செவியேற்போம்! கட்டுப்படுவோம்!
மதிப்பிற்குரிய சகோதரர்களே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் சாந்தியும், சமானதானமும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன்.
காலத்தால் முரண்படவில்லை. கருத்து மோதல் இல்லை. கற்பனைக் கலவை இல்லை. பொய்யின் சாயல் இல்லை. ஆபாசத்தின் அடையாளம் இல்லை. அறிவியலுக்கு அப்பாற்படவில்லை. மிகையான வர்ணனைகள் இல்லை. இதுமட்டுமின்றி இறைவேதமாக இருப்பதற்கு அவசியமான அனைத்து தகுதிகளையும் பொதிந்துள்ள வேதம், திருக்குர்ஆன் மட்டுமே.
மிக உயர்ந்த தரம், இனிய இலக்கிய நயம் கொண்ட இவ்வேதத்தில் படைத்தவன், படைப்பினங்கள், பிறப்பு, இறப்பு, இன்பம், துன்பம், இம்மை, மறுமை உட்பட இப்பிரபஞ்சத்தின் யதார்த்தமான நிலைகள் படம்பிடித்துக் காட்டப்பட்டுள்ளன. சத்தியத்திற்கும் அசத்தியத்திற்கும், நன்மைக்கும் தீமைக்கும் இடையேயான வேறுபாடுகள் விரிவான முறையில் விளக்கப்பட்டுள்ளன.
மேலும் தனிமனிதன், குடும்பம் மற்றும் சமூகம் இவற்றுக்கான ஒட்டு மொத்த வாழ்வியல் நெறிமுறைகளும் வரையறுத்துக் கூறப்பட்டுள்ளன. அனைத்துக்கும் மேலாக அகிலத்தைப் படைத்து, பரிபாலிக்கின்ற, ஏக இறைவனான அல்லாஹ்வினால் அருளப்பட்டு, அவன் மூலமே இன்றளவும் பாதுகாக்கப்பட்டு கொண்டிருக்கின்றது. இத்தகைய மாபெரும் அற்புதமான, சிறந்த அறிவுரையான, தெளிவான வழிகாட்டியாக இருக்கின்ற அல்குர்ஆனை நம்பிக்கைக் கொண்டவர்களாக நாம் வாழ்ந்து வருகின்றோம்.
இத்தருணத்தில் தித்திக்கின்ற திருமறையின் இரத்தின வரிகள், இறை நம்பிக்கையாளர்களின் இதயத்தில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும்? அவற்றை பெற்றுக் கொள்கின்றபோது, அவர்களின் அணுகுமுறை எவ்வாறு இருக்க வேண்டும்? அதற்கு பிறகு அவர்களின் அன்றாட செயல்பாடுகள் எல்லாம் எப்படி அமைந்திருக்க வேண்டும்? என்பதை அல்லாஹ் திருமறையில் குறிப்பிட்டுள்ளான்.
அதையறிந்து, அதன்படி நமது வாழ்வை அழகிய முறையில் அமைத்துக்கொள்ள வேண்டும். இறையச்சமும் இறைநம்பிக்கையும் அதிகரிக்கும். இறையச்சம் என்பது நாம் நற்காரியங்களில் நடைபோடும்போது அதிகமாகவும், தீயகாரியங்களில் விழும்போது குறைவாகவும் இருக்கும். இறையச்சத்தின் வீரியம் குறைவாக இருக்கும்போதுதான், வரம்புமீறுதலுக்கும் கட்டுப்படுதலுக்கும் இடையே குறை குடத்தைப் போன்று கூத்தாடுகின்ற தடுமாற்றமான நிலை உருவாகின்றது.
இச்சூழ்நிலையில் முஃமின்கள் அச்சமூட்டி எச்சரிக்கை செய்கின்ற அல்குர்ஆனின் ஆயத்துகளை அறிகின்றபோது, அதிகரிக்கின்ற இறையச்சத்தால் அவர்களுடைய உள்ளங்கள் அதிரும். இன்னும் தாழ்ந்திருந்த அவர்களுடைய இறைநம்பிக்கை உயர்வடையும். அதன் விளைவாக அனைத்து நிலைகளிலும் அவர்கள் தங்களுடைய அமல்களில் அல்லாஹ்வின் மீதே முழுமையாக ஆதரவுவைத்தவர்களாக மாறிவிடுவார்கள்.
”நம்பிக்கை கொண்டோர் யார் எனில் அல்லாஹ்வைப் பற்றிக் கூறப்பட்டால் அவர்களின் உள்ளங்கள் நடுங்கும். அவனது வசனங்கள் அவர்களுக்குக் கூறப்பட்டால் அது அவர்களின் நம்பிக்கையை அதிகப்படுத்தும். அவர்கள் தமது இறைவனையே சார்ந்திருப்பார்கள்.“
”நம்பிக்கை கொண்டோருக்கு இது நம்பிக்கையை அதிகமாக்கியது. அவர்கள் மகிழ்ச்சியடைகின்றனர்”
மாற்று மதத்தவர்கள் தங்களது வேதங்களில் வீற்றிருக்கின்ற விஷமத்தனமான விஷயங்கள், கேவலமான சம்பவங்கள் மற்றும் கேலிகூத்தான கட்டளைகளைப் பற்றி கடுகளவும் யோசிக்காமல், குருட்டுபக்தியோடு அவ்வேதங்களைத் தூக்கி பிடித்துக் கொண்டிருக்கிறார்கள். இத்தகைய இழிவானபோக்கு ஓரிறைக் கொள்கையை ஏற்றுக் கொண்டவர்களிடத்தில் ஒருபோதும் இருக்க கூடாது. அவர்கள் மாசற்ற மகத்தான இறைவேதத்தை பெற்றிருந்தாலும், அதிலே அறிவுறுத்தப்பட்ட தகவல்களை சிந்தித்துப் பார்த்து, சிறப்பான முறையில் நடைமுறைப்படுத்த வேண்டும்.
அவர்கள் தமது இறைவனின் வசனங்கள் மூலம் அறிவுறுத்தப்பட்டால் அவற்றின் மீது செவிடர்களாகவும், குருடர்களாகவும் விழமாட்டார்கள்.
மாற்று மதத்தவர்களுடைய செயல்பாடுகளுக்கும் அவர்களுடைய கற்பனை வேதங்களின் போதனைகளுக்கும் இடையே அகன்ற இடைவெளி இருப்பதை கண்கூடாகக் காண்கிறோம். அவ்வாறில்லாமல் முஸ்லிம்கள் தங்களது வாழ்வின் அனைத்துக் கட்டத்திலும் எவ்விதமான தயக்கமுமின்றி, அல்குர்ஆனின் வழிகாட்டுதலுக்கேற்ப தங்களை புதுப்பித்துக் கொள்ள வேண்டும். அதனுடைய அறிவுரைகளை அலட்சியப்படுத்தாமல் செவிதாழ்த்திக் கேட்டு செம்மையாக செயலாற்ற வேண்டும்.
உங்களால் இயன்றவரை அல்லாஹ்வை அஞ்சுங்கள். (அவனது வார்த்தைகளை) செவிமடுங்கள். கட்டுப்படுங்கள்.
நம்பிக்கை கொண்டோரின் உள்ளங்கள் அல்லாஹ்வின் நினைவாலும், (அவனிடமிருந்து) இறங்கிய உண்மையினாலும் பணியும் நேரம் அவர்களுக்கு வரவில்லையா? (அதற்கு) முன்னர் வேதங்கள் கொடுக்கப்பட்டோரைப்போல் அவர்கள் ஆகாமல் இருப்பதற்கும் நேரம் வரவில்லையா?
அல்லாஹ்விற்கு கட்டுப்படுங்கள் என்று தமது வார்த்தையான அருள்மறைக்கு அடிபணிந்து நடக்குமாறு அதிகமான வசனங்களில் அல்லாஹ் எச்சரிக்கை விடுத்துள்ளான். மேலும் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இறைமறையான திருக்குர்ஆனையும் அதற்கு விரிவுரையாக திகழ்கின்ற தமது வாழ்வையும் திண்ணமாக பற்றிப்பிடித்துக் கொள்ளுங்கள் என்று அறிவுரையைப் பகன்றிருக்கிறார்கள்.
”நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுங்கள்! இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! உங்கள் செயல்களைப் பாழாக்கி விடாதீர்கள்”
மேற்கண்ட பண்புகளும் மாற்றங்களும் நம்மிடத்தில் இருக்கின்றதா? என்று ஒவ்வொருவரும் சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும். குர்ஆன் படித்தல், சொற்பொழிவுகள், மார்க்க இதழ்கள் மற்றும் துண்டுப் பிரசுரங்கள் இவற்றின் மூலம் தினந்தோறும் எத்தனையோ திருமறைவசனங்களை தெரிந்து கொள்கின்றோம். ஆயினும் அவ்வசனங்களுக்கேற்ப அக மற்றும் புறரீதியாக நம்மை திருத்திக் கொள்கின்றோமா? இப்படி நம்மிடத்தில் கேள்வி கேட்கப்படும்போது, மௌனமாக தலையைத் தாழ்த்தி நிற்பதிலேயே நமது வாழ்வின் அவலநிலை அம்பலமாகிவிடுகின்றது.
ஆனால் இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல் ) அவர்களுக்கு அருள்மறை அருளப்படுவதை நேரடியாகப் பார்த்த, அவர்களின் மார்க்கப் பாசறையில் பயிற்சி பெற்ற, மார்க்த்திற்காக சொல்லொன்னா துன்பங்களையும் துயரங்களையும் சந்தித்த நபித்தோழர்கள், திருமறையின் ஒவ்வொரு கட்டளைக்கும் மறு விநாடியே முழுமையாகக் கட்டுப்பட்டார்கள். அதனுடைய இரத்தினக் கருத்துகளுக்கேற்ப தங்களைப் பரிசுத்தப்படுத்திக் கொண்டார்கள். தீமையான விஷயங்களை தயக்கமின்றி தூக்கியெறிந்து விட்டு நன்மையான காரியங்களின் பக்கம் விரைந்து சென்றார்கள்.
எந்தளவிற்கெனில் அருள் மறையில் அல்லாஹ்வே புகழ்ந்து பாராட்டுகின்ற வகையில் அவர்களின் தியாக வாழ்க்கை இருந்தது. ஆதலால் பின்வருகின்ற அவர்களின் வாழ்க்கை சம்பவங்களிலிருந்து நாமெல்லாம் நல்லமுறையில் படிப்பினையைப் பெற்றுக் கொள்வோமாக.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய அன்புமனைவி ஆயிஷா (ரலி) அவர்கள் ஒழுக்ககேடான காரியத்தைச் செய்துவிட்டார்கள் என்று அவதூறு பரவிகொண்டிருந்த நேரம். தம் மீது சொல்லப்படுகின்ற குற்றச்சாட்டைத் தாமதமாகத் தெரிந்துகொண்ட ஆயிஷா (ரலி) அவர்கள், அதையறிந்ததும் அதிர்ச்சியடைந்தவார்களாக தமது பெற்றோரின் இல்லத்தில் இருந்த நிலையில் அங்கு நபி (ஸல்) அவர்களும் வந்து ஆயிஷா நாயகி அவர்களுக்கு அறிவுரையும், ஆறுதலும் கூறுகின்றார்கள். இந்நேரத்தில்தான் ஆயிஷா (ரலி) அவர்கள் எந்த தவறையும் செய்யவில்லை என்று அல்லாஹ் திருமறையின் வசனங்களை அருளினான்.
தன் மீது அவதூறு பரவுவதற்குக் காரணமாக இருந்தவர்களைப் பற்றியும், தான் தவறிழைக்கவில்லை என்று அல்லாஹ்வினால் நற்சான்றிதழ் வழங்கப் பட்ட பிறகு நிகழ்ந்த நிகழ்வுகளைப் பற்றியும் ஆயிஷா (ரலி) அவர்களே தெளிவுபடுத்தி இருக்கின்றார்கள்.
மேலும், ஆயிஷா (ரலி) அவர்கள் (இவ்வாறு) கூறிவந்தார்கள்:
(நபியவர்களுடைய துணைவியரில் ஒருவரான) ஸைனப் பின்த் ஜஹ்ஷ் (ரலி) அவர்களை அவர்களின் மார்க்கப் பேணுதலின் காரணத்தினால், அல்லாஹ் (அவதூறுப் பிரசாரத்தில் பங்குபெறவிடாமல்) காப்பாற்றிவிட்டான். அவர்கள் என்னைப் பற்றி நல்ல கருத்தையே சொன்னார்கள்.
ஆனால், அவர்களின் சகோதரியான ஹம்னாவோ (அவதூறு பேசி) அழிந்தவர்களுடன் சேர்ந்து அழிந்துபோனார். (முஸ்லிம்களில்) அதைப் பற்றிப் பேசியவர்கள் மிஸ்தஹும், ஹஸ்ஸான் பின் ஸாபித்தும் ஆவர். நயவஞ்சகன் அப்துல்லாஹ் பின் உபைதான் அதனுடன் (பல குற்றச்சாட்டுகளைத்) தேடி இணைத்து அதைப் பரப்பி வந்தவன் ஆவான். அவதூறு பரப்பியவர்களில் பெரும்பங்கு வகித்தவனும் அவன்தான். ஹம்னாவும் கூட. (என் தந்தை) அபூபக்ர் (ரலி) அவர்கள், “மிஸ்தஹுக்கு எந்தப் பயன்தரும் உதவியும் இனி ஒருபோதும் செய்ய மாட்டேன்” என்று சத்தியம் செய்தார்கள்.
அப்போது அல்லாஹ் உங்களில் செல்வம் மற்றும் தாயாளகுணம் படைத்தோர் (தங்கள்) உறவினர்களுக்கோ ஏழைகளுக்கோ அல்லாஹ்வின் பாதையில் ஹிஜ்ரத் செய்தவர்களுக்கோ (எதுவும்) வழங்கமாட்டேன் என்று சத்தியம் செய்ய வேண்டாம். (அவர்களால் தங்களுக்கு ஏதேனும் வருத்தம் ஏற்பட்டிருந்தால்) அவர்கள் அதனை மன்னித்து (பிழைகளைப்) பொருட்படுத்தாமல் விட்டு விடட்டும்! அல்லாஹ் உங்களுக்கு மன்னிப்பு அளிப்பதை நீங்கள் விரும்பமாட்டீர்களா? அல்லாஹ் மிகவும் மன்னிப்போனும் கருணையுடையோனுமாய் இருக்கின்றான்’ எனும் (அல்குர்ஆன்: 24:22) ஆவது இறைவசனத்தை அருனான்.
(இந்த வசனத்தில்) உலுல் ஃபள்ல்’ (செல்வம் படைத்தோர்) என்று அபூபக்ர் (ரலி) அவர்களையே அல்லாஹ் குறிப்பிட்டான். மஸாக்கீன்’ (ஏழைகள்) என்று மிஸ்தஹ் அவர்களைக் குறிப்பிட்டான். இதையடுத்து அபூபக்கர் (ரலி)அவர்கள், “ஆம், அல்லாஹ்வின் மீதாணையாக, எங்கள் இறைவா! எங்களை நீ மன்னிப்பதையே நாங்கள் விரும்புகிறோம்…” என்று கூறி, தாம் முன்பு செய்து வந்தது போலவே (மிஸ்தஹுக்குப் பொருள் உதவி) செய்து வரத் தொடங்கினார்கள்.
அறி : ஆயிஷா (ரலி)
நூல் : (புகாரி: 4757)
அபூபக்கர் (ரலி) அவர்கள், தமது அருமை மகள் ஆயிஷா (ரலி) அவர்கள் மீது தவறான குற்றச்சாட்டுகளை சொல்லி அவதூறு பரப்பிய மிஸ்தஹ் (ரலி) மீது ஆவேசமடைந்தார்கள். ஆதலால் தமது பராமரிப்பின் கீழ் வாழ்ந்து கொண்டிருந்த அவருக்கு இனிமேல் எந்தவகையிலும் உதவி செய்யமாட் டேன் என்று அல்லாஹ்வின் மீது சத்தியமிட்டுக் கூறினார்கள். ஆனால் அதை கண்டிக்கின்ற விதத்தில் அல்லாஹ் வசனத்தை இறக்குகினான். அதையறிந்த அடுத்த வினாடியே அபூபக்கர் (ரலி) அவர்கள், தன்னளவில் நியாயமாகத் தெரிந்த தமது நிலைபாட்டினை மாற்றிக்கொண்டார்கள்.
மிகைத்தவனின் வார்த்தைக்குக் கட்டுப்பட்டு, மன்னிக்கும் பண்பினைக் கையிலெடுத்தவர்களாக மீண்டும் மிஸ்தஹ் (ரலி) அவர்களுக்கு உதவிசெய்பவர்களாக மாறினார்கள்.
அரேபிய பாலைவனப் பிரதேசத்திலே பசுமையான பேரீச்சம் பழத்தோட்டத்தை அபூதல்ஹா (ரலி) அவர்கள் சொந்தமாகப் பெற்றிருந்தார்கள். இத்தகைய மனதைக் கவருகின்ற நிலையான சொத்தினை படைத்தவனின் பாதையில் தர்மமாகத் தருவதற்கு அபூதல்ஹா (ரலி) அவர்கள் முன்வந்தார்கள். ஏனெனில் விருப்பமானதைச் செலவிடுங்கள் என்ற இரட்சகனின் வார்த்தைக்கு முக்கியத்துவம் அளிப்பதுதான் அவர்களுடைய முதன்மையான நோக்கமாக இருந்தது.
மதீனா (முஸ்லிம்களான) அன்சாரிகளிலேயே அபூதல்ஹா (ஸைத் பின் சஹ்ல்-ரலி) அவர்கள் அதிகமான பேரீச்சந்தோட்டங்கள் உடையவராய் இருந்தார்கள். (மஸ்ஜிதுந் நபவீ) பள்வாசலுக்கு எதிரேயிருந்த பீருஹா’ (அல்லது பைருஹா’) எனும் தோட்டம் தம் சொத்துக்களிலேயே அவர்களுக்கு மிகவும் விருப்பமானதாயிருந்தது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அந்தத் தோட்டத்திற்குச் சென்று அதிலுள்ள நல்ல (சுவையான) நீரைப் பருகும் வழக்கமுடையவராய் இருந்தார்கள்.
“நீங்கள் விரும்புகின்றவற்றிருந்து தானம் செய்யாதவரை ஒருபோதும் நீங்கள் (நிறைவான) பலனை அடையமாட்டீர்கள்…” எனும் (அல்குர்ஆன்: 3:92) ஆவது இறைவசனம் அருளப்பட்டபோது அபூதல்ஹா (ரலி) அவர்கள் எழுந்து நின்று, “அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் விருமபுகின்றவற்றிருந்து தானம் செய்யாதவரை ஒருபோதும் நீங்கள் (நிறைவான) பலனை அடையமாட்டீர்கள்” என அல்லாஹ் கூறுகின்றான்.
“என் சொத்துக்களில் எனக்கு மிகவும் விருப்பமானது பீருஹா’ (எனும் இந்தத் தோட்டமே) ஆகும். (இனிமேல்) அது அல்லாஹ்வுக்காக (நான் வழங்கும்) தர்மமாகும். இதற்கான நன்மையையும் (மறுமையில் எனக்குரிய) சேமிப்பாக இது இருப்பதையும் நான் அல்லாஹ்விடம் எதிர்பார்க்கிறேன். ஆகவே, அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ் தங்களுக்குக் காட்டியுள்ள வழியில் இதைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்…” என்று கூறினார்கள்.
அறி : அனஸ் பின் மாலிக் (ரலி)
நூல் : (புகாரி: 4554)
கம்பீரமான தோற்றத்தைப் பெற்றிருந்தவரான, இவரைப் பார்த்தால் ஷைத்தான் வேறுபாதையில் புறமுதுகிட்டு ஓடுகின்றான் என்று தூதர் (ஸல்) அவர்களால் வர்ணிக்கப்பட்டவரான, மேலும் நபிகளாரோடு நெருக்கமான தோழமையை வைத்திருந்தவரான உமர் (ரலி) அவர்கள், தூதரிடத்தில் மெதுவாக பேசுங்கள் என்று வேதவசனம் இறக்கியருளப்பட்டதுமே, அதற்கு தோதுவான முறையில் தம்மை தயார்படுத்திக் கொண்டார்கள்.
பின்வரும் நாட்களில், நீங்கள் கூறியதுதான் என்ன? என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டுத் தெரிந்து கொள்ளுமளவிற்கு, தூதரிடத்திலே தமது குரலைத் தாழ்த்தி மெதுவாகப் பேசினார்கள்.
இப்னு அபீமுலைக்கா அவர்கள் கூறியதாவது:
(ஒருமுறை) நல்லவர்களான அபூபக்ர் (ரலி) அவர்களும் உமர் (ரலி) அவர்களும் அழிவில் சிக்கிக்கொள்ள இருந்தார்கள். பனூதமீம் குலத்தைச் சேர்ந்த பயணக்குழுவினர் நபி (ஸல்) அவர்களிடம் (தங்களுக்கு ஒரு தலைவரை நியமிக்கும்படி கோரியவர்களாக) வந்த போது நபி (ஸல்) அவர்களுக்கு அருகில் அவர்கள் இருவரும் குரலை உயர்த்திப் பேசினார்கள்.
அந்த இருவரில் ஒருவர் (உமர்), பனூ முஜாஷிஉ குலத்தவரான அக்ரஃ பின் ஹாபிஸ் அவர்களை நோக்கி (அவரைத் தலைவராக நியமிக்கும்படி) சைகை செய்தார். மற்றொருவர் (அபூபக்ர்), இன்னொருவரை (கஅகாஉ பின் மஅபத்) நோக்கி, (அவரைத் தலைவராக நியமிக்கும்படி) சைகை செய்தார். (அந்த இன்னொருவருடைய பெயர் எனக்குத் தெரியாது” என்று அறிவிப்பாளர் கல் ஒருவரான நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்).
அப்போது அபூபக்ர் (ரலி) அவர்கள் உமர் (ரலி) அவர்களிடம், “எனக்கு மாறுசெய்யவே நீங்கள் விரும்புகிறீர்கள்” என்று கூறினார்கள். உமர் (ரலி) அவர்கள், “தங்களுக்கு மாறுசெய்வது என் விருப்பமன்று” என்று சொன்னார்கள். இந்த விவகாரத்தில் அவர்கள் இருவரின் குரல்களும் உயர்ந்தன. அப்போது, “இறைநம்பிக்கை கொண்டவர்களே! உங்கள் குரலை நபியின் குரலுக்கு மேல் உயர்த்தாதீர்கள்!” எனும் (அல்குர்ஆன்: 49:2) ஆவது வசனத்தை அல்லாஹ் அருனான்.
இப்னு ஸுபைர் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்:
இந்த வசனம் அருளப்பெற்றபின் உமர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் இந்த அளவுக்கு மெதுவாகப் பேசுவார்கள்; (அவர் என்ன கூறினார் என்பதை) நபி (ஸல்) அவர்கள், அவரிடம் (திரும்ப) விசாரித்தே தெரிந்துகொள்வார்கள்.
நூல் : (புகாரி: 4845)
ஏழை எளிய மக்களின் உணர்வுகளை மதிப்பவர்களாகவும் அவர்களின் நலன்களில் அக்கறைக் கொண்டவர்களாகவும் நேர்மையான ஆட்சியை தந்தவர்கள் உமர் (ரலி) அவர்கள். இத்தகைய பிரமாதமான ஆட்சியைப் பற்றி சரியான முறையில் அறியாமல், நபித்தோழர் ஒருவர் தவறுதலாக குறைகூறும் போது கோபமுற்றவர்களாக அவரைத் தாக்குவதற்கு முற்பட்டார்கள் உமர் (ரலி) அவர்கள்.
அப்போது அத்தன்மையை அனுமதிக்காத வகையிலுள்ள அல்குர்ஆனின் வசனம் அவருக்கு எடுத்துச் சொல்லப்பட்டதுமே, அவ்வசனத்திற்கு அடிபணிந்தவர்களாக தமது கோபத்தை மென்று விழுங்கிவிடுகிறார்கள்.
உயைனா பின் ஹிஸ்ன் (ரலி) அவர்கள், உமர் (ரலி) அவர்களிடம் சென்றபோது, “கத்தாபின் புதல்வரே! அல்லாஹ்வின் மீதாணையாக! நீங்கள் எங்களுக்கு அதிகமாக வழங்குவதில்லை. எங்களிடையே நீங்கள் நீதியுடன் தீர்ப்பப்பதில்லை” என்று சொன்னார். உமர் (ரலி) அவர்கள் கோபமுற்று அவரை நாடி (அடிக்க)ச் சென்றார்கள்.
உடனே ஹுர்ரு பின் கைஸ் (ரலி) அவர்கள் உமர் (ரலி) அவர்களை நோக்கி, “இறை நம்பிக்கையாளர்களின் தலைவரே! உயர்ந்தோனான அல்லாஹ் தன் தூதர் (ஸல்) அவர்களுக்கு, (நபியே!) மன்னிக்கும் போக்கை மேற்கொள்வீராக! மேலும், நன்மை புரியுமாறு ஏவுவீராக! இன்னும் அறிவீனர்களை விட்டு விலகியிருப்பீராக!’ (அல்குர்ஆன்: 7:199) என்று கூறியுள்ளான்.
இவர் அறியாதவர்களில் ஒருவர்” என்று சொன்னார். அல்லாஹ்வின் மீதாணையாக! ஹுர்ரு பின் கைஸ் (ரலி) அவர்கள் இந்த வசனத்தை உமர் (ரலி) அவர்களுக்கு ஓதிக் காட்டியபோது உமர் (ரலி) அவர்கள் அதை மீறவில்லை. (பொதுவாக) உமர் (ரலி) அவர்கள் இறைவேதத்திற்கு மிகவும் கட்டுப்படக்கூடியவர்களாய் இருந்தார்கள்.
அறி : இப்னு அப்பாஸ் (ரலி)
நூல் : (புகாரி: 4642)
ஏதோ ஒரு சில நபித்தோழர்களும், நபித்தோழிகளும் தான் இவ்வாறு திருமறையின் வசனத்திற்கேற்ப தங்களை சீர்திருத்திக் கொண்டார்கள் என்று அவசரப்பட்டு முடிவெடுத்துவிடக்கூடாது. மாறாக அந்த சஹாபிய சமுதாயமே அல்லாஹ்வின் வார்த்தைக்கு முழுமையாக அடிபணிந்து வாழ்ந்தது. அவர்கள் தங்களுடைய வாழ்க்கையிலே தொற்றிக்கொண்டிருந்த மார்க்கதிற்கு விரோதமான காரியங்களையெல்லாம் களைந்தெறிந்துவிட்டு, மார்க்கத்திலே அனுமதிக்கப்பட்ட அனைத்து அமல்களின் பக்கமும் அக்கறையோடு வீறுநடைபோட்டார்கள். இதற்கான ஆதாரத்தைக் காண்போம்.
நபி (ஸல்) அவர்கள் மதீனாவிற்கு ஹிஜ்ரத் செய்ததிலிருந்து 16 அல்லது 17 மாதங்கள் பைத்துல் முகத்தஸை நோக்கி தொழுது வந்தார்கள். பிறகு அல்லாஹ் தனது அருளை வழங்குவதற்காவும், இறைவழிக்கேற்ப வாழ்பவர்கள் யார்? என்பதைப் பிரித்து காட்டுவதற்காகவும், முஸ்லிம்களை கஅபத்துல்லாஹ்வை நோக்கி தொழுமாறு (அல்குர்ஆன்: 2:150) வசனத்தின் மூலம் உத்தரவு பிறப்பித்தான். அத்தகவலை அறிந்ததும், அடுத்தநொடிப்பொழுதிலேயே நம்பிக்கை கொண்டவர்கள் அக்கட்டளையை அப்படியே அமல்படுத்தினார்கள்.
நபி (ஸல்) அவர்கள் மதீனாவிற்கு வந்த ஆரம்பத்தில் தம் பாட்டனார்களி(ன் வம்சா வழியினரி)டத்தில்’ அல்லது அன்சாரிகளிலுள்ள தம் மாமன்மார்களி(ன் வம்சா வழியினரி) டத்தில்’ தங்கியிருந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் (ஜெரூசலேமிலுள்ள) பைத்துல் மக்திஸ் நோக்கி பதினாறு மாதங்கள்’ அல்லது பதினேழு மாதங்கள்’ தொழுதார்கள்.
(மக்காவிலுள்ள) இறையில்லம் கஅபாவே தொழுகையில் தாம் முன்னோக்கும் திசையாக இருக்க வேண்டும் என்பதே அவர்களின் விருப்பமாக இருந்தது. (பிறகு கஅபாவை முன்னோக்கித் தொழும்படி, இறைவனிடமிருந்து உத்தரவு வந்தது).
(கஅபாவை முன்னோக்கி) நபி (ஸல்) அவர்கள் தொழுத முதல்தொழுகை அஸ்ர் தொழுகையாகும். (அந்தத் தொழுகையை) நபி (ஸல்) அவர்களுடன் மற்ற சிலரும் தொழுதனர். அவர்களில் ஒருவர் அங்கிருந்து புறப்பட்டு (மற்றொரு) பள்ளிவாசலில் (தொழுது கொண்டு) இருந்தவர்களைக் கடந்துசென்றார். அப்போது அங்கிருந்தவர்கள் ருகூஉ’ செய்து கொண்டிருந்தனர்.
உடனே அவர், அல்லாஹ்வின் மீதாணையாக! நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் சேர்ந்து மக்கா(விலுள்ள கஅபா)வை நோக்கித் தொழுதேன் என்று சொல்ல, அவர்கள் (அனைவரும்) அப்படியே (ருகூஉவிலிருந்தபடியே சுழன்று) கஅபாவை நோக்கித் திரும்பிக் கொண்டார்கள்.
அறி: பராஉ பின் ஆஸிப் (ரலி)
நூல் : (புகாரி: 40)
மதீனாவிற்கு ஹிஜ்ரத் செய்து வந்த பிறகுதான், முஃமினான பெண்கள் தங்களுடைய அலங்காரத்தை மறைத்துக் கொள்ள வேண்டும் என்று சட்டம் வகுத்தளிக்கப்பட்டது. அச்சட்டத்தைப் பேணுவதிலே அன்றைய நம்பிக்கைக் கொண்ட பெண்கள் அஜாக்கிரதையாக இருக்கவில்லை. அடுத்த கணமே ஏக இறைவனின் உத்தரவிற்கு உளப்பூர்வமாகக் கட்டுப்பட்டவர்களாக ஹிஜாபை அணிந்து கொண்டார்கள்.
يَرْحَمُ اللَّهُ نِسَاءَ المُهَاجِرَاتِ الأُوَلَ، لَمَّا أَنْزَلَ اللَّهُ: {وَلْيَضْرِبْنَ بِخُمُرِهِنَّ عَلَى جُيُوبِهِنَّ} [النور: 31] شَقَّقْنَ مُرُوطَهُنَّ فَاخْتَمَرْنَ بِهَ
ஆரம்ப கால முஹாஜிர் பெண்களுக்கு அல்லாஹ் கருணை புரிவானாக! “(நபியே! இறைநம்பிக்கை கொண்ட பெண்களிடம் கூறுக:) அவர்கள் தங்கள் மார்புகள் மேல் தங்கன் துப்பட்டாவைப் போட்டு (மறைத்து)க் கொள்ளட்டும்!” எனும் (அல்குர்ஆன்: 24:31) ஆவது வசனத்தை அல்லாஹ் அருளியபோது, அவர்கள் தங்கள் கீழாடை(யில் ஒரு பகுதி)யைக் கிழித்து அதனைத் துப்பட்டாவாக ஆக்கி(மறைத்து)க் கொண்டார்கள்.
அறி : ஆயிஷா (ரலி)
நூல் : (புகாரி: 4758)
ஒருவரை அழைப்பதாக இருந்தால் அவருடைய தந்தை பெயருடன் சேர்த்து அழைப்பதுதான் அரபிகளின் வழக்கம். அதே நேரத்தில் வளர்ப்பு மகன்களை அவர்களுடைய அசல் தந்தையுடன் சேர்த்து அழைக்காமல், வளர்ப்புத் தந்தையின் பெயரோடு இணைத்து அழைத்து வந்தனர். இந்தவகையில் அவர்களை அழைப்பது கூடாது என்று அல்லாஹ் ஆணையிட்டான். அதன்பிறகு அன்றைய மக்கள் அனைவரும் தங்களிடத்தில் நெடுங்காலமாக இருந்த வழக்கத்தைத் தகர்த்தெறிந்துவிட்டு, இறைவனுக்கு அழகிய முறையில் அடிபணிந்தார்கள்.
“வளர்ப்புப் புதல்வர்களை அவர்களின் சொந்தத் தந்தையுடன் சேர்த்தே அழையுங்கள். இதுவே அல்லாஹ்விடம் நீதியாகும்” எனும் (அல்குர்ஆன்: 33:5) ஆவது குர்ஆன் வசனம் அருளப்படும் வரை, நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களால் விடுதலை செய்யப்பட்ட (அவர்களின் வளர்ப்பு மகன்) ஸைத் பின் ஹாரிஸா (ரலி) அவர்களை ஸைத் பின் முஹம்மத்’ (முஹம்மதின் புதல்வர் ஸைத்) என்றே அழைத்து வந்தோம்.
அறி : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)
நூல்: (புகாரி: 4782)
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை தங்களுடைய உயிரைக் காட்டிலும் மிக அதிகமாக நேசித்த நபித்தோழர்களால், நபிகளாரின் மரணத்தை சாதாரணமாகத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அதிகமான மார்க்க விளக்கத்தைப் பெற்றிருந்தவர்களான ஆயிஷா (ரலி), உமர் (ரலி) அவர்களும் கூட நபிகளரின் இறப்பை ஏற்கமறுத்தவர்களாக இருந்தார்கள்.
இத்தகைய துக்கம் நிறைந்த தருவாயில் அபூபக்ர் (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்துவிட்டார்கள் என்பதற்கு ஆதாரமாக இருக்கின்ற திருமறைவசனத்தை ஓதிக் காட்டுகின்றார்கள். இதையடுத்ததுமே அல்லாஹ்வின் தூதருடைய இறப்பை அனைவரும் ஆணித்தரமாக ஏகமனதோடு ஏற்றுக்கொண்டார்கள். அந்நேரத்தில் நடத்ததை ஆயிஷா (ரலி) அவர்களே கூறுவதைப் பார்ப்போம்.
அப்போது, அபூபக்ர் (ரலி) அவர்கள் அல்லாஹ்வைப் புகழ்ந்து அவனைப் போற்றி விட்டு, “எவர் முஹம்மத் (ஸல்) அவர்களை வணங்கிக் கொண்டிருந்தாரோ அவர் முஹம்மத் (ஸல்) அவர்கள் இறந்துவிட்டார்கள் என்பதை அறிந்து கொள்ளட்டும். அல்லாஹ்வை எவர் வணங்கிக்கொண்டிருந்தாரோ அவர் அல்லாஹ் (என்றும்) உயிராயிருப்பவன்; அவன் இறக்க மாட்டான் என்பதைப் புரிந்து கொள்ளட்டும்” என்று சொன்னார்கள்.
மேலும், நபியே! நீங்களும் இறக்க விருப்பவர் தாம்; அவர்களும் இறக்கவிருப்பவர்களே’ என்னும் (அல்குர்ஆன்: 39:30) ம் இறைவசனத்தையும், முஹம்மது ஓர் இறைத்தூதரேயன்றி வேறில்லை. அவருக்கு முன்னரும் கூட பல இறைத்தூதர்கள் (வந்து) சென்றிருக்கிறார்கள்.
எனவே, அவர் இறந்து விட்டாலோ அல்லது (போரில்) கொல்லப்பட்டு விட்டாலோ நீங்கள் உங்கள் கால் சுவடுகளின் வழியே (பழைய மதத்திற்கே) திரும்பிச் சென்றுவிடுவீர்களா? (நினைவிருக்கட்டும்:)
எவன் அவ்வாறு திரும்பிச் செல்கின்றானோ அவனால் அல்லாஹ்விற்கு எத்தகைய தீங்கும் செய்துவிட முடியாது. நன்றி செலுத்தி வாழ்பவர்களுக்கு அல்லாஹ் அதற்குரிய பிரதிபலனை மிக விரைவில் வழங்குவான்’ என்னும் (அல்குர்ஆன்: 3:144) -ம் இறைவசனத்தையும் ஓதினார்கள். உடனே மக்கள் (துக்கத்தால் தொண்டை அடைக்க) விம்மியழுதார்கள்.
அறி : ஆயிஷா (ரலி)
நூல் : (புகாரி: 3668)
திருக்கலிமாவை முன்மொழிந்து முஸ்லிம்களாக வாழ்ந்து வருகின்ற நாம் திருமறையின் வரிகளை செவியேற்ற பிறகும், அதை புறக்கணித்தவர்களாக இருப்பதால்தான், இஸ்லாத்திற்கு மாற்றமான காரியங்களெல்லாம் நம்மிடத்தில் தாறுமாறாக குவிந்துகிடக்கின்றன.
முஸ்லிம்கள் தங்களது வணக்கங்களை அல்லாஹ்விற்கு மட்டுமே செலுத்தாமல் பிரார்த்தனை, நேர்ச்சை போன்ற ஏராளமான வணக்கங்களை இறைநேசர்கள், மகான்கள் என்று கருதப்படுபவர்களுக்கு செலுத்திக் கொண்டிருக்கிறார்கள். படைத்தவன் மீது மட்டுமே வைக்கவேண்டிய நம்பிக்கைகளை படைப்பினங்களிடத்தில் அடகு வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இறைத்தூதர் (ஸல்) அவர்களுடைய சொல், செயல், அங்கீகாரத்தை பின்பற்றுவதை விட்டுவிட்டு மத்ஹபு, தரீக்கா, சூபியிஸம் போன்ற வழிகெட்ட கொள்கைகளைப் பின்பற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
தொழுகை, நோன்பு, ஜகாத் போன்ற கடமையான விஷயங்களிலும், நன்மைகளை பெற்றுத்தருகின்ற தான தர்மம், மற்றவர்களின் துயர்துடைத்தல் போன்ற எண்ணற்ற நற்காரியங்களிலும் கவனக்குறைவாக இருக்கின்றார்கள்.
கண்டதே காட்சி; கொண்டதே கோலம் என்ற விதத்தில் சினிமா, மது, விபச்சாரம், மாது போன்ற கணக்கில்லா கெட்ட காரியங்களில் ஊறித் திளைத்து கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக கூறின், குர்ஆன் வசனங்களை செவியேற்ற பிறகும் அதை அலட்சியப்படுத்திவிட்டு, செவிடன் காதில் சங்கு ஊதியதைப்போல கண்டு கொள்ளாமல் செல்வதால்தான், அதிகமான மக்கள் பெயர்தாங்கி முஸ்லிம்களாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
இஸ்லாத்திற்கும் அவர்களின் செயல்களுக்கும் அணுவளவும் சம்பந்தம் இல்லாமல் இருக்கின்றது. இவ்வாறு வேத வசனங்களை மதிக்காமல் வாழ்பவர்களுக்கு இழிவான உதாரணத்தை கூறுவதோடு, அவர்களை கடுமையாக அல்லாஹ் எச்சரிக்கின்றான்.
தவ்ராத் சுமத்தப்பட்டு பின்னர் அதைச் சுமக்காமல் (அதன்படி நடக்காமல்) இருந்தார்களே அவர்களது உதாரணம் ஏடுகளைச் சுமக்கும் கழுதையைப் போன்றது. அல்லாஹ்வின் வசனங்களைப் பொய்யெனக் கருதுவோருக்குரிய உதாரணம் மிகவும் கெட்டது. அநீதி இழைக்கும் கூட்டத்திற்கு அல்லாஹ் நேர்வழி காட்ட மாட்டான்.
அல்லாஹ்வின் வசனங்கள் மூலம் அறிவுரை கூறப்பட்டு, அதைப் புறக்கணித்து, தான் செய்த வினையை மறந்தவனை விட அநீதி இழைத்தவன் யார்?
ஆகவே இனியாவது மாற்றாரும் போற்றுகின்ற உலகப் பொதுமறையான திருக்குர்ஆனுக்கு ஏற்ப நமது வாழ்கையை அமைத்து, இம்மையிலும் மறுமையிலும் வெற்றி பெறுவோமாக! வாஆகிறு தஃவானா அனில்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்.
எம். முஹம்மது சலீம், மங்களம்