சொர்க்கத்தை கடமையாக்கும் பன்னிரெண்டு ரக்அத்கள்
சொர்க்கத்தை கடமையாக்கும் பன்னிரெண்டு ரக்அத்கள்
யார் 12 ரக்அத்கள் தொழுவாரோ அவருக்காக அல்லாஹ் சொர்க்கத்தில் ஒரு வீட்டைக் கட்டுவான். (அவை) லுஹருக்கு முன்னர் 4 ரக்அத்கள், லுஹருக்குப் பின்னர் 2 ரக்அத்கள், அஸ்ருக்கு முன்னர் 2 ரக்அத்கள், மஃரிபுக்குப் பின்னர் 2 ரக்அத்கள், சுப்ஹுக்கு முன்னர் 2 ரக்அத்கள் ஆகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: உம்மு ஹபீபா (ரலி)
(திர்மிதீ: 415) ➚,(நஸாயீ: 1801, 1802, 1803) ➚, குப்ரா(நஸாயீ: 1477) ➚,
இந்தச் செய்தி இடம்பெறும் அனைத்து நூல்களிலும் அபூஇஸ்ஹாக் என்பவர் இடம் பெற்றுள்ளார். இவர் நம்பகமானவர் என்றாலும் இவர் தத்லீஸ் (இருட்டடிப்பு செய்பவர்) என்று குற்றம் சுமத்தப்பட்டவர்.
அபூஇஸ்ஹாக் அஸ்ஸபீஈ என்பவர் தத்லீஸ் செய்பவர் என்று இப்னு ஹிப்பான் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.
நூல்: அஸ்ஸிகாத், பாகம்: 5, பக்கம்: 177
இமாம் நஸாயீ அவர்கள் தத்லீஸ் செய்பவர்களின் பட்டியலில் அபூஇஸ்ஹாக் அவர்களையும் குறிப்பிட்டுள்ளார்கள்.
நூல்: மீஸானுல் இஃதிதால், பாகம்:1, பக்:460
அம்ர் பின் அப்துல்லாஹ் அபூஇஸ்ஹாக் என்பவர் தத்லீஸ் செய்பவர்களில் பிரபலமானவர் ஆவார்.
நூல்: அஸ்மாவுல் முதல்லிஸீன், பக்கம்: 77
தத்லீஸ் என்பதன் பொருள் மறைத்தல் என்பதாகும். விற்பவரிடம் பொருளின் குறைகளை மறைப்பதை தத்லீஸ் என்று அகராதியில் குறிப்பிடுவர்.
ஹதீஸ் துறையில் தத்லீஸ் என்பது ஒருவர் தன் ஆசிரியரிடமிருந்து சில செய்திகளைக் கேட்டிருப்பார். சில செய்திகளை அவரிடம் நேரடியாகக் கேட்டிருக்கமாட்டார். இந்நிலையில் தான் நேரடியாகக் கேட்டிராத ஒருவரிடம், நேரடியாகக் கேட்டிருப்பதற்கும் கேட்காமலிருப்பதற்கும் வாய்ப்புள்ள வாசகத்தைப் பயன்படுத்திச் சொல்வார். இப்படி அறிவிக்கும் பழக்கமுள்ள ஒருவர் அறிவித்தால் அவர் நேடியாகக் கேட்டேன் என்று தெளிவான வாசகத்தில் அறிவித்தால் மட்டுமே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பது ஹதீஸ் கலை வல்லுநர்களின் முடிவாகும்.
இந்தச் செய்தியில் ‘நேரடியாகக் கேட்டேன்’ என்ற வாசகம் இல்லாத வார்த்தையை அபூ இஸ்ஹாக் பயன்படுத்தியிருப்பதால் இந்தச் செய்தி பலவீனம் அடைகிறது.
மேலும்(நஸாயீ: 1802) ➚இல் இடம்பெறும் செய்தியில் ஃபுலைஹ் பின் சுலைமான் என்பவர் இடம்பெற்றுள்ளார். இவரும் பலமானவர் இல்லை என்பதை அந்தச் செய்தியின் கீழே இமாம் நஸாயீ குறிப்பிட்டுள்ளார்கள்.
திர்மிதியில் இடம்பெறும் செய்தியில் முஅம்மல் பின் இஸ்மாயீல் என்பவர் இடம்பெற்றிருக்கிறார். அவரும் பலவீனமானவராவார்.
முஅம்மல் பின் இஸ்மாயீல் என்பவர் நினைவாற்றலில் கோளாறு உள்ளவர்.
நூல்: தக்ரீபுத் தஹ்தீப், பாகம்: 2, பக்கம்: 555
ஆயிஷா (ரலி) வழியாக இடம் பெறும் செய்தி
‘‘யார் சுன்னதான 12 ரக்அத்கள் தொழுவாரோ அவருக்காக அல்லாஹ் சொர்க்கத்தில் ஒரு வீட்டைக் கட்டுவான். (அவை) லுஹருக்கு முன்னர் 4 ரக்அத்கள், லுஹருக்குப் பின்னர் 2 ரக்அத்கள், மஃரிபுக்குப் பின்னர் 2 ரக்அத்கள், இஷாவுக்குப் பின் 2 ரக்அத்கள், சுப்ஹுக்கு முன்னர் 2 ரக்அத்கள் ஆகும்’’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
(திர்மிதீ: 414) ➚,(இப்னு மாஜா: 1140) ➚, குப்ரா(நஸாயீ: 1471) ➚, முஸ்னத் அபீ யஃலா-4525,
ஆயிஷா (ரலி) அவர்கள் வழியாக வரும் அனைத்துச் செய்திகளிலும் முகீரா பின் ஸியாத் என்ற பலவீனமான அறிவிப்பாளர் இடம்பெற்றுள்ளார்.
முகீரா பின் ஸியாத் என்பவர் குளறுபடியாக ஹதீஸ்களை அறிவிப்பவர். அவருடைய ஹதீஸ்கள் மறுக்கப்பட வேண்டியவை என்று அஹ்மத் பின் ஹன்பல் குறிப்பிட்டுள்ளார்கள். என் தந்தையிடமும் அபூஸுர்ஆ அவர்களிடமும் ‘இவரை ஆதாரமாகக் கொள்ளலாமா?’ என்றேன். அதற்கு அவ்விருவரும் கூடாது என்று பதிலளித்தரர்கள் என்று இப்னு அபீ ஹாத்திம் குறிப்பிட்டார்கள். இவர் வலிமையானவர் அல்ல என்று தாரகுத்னீ குறிப்பிட்டார்கள்.
நூல்: தஹ்தீபுத் தஹ்தீப், பாகம்:10, பக்கம்: 232
முகீரா பின் ஸியாத் என்பவர் வலிமையானவர் அல்ல என்று இமாம் நஸாயீ அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.
நூல்: அல்லுஅஃபாவுல் மத்ரூகீன், பக்கம்: 226
அபூஹுரைரா (ரலி) வழியாக இடம்பெறும்செய்தி
‘‘யார் ஒரு நாளைக்கு 12 ரக்அத்கள் தொழுவாரோ அவருக்காகச் சொர்க்கத்தில் ஒரு வீடு கட்டப்படும். (அவை) பஜ்ருக்கு முன் 2 ரக்அத்கள், லுஹருக்கு முன்னர் 2 ரக்அத்கள், லுஹருக்குப் பின்னர் 2 ரக்அத்கள், அஸ்ருக்கு முன்னர் 2 ரக்அத்கள், மஃரிபுக்குப் பின்னர் 2 ரக்அத்கள், இஷாவுக்கு பின் 2 ரக்அத்கள்’’ ஆகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
(இப்னு மாஜா: 1142) ➚, முஸ்னத் பஸ்ஸார்-9085,
அபூஹுரைரா (ரலி) அவர்கள் வழியாக இடம் பெறும் நூல்களில் முஹம்மத் பின் சுலைமான் என்ற பலவீனமான அறிவிப்பாளர் இடம்பெறுகிறார்.
முஹம்மத் பின் சுலைமான் என்பவரை ஆதாரமாக எடுக்கக்கூடாது என்று அபூஹாத்திம் அவர்களும், பலவீனமானவர் என்று நஸாயீ அவர்களும், இவர் குறைவான ஹதீஸ்களை அறிவித்தவர்; பல தவறுகளை இழைத்தவர் என்று இப்னு அதீ அவர்களும் குறிப்பிட்டுள்ளார்கள்.
நூல்: மீஸானுல் இஃதிதால், பாகம்:3, பக்:569
எவை அந்த பன்னிரெண்டு ரக்அத்கள்?
சொர்க்கத்தில் வீட்டைப் பெற்றுத் தரும் அந்த பன்னிரண்டு ரக்அத்கள் எவை? என்று கூறும் அனைத்து செய்திகளும் பலவீனமானவையாக இருந்தாலும் நபி (ஸல்) அவர்கள் கடமையல்லாத உபரியான தொழுகைகள் எத்தனை ரக்அத்கள் தொழுதுள்ளார்கள் என்ற விவரம் ஆதாரப்பூர்வமான நபிமொழிகளில் கிடைக்கிறது. அதில் 12 ரக்அத்கள் விவரம் இடம்பெற்றுள்ளது. எனவே அந்தப் பன்னிரண்டு ரக்அத்களை நாமும் தொழுது சொர்க்கத்தில் வீட்டைப் பெறலாம்.
நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுது வந்த (கடமையல்லாத) கூடுதலான தொழுகைகளைப் பற்றிக் கேட்டேன். அதற்கு அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனது வீட்டில் லுஹருக்கு முன் நான்கு ரக்அத்கள் (சுன்னத்) தொழுவார்கள். பிறகு புறப்பட்டுச் சென்று மக்களுக்கு (லுஹர்) தொழுவிப்பார்கள். பிறகு வீட்டுக்கு வந்து இரண்டு ரக்அத்கள் (சுன்னத்) தொழுவார்கள். மக்களுக்கு மஃக்ரிப் தொழுவித்துவிட்டு (வீட்டுக்கு) வந்து இரண்டு ரக்அத் (சுன்னத்) தொழுவார்கள். மக்களுக்கு இஷா தொழுவித்துவிட்டு எனது வீட்டுக்கு வந்து இரண்டு ரக்அத்கள் (சுன்னத்) தொழுவார்கள்.
இரவில் ஒன்பது ரக்அத்கள் (நஃபில்) தொழுவார்கள். அவற்றில் வித்ர் தொழுகையும் அடங்கும்; இரவில் நீண்ட நேரம் நின்றும் தொழுவார்கள்; இரவில் நீண்ட நேரம் அமர்ந்தபடியும் தொழுவார்கள். நின்று ஓதித் தொழும்போது நிலையிலிருந்தே ருகூஉ மற்றும் ஸஜ்தாவுக்குச் செல்வார்கள். உட்கார்ந்து ஓதித் தொழும்போது உட்கார்ந்தபடியே ருகூஉ மற்றும் ஸஜ்தா செய்வார்கள். ஃபஜ்ர் நேரம் வந்து விட்டால் (முன் சுன்னத்) இரண்டு ரக்அத்கள் தொழுவார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் ஷகீக்,
நூல்கள்:(முஸ்லிம்: 1323) ➚,(அபூதாவூத்: 1060) ➚
இந்த நபிமொழியில் நபி (ஸல்) அவர்கள் லுஹருக்கு முன் 4 ரக்அத்கள், லுஹருக்குப் பின் 2 ரக்அத்கள், மஃரிபுக்குப் பின் 2 ரக்அத்கள், இஷாவுக்குப் பின் 2 ரக்அத்கள், ஃபஜ்ருக்குப் முன் 2 ரக்அத்கள் தொழுதுள்ளார்கள் என்று இடம்பெற்றுள்ளது. ஆக மொத்தம் 12 ரக்அத்கள் இடம்பெற்றுள்ளது. இது தவிர்த்து இரவுத் தொழுகையும் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே நபிகளார் தொழுது வந்த இந்த எண்ணிக்கையில் தொழுவதன் மூலம் நாம் சொர்க்கத்தில் வீட்டைப் பெற்றுக் கொள்ளலாம்.
« مَنْ صَلَّى اثْنَتَىْ عَشْرَةَ رَكْعَةً فِى يَوْمٍ وَلَيْلَةٍ بُنِىَ لَهُ بِهِنَّ بَيْتٌ فِى الْجَنَّةِ قَالَتْ أُمُّ حَبِيبَةَ فَمَا تَرَكْتُهُنَّ مُنْذُ سَمِعْتُهُنَّ مِنْ رَسُولِ اللَّهِ -صلى الله عليه وسلم-. وَقَالَ عَنْبَسَةُ فَمَا تَرَكْتُهُنَّ مُنْذُ سَمِعْتُهُنَّ مِنْ أُمِّ حَبِيبَةَ. وَقَالَ عَمْرُو بْنُ أَوْسٍ مَا تَرَكْتُهُنَّ مُنْذُ سَمِعْتُهُنَّ مِنْ عَنْبَسَةَ. وَقَالَ النُّعْمَانُ بْنُ سَالِمٍ مَا تَرَكْتُهُنَّ مُنْذُ سَمِعْتُهُنَّ مِنْ عَمْرِو بْنِ أَوْسٍ.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யார் ஒவ்வொரு நாளும் பன்னிரண்டு ரக்அத்கள் (சுன்னத்) தொழுகின்றாரோ அதற்காக அவருக்குச் சொர்க்கத்தில் ஒரு மாளிகை எழுப்பப்படுகிறது.
உம்மு ஹபீபா (ரலி) அவர்கள் கூறினார்கள்: இதை நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்டதிலிருந்து அந்தப் பன்னிரண்டு ரக்அத்களை நான் கைவிட்டதேயில்லை.