சொத்தைவிட கடன் அதிகமாக இருந்தால்
இருக்கும் சொத்தை விட , இறந்தவர் திருப்பிச் செலுத்த வேண்டிய கடன் அதிகமாக இருந்தால், இருக்கும் சொத்தை வைத்து முதலில் கடனில் ஒரு பகுதியை செலுத்தி விட்டு, வாரிசுதாரர்கள் அந்தக் கடனின் மீதிக்கு பொறுப்பேற்க வேண்டும்.
ஒருவர் இறந்த பின் அவரது சொத்து வாரிசுதாரர்களுக்குப் பிரித்துக் கொடுக்கப்படுவதற்கு முன்பு பல்வேறு விஷயங்கள் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியது அவசியமாகும். வாரிசுரிமைப் பற்றிக் குறிப்பிடும் 4:11,12வது வசனங்களில்,
. . . இவ்வாறு வாரிசுகளுக்குச் சொத்து பிரித்துக் கொடுப்பது அவர் செய்துள்ள மரண சாசனத்தையும், கடனையும் நிறைவேற்றிய பின்னர் தான். . . என்று அல்லாஹ் குறிப்பிடுகிறான். எனவே, இறந்தவருக்குக் கடன் இருந்தால் சொத்து பிரிக்கப்படுவதற்கு முன் கடன் அடைக்கப்பட வேண்டும்.
கடன் சாதாரண விஷயமல்ல
“மார்க்கப் போரில் உயிர் நீத்த ஷஹீத் (தியாகி)க்கு கடனைத் தவிர மற்றெல்லாப் பாவங்களையும் அல்லாஹ் மன்னித்து விடுகிறான். இந்த விஷயத்தை எனக்கு ஜிப்ரீல் (அலை) கூறினார்கள் என நபி (ஸல்) கூறியதாக அப்துல்லாஹ் பின் அம்ரு பின் அல் ஆஸ் (ரலி) அறிவிக்கிறார்.
ஆதாரம்:(அஹ்மத்: 2220);(முஸ்லிம்: 4860);
(திர்மிதீ: 1640, 1886); நஸயீ 3156
மார்க்கப் போரில் உயிர் நீத்த ஷஹீத் என்று கூறப்படும் உயிர்த்தியாகி கேள்வி கணக்கு ஏதுமின்றி சுவர்க்கம் செல்வார் என்றிருக்க அவருக்குக் கடன் இருக்குமானால் அது மட்டும் மன்னிக்கப்படாது. ஏனெனில் கடன் என்பது பிறரது உரிமை ஆகும். பிறரது உரிமை அவர் மன்னிக்காதவரை இறைவனால் மன்னிக்கப்பட மாட்டாது. எனவேதான் இறந்தவருக்குக் கடன் இருந்தால் அதை முதலில் கொடுத்துவிட வேண்டும். அல்லது இறந்தவருக்குக் கடன் கொடுத்தவர் விரும்பினால் அந்தக் கடனைத் திரும்பிப் பெறாமல் மன்னித்து விடலாம். அதுவரை உயிர்த்தியாகியான ஷஹீத் கூட மன்னிக்கப்பட மாட்டார்.
- சொத்து முழுவதும் கடனுக்கே சரியாகப் போனால் கடன் அடைக்கப்பட்டு, வாரிசுதாரர்களுக்கு ஏதும் கொடுக்கப்பட மாட்டாது.
- அல்லது வாரிசுதாரர்கள் இருக்க, கடன் தொகை இருக்கும் சொத்தை விட அதிகமாக இருந்தால் வாரிசுதாரர்கள் தான் அந்தக் கடனுக்கும் பொறுப்பேற்க வேண்டும்.
- பிள்ளைகள் வறியவர்களாக இருந்தால் செல்வந்தர்கள் யாராவது அக்கடனுக்குப் பொறுப்பேற்கலாம்.
- அல்லது கடன் கொடுத்தவர்கள் பெருந்தன்மையோடு கடனை மன்னித்து விடலாம்.
- ஒருவரும் பொறுப்பேற்கவில்லையெனில், கடனை திருப்பிச் செலுத்தும் பொறுப்பு, இஸ்லாத்தின் அடிப்படையில் பிள்ளைகளின் மீது தான் உள்ளது.
ஆதாரங்கள்
இப்னு அப்பாஸ் (ரலி) கூறினார்கள் : ஜுஹைனா கூட்டத்தைச் சேர்ந்த ஒரு பெண்மணி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து, “என் தாய் ஹஜ் செய்வதாக நேர்ந்து அதை நிறைவேற்றாமல் இறந்துவிட்டார். அவர் சார்பாக நான் ஹஜ் செய்யலாமா?’ என்று கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், “ஆம்! அவர் சார்பாக நீ ஹஜ் செய். உன் தாய்க்குக் கடன் இருந்தால் நீதானே அதை நிறைவேற்றுவாய். எனவே அல்லாஹ்வின் கடன்களை நிறைவேற்றுங்கள், கடன்கள் நிறைவேற்றப்படுவதற்கு அல்லாஹ் அதிகம் உரிமை படைத்தவன்” என்றார்கள்.
(புகாரி: 1852)