ஜுமுஆ உரை தரையில் நின்று நிகழ்த்தலாமா?
ஜுமுஆ உரைக்கு மிம்பர் இல்லாமல் தரையில் நின்று உரை நிகழ்த்தலாமா?
பதில்:
ஜும்ஆ நிறைவேறுவதற்கு கூட்டாக சேர்ந்து நிறைவேற்ற வேண்டும், தொழுகைக்கு முன்னால் உரை அவசியம் என்பன போன்ற பல நிபந்தனைகளை மார்க்கம் நமக்கு சொல்லித் தருகிறது. இவற்றில் மிம்பர் என்பது நபிகள் நாயகம்(ஸல்) அவர்களால் தொடர்ந்து கடைபிடிக்கப்பட்ட ஒரு வழிமுறையாக உள்ளது.
நபி (ஸல்) அவர்களது காலத்திலும் அபூபக்ர் (ரலி), உமர் (ரலி) ஆகியோரது காலத்திலும் ஜுமுஆ நாளின் முதல்பாங்கு இமாம் மிம்பர் மீது அமர்ந்ததும் சொல்லப்பட்டுவந்தது. உஸ்மான் (ரலி) அவர்கள் (ஆட்சிக்) காலத்தில் (மதீனாவில்) மக்கள் தொகை அதிகரித்த போது ஸவ்ரா’ எனும் கடைவீதியில் (பாங்கு, இகாமத் அல்லாமல்) மூன்றாவது தொழுகை அறிவிப்பை அதிகப்படுத்தினார்கள்.
அறிவிப்பவர்: ஸாயிப் பின் யஸீத்(ரலி)
நபி (ஸல்) அவர்கள் மிம்பரில் நின்றபடி ஜுமுஆத் தொழுகைக்கு வருபவர் குளித்துக் கொள்ளட்டும்’ என்று கூறுவதை நான் செவியேற்றேன்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)
நபி (ஸல்) அவர்களது காலத்தில் ஒருமுறை பஞ்சம் ஏற்பட்டது. ஒரு ஜுமுஆ நாளில் நபி (ஸல்) அவர்கள் சொற்பொழிவு (குத்பா) நிகழ்த்திக் கொண்டிருந்த போது ஒரு கிராமவாசி எழுந்து, அல்லாஹ்வின் தூதரே! செல்வங்கள் அழிந்து விட்டன; குழந்தை குட்டிகள் பசியால் வாடுகின்ற னர். எனவே, எங்களுக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள் என்று கூறினர். அப்போது நபி (ஸல்) அவர்கள் (பிரார்த்திக்க) தம் கைகளை ஏந்தினார்கள்.
அப்போது எந்த மழைமேகத்தையும் நாங்கள் வானத்தில் காணவில்லை- என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீது சத்தியமாக! நபி (ஸல்) அவர்கள் தமது கையை கீழே விடுவதற்கு முன்பாக மலைகளைப் போன்ற மேகங்கள் பரவத் தொடங்கின. நபி (ஸல்) அவர்கள் தமது சொற்பொழிவு மேடையை விட்டும் இறங்கியிருக்கவில்லை. மழை பெய்து அவர்களது தாடியில் வழிந்ததை நான் பார்த்தேன். எங்களுக்கு அன்றைய தினமும் மறுதினமும் அதற்கடுத்த நாளும் அதற்கடுத்த நாளும் அடுத்த ஜுமுஆ வரையிலும் மழை கிடைத்தது.
(அந்த ஜுமுஆவில்) அதே கிராமவாசி’ அல்லது வேறொருவர்’ எழுந்து, அல்லாஹ்வின் தூதரே! கட்டடங்கள் இடிந்து கொண்டிருக்கின்றன; செல்வங்கள் வெள்ளநீரில் மூழ்குகின்றன. எனவே, எங்களுக்கு அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள் என்றார். அப்போதும் நபி (ஸல்) அவர்கள் தமது கைகளை உயர்த்தி, இறைவா! எங்களைச் சுற்றிலும் (எங்களுக்கு நன்மை ஏற்படும் விதத்தில்) மழையைப் பொழிவாயாக! எங்களுக்கெதிராக (எங்களுக்கு கேடு நேரும் விதத்தில்) மழை பொழியச் செய்யாதே! என்று பிரார்த்தித்தார்கள்.
மேகத்தின் எந்த பகுதியை நோக்கி நபி (ஸல்) அவர்கள் சைகை செய்தார்களோ அம்மேகம் விலகிச் சென்றது. மதீனா(வைச் சூழ்ந்திருந்த மேகம் விலகியதால் அது) பாதாளம் போன்று மாறிவிட்டிருந்தது. கனாத்’ ஓடையில் ஒரு மாதம் தண்ணீர் ஓடியது. எந்தப் பகுதியிலிருந்து யார் வந்தாலும் இந்த அடை மழை பற்றிப் பேசாமால் இருக்கவல்லை.
அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)
நாங்களும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் ஓராண்டு அல்லது ஓராண்டும் சில மாதங்களும் ஒரே அடுப்பையே பயன் படுத்திவந்தோம். நான் “காஃப். வல்குர்ஆனில் மஜீத்’ எனும் (50ஆவது) அத்தியாயத்தை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் நாவி லிருந்தே மனனமிட்டேன். அவர்கள் ஒவ்வொரு ஜுமுஆவிலும் சொற்பொழிவு மேடை (மிம்பர்) மீதிருந்தபடி மக்களுக்கு உரையாற்றும் போது அந்த அத்தியாயத்தை ஓதுவார்கள்.
அறிவிப்பவர்: ஹாரிஸா பின் நுஅமான் (ரலி) அவர்களின் புதல்வியார் உம்மு ஹிஷாம் (ரலி)
மேற்படி ஆதாரங்கள் அனைத்திலும் நபி(ஸல்) அவர்கள் ஜும்ஆ உரையை மிம்பரின் மீது ஏறி செய்திருக்கிறார்கள் என்பதை காட்டுகிறது.
அதே சமயம், மிம்பரை ஜும்ஆவிற்கான ஒரு கட்டாய நிபந்தனையாக நபி(ஸல்) அவர்கள் விதிக்கவில்லை.
ஒரு (அன்சாரிப்) பெண்மணி, அல்லாஹ்வின் தூதரே! என்னிடம் தச்சு வேலை தெரிந்த ஓர் அடிமை இருக்கிறார்; நீங்கள் அமர்ந்துகொள்வதற்கேற்ப (மேடை) ஒன்றை நான் உங்களுக்கு செய்து தரலாமா? என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் நீங்கள் விரும்பினால் (செய்து கொடுங்கள்) என்று கூற, அப்பெண்மணி சொற்பொழிவு மேடை (மிம்பர்) ஒன்றை செய்(து கொடுத்)தார்.
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)
இந்த நிகழ்வுக்கு முன்பு மிம்பர் எனும் மேடை அமைக்கப்படவில்லை என்று தெரிகிறது. மிம்பர் இல்லாமல் தான் அதில் உரை நிகழ்த்தியிருப்பார்கள். மிம்பர் கட்டாய நிபந்தனையாக இருக்கும் என்றால் விரும்பினால் செய்து கொடுங்கள் என்று நபியவர்கள் சொல்லியிருக்க மாட்டார்கள்.
அதே சமயம், நபி(ஸல்) அவர்கள் ஜும்ஆ உரையை மிம்பரின் மீது நிகழ்த்தி பெருநாள் உரைக்கு மிம்பர் இல்லாமல் உரை நிகழ்த்தியிருப்பதால் நபி(ஸல்) அவர்கள் தனது ஜும்ஆ உரையில் கடைபிடித்த ஒரு வழிமுறையாக இருக்கிறது.
மிம்பர் செய்து கொடுத்த பின்னர் நபிகளார் தொடர்ந்து அந்த மிம்பரை பயன்படுத்தி வந்துள்ளார்கள். எனவே அவற்றை பின்பற்றி நடப்பதே சிறந்தது.
மிம்பர் என்பது குறிப்பிட்ட உயரத்தில் இருக்க வேண்டும், குறிப்பிட்ட படிகள் அமைந்திருக்க வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கட்டளையிடவில்லை.
மிம்பர் என்பது தரையிலிருந்து சற்று உயரமாக இருக்க கூடியதாக அமைய வேண்டும்.
இதை பின்வரும் செய்தியிருந்து அறிந்துக் கொள்ளலாம்.
நபி (ஸல்) அவர்கள் சொற்பொழிவு மேடையிலிருந்து இறங்கி (ஜுமுஆத் தொழுகை) தொழுவித்தார்கள்.