ஜோதிடம் பொய்யே!
ஜோதிடம் பொய்யே!
மூட நம்பிக்கையை முறியடித்த மாமறைக் குர்ஆன்
உலக மக்களின் வாழ்வைக் கெடுக்கும் மூடநம்பிக்கைகளில் ஒன்று ஜோதிடம் ஆகும். நட்சத்திர ஜோசியம், எண் ஜோசியம், கிளி ஜோசியம், நாடி ஜோசியம், கைரேகை ஜோசியம் என்று பல்வேறு வகையிலான ஜோதிடக் கலைகள் மக்களுக்கு மத்தியில் உலவிவருகின்றன.
நம்முடைய எதிர்காலத்தையும் மறைவான விஷயங்களையும் ஜோதிடர் கண்டறிந்து விடுவார் என்ற நம்பிக்கையில் ஜோதிடர்களிடம் சென்று அவர்கள் கூறுவதை நம்பி தங்களுடைய எதிர்காலத்தையும், பொருளாதாரத்தையும் இழந்தவர்களின் எண்ணிக்கையை கணக்கிட்டுக் கூற இயலாது. இந்த ஜோதிடத்தை நம்பியவர்களில் அதிகமானோர் இதன் மூலம் ஏமாற்றப்பட்டு பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர். கற்பிழந்தவர்களின் எண்ணிக்கையும் மிக மிக அதிகமாகும்.
தமிழக அரசியல்வாதிகள், ஆட்சியாளர்கள் பலர் ஜோதிடர்களின் ஆலோசனைப்படியே தங்கள் செயல்பாடுகளை அமைத்துக் கொள்கின்றர். பச்சை நிறத்தில் சேலை அணிதல், மஞ்சள் நிறத்தில் துண்டு அணிதல், பெயரை நியூமராலஜி அடிப்படையில் மாற்றிக் கொள்வது, பெயரில் தேவையில்லாமல் ஓரிரு எழுத்துக்களை அதிகப்படுத்தி எழுதுவது, தோஷம் கழித்தல், பரிகார பூஜைகள் நடத்துதல் என இவர்களின் மூட நம்பிக்கைகளைப் பட்டியல் போட்டு மாளாது. பகுத்தறிவு வாதம் பேசுபவர்களும் இதில் அடக்கம்.
- ‘‘உங்கள் மனைவிக்கு நாக தோஷம், இதனால் உங்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படும்” என்று ஜோதிடன் கூறியதை நம்பி கூலிப் படையினரை வைத்து அப்பாவி மனைவியை ஒருவர் கொலை செய்தார் என்ற செய்தி கடந்த (2018,அக்டோபர்-26)ஆம் தேதி சில நாளிதழ்களில் இடம்பெற்றுள்ளது.
- தன்னுடைய மருமகளுக்கு இரண்டாவதாகவும் பெண் குழந்தைதான் பிறக்கும் என்று ஜோதிடர் கூறியதால் அதனை சிசுவிலேயே அழிப்பதற்காக ஆசிட் வாங்கி அதனை மருமகளின் வயிற்றில் வீசிய மாமியார் கைது செய்யப்பட்டார் என்ற செய்தி (2016, செப்டம்பர்-2)ஆம் தேதி தினமலர் நாளிதழில் இடம் பெற்றுள்ளது.
- உடல்நிலை சரியில்லை என்று கூறி ஜோதிடரிடம் சென்ற இளம் பெண்ணை ஜோதிடர் ‘நிர்வாண பூஜை செய்ய வேண்டும்’ என்று கூறி பூஜை நடந்து கொண்டு இருக்கும் போதே அப்பெண்ணை ஜோதிடர் பாலியல் பலாத்காரம் செய்தார் என்ற செய்தி (2018,நவம்பர்-11) அன்று வெளியான நாளிதழ்களில் இடம் பெற்றுள்ளது.
- தலைப்பிள்ளையைக் காளிக்குப் பலி கொடுத்தால் செல்வம் பெருகும் என்று ஜோதிடர் கூறியதை நம்பி கேரளாவைச் சார்ந்த பதினொரு வயது சிறுவனைக் கடத்தி பலி கொடுப்பதற்காக ஓரிடத்தில் அடைத்து வைத்திருந்த 7 நபர்கள் கைது செய்யப்பட்டனர் என்ற செய்தி (2017, நவம்பர்-15) விடுதலை நாளிதழில் இடம் பெற்றுள்ளது.
- மகன் பிறந்த நேரம் பொருத்தமில்லை என ஜோதிடர் ஒருவர் கூறியதை நம்பி தனது 6 வயது மகனை தந்தையே கொலை செய்த சம்பவம் (2008, ஆகஸ்ட்-19)ஆம் தேதி தூத்துக்குடியில் நடைபெற்றது.
- அது போன்று ஜாதகப் பொருத்தம் சரியில்லை என்று ஜோதிடர்கள் கூறியதை நம்பி பல்லாண்டுகள் திருமணம் ஆகாமல் முதிர்கன்னிகளாக வாழ்ந்து மனநோயால் பாதிக்கப்பட்டு வாழ்விழந்தவர்கள் ஏராளம்.
ஜோதிடர்களின் வசீகரமான பேச்சுக்களை நம்பி சொத்துக்களையும், கற்பையும் இழந்தவர்கள், இழந்து கொண்டிருப்பவர்கள் ஏராளம் ஏராளம்.
அன்றாடம் வியர்வை சிந்தி உழைத்த உழைப்பால் கிடைத்த வருமானத்தைப் பெற்றோர்களுக்கும் மனைவி மக்களுக்கும் செலவிடாமல் மது குடித்து சீரழிப்பவர்கள் ஒருபுறம் என்றால் அதற்கு நிகராக ஜோதிடர்களுக்கு அள்ளிக்கொடுத்து சீரழிப்பவர்கள் அதை விட அதிகம்.
மனித சமூகத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதியினர் மிகப் பெரும் பாதிப்பிற்குள்ளாவதற்குக் காரணம் இந்த ஜோதிட நம்பிக்கை தான். ஜோதிடத்தின் மீது நம்பிக்கை வைத்தவர்களுக்கு அதனால் ஏற்பட்ட பாதிப்புகள்தான் மிகமிக அதிகம்.
ஆனால் உண்மையான இறைவனிடமிருந்து அருளப்பட்ட திருமறைக் குர்ஆன், இது மூடநம்பிக்கை என்பதைத் தெளிவாக எடுத்துரைப்பதுடன் மனித சமூகம் நிம்மதியான வாழ்வடைய திருக்குர்ஆன் தெளிவான வழிகாட்டுகிறது.
ஜோதிடம் என்ற மூடநம்பிக்கையை ஒழிப்பதற்குத் திருக்குர்ஆன் எடுத்துரைக்கும் அற்புதமான அடிப்படை ‘‘நாளை நடப்பதை இறைவன் ஒருவனைத் தவிர வேறுயாரும் அறிய முடியாது” என்ற கொள்கைப் பிகரடனம்தான்.
ஒவ்வொரு மனிதனும் தனக்கு இறைவன் வழங்கிய அறிவினால் இறைவன் காட்டிய நேர்வழியில் செல்ல வேண்டும். தனக்கு எந்த ஒரு நல்லதோ, பாதிப்போ ஏற்படுவதாக இருந்தால் அது இறைவன் ஏற்படுத்திய விதிப்படிதான் நடக்கும். இறைவன் நமக்கு விதித்த விதியை அது நடந்த பிறகுதான் நாம் அறியமுடியும் என்ற அடிப்படையை மனித உள்ளங்களில் திருக்குர்ஆன் ஆழமாக ஊன்றுகின்றது.
மனிதர்களால் மறைவானவற்றை அறிய முடியாது என்பதைத் திருக்குர்ஆன் ஓங்கி உரைக்கின்றது.
“வானங்களிலும், பூமியிலும் மறைவானதை அல்லாஹ்வைத் தவிர யாரும் அறிய மாட்டார்கள்.”
(அல்குர்ஆன்: 27:65) ➚.)
மறைவானவற்றின் திறவுகோல்கள் அவனிடமே உள்ளன. அவனைத் தவிர யாரும் அதை அறிய மாட்டார். தரையிலும், கடலிலும் உள்ளவற்றை அவன் அறிவான். ஓர் இலை கீழே விழுந்தாலும் அதை அவன் அறியாமல் இருப்பதில்லை. பூமியின் இருள்களில் உள்ள விதையானாலும், ஈரமானதோ காய்ந்ததோ ஆனாலும் தெளிவான ஏட்டில் இல்லாமல் இல்லை.
(அல்குர்ஆன்: 6:59) ➚.)
எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதை இறைவன் ஒருவன் மட்டுமே அறியமுடியும் என்ற அடிப்படைக் கொள்கை உள்ளத்தில் ஆணிவேராய் ஆழப்பதிந்து விட்டால் ஜோதிடத்தின் மீதுள்ள நம்பிக்கை சிதறுண்டு போய்விடும்.
திருமறைக் குர்ஆனை இறைவேதம் என உறுதியாக நம்பிக்கை கொள்ளும் மக்கள் ஜோதிடர்களை நம்பி உயிரையோ, கற்பையோ, சொத்துக்களையோ இழக்கவேண்டிய பரிதாப நிலை ஏற்படாது. இவ்வாறுதான் முஸ்லிம்களை திருமறைக் குர்ஆன் பாதுகாக்கின்றது.
ஐந்து விஷயங்களை இறைவனைத் தவிர எந்த ஒருவரும் அறிந்து கொள்ள முடியாது என திருமறைக் குர்ஆன் உறுதிபடக் கூறுகிறது.
யுகமுடிவு நேரம் பற்றிய அறிவு அல்லாஹ்விடமே உள்ளது. அவன் மழையை இறக்குகிறான். கருவறைகளில் உள்ளதை அவன் அறிகிறான். தான், நாளை சம்பாதிக்கவுள்ளதை எவரும் அறிய மாட்டார். தாம், எங்கே மரணிப்போம் என்பதையும் எந்த உயிரினமும் அறியாது. அல்லாஹ் நன்கறிந்தவன்; நுட்பமானவன்.
மேற்கண்ட இறைவசனத்தில் கூறப்பட்டுள்ள ஐந்து விஷயங்களும் இறைவன் மட்டுமே அறியக் கூடியவை ஆகும். படைப்பினங்களால் அறிந்து கொள்ள முடியாது என்பதை முஹம்மது நபி (ஸல்) அவர்களும் கூறியுள்ளார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மறைவானவற்றின் திறவுகோல் ஐந்தாகும். அவற்றை இறைவனைத் தவிர வேறெவரும் அறிய மாட்டார்கள்.
நாளை என்ன நடக்கும் என்பதை யாரும் அறிய மாட்டார்கள்.
(பெண்களின்) கருவறைகளில் என்ன உருவாகும் என்று யாரும் அறிய மாட்டார்கள்.
எந்த உயிரும் தாம் நாளை எதைச் சாம்பாதிக்கும் என்பதை அறியாது.
எந்த உயிரும் தாம் எந்த இடத்தில் இறக்கும் என்பதை அறியாது.
மழை எப்போது வரும் என்பதை யாரும் அறிய மாட்டார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்: புகாரி (1039)
அதிகமாக ஜோதிடர்களிடம் செல்பவர்கள் எதை அறிவதற்காகச் செல்வார்களோ அவற்றை இறைவன் மட்டுமே அறிய முடியும் என்ற உண்மையை உலகத்திற்கு உரக்கச் சொல்வதன் மூலம் திருமறைக் குர்ஆன், ஜோதிடம் எனும் மூடநம்பிக்கைக்கு சாவுமணி அடிக்கின்றது.
ஜோதிடத்திற்குத் தடை விதித்த முஹம்மது நபி
குர்ஆன் கூறும் போதனைகளின் அடிப்படையில் வாழ்ந்து காட்ட வந்தவர்கள்தான் முஹம்மது நபி (ஸல்) அவர்கள். திருக்குர்ஆன் கூறும் அடிப்படைக் கொள்கைகளுக்கு ஏற்ப மக்களுக்கு இறைவனின் மார்க்கத்தை போதனை செய்தார்கள்.
முஹம்மது நபி (ஸல்) அவர்களும் உலக மக்களின் வாழ்வைக் கெடுக்கும் இந்த ஜோதிடத்திற்குத் தடை விதித்து, அது மூட நம்பிக்கை என்பதை உணரச் செய்தார்கள்.
முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் குறிகாரன் அல்லது வருங்காலத்தை கணித்துச் சொல்பவனிடம் சென்று அவன் கூறுவதை உண்மை எனக் கருதினால் அவன் முஹம்மது (ஸல்) அவர்கள் மீது இறக்கப்பட்ட (வேதத்)தை மறுத்துவிட்டான்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம் (1971)
முஆவியா பின் அல்ஹகம் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:
நான் இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் ‘‘இறைத்தூதர் அவர்களே! நாங்கள் அறியாமைக் காலத்தில் பல (பாவ) காரியங்களைச் செய்து வந்தோம். சோதிடர்களிடம் சென்று (குறி கேட்டுக்) கொண்டிருந்தோம்” என்று கூறினேன். அதற்கு அவர்கள் ‘‘சோதிடர்களிடம் நீங்கள் செல்லாதீர்கள்” என்றார்கள்.
நூல்: முஸ்லிம் (4484)
முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் ஜோதிடனிடம் சென்று எதைப் பற்றியாவது (ஜோதிடம்) கேட்டால் அவனது நாற்பது நாட்கள் தொழுகை ஏற்றுக் கொள்ளப்படாது.
அறிவிப்பவர்: ஸஃபிய்யா (ரலி)
நூல்: முஸ்லிம் (4137)
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “சகுனம் பார்ப்பது (இறைவனுக்கு) இணை கற்பித்தலாகும்” என்று மூன்று முறை கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி)
நூல்: அபூதாவூத் (3411)
யார் சகுனம் பார்த்து (அதன் பிரகாரம்) தனது காரியத்தை மாற்றுகின்றாரோ அவர் அல்லாஹ்விற்கு இணை கற்பித்து விட்டார்.
அறிவிப்பவர்: இப்னு அம்ரு (ரலி)
நூல்: அஹ்மத் (6748)
முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கூறிய மேற்கண்ட போதனைகள் அனைத்தும் ஜோதிடம் எனும் மனித குலத்திற்குக் கேடுண்டாக்கும் தீய நம்பிக்கையிலிருந்து மக்களைப் பாதுகாக்கும் போதனைகளாகும்.
இவ்வாறு திருமறைக் குர்ஆனின் வழிகாட்டுதல் மூலம் உலக மக்களைப் பாதிக்கும் இந்தத் தீய நம்பிக்கைக்கு எதிராக முஹம்மது நபி (ஸல்) அவர்கள் பிரச்சாரம் செய்தார்கள். இதன் மூலம் இறைவேதத்தின் வழிநடந்தவர்கள் ஜோதிட நம்பிக்கையினால் ஏற்படும் தீய விளைவுகளிலிருந்து பாதுகாப்பைப் பெற்றார்கள்.
இன்றைய உலகில் ஜோதிடத்தின் பெயரால் நடக்கும் பல்வேறு கொடுமைகளிலிருந்து மனித குலத்தைப் பாதுகாக்கும் போர்க்கவசமாகத் திருமறைக் குர்ஆன் திகழ்கின்றது. மனித குலத்தைச் சீரழிக்கும் தீமைகளை அழிப்பதன் மூலம் திருக்குர்ஆன் இறைவனின் உண்மை வேதமாய் அற்புதச் சான்றாய் ஒளிர்கின்றது. இறைவேதத்தை நம்பிக்கையுடன் படித்து வழிநடக்கும் மக்களுக்கு அது நேர்வழிக்கு வழிகாட்டுகின்றது.
போலி பகுத்தறிவுவாதிகள் பலரால் இந்த அறிவியல் யுகத்தில் கூட சாதிக்க முடியாத காரியத்தை, பதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன்பே சாதித்துக் காட்டியது திருக்குர்ஆனும், அதை போதிக்க வந்த திருத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களும் என்றால் மிகையாகாது. திருமறைக் குர்ஆன் மனித குலத்திற்கு வழிகாட்டும் உண்மை இறைவேதம் என்பதற்கான எண்ணற்ற சான்றுகளில் இதுவும் ஓர் சான்றாகும்.