சொர்க்கம் தடுக்கப்பட்டவர்கள்
அன்பிற்குரிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! அந்த ஏக இறைவனின் சாந்தியும், சமானதானமும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன்.
அல்லாஹ் இவ்வுலகில் மனிதனை படைத்ததின் நோக்கமே அவனை வணங்கி, வழிபட்டு, அல்லாஹ்வின் தூதர் காட்டித்தந்த முறைப்படி நம் வாழ்வை அமைத்து இறுதியில் மரணம் நம்மை வந்து அடையும். ஒவ்வொருவரின் வாழ்க்கை முறைக்கு தகுந்தாற்போல் அவரவர்களுக்கு சுவர்க்கம், நரகம் நிச்சயிக்கப்படும். ஆனால், சொர்க்கத்திற்கு செல்லக் கூடியவர்கள் ஒரு சில செயல்கள் அவர்களை சுவர்க்கம் செல்வதை விட்டும் தடுத்துவிடுகின்றது. அவ்வாறு தடுக்கும் செயல்கள் எது என்பதை உணர்ந்து அவை அனைத்தையும் முற்றிலும் பூரணிக்க கூடியவர்களாக ஆக வேண்டும்.
ஒரு முறை, மக்கள் ஒரு ஜனாஸாவைக் கடந்து சென்றபோது, இறந்தவரின் நற்பண்புகளைப் பற்றிப் புகழ்ந்து பேசினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘உறுதியாகிவிட்டது’ என்றார்கள். மற்றொரு முறை வேறொரு (ஜனாஸாவைக்) கடந்து சென்றபோது மக்கள் அதன் தீய பண்புகளைப் பற்றி இகழ்ந்து பேசலாயினர். அப்போதும் நபி (ஸல்) அவர்கள், ‘உறுதியாகிவிட்டது?’ எனக் கூறினார்கள்.
உமர்(ரலி) ‘எது உறுதியாகிவிட்டது?’ எனக் கேட்டதும் நபி (ஸல்) அவர்கள், ‘இவர் விஷயத்தில் நல்லதைக் கூறிப் புகழ்ந்தீர்கள்; எனவே அவருக்கு சொர்க்கம் உறுதியாகிவிட்டது. இவர் விஷயத்தில் தீயதைக் கூறினீர்கள். எனவே இவருக்கு நரகம் உறுதியாகிவிட்டது. ஆக நீங்களே பூமியில் அல்லாஹ்வின் சாட்சிகளாவீர்கள்’ எனக் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அனஸ் (ரலி)
நூல் : (புகாரி: 1367)
ஒருவரின் செயல்பாடுகளை வைத்தே சுவர்க்கம் நரகம் பற்றி தீர்மானிக்கக்கூடிய அளவிற்கு அவரவரின் நிலை இருக்கின்றது.
ஒருவன் தனது தந்தையை உறவு முறை சொல்லி அழைக்க மறுத்து வேறொருவனை தந்தை என்று அழைப்பவன் நிச்சயமாக சுவர்க்கம் புகை மாட்டான்.
நபி (ஸல்) கூறினார்கள்:
எவன் தெரிந்து கொண்டே தன்னைத்தானே தந்தையல்லாத (வேறு) ஒருவருடன் இணைத்து, (‘நான் அவரின் மகன் தான்’ என்று) வாதாடுகிறானோ அவனுக்கு சொர்க்கம் (புகுவது) தடை செய்யப்பட்டதாகும்.
நூல் : (புகாரி: 4326)
நபி (ஸல்) அவர்கள் (ஒரு கருத்தை) ஒரு வாக்கியத்தில் சொல்ல, நான் (அதே கருத்தை) வேறொரு வாக்கியத்தில் சொன்னேன். நபி (ஸல்) அவர்கள், ‘அல்லாஹ் அல்லாததை அவனுக்கு இணை என வாதித்தபடி இறந்து விடுகிறவர் நரகம் புகுவார்’ என்று கூறினார்கள். ‘(அப்படியானால்) அல்லாஹ் அல்லாததை அவனுக்கு இணை கற்பிக்காதவராக இறந்துவிடுகிறவர் சொர்க்கம் புகுவார்’ என்று நான் சொன்னேன்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி)
நூல் : (புகாரி: 4497)
ஒருவர் மனதில் இயல்பாக ஏற்படக்கூடிய மனோயிச்சைகளால் தான் நரகம் செல்ல நேரிடுகின்றது. ஆகவே, அவ்வாறு ஏற்படக்கூடிய மனோயிச்சைகளின் தீங்கை விட்டும் இறைவனிடம் பாதுகாவல் தேடல் வேண்டும்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மன இச்சைகளால் நரகம் மூடப்பட்டுள்ளது. சிரமங்களால் சொர்க்கம் மூடப்பட்டுள்ளது.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல் : (புகாரி: 6487)
ஜுன்துப் (ரலி), இந்த (பஸராவின்) பள்ளிவாசலில் வைத்து எங்களிடம் (ஒரு ஹதீஸைக்) கூறினார். அதை நாங்கள் மறக்கவில்லை. மேலும் ஜுன்துப் (ரலி), நபி (ஸல்) அவர்களின் விஷயத்தில் பொய்யைக் கூறியிருப்பார் என்று நாங்கள் அஞ்சவுமில்லை. அவர் கூறினார்.
‘ஒருவருக்கு ஒரு காயம் இருந்தது. (இதைத் தாங்க முடியாமல் அவர் தற்கொலை செய்தார். உடனே அல்லாஹ் என்னுடைய அடியான் அவனுடைய மரணத்தில் அவசரப்பட்டு என்னை முந்தி விட்டான்; எனவே, அவனுக்குச் சொர்க்கத்தை நான் ஹராமாக்கி விட்டேன் எனக் கூறினான்’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஹஸன் பஸரீ (ரஹ்)
நூல் : (புகாரி: 1364)
பெண்கள் தங்கள் கணவனுக்கு மாறு செய்வதாலும், சாபமிடுபவர்களாகவும் மேலும் கணவனை நிராகரிப்பவர்களாகவும் உள்ளதால் தான் அவர்கள் நரகில் அதிகதிகம் இருப்பவர்களாக காட்சியளித்தனர்.
‘எனக்கு நரகம் காட்டப்பட்டது. அதில் பெரும்பாலோர் பெண்களாகக் காணப்பட்டனர். ஏனெனில், அவர்கள் நிராகரிப்பவர்களாக இருந்தனர்’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறியபோது, ‘இறைவனையா அவர்கள் நிராகரிக்கிறார்கள்?’ எனக் கேட்கப்பட்டதற்கு இறைத்தூதர் (ஸல்) அவர்கள், ‘கணவனை நிராகரிக்கிறார்கள். உதவிகளை நிராகரிக்கிறார்கள்.
அவர்களில் ஒருத்திக்குக் காலம் முழுவதும் நீ நன்மைகளைச் செய்து கொண்டேயிருந்து, பின்னர் (அவளுக்குப் பிடிக்காத) ஒன்றை உன்னிடம் கண்டுவிட்டாளானால் ‘உன்னிடமிருந்து ஒருபோதும் நான் ஒரு நன்மையையும் கண்டதில்லை’ என்று பேசிவிடுவாள்’ என்றார்கள்’.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)
நூல் : (புகாரி: 29)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இரு பிரிவினர் நரகவாசிகளில் அடங்குவர். அந்த இரு பிரிவினரையும் நான் பார்த்ததில்லை. (முதலாவது பிரிவினர் யாரெனில்,) மக்களில் சிலர், பசு மாட்டின் வாலைப் போன்ற (நீண்ட) சாட்டைகளைத் தம்மிடம் வைத்து கொண்டு, மக்களை அடி(த்து இம்சி)ப்பார்கள்.
(இரண்டாவது பிரிவினர் யாரெனில்,) மெல்லிய உடையணிந்து, தம் தோள்களைச் சாய்த்து (கர்வத்துடன்) நடந்து, (அந்நிய ஆடவர்களின் கவனத்தை) தன்பால் ஈர்க்கக்கூடிய பெண்கள் ஆவர். அவர்களது தலை(முடி), கழுத்து நீண்ட ஒட்டகங்களின் (இரு பக்கம்) சாயக்கூடிய திமில்களைப் போன்றிருக்கும்.
அவர்கள் சொர்க்கத்தில் நுழையமாட்டார்கள்; (ஏன்) சொர்க்கத்தின் வாடையைக்கூட நுகர மாட்டார்கள். சொர்க்கத்தின் நறுமணமோ இவ்வளவு இவ்வளவு பயணத் தொலைவிலிருந்தே வீசிக்கொண்டிருக்கும்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: (முஸ்லிம்: 4316)
(இஸ்லாமிய அரசின் கீழ் வாழும் முஸ்லிமல்லாத) ஒப்பந்தப் பிரஜையைக் குற்றமின்றி கொல்வதிலுள்ள பாவம்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(இஸ்லாமிய அரசுடன் அமைதி ஒப்பந்தம் செய்து அதன் கீழ் வாழ்ந்து வரும்) ஓர் ஒப்பந்தப் பிரஜையைக் கொன்று விடுபவன் சொர்க்கத்தின் வாடையைக் கூட நுகர மாட்டான். அதன் நறுமணமோ நாற்பதாண்டுப் பயணத் தொலைவிலிருந்தே வீசிக் கொண்டிருக்கும்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரலி)
நூல்: (புகாரி: 3166)
تَخَلَّفَ عَنَّا النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي سَفْرَةٍ سَافَرْنَاهَا ، فَأَدْرَكَنَا وَقَدْ أَرْهَقَتْنَا الصَّلَاةُ وَنَحْنُ نَتَوَضَّأُ ، فَجَعَلْنَا نَمْسَحُ عَلَى أَرْجُلِنَا ، فَنَادَى بِأَعْلَى صَوْتِهِ: وَيْلٌ لِلْأَعْقَابِ مِنَ النَّارِ . مَرَّتَيْنِ أَوْ ثَلَاثًا
‘நாங்கள் மேற்கொண்ட பயணம் ஒன்றில் நபி (ஸல்) அவர்கள் எங்களுக்குப் பின்னே வந்து கொண்டிருந்தார்கள். தொழுகையின் நேரம் எங்களை நெருங்கிவிட்ட நிலையில் நாங்கள் உளூச் செய்து கொண்டிருந்தபோது நபி (ஸல்) அவர்கள் எங்களிடம் வந்து சேர்ந்தார்கள்.
அப்போது நாங்கள் எங்கள் கால்களைத் தண்ணீரால் தடவிக் கொண்டிருந்தோம். (அதைக் கண்டதும்) ‘குதிங்கால்களைச் சரியாகக் கழுவாதவர்களுக்கு நரகம் தான்!’ என்று இரண்டு அல்லது மூன்று முறை தம் குரலை உயர்த்தி இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரலி)
நூல் : (புகாரி: 60)
ஒருவர் தொழுவதற்கு முதலில் செய்ய வேண்டியது உளூ. அந்த உளூவில் எவர் குதிகால்களை சரிவர சுத்தம் செய்யவில்லையோ அவருக்கு நரகம் தான் என நபி (ஸல்) அவர்கள் எச்சரிச்சுள்ளார்கள். நாம் அலட்சியமாய் கருதும் விஷயங்களுக்கு கூட எவ்வளவு முக்கியத்துவம் உள்ளது என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.
ஒரு பெண்மணி வீட்டு பிராணியை வளர்த்து அதற்கு சரிவர உணவளிக்காமல் விட்டதால் நரகில் செல்வதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு பெண், பூனையொன்றைக் கட்டி வைத்தாள். அதற்கு அவள் தீனி போடவுமில்லை; பூமியிலுள்ள புழு பூச்சிகளைத் தின்று (பிழைத்துக் கொள்ளட்டும் என்று அதை அவிழ்த்து) விடவுமில்லை. அதன் காரணத்தால் அவள் நரகம் புகுந்தாள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல் : (புகாரி: 3318)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
எவருடைய நாசவேலைகளில் இருந்து அவருடைய அண்டைவீட்டார்க்குப் பாதுகாப்பு உணர்வு ஏற்படவில்லையோ அவர் சொர்க்கத்தில் நுழையமாட்டார்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: (முஸ்லிம்: 73)
நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஆயிஷா (ரலி) கூறினார்கள்:
தம் அண்டை வீட்டாரின் மேல் கொண்ட நேசத்தினால் ஒரு வேளை நபி (ஸல்) அவர்கள், தம் அண்டை வீட்டாருக்கு தனது சொத்துகளை எழுதி வைத்து விடுவார்களோ என்று என்னும் அளவிற்கு நபி (ஸல்) அவர்கள் தம் அண்டை வீட்டாரிடம் உறவுகள் வைத்திருந்தார்கள்.
நபி அவர்கள் அளவிற்கு இல்லாவிட்டாலும், அண்டை வீட்டாருக்கு செய்யும் தொல்லைகளால் நாம் நரகில் செல்லாமல் பாதுகாத்து கொள்ள வேண்டும்.
உண்மையே பேசியவரும் உண்மையே அறிவிக்கப்பட்டவருமான இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவரின் கரு தம் தாயின் வயிற்றில் நாற்பது ‘பகல்’ அல்லது ‘இரவு’ சேமிக்கப்படுகிறது. பிறகு அதைப் போன்றே (40 நாள்கள்) அது (அட்டை போன்று கருப்பையின் சுவரைப் பற்றிப் பிடித்துத் தொங்கும்) ஒரு கருக் கட்டியாக மாறுகிறது. பிறகு அதைப் போன்றே (மேலும் 40 நாள்கள் மெல்லப்பட்ட சக்கை போன்ற) ஒரு சதைப் பிண்டமாக மாறுகிறது.
பிறகு அதனிடம் ஒரு வானவர் அனுப்பப்படுகிறார். அந்த வானவருக்கு நான்கு கட்டளைகள் பிறப்பிக்கப்படுகின்றன: அவர், (கருவாக இருக்கும்) அந்த மனிதனின் வாழ்வாதாரத்தையும், அவனுடைய வாழ்நாளையும், செயல்பாட்டையும், அவன் (இறுதிக் கட்டத்தில்) துர்பாக்கியசாலியா அல்லது நற்பாக்கியசாலியா என்பதையும் (இறைவனின் கட்டளைப்படி) பதிவு செய்கிறார்.
பிறகு அவனுள் உயிர் ஊதப்படுகிறது. இதனால்தான், உங்களில் ஒருவர் சொர்க்கவாசிகளின் (நற்செயல்களைப் புரிந்துகொண்டே செல்வார். இறுதியில் சொர்க்கத்திற்கும் அவருக்குமிடையே ஒரு முழம் (இடைவெளி) தான் இருக்கும். அதற்குள் அவரின் விதி அவரை முந்திக் கொள்ள அவர் நரகவாசிகளின் செயலைச் செய்து அதன் விளைவாக நரகம் புகுந்து விடுவார்.
(இதைப் போன்றே) உங்களில் ஒருவர் நரகவாசிகளின் செயலைப் புரிந்து கொண்டே செல்வார். இறுதியில் நரகத்திற்கும் அவருக்குமிடையே ஒரு முழம் இடைவெளி தான் இருக்கும். அதற்குள் அவரின் விதி அவரை முந்திக்கொள்ளும். அவர் சொர்க்கத்திற்குரியவர்களின் (நற்) செயல்களைச் செய்து அதன் விளைவாக சொர்க்கம் புகுவார்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி)
நூல் : (புகாரி: 7454)
(நபித் தோழர்) மஅகில் இப்னு யஸார் (ரலி) அவர்கள் இறப்பதற்கு முன் நோய்வாய்ப் பட்டிருந்தபோது அன்னாரை(ச் சந்தித்து) நலம் விசாரிப்பதற்காக (அன்றைய பஸ்ரா நகர ஆட்சியர்) உபைதுல்லாஹ் இப்னு ஸியாத் சென்றார். அவரிடம் மஅகில் (ரலி) அவர்கள் ‘நான் இறைத்தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து கேட்ட செய்தி ஒன்றை உமக்கு அறிவிக்கிறேன்.
நபி(ஸல்) அவர்கள், ‘ஓர் அடியானுக்குக் குடிமக்களின் பொறுப்பை அல்லாஹ் வழங்கியிருக்க, அவன் அவர்களின் நலனைக் காக்கத் தவறினால், சொர்க்கத்தின் வாடையைக் கூட அவன் பெறமாட்டான்’ என்று சொல்ல கேட்டேன்’ எனக் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஹஸன் அல்பஸரீ (ரஹ்)
நூல்: (புகாரி: 7150)
ஒரு நாட்டை ஆளும் மன்னன், தன் குடிமக்களுக்கு நீதி தவறாது ஆட்சி செய்ய வேண்டும். ஒருவருக்கும் தீங்கிழைக்க கூடாது. அவ்வாறு செய்யாவிடின் சொர்க்கத்தின் வாடையை கூட அவன் பெற முடியாமல் கை சேதம் அடைந்தவனாக நரகில் புகுவான்.
இறைநம்பிக்கையாளர்களைத் தவிர வேறெவரும் சொர்க்கத்தில் நுழைய முடியாது; இறைநம்பிக்கையாளர்களை நேசிப்பதும் இறைநம்பிக்கையின் ஓர் அம்சமே; சலாத்தை பரப்புவது அந்த நேசம் ஏற்படக் காரணமாக அமையும்.
நீங்கள் இறைநம்பிக்கை கொள்ளாதவரையில் சொர்க்கத்தில் நுழைய முடியாது.நீங்கள் ஒருவரை ஒருவர் நேசிக்காதவரை (முழுமையான) இறைநம்பிக்கையாளராக முடியாது. ஒன்றை உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா? அதை நீங்கள் செயல்படுத்தினால் ஒருவரை ஒருவர் நேசம் கொள்ளலாம்.உங்களிடையே சலாத்தைப் பரப்புங்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: (முஸ்லிம்: 93)
தமது உள்ளத்தில் கடுகு மணியளவு இறைநம்பிக்கையுள்ள எவரும் நரகத்தில் நுழைய மாட்டார். தமது உள்ளத்தில் கடுகு மணியளவு அகம்பாவமுள்ள எவரும் சொர்க்கத்தில் நுழையமாட்டார்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)
நூல் : (முஸ்லிம்: 148)
ஒருவர் தன் மனதில் அணுவளவு பெருமை கொள்வதினால் அவர் நரகில் செல்ல நேரிடுகின்றது.
நபி (ஸல்) அவர்கள் “யாருடைய உள்ளத்தில் அணுவளவு தற்பெருமை இருக்கிறதோ அவர் சொர்க்கத்தில் நுழையமாட்டார்” என்று கூறினார்கள். அப்போது ஒரு மனிதர், “தமது ஆடை அழகாக இருக்க வேண்டும்; தமது காலணி அழகாக இருக்க வேண்டும் என ஒருவர் விரும்புகிறார். (இதுவும் தற்பெருமையில் சேருமா?)” என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ் அழகானவன்; அழகையே அவன் விரும்புகின்றான். தற்பெருமை என்பது (ஆணவத்தோடு) உண்மையை மறுப்பதும், மக்களைக் கேவலமாக மதிப்பதும்தான்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)
நூல் : (முஸ்லிம்: 147)
சூனியத்தின் மூலம் பாதிப்பு ஏற்படுத்த முடியும் என்று நம்புபவன் சுவர்க்கம் நுழைய மாட்டான்.
அறிவிப்பவர்: அபுத்தர்தா (ரலி)
நூல் : (அஹ்மத்: 27484) (26212)
நபி (ஸல்) அவர்கள் (ஒரு முறை பின்வருமாறு) கூறக் கேட்டேன். சொர்க்கவாசிகள் யார் என்று உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா? அவர்கள் (மக்களின் பார்வையில்) பலவீனமானவர்கள்; பணிவானவர்கள் (ஆனால்) அவர்கள் அல்லாஹ்வின் மேல் ஆணையிட்டு (எதையேனும்) கூறுவார்களானால், அல்லாஹ் அதை (அவ்வாறே) நிறைவேற்றிவைப்பான்.
(இதைப் போன்றே) நரகவாசிகள் யார் என்று உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா? அவர்கள் உண்டு கொழுத்தவர்கள்; இரக்கமற்றவர்கள்; பெருமை அடிப்பவர்கள் ஆவர்.
அறிவிப்பவர் : ஹாரிஸா இப்னு வஹ்ப் (ரலி)
நூல் : (புகாரி: 6657)
மேற்கூறப்பட்ட அனைத்து பாவச்செயல்களையும், தீய குணங்களையும் வல்ல அல்லாஹ் தன் அடியார்களுக்கு நாடினால் மன்னிக்க கூடியவனாக இருக்கின்றான். ஆனால், ஒருவர் பிறந்தது முதல் இறந்தது வரை அல்லாஹ்விற்கு இணைகற்பிப்பாரானால் அல்லாஹ் ஒருபோதும் அவரை மன்னிக்கமாட்டான் என்பதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணைவைப்பதை மன்னிக்கமாட்டான்; இதைத்தவிர, (மற்ற) எதையும் தான் நாடியவர்களுக்கு மன்னிப்பான்; யார் அல்லாஹ்வுக்கு இணைவைக்கிறார்களோ அவர்கள் நிச்சயமாக மிகவும் பெரிய பாவத்தையே கற்பனை செய்கின்றார்கள்.
நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணை வைப்பதை மன்னிக்கவே மாட்டான்; இது அல்லாத (பாவத்)தைத் தான் நாடியவருக்கு மன்னிப்பான்; எவன் ஒருவன் அல்லாஹ்வுக்கு இணை வைக்கின்றானோ, அவன் நிச்சயமாக வெகு தூரமான வழிகேட்டில் ஆகிவிட்டான்.
இதுவே அல்லாஹ்வின் நேர்வழியாகும், தன் அடியார்களில் அவன் யாரை விரும்புகிறானோ, அவர்களுக்கு இதன்மூலம் நேர்வழி காட்டுகிறான்; (பின்னர்) அவர்கள் இணைவைப்பார்களானால், அவர்கள் செய்து வந்ததெல்லாம், அவர்களை விட்டு அழிந்துவிடும்.
“நீர் இணைகற்பித்தால் உமது நல்லறம் அழிந்து விடும்; நீர் நட்டமடைந்தவராவீர். மாறாக, அல்லாஹ்வையே வணங்குவீராக! நன்றி செலுத்துவோரில் ஆவீராக!” என்று (முஹம்மதே!) உமக்கும், உமக்கு முன் சென்றோருக்கும் தூதுச் செய்தி அறிவிக்கப்பட்டது.
ஆகவே, பெரும் பாவங்கள் மற்றும் சிறு பாவங்களை விட்டும் அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு தேட வேண்டும். மேலும், ஒரு போதும், நிரந்தர நரகத்திற்குரிய இணைவைப்பை முற்றிலும் விட்டுவிடவேண்டும். மேலும் இணைவைப்பவர்களையும் நல்வழிபடுத்தி நேரடியாக சுவர்க்கம் செல்பவர்களாக மரணிக்க வேண்டும்.
உண்மை சம்பவங்களை அறிந்தும், புரிந்தும், வாழும் நன்மக்களாக அல்லாஹ் நம் அனைவரையும் ஆக்கி அருள் புரிவானாக.!