ஜம்வு கஸர் எங்கே எப்போது செய்யலாம்?

கேள்வி-பதில்: தொழுகை

ஜம்வு கஸர் எங்கே எப்போது செய்யலாம்?

25கிமீ சென்றால் கஸ்ர்.

ஒருவர் சுமார் 25 கி.மீ. தொலைவுக்குப் பயணம் செய்தால் அவர் ஜம்வு, கஸ்ர் செய்யலாம்.

கஸ்ர் தொழுகையைப் பற்றி அனஸ் (ரலி) அவர்களிடம் கேட்கப்பட்ட போது, ”நபி (ஸல்) அவர்கள் மூன்று மைலோ அல்லது மூன்று பர்ஸக் அளவோ பயணம் செய்தால் (நான்கு ரக்அத் தொழுகைகளை) இரண்டு ரக்அத்களாக (சுருக்கித்) தொழுவார்கள்” என்று பதிலளித்தனர்.
(முஸ்லிம்: 1230)

 

சுமார் 25 கிலோ மீட்டர் அளவிற்கு ஒருவர் பயணம் செய்தால் அவர் ஜம்வு மற்றும் கஸர் செய்து கொள்ள மார்க்கம் அனுமதிக்கின்றது. காயல்பட்டணத்திலிருந்து ஒருவர் தூத்துக்குடிக்குப் புறப்பட்டு வருகின்றார். இவர் கஸர் தொழலாம்.

ஆனால் இதே அளவு தூரம் ஒருவர் சென்னையில் பயணம் செய்கின்றார். இவர் கஸர் தொழக் கூடாது. ஏனெனில் ஊருக்குள் தான் இவர் சுற்றுகின்றார். பயணம் என்றால் ஊரை விட்டு வெளியேற வேண்டும் என்று கூறுவோம்.

ஊர் என்பதற்கு என்ன அளவுகோல்? எத்தனை கிலோ மீட்டர் சுற்றளவு? என்றெல்லாம் மார்க்கத்தில் கூறப்படவில்லை. அதை நாம் தான் தீர்மானம் செய்கிறோம்.

ஒருவர் தான் வசிக்கின்ற இருப்பிடத்திலிருந்து 25 கிலோமீட்டர் தொலைவுக்கு குறையாத பயணமாக இருக்க வேண்டும் என்பது முதல் நிபந்தனை.

ஊரின் எல்லையைக் கடந்திருக்க வேண்டும் என்பது இரண்டாவது நிபந்தனை.

நமது பயணம் இவ்விரு நிபந்தனைகளுக்கு உட்பட்டு இருந்தாலே ஜம்வு கஸ்ர் செய்யலாம்.

ஒருவர் ஊரின் எல்லையைக் கடந்து விட்டார். ஆனால் 25 கிலோமீட்டரை விட குறைவான தூரத்தில் அவருடைய பயணம் இருந்தால் இப்போது ஜம்வு கஸ்ர் என்ற சலுகையை அவர் பயன்படுத்த முடியாது. அதே போன்று 25 கிலோமீட்டர் தூர அளவிற்கு பயணம் உள்ளது. ஆனால் ஊரின் எல்லையைக் கடக்கவில்லை என்றால் இப்போதும் அவர் இந்த சலுகையைப் பயன்படுத்த முடியாது.

 

உலகம் முழுவதும் பயணத்தூரத்தை கணக்கிடுவதற்கு ஸீரோ பாய்ண்ட் எனும் மையப்பகுதியை அளவு கோலாக வத்துள்ளன. சென்னையில் இருந்து ஒரு ஊர் 100 கிலோ மீட்டர் என்று சொன்னால் சென்னையின் ஸீரோ பாய்ண்டில் இருந்து 100 இலோ மீட்டர் என்று அர்த்தம். கடற்கரைக்கு அருகில் நேப்பியர் பாலத்தில் தான் தூரத்தை குறிக்கும் கல்லில் 0 என்று போட்டிருப்பார்கள். அங்கிருந்து நூறு கிலோ மீட்டர் என்று பொருள்.

ஆனால் மார்க்கத்தில் பயணத்தூரத்தை இப்படிக் கணக்கிட முடியாது. பயணம் என்றால் ஊரை விட்டு வெளியேறுவது தான். எனவே ஊரின் கடைசி எல்லையில் இருந்து நாம் சென்றடையும் ஊர் 25 கிலோ மீட்டர் அல்லது அதற்கு அதிகமான தொலைவில் இருக்க வேண்டும்.

 

கட்டாமில்லை.

அதே சமயம் வெளியூரில் தங்குபவர்கள் சுருக்கித் தொழுவது கட்டாயமில்லை. ஒருவர் விரும்பினால் முழுமையாகத் தொழுவதற்கும் அனுமதியுள்ளது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

நான் நபி (ஸல்) அவர்களுடன் மதீனாவிலிருந்து மக்கா நோக்கி உம்ரா செய்யப் புறப்பட்டேன். நான் மக்காவை அடைந்த போது, ”அல்லாஹ்வின் தூதரே! எனது தாயும், தந்தையும் உங்களுக்கு அர்ப்பணமாகட்டும். நீங்கள் கஸ்ர் செய்கிறீர்கள்; நான் முழுமையாகத் தொழுகிறேன். நீங்கள் நோன்பு நோற்கவில்லை; நான் நோன்பு நோற்கிறேன்” என்று நான் கேட்ட போது ”ஆயிஷாவே! சரியாகச் செய்தாய்!”என்றார்கள். என்னைக் குறை காணவில்லை. அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நஸயீ 1439