செல்போன் மூலம் ஏற்படும் 35 சதவிகித சாலை விபத்துகள்.
செல்போன் மூலம் ஏற்படும் 35 சதவிகித சாலை விபத்துகள்
இந்தியாவில் சாலை விபத்துக்களில் உயிரிழப்போரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. குறிப்பாக தமிழகத்தில் தினசரி வாகன விபத்துக்களில் பலர் உயிரிழந்து வருகின்றார்கள். விபத்தில் காயமடைவோரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் உயர்ந்த வண்ணம் இருக்கின்றது. பொதுவாக சாலை விபத்துகளுக்கு முக்கிய காரணமாக கூறப்படுவது மது,போதை. வாகனத்தை இயக்கும் வாகன ஓட்டிகள், மதுபோதையில் இருப்பதன் காரணமாக அவர்களின் கட்டுப்பாட்டை இழந்து வாகனம் விபத்துக்குள்ளாகின்றது என்பதை பல ஆய்வுகள் தெரியப்படுத்துகின்றன.
இரு சக்கர வாகனம் மட்டுமல்லாது, நான்கு சக்கர வாகனங்களும் அதிகமான விபத்தில் சிக்குவதற்கு மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுவதே காரணமாக கூறப்படுகின்றது. வாகன விபத்துக்கள் ஏற்படுவதற்கு மதுபோதை அல்லாத பிற காரணங்கள் என்னவென்பது குறித்த ஆய்வில், செல்போன்கள் பேசிக் கொண்டு வாகனம் ஓட்டுவதன் மூலம் 35% விபத்துக்கள் நடப்பதாகத் தெரியவந்துள்ளது. வாகனத்தை ஓட்டிக் கொண்டே செல்போன் பேசுபவர்களின் கவனம் சிதறி அவர்கள் இயக்கும் வாகனங்கள் விபத்துக்குள்ளாவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் கடந்த பிப்ரவரி 2 ஆம் தேதி முதல் பிப்ரவரி 10 ஆம் தேதி முதல் சாலை பாதுகாப்பு வாரம் அனுசரிக்கப்பட்டது. சென்னையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் சாலைப் பாதுகாப்பு வாரம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சாலைப் பாதுகாப்பு குறித்த ஆவணப்படத்தை சாலைப் போக்குவரத்து துறையின் சார்பில் பள்ளிக் குழந்தைகளுக்கு திரையிட்டுக் காட்டப்பட்டது. இந்த நிகழ்ச்சியை முன்னிட்டு சாலைப் பாதுகாப்பு குறித்தான கட்டுரைப் போட்டிகள் நடத்தப்பட்டன. அதில் சிறப்பாக கட்டுரை எழுதிய மாணவ மாணவிகளுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய ஆர்.டி.ஓ ஸ்ரீதரன், சாலைப் பாதுகாப்பு குறித்து பேசினார். மாணவர்கள் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் போதே சாலை விதிகள் மற்றும் அது தொடர்பான பாதுகாப்பு போன்றவைகளை குறித்து அறிந்து கொள்ள வேண்டியது அவசியம் என்றும், அதுமட்டுமின்றி சாலைவிதிகள் மற்றும் பாதுகாப்பு போன்றவைகளைக் குறிக்கும் பதாகைகள் குறியீடுகள் குறித்தும் மாணவர்கள் அறிந்து கொள்வது அவசியம் என்றும் அவர் தெரிவித்தார். அதுமட்டுமின்றி ஓட்டுனர் உரிமம் இன்றி யாரும் வாகனம் ஓட்டக் கூடாது என்றும் அவர் தெரிவித்தார். இரு சக்கர வாகனங்கள் ஓட்டும் போது அவசியம் ஹெல்மெட் அணிய அணிய வேண்டும் என்றும் அது போல காரில் பயணம் செய்யக்கூடியவர்கள் கட்டாயமாக சீட் பெல்ட் வேண்டும். ஓட்டுனர் மட்டுமின்றி அவருக்கு அருகில் இருப்பவர்களும் பின் சீட்டில் அமர்பவர்களும் சீட் பெல்ட் அணிய வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
அதுமட்டுமின்றி, நாட்டில் நடக்கும் வாகன விபத்துக்களில் 35% விபத்துக்கள் செல்போன்கள் பேசிக் கொண்டு செல்வதால் தான் நடக்கின்றது என்றும், எனவே வாகன ஓட்டும் போது செல்போன் பேசுவதை அனைவரும் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.இந்த நிகழ்ச்சியின் மூலம் மிகுந்த பயனடைந்ததாக அந்தப் பள்ளி மாணவ மாணவிகள் தெரிவித்தனர். இதுபோல தமிழகத்தின் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்ய வேண்டும் என அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். சாலை விபத்துக்கள் குறித்த விழுப்புணர்வை மாணவர்களுக்கு மட்டுமின்றி அனைத்து தரப்பினருக்கும் கொண்டு செல்ல வேண்டும் என்றும் அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.