ஜும்மாவில் ஒரு நேரம் இருக்கிறது
கேள்வி : வெள்ளிக்கிழமை அன்று ஒரு நேரம் இருக்கிறது. அந்த நேரத்தில் கேட்கப்படும் துஆக்கள் ஏற்றுக் கொள்ளப்படும் என்று நபியவர்கள் கூறிய ஹதீஸ் ஆதாரப்பூர்வமானது தான். எனினும், அந்த நேரம் எது என்று தெளிவு படுத்தப்படவில்லை என்று ஆரம்பத்தில் கூறி வந்தோம். ஆனால் அநத நேரம் அத்தஹியாத்து நேரம் என்று தற்போது ஹதீஸ்களின் மூலம் தெரியவருகிறது.
விளக்கம்
அபூபுர்தா பின் அபீமூசா அல் அஷ்அரீ அவர்கள் கூறுகிறார்கள் :என்னிடம் அப்துல்லாஹ் பின் உமர் (ர-லி) அவர்கள், “வெள்ளிக்கிழமையில் உள்ள அந்த (அரிய) நேரம் பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக உம் தந்தையார் அறிவித்த ஹதீஸை நீர் செவியுற்றீரா?” என்று கேட்டார்கள். நான் கூறினேன்: ஆம் ; என் தந்தை பின்வருமாறு அறிவித்ததை நான் செவியுற்றேன்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : அது, இமாம் அமர்வதற்கும் தொழுகை முடிவதற்கும் இடையே உள்ள ஒரு நேரமாகும்.
நூல்: (முஸ்லிம்: 1546)
இமாம் அமர்வதற்கும் தொழுகை முடிவதற்கும் இடைப்பட்ட நேரம் என்று இந்த ஹதீஸில் உள்ளது.
- இமாம் அமர்வது என்பது மிம்பரில் ஏறியவுடன் இமாம் அமர்வதைக் குறிக்கிறதா?
- அல்லது இரண்டு குத்பாக்களுக்கு இடையே அமர்வதைக் குறிக்கிறதா? அல்லது
- அத்தஹிய்யாத்தில் இமாம் அமர்வதைக் குறிக்கிறதா என்பதை நாம் ஆய்வு செய்து சரியானதைத் தேர்வு செய்ய வேண்டும்.
இமாம் மிம்பரில் ஏறி அமர்ந்தவுடன் பாங்கு சொல்லப்படும். அப்போது துஆ செய்ய கூடாது; பாங்குக்குத் தான் பதில் கூற வேண்டும். அதன்பின் உரை ஆரம்பமாகும். அப்போது உரையைக் கேட்க வேண்டுமே தவிர துஆ செய்து கொண்டிருக்கக் கூடாது. அதன் பின் தொழுகை ஆரம்பமாகி விடும். இதைக் கருத்தில் கொண்டு பார்த்தால் இமாம் மிம்பரில் அமர்ந்தது முதல் தொழுகை முடியும் வரை துஆ செய்யும் நேரம் இல்லை என்பது தெளிவாகிறது. எனவே இமாம் அமர்தல் என்பது இதைக் குறிக்காது.
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வெள்ளிக்கிழமை பற்றிக் குறிப்பிடுகையில் “அதில் ஒரு நேரம் இருக்கிறது. சரியாக அந்த நேரத்தில் ஒரு முஸ்லிம் அடியார் தொழுகையில் ஈடுபட்டு, அல்லாஹ்விடம் எதைக் கோரினாலும் அதை அவருக்கு அல்லாஹ் வழங்காமல் இருப்பதில்லை.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில் குதைபா அவர்களது அறிவிப்பில் “அது மிகக் குறைந்த நேரம் என்பதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது கையால் சைகை செய்து உணர்த்தினார்கள்” என அதிகப்படியாக இடம்பெற்றுள்ளது.
நூல் : (முஸ்லிம்: 1543)
துஆ ஏற்கப்படும் அந்த நேரம் தொழுகைக்குள் தான் உள்ளது என்று இந்த ஹதீஸ் கூறுகிறது. தொழுகையில் துஆ செய்யும் நேரங்கள் இரண்டு உள்ளன.
- ஒன்று சஜ்தா செய்யும் போது துஆ செய்தல்.
- மற்றொன்று அத்தஹிய்யாத்தில் துஆ செய்தல்.
இமாம் அமர்ந்த்து முதல் என்ற ஹதீஸுடன் இந்த ஹதீஸை இணைத்துப் பார்க்கும் போது சஜ்தாவை இது குறிக்காது என்று தெரிகிறது. இருப்புக்குப் பின் சஜ்தா இல்லை. சஜ்தாவுக்குப் பின்னர் தான் இமாம் இருப்புக்கு வருவார். எனவே அத்தஹிய்யாத்தில் அமர்வதைத் தான் இது கூறுகிறது என்பது உறுதியாகிறது.
(புகாரி: 935) , 5295, 6400 ஆகிய ஹதீஸ்களில் நின்று தொழும் போது என்ற வாசகம் உள்ளது.
அபூஹுரைரா (ர-லி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வெள்ளிக்கிழமை (ஜுமுஆ நாள்) பற்றிக் குறிப்பிடுகையில், “ஜுமுஆ நாளில் ஒரு நேரம் இருக்கின்றது; அந்த நேரத்தை ஒரு முஸ்லிம் அடியார் (சரியாக) அடைந்து, அதில் தொழுதவாறு நின்று அல்லாஹ்விடம் எதைக் கோரினாலும், அதை அவருக்கு அல்லாஹ் வழங்காமல் இருப்பதில்லை. அ(ந்த நேரத்)தைப் பற்றிக் கூறும்போது நபி (ஸல்) அவர்கள் அது மிகக் குறைந்த நேரம் என்பதை தம் கையால் சைகை செய்து உணர்த்தினார்கள்.
நூல் : (புகாரி: 935)
நின்று தொழும் போது என்று இதில் கூறப்படுவதால் குழப்பம் ஏற்படத் தேவை இல்லை.
இது தொழுகையில் நிற்கும் நிலையைக் குறிக்காது. ஏனெனில் நிற்கும் நிலையில் துஆ ஏதும் இல்லை. அது துஆ செய்வதற்கான நேரமும் அல்ல. நிற்குதல் என்பது வணங்குதல் என்ற கருத்திலும் ஏராளமான ஹதீஸ்களில் கூறப்பட்டுள்ளது. தொழுது வணங்கும் போது அடியான் துஆ செய்தால் அது ஏற்கப்படும் என்று தான் இதற்குப் பொருள் கொள்ள வேண்டும்.
தொழுது வணங்கும் போது இமாம் அமர்ந்த பின்னர் துஆ செய்யும் இடம் ஒன்றே ஒன்று தான் உள்ளது. அது அத்தஹிய்யாத் அமர்வுதான். அதில் ஜும்மாவில் அத்தஹிய்யாத் அமர்வில் சிறிய நேரம் உள்ளது. அந்த நேரத்தில் நமது துஆ அமைந்து விட்டால் அது கட்டாயம் ஏற்கப்படும் என்று கருத்துக் கொள்வது தான் அனைத்து ஹதீஸ்களையும் இணைத்துப் பார்க்கும் போது கிடைக்கும் முடிவாகும்
சஹீஹ் இப்னி ஹுஸைமாவில் இதே செய்தி இடம்பெற்றுள்ளது. அதில் இமாம் மிம்பரில் அமர்வதற்கும் தொழுகை முடிவதற்கும் இடைப்பட்ட நேரம் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு சரியான அறிவிப்பு இல்லை.
இதில் அஹ்மது பின் அப்திர் ரஹ்மான் பின் வஹப் என்பவர் இடம்பெற்றுள்ளார். இவரைப் பல அறிஞர்கள் பலவீனமானவர் என்றும் இவரை ஆதாரமாக எடுக்க இயலாது என்றும் கூறியுள்ளனர். எனவே மனனத் தன்மை பாதிப்புக்குள்ளான இவர் அறிவித்த இந்த அறிவிப்பை ஏற்கக்கூடாது.
குறிப்பு : இதற்கு முன்னர் அந்த நேரம் எது என்று தெளிவுபடுத்தப்பட்டவில்லை என்று நாம் சொல்லி இருக்கிறோம்.
அந்தக் கருத்தில் இருந்து நாம் விலகிக்கொள்கிறோம் என்பதை இதன் மூலம் அறிவிக்கிறோம்.