30) சேரமான் பெருமாள்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் சந்திரன் பிளந்த நிகழ்ச்சியை கேரளாவிலிருந்து சேரமான் பெருமாள் என்ற மன்னர் பார்த்து இஸ்லாத்தைத் தழுவினார். இது அரசுப் பதிவேட்டிலும் உள்ளது. இதன் மூலம் உலகம் முழுவதும் ஒரே சந்திரன் தான் என்பது தெளிவாகிறது. ஏன் நாட்டுக்கு நாடு பிறை வேறுபட வேண்டும்?
பிறையைத் தீர்மானிப்பதற்கு அல்லாஹ்வும் அவனது தூதரும் காட்டிய வழிமுறைகள் என்ன என்பதை விட்டுவிட்டு இது போன்ற அபத்தமான வாதங்களையெல்லாம் ஆதாரமாகக் காட்டும் அளவுக்கு வந்து விட்டனர். அல்லாஹ்வும், அவனது தூதரும் சேரமான் பெருமாளை ஆதாரமாக ஏற்குமாறு கூறவில்லை என்பது மட்டுமே இதற்குரிய மறுப்பாகி விடும். ஆயினும் இதிலுள்ள அபத்தங்களையும் இவ்வாறு கேள்வியெழுப்வோரின் அறியாமையையும் சுட்டிக்காட்டித் தான் ஆக வேண்டும்.
சேரமான் பெருமாள் சந்திரன் பிளந்ததைப் பார்த்ததாக எந்த அரசுப் பதிவேட்டில் உள்ளது. இதை இவர்கள் பார்த்தார்களா? அரசுப் பதிவேட்டில் இருப்பதெல்லாம் உண்மையாகி விடுமா?
பௌர்ணமி நிலவு பிளந்ததை உலகின் பல பாகங்களில் காண முடியும். காரணம் பௌர்ணமி நிலவு வானில் நீண்ட நேரம் காட்சி தரும். ஆனால் தலைப்பிறை சில நிமிடங்களில் மட்டுமே தெரியும். அதுவும் சூரியன் மறைந்த உடன் தான் அதைக் காண முடியும். எனவே சேரமான் பெருமாள் பார்த்தாலும் அது தலைப்பிறையைத் தீர்மானிக்கப் போதிய ஆதாரமாகாது.