ஜனநாயகமா? சர்வாதிகாரமா?

பயான் குறிப்புகள்: தற்காலிக நிகழ்வுகள்

ஜனநாயகமா? சர்வாதிகாரமா?

இந்தியா ஜனநாயக நாடு, குடியரசு நாடு, மதச்சார்பற்ற நாடு என்று பெயரெடுத்த காலமெல்லாம் போய் இப்போது இந்தியா சர்வாதிகார நாடு என்று சொல்லும் காலம் வந்து விடுமோ என்று அஞ்ச வேண்டியிருக்கின்றது. எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்ததும் இந்நாடே என்ற இலக்கியச் சொல்லாடெல்லாம் மறந்து போய் இநதியா குழப்பத்தின் பொன்னாடே என்று நவீன கவிஞர்கள் எழுதும் நிலை வந்து விடும் போலிருக்கின்றது.

மக்களாட்சிக்கும் மன்னராட்சிக்கும் உள்ள ஒரே வேறுபாடு தேர்தல் முறையாகும். குடியரசு நாடு என்று அறிவிக்கப்பட்ட ஒரு தேசத்தில் சர்வாதிகார ஆட்சி முறைமைகளுக்கு வேலையே இல்லை. ஆனால் இங்கே நடப்பது என்ன? ஜனநாயக முறைப்படி ஒரு ஆட்சியைத் தேர்ந்தெடுக்க வேண்டிய தேர்தல் ஆணையம் தற்போது ஆளும் பாஜகவின் எடுபிடியைப் போல செயல்பட்டு வருவதாக பலரும் குற்றம் சாட்டுவதைப் பார்க்க முடிகின்றது.

மதுரையில் வாக்கு மிசின்கள் பாதுகாக்கப்படுள்ள அறைக்குள் ஒரு பெண் தாசில்தார் நுழைந்து பல மணிநேரங்கள் உள்ளே இருந்துள்ளார். அதுபோல கடந்த வாரத்தில் 50 க்கும் மேற்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் கோவையில் இருந்து தேனி தொகுதிக்கு கொண்டு வரப்பட்டது. இந்த இரண்டு சம்பவங்களும் எதிர்க்கட்சிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மதுரை வாக்கு எண்ணும் மையத்திற்குள் தாசில்தார் நுழைந்த நேரத்தில் உள்ள சிசிடிவி காட்சிப்பதிவுகளை எதிர்க்கட்சிகள் கேட்ட போது அது பதிவாகவில்லை என்று மறுத்தார்கள். அதுபோல கோவையில் இருந்து தேனி தொகுதிக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் எவ்வித முன் அறிவிப்பும் இல்லாமல் வந்தது ஏன்? என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பும் போதும் அதற்கு சரியான பதிலை இதுவரைக்கும் தேர்தல் ஆணையம் கொடுக்கவில்லை.

வாக்குமிசின்களை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு மாற்றுவது சாதாரண நடைமுறைதான் என்று சொல்லி வருகின்றது தேர்தல் ஆணையம். மதுரை மற்றும் தேனி ஆகிய தொகுதிகளில் உள்ள எதிர்க்கட்சி வேட்பாளர்கள் மட்டும்தான் குய்யோ முறையோ என்று கத்துகின்றார்களே தவிர இந்த இரண்டு தொகுதியின் ஆளுங்கட்சியின் வேட்பாளர்கள் எதைப்பற்றியும் கவலை கொள்ளாமல் மிகவும் கூலாக இருக்கின்றார்கள்.

தேர்தல் ஆணையம் என்பது ஜனநாயகத்தை காத்து நிற்கும் வகையில் எந்தக் கட்சிக்கும் சாதகம் இல்லாமல் நடுநிலையுடன் செயல்பட வேண்டும்., ஆனால் நடப்பதோ வேறு. இந்தியாவில் இயங்கும் தேர்தல் ஆணையம் பாஜகவின் கிளை அமைப்பு போல செய்லபட்டு வருவதை யாராலும் மறுக்கவே முடியாது.

ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் யாரெல்லாம் பாஜகவிற்கு எதிராக இருந்தார்களோ அவர்களுக்கு எதிராக செயல்பட ஆரம்பித்த தேர்தல் ஆணையத்தின் பாஜக ஆதரவு நிலை அதன்பிறகு இப்போது நாடாளுமன்றத் தேர்தல் வரைக்கும் எதிரொலிக்கத் துவங்கியுள்ளது. இந்த நிலை தமிழ்நாட்டில் மட்டுமல்ல! ஒட்டுமொத்த இந்தியாவிலும் தேர்தல் ஆணையம் இப்படித்தான் நடந்து கொண்டுள்ளது.

ராகுல் ஒரு குற்றச்சாட்டு சொன்னால் அதைப் பற்றி கண்டுகொள்ளாத தேர்தல் ஆணையம், அதேநேரத்தில் மோடியோ அமித்ஷாவோ ஒரு குற்றச்சாட்டை வைக்கும் போது அதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கின்றது, தடை விதிக்கின்றது. அதுபோல எதிர்கட்சிகளுக்கு ஒரு முகத்தையும் ஆளுங்கட்சிக்கு ஒரு முகத்தையும் காட்டி வருகின்றது தேர்தல் ஆணையம்.

உலகில் உள்ள அத்துனை ஜனநாயக நாடுகளிலும் இத்தனை புகார்கள், குழப்பங்கள், குளறுபடிகள் நடந்த ஒரே தேர்தல் இப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலாகத்தான் இருக்கும். அத்துனை சிக்கல்கள் நிலவிய போதும், வாக்குமிசின்கள் தவறான முடிவுகளைக் காட்டிய போதும் தேர்தல் ஆணையம் சொல்லும் ஒரே வாசகம், நாங்கள் யாரையும் சாராதவர்கள், நாங்கள் நடுநிலையாளர்கள் என்பதே!

ஆக மொத்தம் பாஜகவின் மற்றொரு கிளை அமைப்பாக செயல்பட்டு தேர்தலை நடத்தும் தேர்தல் ஆணையம் மக்களின் சரியான முடிவுகளைப் பிரதிபலிக்குமா? அல்லது பாஜகவிற்கு ஆதரவான முடிவுகளையே தருமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

ஒரு சமுதாயத்தின் மீதுள்ள பகை நீங்கள் நீதியாக நடக்காமலிருக்க, உங்களைத் தூண்ட வேண்டாம்.

(அல்குர்ஆன்: 5:8)

Source:unarvu(17/05/2019)