120. உதயத்திற்கு முன் கல்லெறியும் சலுகை பெண்களுக்கு மட்டுமா?

கேள்வி-பதில்: ஹஜ் உம்ரா

10ஆம் நாள் சூரிய உதயத்திற்கு முன் கல்லெறிந்துவிடக்கூடிய சலுகை பெண்களுக்கு மட்டும்தானா? வயோதிகர்கள் ஆண்களாக இருந்தால் இது பொருந்துமா? சூரிய உதயத்திற்கு முன் கல்லெறிந்துவிட அனுமதியளிக்கப் பட்டவர்கள் அன்றைய ஃபஜ்ரைத் தொழுவதற்காக மீண்டும் முஸ்தலிஃபாவில் தங்கிய இடத்திற்கே வந்துவிட வேண்டுமா? அல்லது கல் எறிந்த பக்கத்து இடங்களிலேயே தொழலாமா? பெண்களுக்கு துணையாக உடன் வந்த ஆண்கள் ஃபஜ்ரை எங்கு நிறைவேற்ற வேண்டும்?

பதில்

சாலிம் பின் அப்தில்லாஹ் பின் உமர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் தமது குடும்பத்திலுள்ள பலவீனர்களை முன் கூட்டியே (ஃபஜ்ருக்கு முன்பே மினாவிற்கு) அனுப்பி விடுவார்கள். அதன்படி, அவர்கள் முஸ்தலிஃபாவில் “மஷ்அருல் ஹராம்’ எனுமிடத்தில் இரவில் தங்கியிருந்து, அங்கு தமக்குத் தெரிந்தவகையில் அல்லாஹ்வை நினைவு கூர்வார்கள். பிறகு, இமாம் முஸ்தலிஃபாவில் தங்கித் திரும்புவதற்கு முன்பே இவர்கள் (மினாவிற்குத்) திரும்பிவிடுவர். அவர்களில் சிலர் ஃபஜ்ர் தொழுகைக்காக முன்கூட்டியே மினாவிற்குச் சென்றுவிடுவர். இன்னும் சிலர் அதற்குப் பின் செல்வர். மினாவுக்குச் சென்றதும் “ஜம்ரா’வில் கல்லெறிவர். “(முதியோர், பெண்கள், நோயாளிகள் போன்ற) இத்தகைய (நலிந்த)வர்களுக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (இவ்வாறு செய்ய) அனுமதியளித்துள்ளார்கள்” என்று அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறுவார்கள்.

(முஸ்லிம்: 2281)

அஸ்மா (ரலி) அவர்களால் விடுதலை செய்யப்பட்ட அவர்களின் அடிமையான அப்துல்லாஹ் அவர்கள் கூறியதாவது:

அஸ்மா (ரலி) அவர்கள் முஸ்தலிஃபாவில் தங்க வேண்டிய இரவில் அங்கு தங்கினார்கள். பிறகு எழுந்து சிறிது நேரம் தொழுதுவிட்டு, “மகனே! சந்திரன் மறைந்துவிட்டதா?” எனக் கேட்டார்கள். நான் “ஆம்!” என்றதும் “புறப்படுங்கள்!” எனக் கூறினார்கள். நாங்கள் புறப்பட்டு வந்ததும் ஜம்ராவில் அவர்கள் கல்லெறிந்தார்கள். பிறகு அங்கிருந்து திரும்பி வந்து தமது கூடாரத்தில் சுப்ஹு தொழுதார்கள். அப்போது நான், “அம்மா நாம் விடியும் முன்பே வந்துவிட்டதாகத் தெரிகின்றதே!” என்றேன். அதற்கவர்கள், “மகனே! நபி (ஸல்) அவர்கள் பெண்களுக்கு இவ்வாறு வர அனுமதியளித்துள்ளார்கள்” என்றார்கள்.

(புகாரி: 1679)

இந்த ஹதீஸ்களில் சூரியன் உதிப்பதற்கு முன்பே கல்லெறியலாம் என்று கூறப்பட்டிருந்தாலும் சூரியன் உதயமான பிறகு கல்லெறிவதே சிறந்தது. ஏனெனில் பலவீனர்களை முற்கூட்டியே அனுப்பிய நபி (ஸல்) அவர்கள் சூரியன் உதிக்கும் முன்பு கல்லெறிய வேண்டாம் என்று கூறி அனுப்பியதாக ஒரு ஹதீஸ் உள்ளது.

நபி (ஸல்) அவர்கள் தமது குடும்பத்தினரில் பலவீனர்களை முற்கூட்டியே அனுப்பி வைத்தார்கள். சூரியன் உதிக்கும் வரை நீங்கள் கல்லெறிய வேண்டாம் என்று கூறி அனுப்பினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: திர்மிதி 817

சிறந்தது

இந்த ஹதீஸை ஆதாரமாகக் கொண்டு, முற்கூட்டியே சென்றாலும் சூரியன் உதிக்கும் வரை பலவீனர்கள் காத்திருந்து தான் கல்லெறிய வேண்டும் என்று அறிஞர் நாஸிருத்தீன் அல்பானி கூறுகின்றார். எனவே பலவீனர்கள் இந்த ஹதீஸையும் கவனத்தில் கொண்டு செயல்படுவது தான் சிறந்ததாகும்.

இவ்வாறு முற்கூட்டியே செல்ல அனுமதிக்கப்பட்டவர்கள் மினாவில் ஃபஜ்ர் தொழுது கொள்ளலாம் என்பதை மேற்கண்ட இப்னு உமர் (ரலி) அவர்களின் ஹதீஸ் விளக்குகின்றது.