77) ஜனாஸாவைப் பின் தொடர்ந்து செல்லுதல்
உடலை எடுத்துச் சென்று அடக்கம் செய்ய நாலைந்து பேர் போதும் என்றாலும் உடலைப் பின் தொடர்ந்து செல்வதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அதிகம் வலியுறுத்தியுள்ளனர். இதற்கு அதிகமான நன்மைகள் கிடைக்கும் எனவும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஏழு விஷயங்களை எங்களுக்குக் கட்டளையிட்டனர். அவைகளாவன: ஜனாஸாவைப் பின் தொடர்ந்து செல்லுதல், நோயாளிகளை விசாரிக்கச் செல்லுதல், விருந்தை ஏற்றுக் கொள்ளுதல், அநீதி இழைக்கப்பட்டவருக்கு உதவுதல், சத்தியத்தை நிறைவேற்றுதல், ஸலாமுக்குப் பதில் ஸலாம் கூறுதல், தும்மல் போட்டவருக்காக துஆச் செய்தல்.
அறிவிப்பவர்: பரா பின் ஆஸிப் (ரலி)
(புகாரி: 1239, 2445, 5175, 5635, 5863, 6222, 6235), ‘
ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமுக்குச் செய்யும் கடமை ஐந்தாகும். அவை ஸலாமுக்குப் பதில் ஸலாம் கூறுதல், நோயாளியை நலம் விசாரிக்க செல்லுதல், ஜனாஸாவைப் பின் தொடர்தல், விருந்தை ஏற்றுக் கொள்ளுதல், தும்மல் போட்டவருக்கு துஆச் செய்தல்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள்.
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)
‘நம்பிக்கையுடனும், மறுமை நன்மையை எதிர்பார்த்தும் ஜனாஸாவைப் பின் தொடர்ந்து சென்று, தொழுகை நடத்தி, அடக்கம் செய்யும் வரை உடன் இருப்பவர் இரண்டு கீராத் நன்மையுடன் திரும்புகிறார். ஒரு கீராத் என்பது உஹத் மலையளவு நன்மை. ஜனாஸாவைப் பின் தொடர்ந்து சென்று தொழுகையில் கலந்துவிட்டு அடக்கம் செய்வதற்கு முன் திரும்புபவர் ஒரு கீராத் நன்மையுடன் திரும்புகிறார்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)
‘உங்களில் இன்று நோன்பு நோற்றவர் யார்?’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அபூ பக்ர் (ரலி) அவர்கள் ‘நான்’ என்று சொன்னார்கள். ‘இன்று ஜனாஸாவைப் பின் தொடர்ந்தது யார்?’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கும் அபூ பக்ர் (ரலி) அவர்கள் ‘நான்’ என்றார்கள். ‘ஏழைக்கு இன்று உணவளித்தவர் யார்?’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அபூ பக்ர் (ரலி) அவர்கள் ‘நான்’ என்று கூறினார்கள். ‘இன்று உங்களில் நோயாளியை விசாரிக்கச் சென்றவர் யார்?’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கும் அபூ பக்ர் (ரலி) ‘நான்’ என்றார்கள். ‘இவை அனைத்தும் ஒருவரிடம் ஒரு சேர அமைந்தால் அவர் சொர்க்கம் செல்லாமல் இருப்பதில்லை’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)