16) சூனியம் செய்யப்பட்டதை மறுக்கும் திருக்குர்ஆன்

நூல்கள்: பில்லி சூனியம் ஒரு பித்தலாட்டம்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும், முந்தைய நபிமார்களும் தம்மை அல்லாஹ்வின் தூதர் என்று சொன்னபோது, அதை ஏற்க மறுத்த காஃபிர்கள் சொன்ன காரணங்கள் என்ன?

சாப்பிடுகிறீர்கள்,

பருகுகிறீர்கள்,

எங்களைப் போல் மனிதர்களாக இருக்கிறீர்கள்,

நீங்கள் சோதிடக்காரர்கள்

திறமை வாய்ந்த புலவர்கள்

உங்களுக்கு யாரோ சூனியம் வைத்ததால் இப்படி புத்தி பேதலித்து உளறுகிறீர்கள்

என்று சொன்னார்கள்.

இவர்களின் மற்ற விமர்சனங்களை ஏற்றுக் கொண்ட அல்லாஹ் நபிமார்களுக்கு சூனியம் செய்யப்பட்டுள்ளது என்று கூறுவதையும், சோதிடக்காரர், புலவர் என்று கூறுவதையும் கடுமையான சொற்களால் மறுக்கிறான்.

இது பற்றி விபரமாகப் பார்ப்போம்.

தூதராக மனிதரையா அல்லாஹ் அனுப்பினான்? என்று அவர்கள் கூறுவதுதான், மனிதர்களிடம் நேர்வழி வந்த போது அவர்கள் நம்புவதற்குத் தடையாக இருந்தது.

(அல்குர்ஆன்: 17:94)

“நீங்கள் எங்களைப் போன்ற மனிதர் தவிர வேறில்லை. அளவற்ற அருளாளன் எதையும் அருளவில்லை. நீங்கள் பொய் சொல்வோராகவே இருக்கிறீர்கள்” என்று கூறினர்.

(அல்குர்ஆன்: 36:15)

நீர் எங்களைப் போன்ற ஒரு மனிதர் தவிர வேறில்லை. உம்மைப் பொய்யராகவே கருதுகிறோம்.

(அல்குர்ஆன்: 26:186)

“நீர் எங்களைப் போன்ற மனிதர் தவிர வேறு இல்லை. நீர் உண்மையாளராக இருந்தால் சான்றைக் கொண்டு வருவீராக!”

(அல்குர்ஆன்: 26:154)

“இத்தூதருக்கு என்ன நேர்ந்தது? இவர் உணவு உண்கிறார்; கடைவீதிகளில் நடமாடுகிறார்;இவரோடு ஒரு வானவர் இறக்கப்பட்டு இவருடன் (சேர்ந்து) அவர் எச்சரிப்பவராக இருக்கக் கூடாதா?” என்று கேட்கின்றனர்.

(அல்குர்ஆன்: 25:7)

“இவர் உங்களைப் போன்ற ஒரு மனிதர் தவிர வேறில்லை. நீங்கள்  உண்பதையே இவரும் உண்ணுகிறார். நீங்கள் அருந்துவதையே இவரும் அருந்துகிறார்” என்று அவரது சமுதாயத்தில் யார் (ஏகஇறைவனை) மறுத்து, மறுமையின் சந்திப்பைப் பொய்யெனக் கருதி, இவ்வுலக வாழ்வில் யாருக்கு சொகுசான வாழ்வை வழங்கினோமோ அந்தப் பிரமுகர்கள் கூறினர்.

(அல்குர்ஆன்: 23:33)

“இவ்விருவரின் சமுதாயத்தினர் நமக்கு அடிமைகளாக இருக்கும் நிலையில் நம்மைப் போன்ற இரு மனிதர்களை நாம் நம்புவோமா?” என்றனர்.

(அல்குர்ஆன்: 23:47)

அவர்களின் உள்ளங்கள் அலட்சியம் செய்கின்றன. “இவர் உங்களைப் போன்ற மனிதர் தவிர வேறு யார்? பார்த்துக் கொண்டே இந்த சூனியத்திடம் செல்கிறீர்களா?” என்று அநீதி இழைத்தோர் மிகவும் இரகசியமாகப் பேசுகின்றனர்.

(அல்குர்ஆன்: 21:3)

இப்படியெல்லாம் நபிமார்கள் விமர்சிக்கப்பட்ட போது அதை அல்லாஹ் மறுக்கவில்லை. மாறாக இறைத்தூதர்கள் மனிதர்கள் தான் என்றே பதிலளித்தான்.

“நாங்கள் உங்களைப் போன்ற மனிதர்கள் தாம். ஆயினும் தனது அடியார்களில் தான் நாடியவர் மீது அல்லாஹ் அருள் புரிகிறான். அல்லாஹ்வின் விருப்பமின்றி எந்த அற்புதத்தையும் உங்களிடம் எங்களால் கொண்டு வர இயலாது. நம்பிக்கை கொண்டோர் அல்லாஹ்வையே சார்ந்திருக்க வேண்டும்” என்று அவர்களின் தூதர்கள் கூறினர்.

(அல்குர்ஆன்: 14:11)

“என் இறைவன் தூயவன். நான் மனிதனாகவும், தூதராகவுமே இருக்கிறேன்” என்று (முஹம்மதே!) கூறுவீராக!

(அல்குர்ஆன்: 17:93)

(முஹம்மதே!) உமக்கு முன் ஆண்களையே தூதர்களாக அனுப்பினோம். அவர்களுக்கு தூதுச்செய்தி அறிவித்தோம். நீங்கள் அறியாதிருந்தால் அறிவுடையோரிடம் கேளுங்கள்! உணவு உட்கொள்ளாத உடலாக அவர்களை நாம் ஆக்கவில்லை. அவர்கள் நிரந்தரமாகவும் இருக்கவில்லை.

(அல்குர்ஆன்: 21:7),8

சூனியத்தால் பாதிப்பை ஏற்படுத்த முடியும் என்று நம்புபவர்களாக மக்கள் இருந்தார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொர்க்கம், நரகம் போன்றவற்றை மக்களுக்குச் சொன்னபோது அது அவர்களின் அறிவுக்கு எட்டாமல் இருந்ததால் இவருக்குப் பைத்தியம் பிடித்து விட்டது என்று கூறினார்கள்.

நபிமார்களுக்குச் சூனியம் வைக்கப்பட்டது என்று சொல்லப்பட்ட போதும், நபிமார்களுக்கு மனநோய் ஏற்பட்டது என்று சொல்லப்பட்ட போதும் அல்லாஹ் அதைக் கடுமையாக மறுக்கிறான்.

“சூனியம் செய்யப்பட்ட ஒரு மனிதனையே பின்பற்றுகிறீர்கள்” என்று அநீதி இழைத்தோர் இரகசியமாகக் கூறியதையும், (முஹம்மதே!) உம்மிடம் அவர்கள் செவியேற்ற போது எதைச் செவியேற்றார்களோ அதையும் நாம் நன்கு அறிவோம்.

(அல்குர்ஆன்: 17:47)

அல்லது இவருக்கு ஒரு புதையல் வழங்கப்பட்டிருக்கக் கூடாதா? அல்லது இவருக்கு ஒரு தோட்டம் இருந்து அதிலிருந்து இவர் உண்ணக் கூடாதா?” என்றும் “சூனியம் செய்யப்பட்ட மனிதரையே பின்பற்றுகிறீர்கள்” என்றும் அநீதி இழைத்தோர் கேட்கின்றனர்.

(அல்குர்ஆன்: 25:8)

“நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டது” என விமர்சனம் செய்தவர்களை அநியாயக்காரர்கள் என்று இவ்வசனங்கள் பிரகடனம் செய்கின்றன.

“இறைத்தூதர்களுக்கு சூனியம் வைப்பது சாதாரண விஷயம்; அதனால் அவரது தூதுப்பணிக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்றிருந்தால் இந்த விமர்சனத்தை இறைவன் மறுக்க மாட்டான்.

இறைத்தூதர் சாப்பிடுகிறார்; குடிக்கிறார் என்று விமர்சனம் செய்யப்பட்ட போது, சாப்பிடுவதாலோ, குடிப்பதாலோ தூதுப்பணிக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்பதால் அதை இறைவன் மறுக்கவில்லை. எல்லாத் தூதர்களும் சாப்பிடத்தான் செய்தார்கள் என்று பதிலளித்தான்.

ஆனால் நபிகள் நாயகத்துக்குச் சூனியம் வைக்கப்பட்டதாகக் கூறிய போது, அநியாயக்காரர்கள் இப்படிக் கூறுகிறார்களே என்று மறுத்துரைக்கிறான். சூனியம் வைக்கப்பட்டு இறைத்தூதர் பாதிக்கப்பட்டால் அது தூதுப்பணியைப் பாதிக்கும் என்பதால் தான் இதை மறுக்கிறான்.

“இந்த வசனம் அருளப்படும் போது சூனியம் வைக்கப்படாமல் இருந்து, பின்னர் சூனியம் வைக்கப்பட்டிருக்கலாம் அல்லவா?” என்று சிலர் பேசுவார்கள். இது ஏற்க முடியாததாகும்.

பின்னர் சூனியம் வைக்கப்படும் என்றால் அது நிச்சயம் இறைவனுக்குத் தெரிந்திருக்கும். நாளைக்குச் சூனியம் வைக்கப்படுவதை அறிந்துள்ள இறைவன் இன்றைக்கு அதை மறுப்பதால் எந்த நன்மையும் இல்லை.

மேற்கண்ட இரண்டு வசனங்களையும் அடுத்த வசனங்களையும் இவர்கள் கவனித்தால் இத்தகைய தத்துவங்களைக் கூற மாட்டார்கள்.

(முஹம்மதே!) அவர்கள் உம்மைப் பற்றி எவ்வாறு உதாரணங்களைக் கூறுகின்றனர் என்பதைக் கவனிப்பீராக! அவர்கள் வழிகெட்டு விட்டனர். அவர்கள் நேர்வழி அடைய இயலாது.

(அல்குர்ஆன்: 25:9)

உமக்கு எவ்வாறு அவர்கள் உதாரணம் காட்டுகிறார்கள் என்று கவனிப்பீராக! எனவே அவர்கள் வழிகெட்டனர். அவர்கள் நேர்வழியை அடைய இயலாது.

(அல்குர்ஆன்: 17:48)

“நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சூனியம் செய்யப்பட்டவர்” என்று விமர்சனம் செய்தவர்களை வழிகெட்டவர்கள் என்று இங்கே இறைவன் பிரகடனம் செய்கிறான். அவர்கள் நேர்வழியை அடைய இயலாது என்றும் கூறுகிறான்.

சூனியம் செய்யப்பட முடியாத ஒருவரை சூனியம் செய்யப்பட்டவர் என்று கூறுகிறார்களே என்பதால் தான் உம்மை எப்படி விமர்சிக்கிறார்கள் என்பதைக் கவனியும் என்று இறைவன் குறிப்பிடுகிறான்.

திருக்குர்ஆனின் தெளிவான தீர்ப்பின்படி நபிகள் நாயகத்துக்கோ, வேறு எந்த இறைத்தூதருக்கோ எவரும் சூனியம் செய்யவோ, முடக்கவோ இயலாது என்பது உறுதியாகிறது.

சூனியம் செய்யப்பட்டவர் என்று கூறிய காஃபிர்கள் நபிகள் நாயகத்துக்குப் பைத்தியம் பிடித்து விட்டது என்றும் சொன்னார்கள். இதையே தான் இந்த சூனியத்தை நம்புபவர்களும் கூறுகின்றார்கள்.

அப்படிக் கூறி விட்டு நபிகள் நாயகத்துக்குச் சூனியத்தால் பைத்தியம் ஏற்பட்டது என்று நாங்கள் சொன்னோமா என்று கேட்கிறார்கள்.

இது எப்படி இருக்கிறது?

ஒருவர் பணத்தை இன்னொருவர் தெரியாமல் எடுத்துப் பதுக்கிக் கொண்டார் என்று நமக்கு ஒரு செய்தி கிடைக்கிறது. இதைப் பற்றி நாம் கூறும் போது அந்த நபர் பணத்தைத் திருடி விட்டார் என்று சொல்வோம்.

அதுபோல் மறை கழன்று விட்டது என்ற செய்தியைக் கூறும் போது பைத்தியம் பிடித்து விட்ட்து என்று கூறுவோம்.

ஒரு செய்தி பல சொல்லமைப்புகள் மூலம் சொல்லப்படுவது வழக்கத்தில் உள்ளது தான். நபிகள் நாயகத்துக்கு மனநோய் ஏற்பட்டது என்ற சொல் அந்தச் செய்தியில் இல்லாவிட்டாலும் அந்தக் கருத்தைத் தவிர வேறு கருத்து அதில் இல்லை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தாம் செய்யாததை செய்ததாக ஆறுமாத காலம் சொல்லிக் கொண்டு இருந்தார்கள் என்பதும் ஆறுமாதம் மனநோயாளியாக இருந்தார்கள் என்று சொல்வதும் ஒரே கருத்தைச் சொல்லும் இருவேறு சொல் வடிவங்கள் தான்.

நபி அவர்களுக்குப் பைத்தியம் பிடித்துள்ளது என்று மக்கள் சொன்னவுடன் அல்லாஹ் கோபப்படுகின்றான்.

எனவே (முஹம்மதே!) அறிவுரை கூறுவீராக! உமது இறைவனின் பேரருளால் நீர் சோதிடர் அல்லர். பைத்தியக்காரரும் அல்லர்.

(அல்குர்ஆன்: 52:29)

நபி அவர்களை அல்லாஹ் பைத்தியமாக ஆக்க மாட்டான் என்று இவ்வசனத்தில் தெளிவாகச் சொல்லியுள்ளான்.

நூன். எழுதுகோல் மீதும், அவர்கள் எழுதுவதன் மீதும் சத்தியமாக, (முஹம்மதே!) உமது இறைவனின் அருட்கொடையால் நீர் பைத்தியக்காரராக இல்லை. உமக்கு முடிவுறாத கூலி உண்டு. நீர் மகத்தான குணத்தில் இருக்கிறீர்.

(அல்குர்ஆன்: 68:1-6)

அவர்களின் தோழருக்கு (முஹம்மதுக்கு) எந்தப் பைத்தியமும் இல்லை என்பதை அவர்கள் சிந்தித்துப் பார்க்கவில்லையா? அவர் தெளிவான எச்சரிக்கை செய்பவரே.

(அல்குர்ஆன்: 7:184)

இவ்வசனங்களை ஊன்றிக் கவனியுங்கள். நபிகள் நாயகத்துக்கு பைத்தியம் பிடிக்காது என்றும் இது அவர்களுக்கு அல்லாஹ் செய்த அருள் என்றும் இவ்வசன்ங்கள் கூறுகின்றன. யாருக்காவது சந்தேகம் இருந்தால் அவரைக் கவனித்து அவரது ஒவ்வொரு நடவடிக்கையையும் சிந்தித்துப் பார்க்கட்டும். அவருக்கு எந்த வகையான மனநோயும் இல்லை என்று அறிந்து கொள்வார்கள் என்றும் இவ்வசனத்தில் அல்லாஹ் அறைகூவல் விடுக்கிறான்.

சூனியக் கட்சியினருக்கு மரண அடியாக அல்லாஹ் கூறுவதைப் பாருங்கள்.

“நீங்கள் இருவர் இருவராகவோ, தனித் தனியாகவோ அல்லாஹ்வுக்காக சற்று நேரம் ஒதுக்கி பின்னர் “உங்கள் தோழருக்கு (எனக்கு) பைத்தியம் எதுவுமில்லை; கடுமையான வேதனைக்கு முன் அவர் உங்களுக்கு எச்சரிக்கை செய்பவரே தவிர வேறில்லை” என்பதை நீங்கள் சிந்திக்க வேண்டும் என்ற ஒரே விஷயத்தையே உங்களுக்குப் போதிக்கிறேன்” எனக் கூறுவீராக!

(அல்குர்ஆன்: 34:46)

நபிகள் நாயகத்துக்குச் சூனியம் வைக்கப்பட்டு அவர்கள் மன நோயாளியாக ஆனார்கள் என்று சொல்பவர்களே! ஒவ்வொருவராக வந்து அல்லது இருவர் இருவராக வந்து முஹம்மது நபியைச் சோதித்துப் பாருங்கள். ஒவ்வொருவரும் அவரிடம் எந்த வகையான கேள்வியையும் கேட்டுப் பாருங்கள். அவர் மனநோயாளி போல் பதில் சொல்கிறாரா? மாமேதை போல் பதில் சொல்கிறாரா? என்று சோதித்துப் பார்த்தால் அவருக்கு எந்த வகையான மனநோயும் இல்லை என்று அறிந்து கொள்வீர்கள் என்று அல்லாஹ் அறைகூவல் விடுக்கிறான்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குச் சூனியம் வைக்கப்பட்டதால் அவர்கள் மன நோயாளியானார்கள் என்ற செய்தி கட்டுக்கதை என்பதற்கு இந்த ஒருவசனமே போதிய ஆதாரமாக உள்ளது.

இதுவரை நபிகள் நாயகம் ஸல் அவர்களுக்கு சூனியம் வைக்கப்பட்ட்தாக சில ஹதீஸ்களில் சொல்லப்பட்டாலும் அது இஸ்லாத்தின் அடிப்படைக்கும் திருக்குர் ஆனுக்கும் எதிராக இருப்பதால் அது கட்டுக்கதை தான் என்பதை நாம் அறிந்து கொண்டோம்.

நபிகள் நாயகம் (ஸல்) அல்லாத மற்றவர்களுக்கு சூனியத்தின் மூலம் பாதிப்பை ஏற்படுத்த முடியுமா? என்பதை இப்போது பார்ப்போம்.