சொர்க்கத்தில் நபியுடன் இருக்க சில வழிகள்
அன்பிற்குரிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! பின்பற்ற தகுந்த மார்க்கம் இஸ்லாம் மட்டுமே என்றும், நமது தூதர் நபி(ஸல்) அவர்களே என்றும் உறுதி கூறியவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன்.
சொர்க்கம் எனும் உயர் இலக்கை நோக்கியே முஸ்லிம்கள் பயணித்துக் கொண்டிருக்கிறார்கள். பயணத்தின் நடுவே உலக ஆசைகள் அவர்களை அவ்வப்போது திசை திருப்பினாலும் சொர்க்கம் எனும் இலக்கை விட்டு விட, அதன் இன்பத்தை இழந்து விட எந்த முஸ்லிமும் தயாராக இல்லை.
பாவம் செய்யும் பாவிகளும் இதற்கு விதிவிலக்கல்ல.
ஏனெனில் சொர்க்கத்தில் சிறிதளவு இடம் கிடைப்பதாயினும் அது அவ்வளவு எளிதல்ல.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
சொர்க்கத்தில் ஒரு சாட்டை வைக்கும் அளவு இடம் (கிடைப்பது) உலகத்தையும் அதிலிருப்பவற்றையும் விடச் சிறந்ததாகும்.
அறிவிப்பவர்: சஹ்ல் பின் சஅத் அஸ்ஸாஇதீ (ரலி),
நூல் : (புகாரி: 3250)
சாட்டையின் இருப்பிற்கு சாண் அளவு இடமே போதும். சொர்க்கத்தில் அந்தளவு இடம் கிடைப்பது முழு உலகம் கிடைப்பதைக் காட்டிலும் சிறந்தது என்று நபிகளார் கூறுவதிலிருந்து, சொர்க்கம் நுழைவது எவ்வளவு சிரமம் என்பதையும் அதன் இன்பம் எவ்வளவு பெரிது என்பதையும் ஒரு சேர விளங்கலாம்.
சரி! ஒரு அடியானுக்கு சொர்க்கம் கிடைத்து விட்டது என்று வைத்துக் கொள்வோம். அவனுக்கு அதைத் தாண்டிய பெரும் இன்பம் ஒன்று இருக்க முடியுமா? வாய்ப்பில்லை என்று தானே உங்களுக்குத் தோன்றுகிறது. ஆனால் உங்கள் எண்ணம் தவறு. சொர்க்கம் செல்லும் நன்மக்களுக்கு அதில் பேரின்பமாக மற்றுமொரு பாக்கியத்தையும் இறைவன் வைத்திருக்கிறான். நபிமார்களுடன் சொர்க்கத்தில் இருக்கும் பாக்கியமே அது.
அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் (முஹம்மதுக்கும்) கட்டுப்பட்டு நடப்போர், அல்லாஹ்வின் அருள் பெற்ற நபிமார்களுடனும், உண்மையாளர்களுடனும், உயிர்த் தியாகிகளுடனும் நல்லோருடனும் இருப்பார்கள். அவர்களே மிகச் சிறந்த நண்பர்கள்.
நபிமார்களுடன் சொர்க்கத்தில் இருப்பது எவ்வளவு பெரும் பாக்கியம் என்பதை இந்த வசனம் அழகாகத் தெளிவுபடுத்தி விட்டது. சொர்க்கத்தில் நபிமார்களை நண்பர்களாகப் பெறுவதை விடப் பெரும் பேறு வேறென்ன இருக்க முடியும்? நினைத்துப் பார்க்கும் போது உள்ளம் சிலிர்த்து விடுகின்றது.
நம்மைப் பொறுத்தவரை நாம் நமது நபி முஹம்மத் (ஸல்) அவர்களுடன் சொர்க்கத்தில் இருக்கவே விரும்புவோம். ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்பார்களே அது போல.
ஏனெனில் நபிகள் நாயகம் கண்டிப்பாக உயர்ந்த அந்தஸ்திலேயே இருப்பார்கள். நாம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் இருக்கும் வாய்ப்பைப் பெறும் போது பிற நபிமார்களுடன் இருக்கும் வாய்ப்பையும் ஒரு சேரப் பெற்று விடுகிறோம்.
இதன்படி, சொர்க்கத்தில் இருக்க வேண்டும் எனும் நம் உயர் இலக்கை, முஹம்மத் நபியுடன் சொர்க்கத்தில் இருக்க வேண்டும் எனும் அதிஉயர் இலக்காக மாற்றி, அதை நோக்கிச் செல்ல வேண்டும். அதற்கான சரியான பாதையை நபிகளார் காட்டித்தந்துள்ளார்கள். அந்த பாதையின் சில வழிமுறைகளைப் பற்றி இந்த உரையில் காண்போம்.
நாம் யாரை நேசிக்கிறோமோ அவர்களுடன் தான் சொர்க்கத்தில் இருப்போம் என நபிகளார் நவின்றுள்ளார்கள்.
ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! ஒருவர் (நன்)மக்களை நேசிக்கிறார். ஆனால், (செயல்பாட்டிலும் தகுதியிலும்) அவர்களை அவர் எட்டவில்லை. அவர் விஷயத்தில் தாங்கள் என்ன கருதுகிறீர்கள்?” என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “மனிதன் யார் மீது அன்பு கொண்டுள்ளானோ அவர்களுடன்தான் இருப்பான்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி),
நூல்: (முஸ்லிம்: 5143)
நபிகள் நாயகத்தை நேசித்தால் சொர்க்கத்தில் நபிகளாருடன் இருக்கும் மகத்தான வாய்ப்பைப் பெறலாம்.
நானும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் பள்ளிவாசலிலிருந்து புறப்பட்டுச் சென்றபோது பள்ளிவாசலின் முற்றத்தின் அருகில் ஒரு மனிதரைச் சந்தித்தோம். அவர், “அல்லாஹ்வின் தூதரே! மறுமை எப்போது வரும்?” என்று கேட்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அதற்காக நீ (முன்னேற்பாடாக) என்ன (நற்செயல்களைத்) தயார் செய்து வைத்துள்ளாய்?” என்று கேட்டார்கள்.
அதற்கு அவர் (பதிலளிக்காமல்) அடங்கிப் போனவரைப் போன்றிருந்தார். பிறகு, “அல்லாஹ்வின் தூதரே! அதற்காக நான் பெரிதாகத் தொழுகையையோ, நோன்பையோ, தானதர்மங்களையோ முன்னேற்பாடாகச் செய்துவைக்கவில்லை. ஆயினும், நான் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நேசிக்கிறேன்” என்று கூறினார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நீ நேசித்தவர்களுடன் தான் (மறுமையில்) இருப்பாய்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி),
நூல்: (முஸ்லிம்: 5142)
நபி மீதான நேசம் நம் உள்ளத்தில் எந்தளவு ஆழமாகப் பதிந்துள்ளது என்பதை நாம் ஒவ்வொருவரும் சோதித்துப் பார்க்க வேண்டும்.
நபி நேசம் என்பது வெறும் வாய்ச் சொல் அல்ல. அது வாழ்க்கை முறை.
நபியவர்கள் ஏவியதைச் செய்வதும் அவர்கள் தடுத்திட்டவற்றை விட்டும் முற்றாக விலகி நிற்பதுமே நபியின் மீதான நேசத்தை வெளிக் கொணரும் அடையாளங்களாகும். நபியவர்களின் பெயரைச் சொல்லி மக்களை ஏமாற்றி மவ்லித், கத்தம் பாத்திஹா போன்றவைகளை ஓதுவது நபிநேசமல்ல. உளமாற நபியை நேசிப்பவர் நபியின் வழிகாட்டுதலைத் தம் வாழ்வில் பின்பற்றுவார்.
திருக்குர்ஆன் அதையே போதிக்கின்றது.
“நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்’’ என்று கூறுவீராக!
நபியின் காலத்திலேயே நபித்தோழர்களில் சிலருக்கு இந்த ஆசை துளிர் விட்டிருக்கின்றது.
சொர்க்கத்தில் நபியுடன் இருக்க வேண்டும் என்ற அவர்களின் அவா, அதற்கான வழியைக் கேட்டுத் தெரிந்தே தீர்வது என நபியிடமே முறையிடவும் செய்திருக்கின்றது.
ரபீஆ பின் கஅப் அல்அஸ்லமீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் தங்கியிருந்தேன். அவர்கள் (இரவுத் தொழுகைக்காக எழுந்தபோது) இயற்கைக் கடனை நிறைவேற்றிக் கொள்வதற்கும், உளூச் செய்து கொள்வதற்கும் தண்ணீர் கொண்டு சென்றேன். அப்போது அவர்கள் “என்னிடம் (ஏதேனும்) கோருவீராக!’’ என்று என்னிடம் கூறினார்கள்.
உடனே நான், “சொர்க்கத்தில் நான் உங்களுடன் இருக்க வேண்டும் என்று கோருகிறேன்’’ என்றேன். அதற்கு “வேறு ஏதேனும் (கோருவீராக!)’’ என்றார்கள். நான் “(இல்லை) அதுதான்’’ என்றேன். அதற்கு அவர்கள், “அப்படியானால் உமது கோரிக்கை நிறைவேற அதிகமாகச் சஜ்தா செய்து எனக்கு உதவுவீராக!’’ என்று சொன்னார்கள்.
நூல்: (முஸ்லிம்: 843)
ரபீஆ பின் கஅப் எனும் நபித்தோழரிடம் உமக்கு ஏதும் வேண்டுமா என்று நபிகளார் வினா எழுப்புகிறார்கள். நம்மிடம் யாரேனும் இவ்வாறு வினா எழுப்பினால், கொஞ்சம் பணம் கடனாக வேண்டும் என்றோ, இன்ன பொருள் இனாமாக வேண்டும் என்றோ கேட்போம்.
ஆனால் நபிகளாரால் என்ன வேண்டும் என்று கேட்கப்பட்ட ரபிஆ எனும் நபித்தோழரோ சொர்க்கத்தில் தங்களுடன் இருக்க வேண்டும். அதற்கான வழியை அறிய வேண்டும் என்கிறார். வேறு ஏதாவது கேளேன் என்று நபிகளார் மடைமாற்றினாலும் ‘இல்லை! அடியேன் தங்களுடன் சொர்க்கத்தில் இருக்க வேண்டும். அதுவே வேண்டும்; அது ஒன்றே வேண்டும்’ என்று கறாராகக் கேட்டு விடுகிறார்.
அதுதான் வேண்டும் என்றால் அதிகமாகத் தொழு. அது உன் கோரிக்கையை நிறைவேற்றித்தர எனக்கு உதவியாக இருக்கும் என்று நபிகளார் விடையளிக்கின்றார்கள்.
கடமையான தொழுகைகளில் பேணுதலாக இருப்பதுடன் இன்ன பிற சுன்னத் – நபிலான தொழுகைகளில் தொடர்ந்து கவனம் செலுத்தி வந்தால் மறுமையில் நபியுடன் சொர்க்கத்தில் இருக்கும் உன்னத வாய்ப்பு வாய்க்கப் பெற்றவர்களாவோம். இதுவரை எப்படியோ? இனியாவது விழித்துக் கொள்வோமே!
நபிகளாருடன் சொர்க்கத்தில் இருப்பதெல்லாம் சரி! பரந்து பட்ட, விசாலாமான வெளியிடையில் நபியவர்கள் ஓர் ஓரத்திலும் நாம் பிறிதொரு ஓரத்திலும் இருந்துவிட்டால் அதுவும் நபியுடன் இருப்பது தானே? அப்படி வாய்த்து விட்டால் என்னாவது? இது அவ்வளவு ஒன்றும் நெருக்கம் இல்லையே என்ற கேள்வி சிலருக்குக் குடைச்சல் கொடுக்கலாம்.
அத்தகைய சந்தேகப் பேர்வழிகளின் திருப்திக்கும் ஒரு வழியுண்டு. நபிகளார் அம்மக்களையும் கவனத்தில் கொண்டே பின்வரும் வழிமுறையை கற்றுத் தருகிறார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “நானும் அநாதையின் காப்பாளரும் சொர்க்கத்தில் இப்படி இருப்போம்’’ என்று கூறியபடி தம் சுட்டுவிரலையும், நடு விரலையும் இணைத்து அந்த இரண்டுக்குமிடையே சற்று இடைவெளி விட்டு சைகை செய்தார்கள்.
அறிவிப்பவர்: சஹ்ல் பின் சஅத் (ரலி)
நூல்: (புகாரி: 5304)
நடுவிரலுக்கும் ஆட்காட்டி விரலுக்குமிடையில் உள்ள இடைவெளியின் அளவே நமக்கும் நபிக்குமான இடைவெளி என்றால் என்னவொரு நெருக்கம். இவ்வளவு அருகில் அமர்ந்து நபியைப் பார்ப்பதும் அவர்களுடன் அளவளாவுவதும் எத்தகைய பேரின்பம். ஆதரவற்ற அனாதைகளைப் பராமரிப்பது அந்தப் பேரின்பத்தை உறுதி செய்கிறது. நபியுடன் இத்தகைய நெருக்கத்தில் இருக்க விரும்புவோர் அனாதைகளை அரவணைக்க முற்பட வேண்டும்.
தந்தையை இழந்த பிள்ளைகளே அனாதைகள். அவர்கள் படும் அல்லல்களுக்கு எந்தக் குறையுமில்லை. மற்ற பிள்ளைகளைப் போன்று இவன் ஏதும் சேட்டை செய்துவிட்டால் அவனுக்காகக் குரல் கொடுப்போர் யாருமில்லை என்பதை அவனுக்கே உணர்த்தும் தொனியில் ‘அனாதைப் பயலே’ என்று திட்டுவதை பலரிடத்திலும் காணலாம். இது ஒருவகையிலான துன்புறுத்தலே ஆகும்.
அன்பு செலுத்தும் மற்ற தந்தையர்களைப் பார்க்கும் போது, நமக்குத் தோள் கொடுக்க, கட்டியணைக்க, கற்றுக் கொடுக்க, பொருள் வாங்கித் தந்து அரவணைக்கத் தந்தை இல்லையே என்ற ஏக்கம் அவன் வளர்ந்து பெரியவனாகும் வரை அவனை நெருடிக் கொண்டே இருக்கின்றது.
பெருநாள் போன்ற பண்டிகைக் காலங்களில் அவர்கள் படும் மனவேதனை மகா கொடியது. அத்தகைய அனாதைகளைக் கண்டுணர்ந்து அவர்களுக்கு அடைக்கலம் அளித்தால் நபியுடன் நெருக்கமாக சொர்க்கத்தில் இருக்கும் பாக்கியம் கிட்டும்.
ஊரார் பிள்ளைகளை மட்டுமல்ல; தன் பிள்ளைகளைப் பராமரிப்பதும் சொர்க்கத்தில் நபியுடன் இருக்கும் வாய்ப்பைப் பெற்றுத்தரும். ஒரு நிபந்தனை. அவர்கள் பெண் குழந்தைகளாக இருக்க வேண்டும்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “யார் இரு பெண் குழந்தைகளை, அவர்கள் பருவ வயதடையும் வரை பொறுப்பேற்று, கருத்தாக வளர்க்கிறாரோ அவரும் நானும் மறுமை நாளில் இப்படி வருவோம்’’ என்று கூறிவிட்டு, தம் விரல்களை இணைத்துக் காட்டினார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)
நூல்: (முஸ்லிம்: 5127)
இரு பெண் குழந்தைகளைக் கருத்தாக மார்க்க போதனைகளைக் கற்றுக் கொடுத்து வளர்த்தால் அவர் இந்த அரிய வாய்ப்பை பெறுகிறார். பெண் குழந்தைகளைக் கருத்தாக வளர்த்து ஆளாக்குவது அவ்வளவு சுலபமல்ல. குயவனுக்கே உண்டான கவனமும், கரிசனமும் வேண்டும்.
கொஞ்சம் கவனம் சிதறினாலும் எக்குத்தப்பாகப் பிசகி விடும். அதன் பிறகு நாம் நினைத்த வடிவில் அதை (அவளை) மீண்டும் உருவாக்குவது கடும் சிரமம். அதுவும் சீர்கேடு நிறைந்த இக்கால கட்டத்தில் பெண் குழந்தைகள் மீது தனிக்கவனமும் கண்காணிப்பும் அவசியமான ஒன்று என்பதை யாரும் மறுக்க மாட்டார்கள்.
பெண் குழந்தைகளை நல்லொழுக்கத்துடன் வளர்ப்பது பெரும் சவால். அதை வெற்றிகரமாக முடிப்போருக்கு இறைவன் தரும் பரிசு தான், சொர்க்கத்தில் நபிமார்களுடன், நபிகள் நாயகத்துடன் இருக்கும் மகோன்னதப் பரிசு.
நான் சொன்னால் கேட்க மாட்டேன் என்கிறான் என்பது பிள்ளைகள் குறித்துப் பல பெற்றோர் புலம்பும் உலகளாவியப் புலம்பல். இதற்கு என்ன காரணம்? பிள்ளைகளை அப்படிச் செய், இப்படிச் செய்யாதே என அதட்டும் பல பெற்றோர், பிள்ளைகளுக்குப் போதிக்கும் நன்னெறிகளைத் தாங்கள் பின்பற்றுவோராக இல்லை.
சொர்க்கத்தில் நபியுடன் இருக்க விரும்பினால் நபியின் குணத்திற்கு ஏற்ப நம்மை ஒழுக்கசீலராக மாற்றிக் கொள்ள முடியாவிட்டாலும் நல்லொழுக்கத்தைக் கடைபிடிக்கும் ஒழுக்கவாதியாக நம்மை நாம் கட்டமைத்துக் கொள்ள முன்வர வேண்டும்.
மறுமையில் சொர்க்கத்தில் நபிகளாரின் அவையில் நமக்கும் ஒரு இடம் வேண்டும் என விரும்பினால் நினைவில் கொள்ளுங்கள். ஒழுக்கவாதிகளுக்கே நபியின் அவையில் இடமுண்டு.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் எனக்கு விருப்பமானவரும், மறுமையின் சபையில் என்னிடம் நெருக்கத்திற்குரியவரும் யாரெனில் நல்ல பண்புகளைக் கொண்டவரே.
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)
நூல்கள்: (திர்மிதீ: 2018) (1941),(அஹ்மத்: 6447)
மறுமையில் நபியின் அவையில், நபிக்கு நெருக்கத்தில் நமக்கான இடத்தைப் பிடிக்க இப்போது ஆகக் கூடிய முயற்சிகளை முன்னெடுத்துச் செல்வோம். அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் மட்டுமே கட்டுப்படுவோம். அல்லாஹ் அந்த வாய்ப்பை நம் அனைவருக்கும் நல்குவான்.
வாஆகிறு தஃவானா அனில்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்.