களை தயார் படுத்த வேண்டும் என்பதே மக்களின் விருப்பமாகும். மக்களின் இந்த விருப்பத்தை ஊடகங்கள் ஏற்று நடக்க முன்வருமா?

 

Source : unarvu ( 29/6/18 )