19) சூரியன் விஷயத்தில் மட்டும் கணிப்பது ஏன்?

நூல்கள்: பிறை ஓர் விளக்கம்

பிறை விஷயத்தில் முன் கூட்டியே கணித்துச் செயல்படக் கூடாது என்று கூறும் நீங்கள், தொழுகை நேரங்களைக் கணிப்பதை மட்டும் ஏற்றுக் கொள்வது ஏன்? என்று சிலர் கேள்வி எழுப்புகின்றனர்.

சூரியன் விஷயத்தில் கணிப்பை ஏற்றுக் கொள்ளும் நாம் சந்திரன் விஷயத்தில் ஏற்றுக் கொள்ளக் கூடாது என்று வேறுபடுத்திக் கூறுவது சரி தான். ஏனெனில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிறையைப் பார்த்துத் தான் நாளைத் தீர்மானிக்க வேண்டும் என்று கூறி விட்டார்கள்.
சூரியன் மறைந்தவுடன் மக்ரிப் தொழ வேண்டும் என்பது தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கட்டளையாகும். சூரியன் மறைந்தது என்பதை எப்படித் தீர்மானிக்க வேண்டும் என்பது குறித்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எந்த உத்தரவையும் இடவில்லை.

மேக மூட்டமான நாட்களில் சூரியன் தென்படாத பல சந்தர்ப்பங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் வந்ததுண்டு. அது போன்ற நாட்களில் சூரியன் மறைவதைக் கண்டால் மக்ரிப் தொழுங்கள். இல்லாவிட்டால் அஸர் நேரம் என்றே அதைக் கருதிக் கொள்ளுங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறவில்லை. அது போல் சூரியன் மறைவதைக் கண்ணால் கண்ட பின் தான் நோன்பு துறக்க வேண்டும் என்றும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறவில்லை.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் அவர்கள் துஆச் செய்தவுடன் மழை பெய்ய ஆரம்பித்து ஆறு நாட்கள் நாங்கள் சூரியனையே பார்க்கவில்லை என்று புகாரியில் ஹதீஸ் உள்ளது.

(பார்க்க:(புகாரி: 1013, 1014)

ஆறு நாட்களும் சூரியனையோ அது உதிப்பதையோ மறைவதையோ பார்க்க முடியவில்லை. இந்த ஆறு நாட்களும் கணித்துத் தான் தொழுதிருக்க முடியும். அனேகமாக சூரியன் மறைந்திருக்கும் என்று கருதும் நேரத்தில் தான் மக்ரிப் தொழதிருக்க முடியும். 

மேகம் சூரியனை மறைத்தது போல் சந்திரனையும் மறைக்கிறது. சந்திரன் மறைக்கப்படும் போது எப்படியாவது கணித்துக் கொள்ளுங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறவில்லை. பிறை தெரியாததால் மேகத்தின் உள்ளே பிறை இருந்தாலும் அது முப்பதாம் நாள் தான். முதல் நாள் அல்ல என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறி விட்டனர்.

சூரியனை மேகம் மறைத்த போது கணித்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சந்திரனை மேகம் மறைத்த போது கணிக்கக் கூடாது. அது முப்பதாம் நாள் தான் என்று தெளிவாகப் பிரகடனம் செய்து விட்டனர். எனவே தொழுகைக்கும் நோன்புக்கும் ஒரே மாதிரியான அளவு கோல் இருக்க வேண்டிய அவசியம் இல்லை.

வானியல் கணிப்பை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறுபவர்கள் சுபுஹ் வரை தகவலை எதிர்பார்க்க வேண்டும் என்று கூறுவது ஏன்? கணிப்பை ஏற்றுச் செயல்பட வேண்டியது தானே? வானியல் மூலம் 1000 வருடங்களுக்குப் பிறகுள்ள பிறையையும் கணித்து விடலாம் அல்லவா?