சொல்லும் செயலும் முரண்படாத தலைவர்
அன்பிற்குரிய சகோதர, சகோதரிகளே!
முஹம்மத் நபி (ஸல்) அவர்கள், அல்லாஹ்வின் தூதராகவும் மக்களின் ஜனாதிபதியாகவும் திகழ்ந்தார்கள். அப்பட்டிப்பட்ட உயரிய அந்தஸ்தில் இருந்தாலும் மக்களுக்கு ஏவுவதை கடந்து தன் வாழ்கையில் அனைத்தையும் கடைபிடிக்ககூடிய மனிதராகவும், தூதராகவும், சிறந்த தலைவராகவும் வாழ்ந்து காட்டினார்கள். அவர்கள் வாழ்கையில் நடந்த சில நிகழ்வுகளை இந்த உரையில் காண்போம்..
சொல்லும் செயலும் முரண்படாத தலைவர்
சமூகத்தில் அடுத்தவர்களுக்கு அறிவுரை கூறிவிட்டு, அதற்கு மாற்றமாக நடக்கும் மக்கள் அநேகம் உள்ளனர். அந்தப் பட்டியலில், மக்களை வழிநடத்தும் தலைவர்கள் பலரும் அடங்குவர். மக்களுக்கு ஏராளமான வாக்குறுதிகளைக் கொடுத்து ஆட்சிக் கட்டிலில் அமர்ந்த பிறகு, தாங்கள் கொடுத்த வாக்குறுதி பற்றிக் கொஞ்சம் கூட அக்கறை காட்டாமல் இருப்பதைப் பார்க்கிறோம்.
சொல் ஒன்றாகவும், செயல் வேறாகவும் இருக்கும் தலைவர்களுக்கு மத்தியில் முஹம்மது நபியோ முரண்பாடுகள் இல்லாத தலைவராகத் திகழ்ந்தார்கள். எதை மக்களுக்குக் கட்டளையிட்டார்களோ அதை வாழ்வில் கடைப்பிடிப்பதில் முதல் நபராக இருந்தார்கள். ஆகவே தான் அல்லாஹ் பின்வருமாறு அறிவிக்கச் சொல்கிறான்.
“கட்டுப்பட்டு நடப்போரில் முதன்மையானவனாக இருக்குமாறும், இணை கற்பித்தோரில் ஒருவனாக ஆகிவிடக்கூடாது என்றும் கட்டளையிடப்பட்டுள்ளேன்” எனக் கூறுவீராக! “என் இறைவனுக்கு நான் மாறு செய்தால் மகத்தான நாளின் வேதனையை அஞ்சுகிறேன்” எனக் கூறுவீராக!
قُلْ اِنَّ صَلَاتِىْ وَنُسُكِىْ وَ مَحْيَاىَ وَمَمَاتِىْ لِلّٰهِ رَبِّ الْعٰلَمِيْنَۙ
لَا شَرِيْكَ لَهٗۚ وَبِذٰلِكَ اُمِرْتُ وَاَنَا اَوَّلُ الْمُسْلِمِيْنَ
“எனது தொழுகை, எனது வணக்கமுறை, எனது வாழ்வு, எனது மரணம் யாவும் அகிலத்தின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே உரியன; அவனுக்கு நிகரானவன் இல்லை; இவ்வாறே நான் கட்டளையிடப்பட்டுள்ளேன்; முஸ்லிம்களில் நான் முதன்மையானவன்” என்று கூறுவீராக!
முஸ்லிமாக வாழ வேண்டும் என்று போதித்த முஹம்மது நபி (ஸல்) அவர்கள், முழுமையான முஸ்லிமாக, எல்லோருக்கும் முன்மாதிரியாக விளங்கினார்கள். எப்படி வாழ வேண்டும் என்றும் மக்களுக்கு எடுத்துச் சொன்னார்களோ அவ்வாறு தான் வாழ்ந்து காட்டினார்கள். வணக்க வழிபாடுகள் உட்பட எல்லா விஷயங்களிலும் அல்லாஹ்வைப் பயந்து அவனது கட்டளைக்குக் கட்டுப்படுவது அவர்களின் இயல்பாக இருந்தது.
தர்மப் பொருளுக்கு அஞ்சிய இறைத்தூதர்
நபி (ஸல்) அவர்கள் பாதையில் கிடந்த ஒரு பேரீச்சம் பழத்தைக் கடந்து சென்றார்கள். “இது தர்மப் பொருளாக இருக்குமோ என்ற அச்சம் எனக்கில்லாவிட்டால் இதை நான் சாப்பிட்டிருப்பேன்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: (புகாரி: 2431)
«إِنِّي لَأَنْقَلِبُ إِلَى أَهْلِي، فَأَجِدُ التَّمْرَةَ سَاقِطَةً عَلَى فِرَاشِي، فَأَرْفَعُهَا لِآكُلَهَا، ثُمَّ أَخْشَى أَنْ تَكُونَ صَدَقَةً، فَأُلْقِيهَا»
“நான் என் வீட்டாரிடம் வருகின்றேன். என் படுக்கையின் மீது பேரீச்சம் பழம் விழுந்திருப்பதைப் பார்த்து அதைத் தின்பதற்காக எடுக்கின்றேன். அதற்குள் அது தர்மப் பொருளாக இருக்குமோ என்னும் அச்சம் எனக்கு ஏற்படுகின்றது; உடனே அதைப் போட்டு விடுகின்றேன்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: (புகாரி: 2432)
தர்மப் பொருளை வாங்கிப் பயன்படுத்தக் கூடாதென நபிகளாருக்கு அல்லாஹ் தடை விதித்திருந்தான். ஆகவே, பேரீத்தம்பழம் விழுந்து கிடப்பதைக் காணும் போது அது தர்மப் பொருளாக இருக்குமோ என்று அஞ்சி அதை எடுக்காமல் விட்டு விடுகிறார்கள். இவ்வாறு அனைத்து விஷயங்களிலும் அல்லாஹ்வுக்குப் பயந்து அவனுக்குக் கட்டுப்படுகின்ற பண்பு நம்மிடம் இருக்கிறதா என்று நாமெல்லாம் யோசிக்க கடமைப் பட்டுள்ளோம்.
மார்க்கச் சட்டங்களை நடைமுறைப்படுத்திய நபி
‘தொழுகைக்காக இகாமத் சொல்லப்பட்டது. வரிசைகள் சரி செய்யப்பட்டன. நபி (ஸல்) அவர்கள் வீட்டிலிருந்து வெளியே வந்தார்கள். தொழுகைக்காக அவர்களின் இடத்தில் போய் நின்றதும் குளிப்பு கடமையானது நினைவிற்கு வந்ததால் எங்களைப் பார்த்து ‘உங்களுடைய இடத்திலேயே நில்லுங்கள்’ என்று கூறிவிட்டு (வீட்டிற்குள்) சென்றார்கள். பின்னர், அவர்கள் குளித்துவிட்டுத் தலையிலிருந்து தண்ணீர் சொட்டச் சொட்ட வந்தார்கள். தக்பீர் சொல்லித் தொழுகை நடத்தினார்கள். நாங்கள் அவர்களுடன் தொழுதோம்’
அறிவிப்பவர் :அபூ ஹுரைரா (ரலி),
நூல்: (புகாரி: 275) , 639
நபியவர்கள் குளித்துவிட்டுத் தொழ வேண்டிய நிலையில் இருக்கிறார்கள். தொழுகையில் நின்றதும் அது நினைவுக்கு வருக்கிறது. இப்போது குளிக்கச் சென்றால் மக்கள் என்ன நினைப்பார்களோ என்று நினைத்துக் கொண்டு தயங்கி நிற்கவில்லை. உடனே சென்று குளித்து வந்து தொழுகை நடத்தினார்கள். மற்றவர்கள் என்ன விமர்சனம் செய்வார்களோ என்று எண்ணிக் கொண்டு, குர்ஆன் ஹதீஸுக்கு ஏற்ப தங்களை மாற்றிக் கொள்ளாதவர்களுக்கு அல்லாஹ்வின் தூதரிடம் அழகிய பாடம் இருக்கிறது.
குணமே குர்ஆனாக அமைந்து இருந்தது
அல்லாஹ் அருளும் வேதத்தை மக்களுக்கு ஓதிக்காட்டி அதைத் தெளிவுபடுத்துவது நபிமார்களின் பொறுப்பு. இதன்படி பார்த்தாலும் நபிகளாரின் வாழ்க்கை முழுவதும் குர்ஆனுக்கு ஒப்பாகவும் அதற்கு விளக்கமாகவும் இருந்தது. இதோ இதை மெய்படுத்தும் ஒரு செய்தியைப் பாருங்கள்.
… يَا أُمَّ الْمُؤْمِنِينَ أَنْبِئِينِي عَنْ خُلُقِ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَتْ: «أَلَسْتَ تَقْرَأُ الْقُرْآنَ؟» قُلْتُ: بَلَى، قَالَتْ: «فَإِنَّ خُلُقَ نَبِيِّ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ الْقُرْآنَ»
قَالَ: فَهَمَمْتُ أَنْ أَقُومَ وَلَا أَسْأَلَ أَحَدًا عَنْ شَيْءٍ حَتَّى أَمُوتَ، ثُمَّ بَدَا لِي،…
“இறை நம்பிக்கையாளர்களின் அன்னையே! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் குணத்தைப் பற்றிக் கூறுங்கள்” எனக் கேட்டேன். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், “நீர் குர்ஆனை ஓதவில்லையா?” என்று கேட்டார்கள். நான் “ஆம் (ஓதியிருக்கிறேன்)” என்றேன். ஆயிஷா (ரலி) அவர்கள், “நபி (ஸல்) அவர்களின் குணம் குர்ஆனாகவே இருந்தது” என்று கூறினார்கள். இதைச் செவியேற்ற நான் எழுந்துவிடலாம் எனவும், இனிமேல் நான் இறக்கும்வரை எவரிடமும் எது குறித்தும் கேட்க வேண்டியதில்லை என்றும் எண்ணினேன்.
அறிவிப்பவர்: ஸஅத் பின் ஹிஷாம்
நூல்: (முஸ்லிம்: 1357)
இன்று பல ஆன்மீகவாதிகளைப்பார்த்தால், சாதாரண மக்களை விடவும் தங்களை உயர்வாகக் காட்டிக் கொள்கிறார்கள். ஆனால் மக்களுக்குச் சொல்லும் அறிவுரைகளிலிருந்து தங்களை விதிவிலக்கு செய்து கொள்வார்கள். இத்தகைய இரட்டை நிலை நபிகளாரிடத்தில் இருந்தது கிடையாது.
நபிக்கும் இந்த நிலையா?
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் , ‘எவரையும் அவரின் நற்செயல் சொர்க்கத்தில் ஒருபோதும் நுழைவிக்காது; (மாறாக, அல்லாஹ்வின் தனிபெரும் கருணையாலேயே எவரும் சொர்க்க புகமுடியும்)’ என்று கூறினார்கள். மக்கள், ‘தங்களையுமா (தங்களின் நற்செயல் சொர்க்கத்தில் நுழைவிப்பதில்லை), இறைத்தூதர் அவர்களே?’ என்று கேட்டார்கள்.
நபி (ஸல்) அவர்கள், ‘(ஆம்) என்னையும் தான்; அல்லாஹ் (தன்னுடைய) கருணையாலும் அருளாலும் என்னை அரவணைத்துக் கொண்டால் தவிர’ என்று கூறிவிட்டு, ‘எனவே, நீங்கள் நேர்மையோடு (நடு நிலையாகச்) செயல்பாடுங்கள். நிதானமாக நடந்துகொள்ளுங்கள். உங்களில் எவரும் மரணத்தை விரும்பிட வேண்டாம். ஒன்று அவர் நல்லவராக இருப்பார்; அவர்(உயிர் வாழ்வதன் மூலம்) நன்மையை அதிகமாக்கிக் கொள்ளலாம். அல்லது அவர் தீயவராக இருப்பார்; அவர் (உயிர் வாழ்வதால்) மனம் திருந்தக்கூடும்’ என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: (புகாரி: 6463)
அல்லாஹ்வின் அருள் இருந்தால் மட்டுமே மறுமை நாளில் வெற்றி பெற முடியும் என்று கூறிய நபியவர்கள், தமக்கும் இந்த நிலை தான் என்று சொல்கிறார்கள். இன்றைய ஆன்மீகவாதிகள் இப்படியா இருக்கிறார்கள்?
உங்களுக்கு இறைவனுடைய அருள் கிடைக்க வேண்டுமானாலும் எங்களுடைய தயவு தேவை. எங்களால் மட்டுமே அதற்கேற்ப ஏற்பாடுகளை செய்ய முடியும் என்று சொல்கிறார்கள். இதுவே ஆன்மீகத்தில் இடைத்தரகர் நிலை வருவதற்கு காரணம். இதுபோன்ற சிந்தனைகள் உடைத்தெறியும் வகையில் முஹம்மது நபி வாழ்வு இருந்தது.
தமக்காக சட்டத்தை மாற்றிக் கொள்ளவில்லை
ஒரு மனிதர் (நபி (ஸல்) அவர்களிடம்), “அல்லாஹ்வின் தூதரே! (இஸ்லாத்திற்கு முன் இறந்துவிட்ட) என் தந்தை எங்கே இருக்கிறார்?” என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “(நரக) நெருப்பில்” என்று பதிலளித்தார்கள். அவர் திரும்பிச் சென்றபோது அவரை நபி (ஸல்) அவர்கள் அழைத்து, “என் தந்தையும் உன் தந்தையும் (நரக) நெருப்பில்தான் (இருக்கிறார்கள்)” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : அனஸ் (ரலி),
நூல் : (முஸ்லிம்: 347)
நபி (ஸல்) அவர்கள் தம் தாயாரின் அடக்கத்தலத்தைச் சந்தித்தபோது அழுதார்கள்; (இதைக் கண்டு) அவர்களைச் சுற்றியிருந்தவர்களும் அழுதனர். அப்போது அவர்கள், “நான் என் இறைவனிடம் என் தாயாருக்காகப் பாவமன்னிப்புக் கோர அனுமதி கேட்டேன். எனக்கு அனுமதி வழங்கப்படவில்லை. அவரது அடக்கத்தலத்தைச் சந்திப்பதற்கு அனுமதி கேட்டேன். எனக்கு அனுமதி வழங்கினான். எனவே, அடக்கத்தலங்களைச் சந்தியுங்கள். ஏனெனில், அவை மரணத்தை நினைவூட்டும்!” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி),
நூல் : (முஸ்லிம்: 1777)
அல்லாஹ்வுக்கு இணை வைப்பது மிகப்பெரும் பாவம். அந்த நிலையில் இறப்போருக்கு மறுமையில் நிரந்தர நரக தண்டனை கிடைக்கும். எவரேனும் இணை வைக்கும் நிலையில் இறந்து விட்டால் அவருக்காகப் பாவமன்னிப்புத் தேடுவதற்கு அல்லாஹ் தடை விதித்துவிட்டான். இது குறித்து மக்களுக்கு எச்சரித்த நபியவர்கள் தமது தாய் தந்தை விஷயத்தில் இந்தக் கருத்தை மாற்றிக் கொள்ளவில்லை.
தமது பெற்றோர் இணைவைக்கும் கொள்கையில் இறந்ததால் அவர்களின் நிலையும் இதுதான் என்பதைத் தெளிவுபடுத்தினார்கள். மற்ற இணைவைப்பாளர்கள் விஷயத்தில் எப்படி நடந்து கொண்டார்களோ அப்படிதான் தமது பெற்றோர் விஷயத்திலும் நடந்து கொண்டார்கள். இவ்வாறு, நம்பிக்கையிலும் நடவடிக்கையிலும் முரண்படாத தலைவராக முஹம்மது நபி இருந்தார்கள்.
வணக்க வழிபாட்டில் முன்மாதிரியாக திகழ்ந்த நபி
நபி (ஸல்) அவர்கள் தம் பாதங்கள் வீங்கும் அளவிற்கு நின்று (அல்லாஹ்வைத்) தொழுதார்கள். அப்போது அவர்களிடம் ‘தங்களின் முந்தைய பிந்தைய தவறுகளை அல்லாஹ் மன்னித்துவிட்டானே! (பிறகு ஏன் நீங்கள் இந்த அளவு சிரமம் எடுத்துக் கொள்ள வேண்டும்?)’ என்று கேட்கப்பட்டது. (அதற்கு அவர்கள்,) ‘நான் நன்றியுள்ள அடியானாக இருக்க வேண்டாமா?’ என்று கேட்டார்கள்.
அறிவிப்பவர் : முஃகீரா இப்னு ஷுஅபா(ரலி),
நூல் : (புகாரி: 4836)
நபி (ஸல்) அவர்கள் மரணிப்பதற்கு முன் நோய்வாய்ப் பட்டிருந்தபோது பிலால் (ரலி) வந்து தொழுகை பற்றி அவர்களிடம் அறிவித்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் ‘அபூபக்ரைத் தொழுகை நடத்தச் சொல்லுங்கள்’ என்றார்கள். அதற்கு நான் அவர் இளகிய மனம் படைத்தவர். உங்கள் இடத்தில் அவர் நின்றால அழுதுவிடுவார். அவரால் ஓத இயலாது என்று கூறினேன். ‘அபூபக்ரைத் தொழுகை நடத்தச் சொல்லுங்கள்’ என்று மீண்டும் கூறினார்கள். நானும் முன் போன்றே கூறினேன்.
மூன்றாவது அல்லது நான்காவது முறை ‘நீங்கள் யூஸுஃப் நபியின் தோழியராக இருக்கிறீர்கள். அபூபக்ரைத் தொழுகை நடத்தச் சொல்லுங்கள்’ என்றனர். (அதன்பின்னர்) அபூபக்ர் தொழுகை நடத்தினார். நபி (ஸல்) அவர்கள் கால்கள் தரையில் இழுபடுமாறு இரண்டு மனிதர்களுக்கிடையே தொங்கியவர்களாக (பள்ளிக்குச்) சென்றனர்.
அவர்களைக் கண்ட அபூபக்ர் (ரலி) பின்வாங்க முயன்றார்கள். தொழுகையை நடத்துமாறு அவருக்கு நபி (ஸல்) அவர்கள் சைகை செய்தார்கள். அபூபக்ர் (ரலி)யின் வலப்புறமாக நபி (ஸல்) அவர்கள் உட்கார்ந்தனர். நபி (ஸல்) அவர்கள் கூறும் தக்பீரை அபூபக்ர் (ரலி) மற்றவர்களுக்குக் கேட்கச் செய்தார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா(ரலி),
நூல் : (புகாரி: 712)
முஸ்லிம்கள் கடைப்பிடிக்க வேண்டிய முதன்மையான கடமை தொழுகை. தொழுகையை வலியுறுத்தும் நிறைய வசனங்கள் குர்ஆனில் உள்ளன. நபியவர்கள் மக்களுக்கு தொழுமாறு ஏவிவிட்டு ஒதுங்கி கொள்ளவில்லை. தனது மரணத் தருவாயிலும் கூட தொழுகை விஷயத்தில் கவனமாக இருந்தார்கள். கடமைகளைச் செய்வதில் மட்டுமல்ல! செய்யக் கூடாத காரியங்களை விட்டும் விலகுவதிலும் முதல் நபராகக் களத்தில் இருந்தார்கள் என்பதற்குப் பின்வரும் சம்பவம் முக்கிய சான்று.
(ஹஜ் நேரத்தில் உரையாற்றும் போது நபியவர்கள் பின்வருமாறு கூறினார்கள்:)
“உங்களது புனிதமிக்க இந்நகரத்தில் உங்களது புனிதமிக்க இம்மாதத்தில் இன்றைய தினம் எந்த அளவு புனிதமானதோ அந்த அளவிற்கு உங்கள் உயிர்களும் உங்கள் உடைமைகளும் உங்களுக்குப் புனிதமானவை ஆகும். அறிக!
அறியாமைக் காலத்தின் அனைத்து விவகாரங்களும் என் பாதங்களுக்குக் கீழே புதைக்கப்பட்டவை ஆகும். அறியாமைக் காலத்தில் நிகழ்ந்துவிட்ட உயிர்க்கொலைகளுக்கான பழிவாங்குதல்கள் அனைத்தும் (என் பாதங்களுக்குக் கீழே) புதைக்கப்பட்டவை ஆகும். (அவற்றை நான் தள்ளுபடி செய்கிறேன்.)
முதற்கட்டமாக, நம்மிடையே நடைபெற்ற கொலைகளில் ரபீஆ பின் அல்ஹாரிஸின் மகனது கொலைக்கான பழிவாங்கலை நான் தள்ளுபடி செய்கிறேன். அவன் பனூ சஅத் குலத்தாரிடையே பால்குடிப் பாலகனாக இருந்துவந்தான். அவனை ஹுதைல் குலத்தார் கொன்றுவிட்டனர். அறியாமைக் காலத்தில் இருந்த வட்டியும் என் பாதங்களுக்குக் கீழே புதைக்கப்படுகிறது.
(அவற்றையும் நான் தள்ளுபடி செய்கிறேன்.) நம்மவர் கொடுத்திருந்த வட்டிகளில் முதற்கட்டமாக (என் பெரிய தந்தை) அப்பாஸ் பின் அப்தில் முத்தலிபிற்கு வரவேண்டிய வட்டியை நான் தள்ளுபடி செய்கிறேன். அதில் (அசலைத் தவிர) கூடுதலான தொகை அனைத்தும் தள்ளுபடி செய்யப்படுகிறது…. (ஹதீஸின் ஒரு பகுதி)
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)
நூல்: (முஸ்லிம்: 2334)
மக்களுக்கு சேவையாற்றிய நபி
வட்டியை வாங்காமல் தள்ளுபடி செய்து விடுங்கள் என்று கூறிய நபிகளார், தமது பெரிய தந்தைக்கு வர வேண்டிய வட்டியைத் தள்ளுபடி செய்து அதற்கு முன்மாதிரியாக திகழ்ந்தார்கள். இன்றோ தலைவர்கள் இவ்வாறு இருக்கிறார்களா? மக்களிடம் சொன்னதற்கு மாற்றமாக தலைவர்களே சட்டங்களை மீறுவதும், தீமையான விஷயங்களில் புகுந்து விளையாடுவதையும் பார்க்கிறோம். சமூகத்திற்கு நற்குணங்களை, நல்லறங்களைப் போதித்து விட்டு அவர்கள் அவற்றைக் கடைப்பிடிப்பது கிடையாது. ஆனால் முஹம்மது நபியின் செயல்பாட்டினைப் பாருங்கள்.
நபியவர்கள் (மதீனாவுக்கு வந்த பிறகு அங்கு) ஒரு பள்ளிவாசலைக் கட்டினார்கள். அதைக் கட்டும்போது அவர்களுடன் இறைத்தூதர் (ஸல்) அவர்களும் செங்கல் சுமக்கலானார்கள்.
அறிவிப்பவர்: சுராகா இப்னு மாலிக் (ரலி)
நூல்: (புகாரி: 3906)
நபி (ஸல்) அவர்கள் பேரீச்சம் பழத்தை மென்று ஊட்டுவதற்காக ஒரு நாள் காலை அப்துல்லாஹ் இப்னு அபீதல்ஹா எனும் குழந்தையை நபி (ஸல்) அவர்களிடம் கொண்டு சென்றேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் அடையாளமிடும் கருவியைக் கொண்டு (பொதுநிதியிலுள்ள) ஸதகா ஒட்டகத்திற்குத் தம் கையால் அடையாளமிட்டுக் கொண்டிருந்ததைக் கண்டேன்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: (புகாரி: 1502)
கிப்லா திசையில் (உள்ள சுவற்றில்) நபி (ஸல்) அவர்கள் சளியைக் கண்டார்கள். அவர்களின் முகத்தில் அதிருப்தி காணப்பட்டது. அவர்கள் எழுந்து தம் கையால் (கையை வைத்து) அதைச் சுரண்டி சுத்தம் செய்தார்கள்.
அறிவிப்பவரா : அனஸ் (ரலி)
நூல்: (புகாரி: 417)
இஸ்லாமிய ஆட்சியின் தலைவராக இருந்தாலும் பள்ளிவாசலைக் கட்டுவது, பராமரிப்பது, பொதுநிதியை முறைப்படுத்துவது என தம்மால் முடிந்தளவு அனத்து பொதுப்பணியிலும் பங்கெடுத்தார்கள். இக்கட்டான நேரங்களில் மக்களோடு களத்தில் இறங்கி உதவிக் கரம் நீட்டினார்கள். அதுவே அல்லாஹ்வின் தூதரின் விருப்பமாகவும் பழக்கமாகவும் இருந்தது.
அகழ்ப் போரின்போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மண்ணைச் சுமந்து கொண்டு செல்வதை பார்த்தேன். மண் அவர்களின் வயிற்றின் வெண்மையை மறைத்(துப் படிந்)திருந்தது. அப்போது அவர்கள் இவ்வாறு (பாடிய வண்ணம்) கூறிக்கொண்டிருந்தார்கள்.
(இறைவா!) நீ இல்லாவிட்டால் நாங்கள் நேர்வழி அடைந்திருக்க மாட்டோம்’ தருமம் செய்திருக்கவும் மாட்டோம்; தொழுதிருக்கவும் மாட்டோம். நாங்கள் பகைவர்களைச் சந்திக்கும்போது எங்களின் மீது அமைதியை இறக்கியருள்வாயாக! எங்கள் பாதங்களை உறுதிப்படுத்துவாயாக! இவர்கள் (குறைஷிகள்) எங்களின் மீது அக்கிரமம் புரிந்துவிட்டார்கள். இவர்கள் எங்களைச் சோதனையில் ஆழ்த்த விரும்பினால் அதற்கு நாங்கள் இடம் தர மாட்டோம்.
அறிவிப்பவர்: பரா (ரலி)
நூல்: (புகாரி: 2837) , 4104, 7236)
“என் சமுதாயத்தாருக்குச் சிரமம் ஏற்பட்டு விடும் என்னும் அச்சம் மட்டும் எனக்கில்லா விட்டால் நான் எந்தச்சிறு படைக் குழுவிலிருந்தும் (அதில் கலந்து கொள்ளாமல்) பின்தங்கியிருக்க மாட்டேன். ஆயினும், என்னைச் சுமந்து செல்லும் வாகனமும் என்னிடம் இல்லை. என் தோழர்களை ஏற்றிச் செல்ல (போதிய) வாகன வசதியும் என்னிடம் இல்லை .
ஆனால், அவர்கள் என்னுடன் (போருக்கு) வர முடியாமல் பின்தங்க வேண்டியிருப்பது எனக்கு மனவேதனை அளிக்கின்றது. மேலும், நான் அல்லாஹ்வின் பாதையில் போரிட்டு அதனால் கொல்லப்பட்டு, மீண்டும் உயிராக்கப்பட்டு மீண்டும் இறைவழியில் போரிட்டுக் கொல்லப்பட்டு மீண்டும் உயிராக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறேன்’ என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: (புகாரி: 2972) , (முஸ்லிம்: 3819)
மக்களுக்கு ஏதேனும் பிரச்சனை என்றால் தலைமறைவாகிவிடும் தலைவர்களுக்கு மத்தியில், முந்தி வந்து சேவையாற்றும் நபியின் பண்பும் பழக்கமும் நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது. ஈருலகிலும் வெற்றி பெறுவதற்கு ஏற்ப எப்படி வாழ்வது என்பதை நடைமுறை வாழ்வில் செயல்படுத்திக் காட்டினார்கள்.. நாமும் அல்லாஹ்வின் தூதரின் வாழ்க்கையை முன்மாதிரியாக கொண்டு வாழ்வோமாக.!