84) ஜனாஸாவைப் பின் தொடர்ந்தவர் அது கீழே இறக்கப்படும் வரை உட்காரக் கூடாது
ஜனாஸாவைப் பின் தொடர்ந்து சென்றவர் ஜனாஸாவை முந்திக் கொண்டு அடக்கத்தலம் சென்றுவிடலாம். அப்படி முந்திச் சென்றவர்கள் உடனே அமர்ந்து விடக் கூடாது. ஜனாஸா வரும் வரை காத்திருக்க வேண்டும். ஜனாஸா கொண்டு வரப்பட்டு தோள்களிலிருந்து கீழே இறக்கப்படும் வரை நின்றுவிட்டு கீழே இறக்கப்பட்ட பின் தான் உட்கார வேண்டும்.
‘அது உங்களைக் கடக்கும் வரை அல்லது கீழே வைக்கப்படும் வரை நில்லுங்கள்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர்.
கடக்கும் வரை என்பது ஜனாஸாவுடன் தொடர்ந்து செல்லாதவருக்காகச் சொல்லப்பட்டது. கீழே வைக்கப்படும் வரை என்பது பின் தொடர்ந்து அடக்கத்தலம் வரை செல்பவருக்காகக் கூறப்பட்டது.
நாங்கள் ஒரு ஜனாஸாவில் கலந்து கொண்டோம். அப்போது அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் (அன்றைய ஆட்சியாளரான) மர்வானின் கையைப் பிடித்து ஜனாஸா கீழே வைக்கப்படுவதற்கு முன்னர் உட்கார வைத்து, தானும் உட்கார்ந்தார். அப்போது அபூ ஸயீத் (ரலி) அவர்கள் வந்து மர்வானின் கையைப் பிடித்து ‘எழுங்கள்’ என்றார். ‘நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இதைத் தடுத்தார்கள் என்பதை இவர் (அபூ ஹுரைரா) அல்லாஹ்வின் மீது ஆணையாக நிச்சயமாக அறிந்து வைத்துள்ளார்’ என்றும் கூறினார். அப்போது அபூ ஹுரைரா (ரலி) அவர்கள், ‘இவர் சொல்வது உண்மை தான்’ என்றார்கள்.
அறிவிப்பவர்: ஸயீத் அல் மக்புரி
‘ஜனாஸாவை நீங்கள் கண்டால் எழுங்கள்! யார் அதைப் பின் தொடர்ந்து செல்கிறாரோ அவர் ஜனாஸா (கீழே) வைக்கப்படும் வரை உட்கார வேண்டாம்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூ ஸலமா (ரலி)