செல்வமும் இறை நம்பிக்கையும்

பயான் குறிப்புகள்: பொதுவான தலைப்புகள் - 3

பரக்கத் என்ற அதிசயத்தைப் பற்றியும், அதைப் பெறுவதற்கான வழிகளையும் அதற்கான பிரார்த்தனைகளையும் குறிப்பிட்டுள்ளோம்.

பரக்கத் என்பது அதிகம் இருப்பது என்று அர்த்தமல்ல. குறைவாக இருந்தாலும் அதன் பயன் நிறைவாக இருப்பதற்குப் பெயர் தான் பரக்கத். குறைவாக வருமானம் கிடைத்தாலும் வாழ்க்கையின் எல்லா தேவைகளும் அதன் மூலம் பூர்த்தியானால் அது வருமானத்தில் பரக்கத். குறைந்த உணவு அது பல பேருக்குப் போதுமானதாக அமைந்து விட்டால் அது உணவின் பரக்கத். 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பரக்கத்தை வேண்டி பல இடங்களில் பிரார்த்தனை செய்துள்ளார்கள்.

நபி (ஸல்) அவர்கள் எங்கள் வீட்டிற்கு விருந்து உண்ண வந்தார்கள். அவர்களுக்கு உணவை வைத்தோம், அவர்கள் உண்டார்கள். உண்டுவிட்டு வீட்டை விட்டு வெளியில் சென்றபோது என்னுடைய தந்தை நபி (ஸல்) அவர்களுடைய வாகனத்தின் கயிற்றைப் பிடித்து “எங்களுக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்” என்று  கேட்ட போது நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வே அவர்களுக்கு வழங்கியவற்றில் அவர்களுக்கு பரக்கத் செய்வாயாக. மேலும் அவர்களை மன்னித்து அவர்களுக்கு அருள்புரிவாயாக” என்று கேட்டர்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு பிஷ்ர் (ரலி)

(முஸ்லிம்: 3805)

“பிரார்த்தனை செய்யுங்கள்’ என்று சொன்னதும், நபி (ஸல்) அவர்கள் அதிகம் தருவாயாக என்று கேட்கவில்லை. மாறாக, அவருக்கு நீ எதைத் தந்தாயோ அதில் பரக்கத்தைத் தருவாயாக என்று தான் கேட்டார்கள். காரணம் அதிகம் தந்தால் கூட சில வேளை அதுவும் சோதனையாகி விடும் என்பதால் இப்படிக் கேட்டார்கள். மேலும் அவருக்கு மறுமை வாழ்விற்காகவும் கேட்டார்கள். இதை ஒருவன் நம்பினால் அவன் திருட மாட்டான். மோசடி செய்ய மாட்டான். உள்ளதைக் கொண்டு போதுமாக்கிக் கொள்வான்.

மதீனா நகரத்திற்காகவும் நபி (ஸல்) அவர்கள் பிரார்த்திக்கிறார்கள்.

“அல்லாஹ்வே மக்காவிற்கு எவ்வளவு பரக்கத் செய்தாயோ அதை விட இரண்டு மடங்கு மதீனாவிற்கு பரக்கத் செய்வாயாக” என்று நபி (ஸல்) அவர்கள் பிரார்த்தனை செய்தார்கள்.

(புகாரி: 1885)

ஆரம்பத்தில் நபி (ஸல்) அவர்கள் மதீனாவிற்குச் சென்ற போது மிகவும் துன்பப்பட்டார்கள். எந்த அளவிற்கென்றால் உண்ணுவதற்குக் கூட உணவில்லாமல் கஷ்டப்பட்டார்கள். அவர்கள் மட்டுமின்றி அங்கே வாழ்ந்த மதீனாவாசிகளும் கஷ்டப்பட்டார்கள். அந்த அளவிற்கு வறுமை! அப்படிப்பட்ட வறுமை நீங்க பிரார்த்தனை செய்தார்கள். அதன் பின்னர் அவர்களுக்கு செல்வம் கொழிக்க ஆரம்பித்தது. எந்த அளவிற்கென்றால் அவர்களுக்குப் போக மீதத்தை மிச்சப்படுத்தும் அளவிற்கு செல்வம் வந்தது.

அதே போல அவர்கள் பயன்படுத்துகின்ற அளவுப் பாத்திரத்திற்காகவும் பிரார்த்தனை செய்தார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இறைவா! மதீனாவாசிகளின் முகத்தலளவையில் நீ அருள்வளம் (பரக்கத்) அளிப்பாயாக! குறிப்பாக அவர்களது ஸாஉ, முத்து ஆகியவற்றில் நீ அருள்வளத்தை அளிப்பாயாக!

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)

(புகாரி: 2130)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பரக்கத்திற்காகத் தான் அதிகம் பிரார்த்திருக்கிறார்களே தவிர, அதிகமாகத் தருவாயாக என்று கேட்டதில்லை. இதை ஒருவன் சிந்திப்பான் என்றால் அவன் பொருளாதாரத்தின் மீது பேராசை கொள்ள மாட்டான்.

அதே போன்று, மனிதனுக்கு மிக முக்கியமான காரியம் திருமணம். அந்தத் திருமணத்தில் கூட பரக்கத்தைத் தான் கேட்டுள்ளார்கள். அதைத் தான் இன்று மணமகனை வாழ்த்தும் பிரார்த்தனையாக நாமும் கேட்கிறோம்.  இவையெல்லாம் பரக்கத்திற்காக நபி (ஸல்) அவர்கள் செய்த பிரார்த்தனைகள்.

மனிதனுக்கு மிக அவசியம் பரக்கத்தாகும். அது வந்து விட்டால் மற்றதெல்லாம் அவனுக்கு லேசாகி விடும்.

அதுபோல பரக்கத்தை அடைவதற்கான தகுதியையும் நாம் அறிந்து கொள்ள வேண்டும். எல்லோரும் அதை அடைய முடியாது. மாறாக சில வழிகளைக் காட்டித் தந்துள்ளார்கள். அதன் அடிப்படையில் இருக்க வேண்டும்.

செல்வத்தை அடைவதில் பேராவல் கூடாது

ஹகீம் பின் ஹிஸாம் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் நபி (ஸல்) அவர்களிடம் (உதவி) கேட்டேன். அவர்கள் எனக்கு வழங்கினார்கள்; மீண்டும் (உதவி) கேட்டேன் வழங்கினார்கள். மீண்டும் கேட்டேன்; வழங்கிவிட்டு,  “ஹகீமே! நிச்சயமாக இந்தச் செல்வம் பசுமையானதும் இனிமையானதுமாகும். யார் இதைப் போதுமென்ற உள்ளத்துடன் எடுத்துக் கொள்கிறாரோ அவருக்கு இதில் பரக்கத் ஏற்படுத்தப்படும்; யார் இதைப் பேராசையுடன் எடுத்துக் கொள்கின்றாரோ அவருக்கு அதில் பரக்கத் ஏற்படுத்தப்படாது. அவன் உண்ட பின்பும் வயிறு நிரம்பாதவன் போலாவான். உயர்ந்த கை தாழ்ந்த கையை விடச் சிறந்தது” என்று கூறினார்கள்.

(புகாரி: 1472)

செல்வத்தில் பரக்கத் வேண்டுமானால், எப்போது செல்வம் வரும் என்று அதைத் தேடி அலையக் கூடாது. மாறாக வந்தால் வரட்டும் என்பது போல் நாம் நடந்து கொள்ள வேண்டும்.

செல்வத்தை உரிய முறையில் அடைதல்

“யார் ஒரு செல்வத்தை உரிய முறையில் எடுத்துக் கொள்கிறாரோ அவருக்கு அதில் வளம் (பரக்கத்) வழங்கப்படும். யார் ஒரு செல்வத்தை முறையற்ற வழிகளில் எடுத்துக் கொள்கிறாரோ அவர் உண்டும் வயிறு நிரம்பாதவரைப் போன்றவர் ஆவார்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூ ஸயீதுல் குத்ரி (ரலி)

(முஸ்லிம்: 1899)

எனவே திருட்டு, மோசடி, லஞ்சம், ஏமாற்றுதல், சூதாட்டம் இவை மூலம் நாம் சொத்தை அடைந்தோமா அல்லது நேர்மையான முறையில் அடைந்தோமா எனபதை சிந்தித்துப் பார்க்க வேண்டும். நேர்மையான முறையில் சம்பாதித்தால் தான் பரக்கத் செய்யப்படும் என்பதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.

அல்லாஹ் வழங்கியதை பொருந்திக் கொள்ளுதல்

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ் தன் அடியானை அவனுக்கு வழங்கியதிலிருந்து சோதிக்கிறான். எவனொருவன் அல்லாஹ் பங்கிட்டுத் தந்ததை பொருந்திக் கொள்கிறானோ அவனுக்கு அல்லாஹ் தந்தவற்றில் பரக்கத் செய்கிறான். மேலும் விசாலமாக்குகிறான். எவன் பொருந்திக் கொள்ளவில்லையோ அவனுக்கு அல்லாஹ் பரக்கத் செய்யமாட்டான்.

(அஹ்மத்: 19398)

எனவே அல்லாஹ் எதைக் கொடுத்தாலும் அதில் நாம் திருப்தி அடைய வேண்டும். அது ஒரு சோதனையாகும். அல்லாஹ் தந்தால் அது கொஞ்சமானாலும் அதில் அவன் அதிக நன்மை தருவான் என்ற எண்ணம் வர வேண்டும். அப்போது தான் பரக்கத் கிடைக்கும்.

அல்லாஹ்வே பொறுப்பாளன் என்ற நம்பிக்கை

வறுமையை அஞ்சி உங்கள் குழந்தைகளைக் கொல்லாதீர்கள். நாம் தான் உங்களுக்கும் அவர்களுக்கும் உணவளிக்கிறோம்.

(அல்குர்ஆன்: 17:31)

வாழ்வாதாரம் வழங்குவதற்கு நான் பொறுப்பெடுத்துக் கொண்டேன் என்று அல்லாஹ் தெளிவாகக் குறிப்பிடுகிறான். எனவே பிள்ளைகளைப் பெற்றவர்கள் செல்வத்தைத் தேட முயற்சி செய்ய வேண்டுமே ஒழிய வறுமை வந்து விடுமே என்று எண்ணி குழந்தைகளைக் கொல்லக் கூடாது. பரக்கத்தை அடைய இது ஒரு வழி!

இன்னும் எந்த அளவிற்கு இறைவனை நம்ப வேண்டுமென்றால் அனைத்து ஜீவனுக்கும் அவன் தான் பொறுப்பெடுத்துக் கொண்டான் என்று நம்ப வேண்டும். அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான்:

பூமியில் உள்ள உயிரினம் எதுவாக இருந்தாலும் அவற்றிற்கு உணவளிப்பது அல்லாஹ்வின் பொறுப்பாகும்.

(அல்குர்ஆன்: 11:6)

அப்படியானால் பறவைகள், விலங்குகளுக்கெல்லாம் உணவளிக்கும் அல்லாஹ் எனக்கும் நிச்சயம் வாழ்வாதாரத்தைத் தருவான் என்ற உறுதியான நம்பிக்கை வேண்டும். அப்படி இருந்தால் நாம் அல்லாஹ்வின் அளப்பெரிய அபிவிருத்தியைப் பெறலாம். இது தொடர்பாக வரும் ஹதீஸைப் பார்ப்போம்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு முஃமின் அல்லாஹ்வை நம்ப வேண்டிய விதத்தில் நம்பினால் அல்லாஹ் அவனுக்கு ஒரு பறவைக்கு உணவளிப்பதைப் போல உணவளிப்பான். அது காலையில் ஒட்டிய வயிற்றுடன் செல்கிறது. ஆனால் மாலையில் நிரம்பிய வயிறோடு தன் வீட்டிற்குத் திரும்புகிறது.

நூல்: திர்மிதி-2266

இது போன்ற சிந்தனை நமக்கு வந்தால் நாம் பணத்திற்கோ, செல்வத்திற்கோ ஒருபோதும் பேராசைப்பட மாட்டோம். மேலும் இந்தப் பொருளாதாரத்தில் அல்லாஹ் வழங்கும்  வாழ்வாதாரத்தைக் கொண்டு போதுமாக்கிக் கொள்வோம்.

நபி (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் யாசகம் கேட்டு வருகிறார். கீழே சிறிது பேரீச்சம்பழங்கள் கிடக்கிறது. அவருக்கு அதை எடுத்துக் கொடுத்து விட்டு நபி (ஸல்) அவர்கள், “இதைப் பெற்றுக் கொள். இதை நீ இங்கே வாங்க வராவிட்டால் அது உன்னைத் தேடி வந்திருக்கும்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

நூல்: இப்னு ஹிப்பான், பாகம்: 8, பக்கம்: 33

இதை நாம் நம்ப வேண்டும். ஏனென்றால் செல்வத்தைப் பொறுத்த வரை அதை அல்லாஹ் அன்றன்றைக்குரிய ரிஸ்க் அன்றன்றைக்கு முடிவு செய்வதில்லை. மாறாக அல்லாஹ் மனிதனை எப்போது படைத்தானோ அப்போதே அவனுக்குரிய ரிஸ்கை எழுதி விட்டான்.

எனவே அவன் எதை எழுதினானோ அது தான் கிடைக்கும். மாறாக வேறொன்றும் கிடைத்து விடாது என்ற ஒரு நம்பிக்கை நம்மிடத்தில் வரவேண்டும். இந்த அடிப்படை விதியை நாம் நம்பினால் நாம் பொருளாதார விஷயத்தில் வீழ்ந்து விட மாட்டோம்.

மரணம் ஒருவனைத் தேடுவதைப் போல ரிஸ்க் ஒரு அடியானைத் தேடுகிறது. இப்படிப்பட்ட நிலையில் எதனை அல்லாஹ் நமக்கு விதித்திருக்கிறானோ அது தான் கிடைக்கும். எதை அவன் நாடவில்லையோ அது கிடைக்காது என்று நாம் நம்ப வேண்டும்.

உதாரணத்திற்கு ஒரு சபையில் அனைவருக்கும் தேனீர் தந்து கொண்டிருப்பார்கள். ஆனால் ஒருவரிடத்தில் வரும் நேரத்தில் அது கை தவறி கீழே விழுந்து விடும்; அவருக்குக் கிடைக்காது. அப்படியானால் அவருக்கு அது கிடைப்பதற்கு அல்லாஹ் நாடவில்லை என்று தான் பொருள். அதற்காக வருத்தப்படக் கூடாது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ரிஸ்க் தாமதமாகிறதே என்று எண்ணி விடாதீர்கள். ஒருவன் அவனுடைய இறுதி ரிஸ்க் அவனை அடையாமல் அவன் மரணிக்க மாட்டான்.

நாம் அதிகமாக ரிஸ்கைத் தேடிக் கொண்டிருப்போம். ஆனால் கிடைக்காது. தாமதமாகிக் கொண்டிருக்கும். அப்படிப்பட்ட நேரங்களிலே நாம் என்ன நினைக்க வேண்டுமென்றால் நமக்கு இன்றைய நாளில் அல்லாஹ் நாடவில்லை. கண்டிப்பாக வேறொரு நாளில் கிடைத்து விடும் என்று நம்பினால் நாம் கவலைப்பட மாட்டோம். ரிஸ்கைப் பொறுத்த வரை வெறும் உணவை மட்டும் ரிஸ்க் என்று நினைக்கிறோம். நாம் வாழ்வதற்குரிய அனைத்துமே ரிஸ்க்காகும்.

இவற்றையெல்லாம் நாம் இறைவனை நம்ப வேண்டும் என்பதற்காக மார்க்கம் கூறுகின்றது. இதையெல்லாம் ஒருவன் நம்புவானேயானால் அவன் எந்தவித கவலை, துன்பம் எதிலும் வருத்தப்பட மாட்டான். பொருளாதாரத்தை நிர்ணயிப்பதில் இது ஒரு முக்கியமான நம்பிக்கை!

அதே நேரத்தில் விதியை நம்புகிறோம் என்று கூறி ஒன்றையும் தேடாமலும் இருந்து விடக்கூடாது. நம் சக்திக்கேற்றவாறு உழைக்க வேண்டும். பொருளாதாரத்தைத் தேட வேண்டும் என்றெல்லாம் மார்க்கம் வலியுறுத்துகின்றது. அவற்றை நாம் இத்தொடரின் துவக்கத்தில் ஏற்கனவே கண்டோம்.

எனவே கிடைக்காவிட்டால் விரக்தி அடையக் கூடாது என்பதற்குத் தான் இது போன்ற நம்பிக்கைகள் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.