செவிகளை பேணுவோம்.!
அன்பிற்குரிய சகோதரர்களே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! பின்பற்ற தகுந்த மார்க்கம் இஸ்லாம் மட்டுமே என்றும், நமது தூதர் நபி(ஸல்) அவர்களே என்றும் உறுதி கூறியவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன்.
இறைவன் மனிதனுக்கு எண்ணற்ற அருட்கொடைகளை வழங்கியுள்ளான். மனிதர்களின் நல்வாழ்விற்காக வெளியுலகில் ஏராளமான அருட்கொடைகளை வழங்கியிருப்பதை போன்று மனிதனுக்குள்ளாகவும் பல அருட்கொடைகளை பரிசளித்திருக்கின்றான். அந்த வகையில் மனித உடலுறுப்புகளில் அலங்கரித்து கொண்டிருக்கும் இரு செவிகள் மிகச் சிறந்த அருட்கொடையே.
செவிகள் மூலம் தான் பிறரின் பேச்சுக்களை, உரையாடல்களை நாம் செவியேற்கின்றோம். அவைகளுக்கு தகுந்தாற் போல பதிலளிக்கிறோம். கல்வியை பெறுவதற்கும் இவைகளே முதன்மை காரணமாய், சாதனமாய் திகழ்கின்றன. இவ்வளவு ஏன்? சத்தியக் கொள்கை உட்பட எந்த ஒரு கருத்தும் நமது உள்ளத்தை போய் சென்றடைவதற்கு இவைகளின் துணையையே நாடுகின்றோம். இவ்வாறு செவிப்புலனைப்பற்றி அல்லாஹ்வும் அல்லாஹ்வுடைய தூதரும் நமக்கு கூறிய தகவல்களை இந்த உரையில் பார்போம்…
செவிப்புலன்களுக்கு என்று தனியாக விசாரணை உண்டு என இறைவன் கூறுவது அவைகள் மிக உன்னதமான அருட்கொடை என்பதை உறுதிப்படுத்துகின்றது.
உமக்கு அறிவு இல்லாததை நீர் பின்பற்றாதீர்! செவி, பார்வை, உள்ளம் ஆகிய அனைத்துமே விசாரிக்கப்படுபவை.
இந்த வசனம் செவிப்புலன்கள் மிகவும் சிறந்த அருட்கொடை என்ற தகவலை சொல்வதோடு, அவைகளை சரியான முறையில் நாம் பேண வேண்டும் என்ற எச்சரிக்கையையும் விடுக்கின்றது. அவைகளின் மூலம் நாம் எதை செவியுற்றோம், எவற்றுக்காக அவற்றை பயன்படுத்தினோம் என்று நம்மிடத்தில் விசாரிக்கப்படும். ஆனால் இஸ்லாமியர்களில் பலர் ஏனைய உடலுறுப்புகளை (நாவு, மறைஉறுப்பு) பாதுகாப்பதில் முக்கியத்துவம் வழங்கினாலும் செவிப்புலன்களை பாதுகாப்பதில் கவனம் செலுத்துவது கிடையாது.
இவற்றால் செய்யும் தீமைகளை தீமைகளாகவே கருதுவது கிடையாது. எனவே நாவு, மறைஉறுப்பு போன்றவற்றை பாதுகாப்பதில், பேணிநடந்து கொள்வதில் வழங்கும் முக்கியத்துவத்தை போன்று நமது செவிப்புலன்களை பாதுகாக்கும் விஷயத்திலும் வழங்க வேண்டும்.
செவிப்புலன்களின் மூலம் நாம் செய்யும் வணக்கங்களில் தலையானது திருக்குர்ஆனை செவியேற்பதாகும். குர்ஆன் வசனங்களை ஓதுவது ஒரு எழுத்திற்கு பத்து என்கிற வீதம் நமக்கு நன்மைகளை பெற்றுத்தரும். குர்ஆன் வசனங்களை செவியேற்பது இதற்கு ஈடாக நன்மைகளை பெற்றுத்தராது என்றாலும், அதிமான நன்மைகளை பெற்றுத்தரவே செய்யும். நாம் இறைவனது அருளை பெறுவதற்கு திருக்குர்ஆன் வசனங்களை செவிதாழ்த்தி கேட்பதும் ஒரு காரணமாக அமைகின்றது.
குர்ஆன் ஓதப்படும் போது அதைச் செவிமடுங்கள்! வாய் மூடுங்கள்! நீங்கள் அருள் செய்யப்படுவீர்கள்!
அது போக பிறர் ஓதி இறைவசனங்களை நாம் கேட்பது இறைவனால் மிகவும் விரும்பத்தக்க காரியமே. எனவே தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவற்றை மிகவும் விரும்பி வந்தார்கள்.
(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம், ‘எனக்குக் குர்ஆனை ஓதிக் காட்டுங்கள்’ என்று சொன்னார்கள். நான், ‘தங்கள்மீதே குர்ஆன் அருளப்பட்டுக்கொண்டிருக்க, தங்களுக்கே நான் ஓதிக் காட்டுவதா?’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘நான் பிறரிடமிருந்து அதைக் கேட்க விரும்புகிறேன்’ என்று சொன்னார்கள். ஆகவே, நான் அவர்களுக்கு ‘அந்நிசா’ எனும் (நான்காவது) அத்தியாயத்தை ஓதிக் காட்டினேன்.
‘ஒவ்வொரு சமுதாயத்திலிருந்தும் (அவர்களுடைய நபியாகிய) சாட்சியை நாம் (மறுமையில்) கொண்டு வரும் போதும், (நபியே!) உங்களை இவர்களுக்கெதிரான சாட்சியாகக் கொண்டு வரும்போதும் (இவர்களின் நிலை) எப்படியிருக்கும்?’ எனும் (அல்குர்ஆன்: 4:41) ஆவது வசனத்தை நான் அடைந்தபோது ‘தலையை உயர்த்தினேன்’ அல்லது ‘எனக்குப் பக்கத்திலிருந்த ஒருவர் என்னைத் தொட்டுணர்த்தியபோது நான் தலையை உயர்த்தினேன்’. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் கண்களில் கண்ணீர் வழிந்து கொண்டிருந்ததைக் கண்டேன்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி),
நூல் : (முஸ்லிம்: 1465)
நபிகளார் அவர்கள் அப்துல்லாஹ் (ரலி) அவர்களை குர்ஆனை ஓதச் சொல்லி, சூரத்துன் நிஸாவில் சுமார் 40 வசனங்களை ரசித்து கேட்டிருக்கின்றார்கள். அந்த ஸஹாபி ஆட்சேபிக்கும் போது பிறரிடமிருந்து கேட்பதை மிகவும் விரும்புவதாக குறிப்பிடுகின்றார்கள். எனவே நாமும் திருக்குர்ஆன் வசனங்களை அதிகமதிகம் செவியேற்பவர்களாக மாற வேண்டும்.
வீணானவற்றை அவர்கள் செவியுறும் போது அதை அலட்சியம் செய்கின்றனர். ‘எங்கள் செயல்கள் எங்களுக்கு. உங்கள் செயல்கள் உங்களுக்கு. உங்கள் மீது ஸலாம் உண்டாகட்டும். அறிவீனர்களை விரும்ப மாட்டோம்’ எனவும் கூறுகின்றனர்.
வேதம் வழங்கப்பட்டு அதனை நம்பிக்கை கொண்டவர்கள் வீணானதை செவியுறாமல் புறக்கணிப்பார்கள் என்று இறைவன் அவர்களை பாராட்டி பேசுகின்றான். இறைவன் நமக்கு வழங்கியிருக்கும் செவிப்புலன்கள் எனும் ஆற்றல்களை வீணானவற்றை கேட்பதற்காக ஒரு போதும் பயன்படுத்தி விடக்கூடாது. அவற்றை கேட்பதை விட்டும் நமது செவிகளை பாதுகாப்பது நமது கடமை என்பதை உணர்ந்து செயலாற்ற வேண்டும்.
ஆனால் மனிதர்கள் இந்த செவிகளின் மூலம் நல்லவற்றை கேட்பதை விட தீமைகளை, வீணானவைகளையே அதிகம் கேட்கின்றனர். தாம் புறம் பேசாவிட்டாலும் இன்னொருவர் மற்றவர்களை பற்றி புறம், அவதூறு பேசினால் அதை ரசித்து, பல மணிநேரம் அமர்ந்து கேட்கின்றனர். சகோதரனின் மாமிசத்தை சாப்பிடும் ஒரு தீமையில் நாமும் பங்கெடுக்கின்றோம், நரமாமிசம் சாப்பிடுபவர்களை பார்த்து ரசிக்கும் வேளையில் ஈடுபட்டிருக்கின்றோம் என்ற குற்ற உணர்வில்லாமல்….. இவைகளை ரசித்து கேட்டதற்காக மறுமையில் பதில் சொல்லியாக வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
لَيَكُونَنَّ مِنْ أُمَّتِي أَقْوَامٌ، يَسْتَحِلُّونَ الحِرَ وَالحَرِيرَ، وَالخَمْرَ وَالمَعَازِفَ،
‘அபூஆமிர் (ரலி) அவர்கள்’ அல்லது ‘அபூமாலிக் அல்அஷ்அரீ (ரலி) அவர்கள்’ என்னிடம் கூறினார்கள் – அல்லாஹ்வின் மீதாணையாக அவர்கள் என்னிடம் பொய் சொல்லவில்லை. (அவர்கள் கூறியதாவது:) நான் நபி (ஸல்) அவர்கள் சொல்லக் கேட்டேன்: என் சமுதாயத்தாரில் சில கூட்டத்தார் தோன்றுவார்கள். அவர்கள் விபசாரம் (புரிவது), (ஆண்கள்) பட்டுத் துணி (அணிவது), மது (அருந்துவது), இசைக் கருவிகள் (இசைப்பது) ஆகியவற்றை அனுமதிக்கப் பட்டவையாகக் கருதுவார்கள்.
அறிவிப்பாளர் : அப்துர் ரஹ்மான் பின் ஃகன்ம்,
நூல்: (புகாரி: 5590)
மேற்கண்ட செய்தி இசை மார்க்கத்தில் ஹராம் என்பதை தெள்ளிய நீரோடையைப் போன்று தெளிவுபடுத்துகின்றது. மேலும் பிற்காலத்தில் இஸ்லாமியர்கள் இசையை அனுமதிக்கப்பட்டதாக ஆக்கிவிடுவார்கள் என்பதையும் குறிப்பிடுகின்றார்கள். இதை தற்போது கண்கூடாக காண்கிறோம்.
இன்றைய இளைஞர், இளைஞகளின் மொபைல் போன்கள், மெமரி கார்ட் பொருத்தும் வசதி, ப்ளூடூத் போன்ற நவீன வசதிகள் கொண்டதாகவே இருக்கின்றன. இந்த வசதிகள் எதற்கு? இவைகளின் மூலம் மக்களுக்கு மத்தியில் சீர்திருத்தம் செய்வதற்காகவா? இல்லையில்லை. அக்காலத்தில் வெளிவந்த சினிமா முதல், தற்காலத்தில் வெளிவராத சினிமாவரை உள்ள அத்தனை சினிமாக்களின் பாடல்களை ஏற்றி, அவ்வப்போது அதை கேட்டு ரசிப்பதற்காக. தன் நண்பர்களின் மொபைல்களுக்கு அனுப்பி அவர்களையும் இந்நன்மையில் பங்குபெறச் செய்வதற்காக.?
வேலைகளை முடித்து வீட்டில் இருக்கும் போதும், நண்பர்களுடன் வெளியில் அமர்ந்திருக்கும் போதும் தங்கள் மொபைல் போனில் ஏற்கனவே டவுன்லோட் செய்யப்பட்டிருக்கும் சினிமா பாடல்களை பாடவிட்டு அதன் இசையில் மதிமயங்கி போய்விடுவார்கள். தற்போது இசைப்பிரியர்கள் தமிழ் சினிமாப்பாடல் என்பதை தாண்டி ஹிந்தி, மலையாளம் என அவர்களின் இசை ரசனை பல மொழிகளிலும் படர்ந்து விரிகின்றது.
இது தான் நாம் செவிகளை பேணும் முறையா? நமது புத்தியை கெடுக்கும், அறிவை இழக்கவைக்கும் இசையை கேட்பதற்காகவா இந்த செவி எனும் அருட்கொடையை இறைவன் வழங்கினான்? மறுமை நாளில் இறைவன் நம்மை விசாரிக்கும் தருவாயில் நமது செவிகளே நமக்கு எதிராக சாட்சி கூறுபவைகளாக மாறிவிடும் என்பதை மறந்து விடக்கூடாது.
இன்று அவர்களின் வாய்களுக்கு முத்திரையிடுவோம். அவர்கள் செய்து கொண்டிருந்தது பற்றி அவர்களின் கைகள் நம்மிடம் பேசும்; கால்கள் சாட்சி கூறும்.
அந்நாளில் அவர்களின் நாவுகளும், கைகளும், கால்களும் அவர்களுக்கு எதிராக அவர்கள் செய்தவை குறித்து சாட்சியமளிக்கும்.
இந்த வசனங்களில் செவிப்புலன்கள் என்ற வாசகம் இடம்பெறாவிட்டாலும் அவைகளும் நமக்கு எதிராக சாட்சியம் அளிக்கவே செய்யும். அந்நாளில் வாய்களுக்கு முத்திரையிடுவதாக, நமது உடலுறுப்புகள் நமக்கு எதிராக சாட்சி கூறும் என இறைவன் தெரிவிக்கின்றான். வாய்களுக்கு முத்திரையிட்டு விடுவதால் விசாரணைக்குரிய ஒவ்வொரு உறுப்புகளும் நமக்கெதிராக சாட்சியளிக்கும் படி இறைவன் விதித்துவிட்டான். செவிப்புலன்கள் செய்ததைப்பற்றி விசாரணை உண்டு என்ற மேற்குறிப்பிடப்பட்ட வசனம் செவிகளும் நமக்கெதிராக சாட்சியமளிக்கும் என்பதை தெரியப்படுத்துகின்றன.
புறம், அவதூறு, இசை ஆகியவற்றிருந்து நமது செவிகளை பாதுகாப்பதைப் போன்று ஒட்டுக் கேட்டல் என்பதிலிருந்தும் பாதுகாக்க வேண்டும். குடும்பத்தில் இது பெரும் பிரச்சனையாக இருப்பதை காணமுடிகின்றது. கணவன்-மனைவி பேசுவதை மாமியாரும், தாயும்-மகனும் பேசுவதை மனைவியும், நண்பர்களின் பேச்சை ஏனைய நண்பர்களும் ஒட்டுக் கேட்பதை வழமையாக கொண்டுள்ளனர். நமது இஸ்லாமிய மார்க்கத்தில் பிறரின் பேச்சை ஒட்டுக் கேட்பது மிகவும் வன்மையாக கண்டிக்கப்பட்டுள்ளது.
‘தாம் கேட்பதை மக்கள் விரும்பாத நிலையில்’ அல்லது ‘தம்மைக் கண்டு மக்கள் வெருண்டோடும் நிலையில்’ யார் அவர்களது உரையாடைலைக் காது தாழ்த்தி (ஒட்டு)க் கேட்கிறாரோ அவரது காதில் மறுமை நாளில் ஈயம் உருக்கி ஊற்றப்படும்.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி),
நூல்: (புகாரி: 7042)
பிறரின் பேச்சை ஒட்டுக் கேட்பதை பலரும் வெறுக்கவே செய்வார்கள். எனவே தான் பிறர் வெறுக்கும்படியாக மற்றவர்களின் பேச்சை ஒட்டுக் கேட்பவர்களது காதில் ஈயம் உருக்கி ஊற்றப்பட்டு வேதனை செய்யப்படும் என்று நபிகளார் எச்சரிக்கின்றார்கள். எனவே மறுமை நாளில் இவ்வேதனையிருந்து நமது செவிகளை பாதுகாப்போமாக.! அப்படிப்பட்ட நன் மக்களாக அல்லாஹ் நம்மை ஆக்கி அருள் புரிவானாக.!
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹு.