ஜஸாகல்லாஹ் என்று எப்போது கூற வேண்டும் ?
ஜஸாகல்லாஹ் என்று எப்போது கூற வேண்டும் ?
ஜஸாகல்லாஹு கைரா என்ற அரபு வாசகத்திற்கு அல்லாஹ் உங்களுக்கு நற்கூலி வழங்குவானாக என்பது பொருள். ஒருவர் நமக்கு உதவி செய்தால் அவருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இவ்வாறு கூறலாம். இவ்வாறு கூறுவதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சிறப்பித்துக் கூறியுள்ளார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
ஒருவர் தனக்கு நல்லது செய்யப்படும் போது அதைச் செய்தவரிடத்தில் ஜஸாகல்லாஹு கைரா (அல்லாஹ் உமக்கு நற்கூலி வழங்குவானாக) எனக் கூறினால் அவர் நிறைவாகப் புகழ்ந்தவராகி விடுவார்.
அறிவிப்பவர் : உசாமா பின் ஸைத் (ரலி)
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு கிராமவாசியிடம் பேரீச்சம் பழங்களைக் கொடுத்து ஒட்டகத்தை விலைக்கு வாங்கினார்கள். நபியவர்கள் தான் பேசியபடி பழங்களைக் கிராமவாசியிடம் அழகிய முறையில் ஒப்படைத்தார்கள். அந்த கிராமவாசி தனக்குரியதை பெற்றுக் கொண்டு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைக் கடந்து சென்ற போது ஜஸாகல்லாஹு கைரா (அல்லாஹ் உங்களுக்கு நற்கூலி வழங்குவானாக) நீங்கள் (பேசிய படி) அழகிய முறையில் நிறைவேற்றி விட்டீர்கள் என்று கூறினார். (ஹதீஸின் கருத்து)
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
பேச்சை முடிக்கும் போதும் எழுத்தை முடிக்கும் போதும் இதை கூற வேண்டும் என்று மார்க்கம் சொல்லவில்லை. மாறாக பிறருக்கு நன்றி தெரிவிக்கும் சந்தர்ப்பங்களில் இவ்வாறு கூறிக் கொள்ளலாம்.