2) ஜகாத் ஓர் ஆய்வு

நூல்கள்: ஜகாத் ஓர் ஆய்வு

ஜகாத் ஓர் ஆய்வு

ஜகாத் கொடுக்கப்பட்ட பொருளுக்கு மீண்டும் ஜகாத் கொடுக்க வேண்டுமா?

ஜகாத் கொடுக்கப்பட்ட பொருளுக்கு மீண்டும் ஜகாத் கொடுக்க வேண்டுமா? என்ற பிரச்சனையில் உலகில் பெரும்பாலான அறிஞர்கள், ‘ஒரு பொருளுக்கு நாம் ஜகாத் கொடுத்து விட்டால் ஒவ்வொரு வருடமும் மீண்டும் மீண்டும் ஜகாத் கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும்’ என்று தீர்ப்பளிக்கின்றனர்.

அதாவது ஒரு முஸ்லிமிடம் ஒரு லட்சம் ரூபாய் இன்றைக்கு இருந்தால் அதில் இரண்டரை சதவிகிதம் ஜகாத் கொடுக்க வேண்டும். அடுத்த வருடம் எஞ்சியுள்ள 97500 ரூபாயில் இரண்டரை சதவிகிதம் கொடுக்க வேண்டும். இப்படியே வருடா வருடம் கொடுத்துக் கொண்டே வர வேண்டும் என்பது பெரும்பாலான மார்க்க அறிஞர்களின் கருத்தாகும்.

நாம் இந்தக் கருத்திலிருந்து முரண்படுகிறோம்.

‘ஒருவரிடம் ஒரு லட்சம் ரூபாய் இருந்தால் அவர் அதற்கான ஜகாத்தாக இரண்டாயிரத்து ஐநூறு ரூபாய் வழங்க வேண்டும்; இதன் பின்னர் இதே தொகைக்காக மீண்டும் ஜகாத் கொடுக்கத் தேவையில்லை; இதன் பின்னர் அவருக்குக் கிடைத்தவற்றுக்குத் தான் ஜகாத் கொடுக்க வேண்டும்’ என்பது நமது கருத்தாகும்.

அதாவது ஒரு லட்ச ரூபாய்க்கு ஜகாத் கொடுத்த பின்னர் மேலும் ஒரு லட்ச ரூபாய் ஒருவருக்குக் கிடைத்தால் அவர் இரண்டாவதாகக் கிடைத்த ஒரு லட்ச ரூபாய்க்கு ஜகாத் கொடுத்தால் போதும். அது தான் அவர் மீதுள்ள கடமை. ஏற்கனவே ஜகாத் கொடுக்கப்பட்ட ஒரு லட்ச ரூபாய்க்கு மீண்டும் ஜகாத் கொடுக்கத் தேவையில்லை. நூறு பவுன் நகை ஒருவரிடம் இருந்தால் அதற்குரிய ஜகாத் இரண்டரை பவுன் கொடுக்க வேண்டும். இதன் பின்னர் மேலும் 50 பவுன் நகை அவருக்குக் கிடைத்தால் இந்த 50 பவுனுக்கு ஜகாத் கொடுப்பது தான் அவருக்குக் கடமையாகும். ஏற்கனவே ஜகாத் வழங்கி விட்ட 100 பவுனுக்கு ஜகாத் கொடுக்கும் கடமை அவருக்கு இல்லை என்பது நமது முடிவாகும்.

நாம் இந்த முடிவுக்கு வருவதற்குக் காரணம் என்ன?

கொடுத்த பொருளுக்கே மீண்டும் ஜாகத் கொடுக்க வேண்டும் என்ற கருத்தில் சில ஹதீஸ்கள் உள்ளன.

வருடா வருடம் ஜகாத் கொடுக்க வேண்டும் என்ற கருத்தை நேரடியாகவும், மறைமுகமாகவும் கூறும் சில ஹதீஸ்கள் உள்ளன.

இந்த ஹதீஸ்கள் ஆதாரப்பூர்வமானவையாக இருந்தால் இவற்றின் அடிப்படையில் முடிவு செய்வதில் நியாயம் இருக்கின்றது. ஆனால் இந்தக் கருத்தில் இடம் பெறும் ஹதீஸ்களில் எதுவுமே ஆதாரப்பூர்வமானதாக இல்லை. அவற்றில் சில ஹதீஸ்கள் இட்டுக்கட்டப் பட்டவையாகவும், வேறு சில ஹதீஸ்கள் பலவீனமானவையாகவும் உள்ளன.

(அந்த ஹதீஸ்கள் எவை என்பதும் அவை எவ்வாறு பலவீனமானவையாக அமைந்துள்ளன என்பதும் தனியாக பக்கம் 27 முதல் விளக்கப்பட்டுள்ளது)

* ஜகாத் கொடுப்பது எப்போது கடமை என்பதற்கு ஆதாரம் உள்ளது.

* எவ்வளவு கொடுக்க வேண்டும் என்பதற்கு ஆதாரம் உள்ளது.

* யார் யாருக்குக் கொடுக்க வேண்டும் என்பதற்கு ஆதாரம் உள்ளது.

ஆனால் ஜகாத் கொடுக்கப்பட்ட பொருளுக்கு மீண்டும் கொடுக்க வேண்டும் என்பதற்கு ஏற்கத்தக்க ஆதாரம் ஏதும் இல்லை. இதற்கு ஏற்கத்தக்க ஆதாரம் இல்லாத நிலையில் ‘ஜகாத் கொடுக்க வேண்டும்’ என்ற கட்டளையை எவ்வாறு புரிந்து கொள்வது?

எவ்விதக் காலக் கெடுவும் நிர்ணயிக்காமல் ஒரு காரியத்தைச் செய்யுமாறு பொதுவாகக் கட்டளையிட்டால் அதை ஒரு தடவை செய்ய வேண்டும் என்பது தான் அதன் பொருளாகும்.

வணக்க வழிபாடுகள் மட்டுமின்றி, உலகில் நாம் செய்கின்ற கொடுக்கல் வாங்கல் உள்ளிட்ட அனைத்தையும் இப்படித் தான் புரிந்து கொள்கிறோம்; புரிந்து கொள்ள வேண்டும்.

தொழுகையைப் பொறுத்த வரை தினமும் ஐந்து வேளை தொழ வேண்டும் என்பதற்கு நேரடியான கட்டளை இருக்கின்றது. அதனால் தினமும் ஐந்து வேளை தொழுகை கடமை என்று நாம் புரிந்து கொள்கிறோம்.

குர்ஆனிலோ, நபிவழியிலோ தொழ வேண்டும்’ என்ற கட்டளை மட்டும் இருந்து எவ்வளவு தொழ வேண்டும் என்பது பற்றி ஒரு குறிப்பும் அறவே இல்லாவிட்டால் தினசரி ஐந்து வேளை என்று நாம் புரிந்து கொள்ள மாட்டோம். மாதம் ஒரு தடவை என்றும் புரிந்து கொள்ள மாட்டோம். வருடம் ஒரு தடவை என்றும் புரிந்து கொள்ள மாட்டோம். அப்படிப் புரிந்து கொண்டால் எந்த ஆதாரத்தின் அடிப்படையில் இவ்வாறு புரிந்து கொண்டீர்கள் என்ற கேள்வி எழும்.

நோன்பைப் பொறுத்த வரை ரமளான் மாதம் முழுவதும் நோன்பு நோற்றாக வேண்டும் என்று தெளிவான கட்டளை உள்ளது. ரமளானை அடைபவர் நோன்பு நோற்க வேண்டும்’ என்றும் கட்டளை உள்ளது. ரமளான் என்பது குறிப்பிட்ட ஒரு மாதத்தின் பெயராகும். இம்மாதம் வருடந்தோறும் திரும்பத் திரும்ப வருவதால் ஒவ்வொரு வருடமும் நோன்பு நோற்க வேண்டும் என்று புரிந்து கொள்கிறோம்.

இப்படிக் கூறப்படாமல், நோன்பு நோற்க வேண்டும் என்று மட்டும் குர்ஆனிலோ, நபிவழியிலோ கூறப்பட்டு, நாளோ, கிழமையோ, மாதமோ அத்துடன் குறிப்பிடப்படாமல் இருந்தால் அதனை நாம் எப்படிப் புரிந்து கொள்வோம்?

வாழ்நாளில் ஒரு தடவை என்று தான் அதைப் புரிந்து கொள்ள முடியும். அவ்வாறு புரிந்து கொண்டால் அதில் ஏற்கத்தக்க எந்த எதிர்க் கேள்வியும் எழாது.

அவ்வாறு இல்லாமல் வாரா வாரம் என்றோ, மாதா மாதம் என்றோ, வருடத்தில் ஒரு மாதம் என்றோ, வருடத்தில் ஒரு வாரம் என்றோ நாம் அதைப் புரிந்து கொண்டால் அந்தக் காலக் கெடுவை எங்கிருந்து எடுத்தீர்கள் என்ற கேள்வி எழும். அதற்கு விடை கூற இயலாது.

ஹஜ் ஒர்உ தாரணம்

ஹஜ் என்ற கடமையை இதற்குரிய சரியான உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உரையாற்றும் போது ‘அல்லாஹ் ஹஜ்ஜைக் கடமையாக்கியுள்ளான். எனவே ஹஜ் செய்யுங்கள்’ என்று கூறினார்கள். அப்போது ஒரு மனிதர், ‘அல்லாஹ்வின் தூதரே! ஒவ்வொரு வருடமுமா?’ என்று கேட்டார். அவர் மூன்று முறை இவ்வாறு கேட்கும் வரை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மவுனமாக இருந்தார்கள். பின்னர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், ‘நான் ஆம் என்று கூறினால் அவ்வாறே (வருடா வருடம்) கடமையாகி விடும். அது உங்களுக்கு இயலாது’ என்று கூறி விட்டு, ‘நான் உங்களுக்கு (விவரிக்காமல்) விட்டதை நீங்களும் என்னை (கேள்வி கேட்காமல்) விட்டு விடுங்கள். தங்களுடைய நபிமார்களிடம் அதிகமாகக் கேள்வி கேட்டதாலும், முரண்பட்டதாலும் தான் உங்களுக்கு முன் சென்றவர்கள் அழிந்தனர்’ என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி).(முஸ்லிம்: 2380)

ஹஜ் கடமை என்று பொதுவாகக் கூறப்பட்ட பின் ‘ஒவ்வொரு வருடமுமா?’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் ஒரு நபித் தோழர் கேட்டதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கடும் கோபத்தை வெளிப்படுத்துகின்றார்கள். வாழ்நாளில் ஒரு தடவை தான் என்று விளக்கம் அளிக்கின்றார்கள்.

கால நிர்ணயம் எதையும் கூறாமல் ஒன்றைச் செய்யுமாறு கட்டளையிட்டால் மொத்தத்தில் ஒரு தடவை செய்ய வேண்டும் என்றே அதைப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதை இதிலிருந்து நாம் அறிகிறோம்.

‘மூஸாவுக்கு ஆயிரம் ரூபாய் கொடு’ என்று நாம் ஒருவருக்குக் கட்டளையிடுகிறோம் என்று வைத்துக் கொள்வோம். ஒரே ஒரு தடவை மூஸாவுக்கு ஆயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும் என்று தான் அந்த நபரும், மூஸாவும் புரிந்து கொள்வார்கள்.

மேற்கண்ட நமது கட்டளையின் அடிப்படையில் மூஸா அந்த நபரிடம் சென்று வருடா வருடம் ஆயிரம் ரூபாய் கேட்டால் அந்த நபர் கொடுப்பாரா? நிச்சயம் கொடுக்க மாட்டார்.

இந்த அடிப்படையில் தான் ஜகாத் குறித்த கட்டளையும் அமைந்துள்ளது.

ஒரு பொருளுக்கு ஒரு தடவை தான் ஜகாத் கொடுப்பது கடமை எனக் கூறும் நீங்கள் அதற்கான ஆதாரத்தைக் காட்ட இயலுமா? என்ற கேள்வியை மாற்றுக் கருத்துடையவர்கள் அடிக்கடி கேட்டு வருகின்றனர்.

ஒரு சொல்லுக்கு இது தான் பொருள் என்பது திட்டவட்டமாகத் தெரியும் போது, இதை விடத் தெளிவான ஆதாரம் வேறு என்ன வேண்டும்? வலிமையான இந்த ஆதாரத்துக்கு மேல் வேறு ஆதாரம் கேட்பது அறிவுடைமையாகுமா? இதை இவர்கள் புரிந்து கொள்ள மறுக்கின்றார்கள்.

‘உனக்கு ஆயிரம் ரூபாய் தருகிறேன்’ என்று ஒருவரிடம் நாம் கூறுகிறோம். அது போல் அவரிடம் ஆயிரம் ரூபாயைக் கொடுத்து விடுகிறோம். அவர் அடுத்த வருடம் வந்து ‘மீண்டும் ஆயிரம் ரூபாய் தாருங்கள்’ என்று நம்மிடம் கேட்கிறார். ‘ஆயிரம் ரூபாய் தந்து விட்டேனே!’ என்று நாம் கூறுகிறோம். ‘வருடா வருடம் தர மாட்டேன் என்று சொன்னீர்களா? அதற்கு என்ன ஆதாரம்?’ என்று அவர் கேட்டால் அவரைப் பற்றி நாம் என்ன நினைப்போம்?

‘வருடா வருடம் தருவேன்’ என்று கூறாமல் பொதுவாகச் சொன்னதே இதற்குரிய ஆதாரம் என்பது விளங்கவில்லையா?’ என்று அவரிடம் திருப்பிக் கேட்போம்.

செல்வங்களுக்கு ஜகாத் கொடுங்கள் என்பது பொதுவான சொல்.

* ஒவ்வொரு வினாடியும் கொடுக்க வேண்டுமா?

* ஒவ்வொரு நிமிடமும் கொடுக்க வேண்டுமா?

* ஒவ்வொரு மணிக்கும் கொடுக்க வேண்டுமா?

* ஒவ்வொரு நாளும் கொடுக்க வேண்டுமா?

* ஒவ்வொரு வாரமும் கொடுக்க வேண்டுமா?

* ஒவ்வொரு மாதமும் கொடுக்க வேண்டுமா?

* இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை கொடுக்க வேண்டுமா?

* மூன்று மாதங்களுக்கு ஒரு தடவை கொடுக்க வேண்டுமா?

* ஆறு மாதங்களுக்கு ஒரு தடவை கொடுக்க வேண்டுமா?

* வருடம் ஒரு தடவை கொடுக்க வேண்டுமா?

* ஐந்து வருடங்களுக்கு ஒரு தடவை கொடுக்க வேண்டுமா?

என்று ஆயிரக்கணக்கான அர்த்தங்களுக்கு இச்சொல் இடம் தரும் போது வருடா வருடம் என்ற ஒரு அர்த்தத்தை மட்டும் திட்டவட்டமாக யார் முடிவு செய்கிறார்களோ அவர்கள் தான் அதற்கான ஆதாரங்களை முன் வைக்க வேண்டும்.

எந்தக் கால கட்டமும் குறிப்பிடாமல் சொல்லப்பட்டதே நமக்குப் போதுமான ஆதாரமாகும்.

காலக் கெடு எதையும் குறிப்பிடாமல் ஒரு செய்தி சொல்லப்பட்டால் பொதுவாக ஒரு தடவை என்ற பொருளைத் தான் தரும் என்பதற்கு மற்றொரு உதாரணத்தையும் கூறலாம்.

ஒரு மனிதருக்குப் புதையல் கிடைக்கின்றது. இதில் 20 சதவிகிதம் வழங்க வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நிர்ணயித்தார்கள். (புகாரி: 1499, 2355, 6912, 6913)

புதையலை எடுத்தவர் வருடா வருடம் 20 சதவிகிதம் கொடுக்க வேண்டும் என்று இதைப் புரிந்து கொள்வார்களா? மொத்தத்தில் ஒரு தடவை என்று புரிந்து கொள்வார்களா?

போர்க் காலங்களில் எதிரிகளிடம் கைப்பற்றப்படும் பொருட்களில் ஐந்தில் ஒரு பங்கைச் செலுத்தி விட வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நிர்ணயித்தார்கள். (புகாரி: 6179, 53, 87, 523, 1398, 3095, 3510, 4368, 4369, 7266, 7556)

போரில் கைப்பற்றப்பட்ட பொருட்களில் வருடா வருடம் 20 சதவிகிதம் வழங்க வேண்டும் என்பது தான் இதன் பொருளா? அல்லது மீண்டும் போர்க் களத்தைச் சந்தித்து பொருட்களைக் கைப்பற்றினால் அதற்கு மட்டும் 20 சதவிகிதம் என்பது பொருளா?

எனவே வருடா வருடம் கொடுத்த பொருளுக்கே மீண்டும் ஸகாத் கொடுக்க வேண்டும் என்று கூறுவோர் தங்கள் கூற்றை நிரூபிக்கத் தக்க ஆதாரம் காட்ட முடியாவிட்டால் ஒரு பொருளுக்கு ஒரு தடவை என்பது தானாகவே நிரூபணமாகி விடும்.

இது தான் நாம் எடுத்து வைக்கும் முக்கியமான சான்றாகும்.

இதை வலுப்படுத்தும் வகையில் துணை ஆதாரங்கள் சிலவற்றையும் நாம் எடுத்துக் காட்டுகிறோம்

மாற்றுக் கருத்துடையவர்கள் முதன்மையான நம்முடைய வாதத்துக்கு உரிய மறுப்பு தராமல் துணை ஆதாரமாகச் சமர்ப்பிக்கும் சில கேள்விகளுக்கு மட்டும் பதிலளித்து, பிரச்சனையைத் திசை திருப்புகின்றார்கள்.

நாம் கூறும் துணை ஆதாரங்கள் தவறு என்று அவர்கள் நிரூபித்து விட்டதாக ஒரு வாதத்திற்குக் கூறினாலும், நம்முடைய அடிப்படையான வாதத்திற்குப் பதில் தராத வரை அவர்கள் தங்கள் கருத்தை நிலை நாட்ட முடியாது.

எனவே துணை ஆதாரங்களுக்கும் பதிலளிக்க வேண்டும்; அதை விட முக்கியமாக ஜகாத் கொடுக்கப்பட்ட பொருளுக்கே மீண்டும் மீண்டும் வருடந்தோறும் கொடுக்க வேண்டும் என்பதைச் சந்தேகத்திற்கு இடமில்லாத வகையில் நிரூபிப்பது அவர்களின் முதல் கடமையாகும்.