17) சூனியத்தை மறுக்கும் நபிகள் நாயகம் (ஸல்)
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் சூனியத்தை நம்பக்கூடாது தெளிவாகக் கூறியுள்ளனர்.
.مسند أحمد – (ج 45 / ص 477)
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
விதியை மறுப்பவன், நிரந்தரமாக மது அருந்துபவன், சூனியத்தை உண்மை என்று நம்புபவன், (பெற்றோருக்கு) மாறு செய்பவன் ஆகியோர் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்கள்.
அறிவிப்பவர் : அபுத்தர்தா (ரலி), நூல் : (அஹ்மத்: 27484) (26212)
சூனியத்தை ஒருவன் நம்பினால் அவன் சொர்க்கம் செல்ல மாட்டான் என்பதைத் தெளிவான முறையில் இந்த நபிமொழி சொல்கிறது. எந்த வியாக்கியானமும் கொடுக்க முடியாத வகையில் இதன் வாசக அமைப்பு அமைந்துள்ளது.
இந்த ஹதீஸ் வேறு சில வழிகளில் வருகின்றது. அந்தச் செய்திகளெல்லாம் பலவீனமானவை. ஆனால் முஸ்னத் அஹ்மதில் (26212) பதிவு செய்யப்பட்ட மேற்கண்ட ஹதீஸ் ஆதாரப்பூர்வமானது.
முஸ்னத் அஹ்மதில் இப்படி ஒரு ஹதீஸ் இருந்தும் சிலர் முஸ்னத் அஹ்மதில் இப்படி ஒரு ஹதீஸ் மூலப்பிரதியில் இருக்கவில்லை. பிற்காலத்தில் சாப்ட்வேர் காப்பியில் இது இடைச்செருகலாகச் சேர்க்கப்பட்டது என்று கூறி இதை மறுக்க்கப் பார்க்கின்றனர். முஸ்னத் அஹ்மதின் எந்த அச்சுப் பிரதியிலும் இந்த ஹதீஸ் இல்லை என்றும் கூறுகின்றனர்.
கீழே நாம் எடுத்துக்காட்டி இருப்பது முஸ்னத் அஹ்மத் நூலின் அச்சுப்பிரதியாகும். இந்த அச்சுப்பிரதியில் நாம் மேலே எடுத்துக்காட்டிய ஹதீஸ் இடம்பெற்றுள்ளது.
ஒரு நூலில் ஏதாவது விடுபட்டுள்ளதா? அல்லது கூடுதலாகச் சேர்க்கப்பட்டுள்ளதா என்பதைப் பல வழிகளில் நாம் உறுதி செய்து கொள்ள முடியும்.
ஹதீஸ் நூல்கள் இரு வகைகளில் உள்ளன. ஒரு நூலாசிரியர் தான் திரட்டிய ஹதீஸ்களைப் பதிவு செய்வது ஒரு வகை.
இவ்வாறு திரட்டப்பட்ட பல நூல்களில் உள்ள ஹதீஸ்களை எடுத்து தலைப்பு வாரியாக தொகுப்பது மற்றொரு வகை.
ஒரு தனி நூல்களின் பிரதிகளில் முரண்பாடு வந்தால் தொகுத்து எழுதியவர்கள் அதை எவ்வாறு எழுதி உள்ளார்கள் என்று பார்த்து அதனடிப்படையில் எது சரியானது என்று கண்டுபிடிப்பார்கள். தொகுத்து எழுதியவர் தன்னிடம் உள்ள பழங்காலப் பிரதியில் இருந்து எடுத்து எழுதியே தொகுத்திருப்பார்.
அல் முஸ்னதுல் ஜாமிவு என்பது இது போன்ற நூலாகும். இதில் அஹ்மத், திர்மிதீ, இப்னு மாஜா, அபூதாவூத் உள்ளிட்ட பல நூல்களில் உள்ள ஹதீஸ்கள் தொகுத்து எழுதப்பட்டுள்ளன. நாம் சுட்டிக்காட்டிய அஹ்மத் நூலில் இடம் பெற்ற ஹதீஸை இந்த நூலில் பதிவு செய்து இது அஹ்மதில் உள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
المسند الجامع (33/ 449)
அஹ்மத் நூலில் இந்த ஹதீஸ் இடம் பெற்றதைப் பார்த்துத் தான் இவர் தொகுத்துள்ளார் என்பதாலும், இவர் தொகுக்கும் போது சாப்ட்வேர் காப்பி இருக்கவில்லை என்பதாலும் மேற்கண்ட செய்தி அஹ்மதில் உள்ளது தான் என்பது உறுதியாகிறது.
அது போல் அல்ஜாமிஉஸ் ஸஹீஹ் நூலிலும் இந்த ஹதீஸ் அஹ்மதில் உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேற்கண்ட நூலைத் தொகுத்தவர் தன் காலத்தில் இருந்த முஸ்னத் அஹ்மதின் எழுத்துப் பிரதியைப் பார்த்துத் தான் தொகுத்து இருக்க முடியும்.
இப்னு கஸீா் அவா்களுக்குரிய ஜாமிஉல் மஸானீத் என்ற நுாலிலும் இந்த வார்த்தை இடம்பெற்றுள்ளது.
جامع المسانيد والسنن (9 / 335):
ஹாபிள் இப்னு ஹஜா் அவா்களின் அத்ராபுல் முஸ்னத் நூலிலும் இந்த வார்த்தை தெளிவாக இடம்பெற்றுள்ளது.
إطراف المسند المعتلي بأطراف المسند الحنبلي (6 / 149):
7977 -[ق] حديث: لا يدخل الجَنَّةَ عاقٌّ، ولا مؤمنٌ بسِحْرٍ، ولا مُدْمِنُ خَمْرٍ، ولا مُكَذِّبٌ بقَدَر.
(6: 441)حَدَّثَنا أبو جعفرالسويدي، ثنا أبو الربيع سليمان بن عُتْبَة الدمشقي، سمعتُ يونس بن مَيْسَرة، عنه بهذا.
இவர்கள் தமது காலத்தில் கிடைத்த எழுத்துப் பிரதியை வைத்துத் தான் தொகுத்திருக்கிறார்கள். ஒரே ஒரு அச்சுப்பிரதியில் இந்த ஹதீஸ் இல்லாமல் இருந்தால் அதில் விடுபட்டுள்ளது என்று தான் அறிவுடையோர் முடிவு செய்வார்கள்.
பழங்கால எழுத்துப் பிரதிகளைப் பார்த்து ஹதீஸ்களைத் தொகுத்த அறிஞர்கள் முஸ்னத் அஹ்மதைத் தொகுத்த போது மேலே நாம் எடுத்துக் காட்டிய ஹதீஸும் முஸ்னத் அஹ்மதில் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளனர்.
இதே அறிவிப்பாளர் தொடரின் வழியாக இதே செய்தி இப்னு அசாகிர் அவர்களின் தாரீகு திமஷ்கு நூலில் பதிவாகியுள்ளது. அங்கும் முஃமினும் பிசிஹிர் (சூனியத்தை நம்புபவன் சுவனம் செல்ல மாட்டான்) என்ற சொல் இடம்பெற்றுள்ளது.
தாரீகு திமஷ்க் அறிவிப்பைப் பாருங்கள்.
تاريخ دمشق (56/ 135)
இப்னு அஸாகிர் அவர்கள் முஸ்னத் அஹ்மதில் உள்ள ஹதீஸ் இமாம் அஹ்மது வழியாக எப்படிக் கிடைத்தது என்ற அறிவிப்பாளர் வரிசையையும் சொல்லிக் காட்டுகிறார்.
அந்த பெயர் பட்டியலைப் பாருங்கள்.
تاريخ دمشق (56/ 135)
ஒரு அச்சுப்பிரதியில் மேற்கண்ட ஹதீஸ் இல்லாமல் இருந்து மற்றொரு பிரதியில் பதிவு செய்யப்பட்டு இருந்தால் மேலே நாம் எடுத்துக் காட்டியது போன்ற பிறநூல்களின் துணை கொண்டுதான் சரியானதைக் கண்டறிய இயலும்.
அந்த வகையில் முஸ்னத் அஹ்மதின் ஒரு அச்சுப் பிரதியில் இந்த ஹதீஸ் காணப்படாவிட்டால் அதைப் பிரதி எடுத்தவர் விட்டு விட்டார் என்ற முடிவுக்கு வர மேற்கண்ட ஆதாரங்கள் பொதுமாகும்.
அடுத்து மேற்கண்ட ஹதீஸ் முஸ்னத் அஹ்மதில் இடம் பெற்றிருந்தாலும் இது பலவீனமான ஹதீஸ் என்று அடுத்த வாதத்தை வைக்கின்றனர்.
இந்த ஹதீஸில் அபூ ஜஃபர் அஸ்ஸுவைதி என்ற அறிவிப்பாளர் இடம் பெறுகிறார். இவர் நம்பகமானவர் என்றாலும் ஹதீஸ் விஷயத்தில் சந்தேகப்படக் கூடியவராக இருந்தார் என்று இவரைப்பற்றி இமாம் “அபூ தாவூத் அஸ்ஸிஜிஸ்தானி” அவர்கள் குறிப்பிடுகின்றார்கள்.
இந்த விமர்சனத்தை எடுத்துக் காட்டி இது பலவீனமான ஹதீஸ் என்று கூறுகிறார்கள்.
இவர் சந்தேகப்படக் கூடியவராக இருந்தார் என்பதை ஏறுக்கு மாறாக விளங்கிக் கொண்டு இவ்வாறு விமர்சிக்கின்றனர்..
இவரது ஹதீஸ்கள் சந்தேகத்துக்கு உரியது என்பது இதன் கருத்து அல்ல. இவர் கேள்விப்படும் ஹதீஸ்களில் சந்தேகம் எழுப்புவார் என்பதுதான் இதன் கருத்து. நூறு ஹதீஸ்களைக் கேட்டால் அந்த நூறையும் அறிவித்து விடாமல் அதில் பல சந்தேகங்களை எழுப்பி எல்லா சந்தேகங்களுக்கும் தீர்வு இருக்கும் பத்து ஹதீஸ்களைத் தான் அறிவிப்பார் என்பதுதான் இதன் கருத்து.
சிறிதளவு சந்தேகம் வந்தால் கூட இவர் எந்த ஹதீஸையும் அறிவிக்க மாட்டார். தனக்குச் சந்தேகம் இல்லாததைத்தான் அறிவிப்பார் என்ற புகழ்மாலையை இவர்கள் தலைகீழாகப் புரிந்து கொண்டார்கள்.
இவர் குறித்து அஹ்மத் பின் ஹம்பல் கூறுவதைப் பாருங்கள்
قال أبو داود: ثقة. حدثنا عَنْهُ أحمد بْن حنبل، وكان صاحب شكوك.
رجع النّاس من عند عبد الرّزّاق بثلاثين ألف حديث، ورجع بأربعة آلاف.
…இவர் ஹதீஸில் சந்தேகம் கொள்பவராக இருந்தார்; அப்துர் ரஸ்ஸாக்கிடமிருந்து மற்றவர்கள் முப்பதாயிரம் ஹதீஸ்களைப் பெற்றார்கள். ஆனால் இவர் நான்காயிரம் ஹதீஸ்களைத் தான் பெற்றார். (நூல்: தாரீக்குல் இஸ்லாம் 5/453 )
முப்பதாயிரம் ஹதீஸ்களில் இருபத்து ஆறாயிரம் ஹதீஸ்களை ஒதுக்கி விட்டு நான்காயிரம் ஹதீஸ்களை மட்டுமே எடுத்துக் கொண்டது அவரது அளவற்ற பேணுதலைக் குறிக்கிறது. மேலும் தஹபி, அபூதாவூத் சன்ஆனி ஆகியோரும் இவரை நமபகமானவர் என்று கூறியுள்ளனர்.
அடுத்து சுலைமான் பின் உத்பா என்ற அறிவிப்பாளரும் பலவீனமானவர் என்று இந்த ஹதீஸை மறுப்பவர்கள் கூறித் திரிகிறார்கள். ஆனால் இவர் பலவீனமானவர் அல்ல என்பதே உண்மை.
இவர் நம்பகமானவர் என்று பலா் நற்சான்று அறிவித்துள்ளனா். துஹைம், அபூ ஹாதிம், அபூசுா்ஆ, ஹைஸம் பின் காரிஜா, ஹிசாம் பின் அம்மார், இப்னு ஹிப்பான், இப்னுஹஜா், தஹபீ ஆகியோர் நம்பகமானவர் எனக் கூறியுள்ளனா்.
இமாம் யஹ்யா பின் மயீன் மட்டுமே இவரைக் குறை கூறியுள்ளார். அந்தக் குறை காரணம் இல்லாமல் உள்ளது. பலருக்கு மாற்றமாக இவர் ஒருவர் மட்டும் காரணம் கூறாமல் பொத்தாம் பொதுவாகக் குறை சொன்னால் அந்தக் குறை ஹதீஸ் கலையில் நிராகரிக்கப்பட்டு விடும்.
எனவே இது ஆதாரப்பூர்வமான ஹதீஸ் என்பதில் சந்தேகம் இல்லை.
சூனியத்தை நம்புபவன் என்றால் அதன் சரியான பொருளை நாம் அறிந்து கொள்ள வேண்டும். சூனியம் என்ற ஒரு பித்தலாட்டம் இருக்கிறது என்பதை நாமும் நம்புகிறோம். இந்த ஹதீஸ் அதைக் கூறவில்லை. சூனியத்தால் தாக்கம் ஏற்படும் என்று நம்புவதையே இது குறிக்கிறது.
இதே அமைப்பில் கூறப்பட்ட பின்வரும் நபிமொழியில் இருந்து இதன் பொருளை நாம் விளங்கிக் கொள்ளலாம்.
ஸைத் பின் காலித் அல்ஜுஹனீ (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “ஹுதைபியா’ எனுமிடத்தில் எங்களுக்கு சுப்ஹுத் தொழுகை தொழுவித்தார்கள்.-அன்றிரவு மழை பெய்திருந்தது.- தொழுது முடித்ததும் மக்களை நோக்கி நேராகத் திரும்பி, “உங்கள் இறைவன் என்ன கூறினான் என்பதை நீங்கள் அறிவீர்களா?” என்று கேட்டார்கள். அதற்கு மக்கள், “அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கு அறிந்தவர்கள்” என்று கூறினர். அப்போது “என்னை நம்பக் கூடியவர்களும் (என்னை) மறுக்கக் கூடியவர்களுமாக என் அடியார்கள் (இரு பிரிவினராக) உள்ளனர். “அல்லாஹ்வின் தயவாலும் அவன் கருணையாலும்தான் நமக்கு மழை பொழிந்தது’ எனக் கூறியவர்களோ என்னை நம்பி, நட்சத்திரத்தை மறுத்தவர்களாவர். இன்ன இன்ன நட்சத்திரத்தால்தான் (எங்களுக்கு மழை பொழிந்தது) எனக் கூறியவர்களோ என்னை மறுத்து, நட்சத்திரத்தை நம்பியவர்களாவர்’ என இறைவன் கூறினான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல் : (புகாரி: 1038)
இந்த ஹதீஸில் நட்சத்திரத்தில் நம்பிக்கை வைக்கக் கூடாது என்று சொல்லப்படுகின்றது. நட்சத்திரம் ஒன்று உள்ளது என்று நம்பினால் அது தவறல்ல. அதை இந்த நபிமொழி மறுக்கவில்லை. மாறாக நட்சத்திரத்தால் மழை பெய்யும் என்றும் எதிர்கால விசயங்களை அதன் மூலம் கணிக்க முடியும். அதனால் மற்றவர்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்த முடியும் என்றும் நம்புவதை இந்த ஹதீஸ் மறுக்கின்றது.
யாராவது இந்த அடிப்படையில் நட்சத்திரத்தை நம்பினால் அவன் அல்லாஹ்வை நம்பவில்லை. நட்சத்திரத்தையே ஈமான் கொண்டுள்ளான்.
இது போல் சூனியத்தை நம்பினால் சொர்க்கம் செல்ல முடியாது.
சூனியத்தால் தாக்கம் ஏற்படும் என்று சொல்பவர்களுக்கு மரண அடியாக இந்த ஹதீஸ் உள்ளது.
சூனியத்தால் பாதிப்பு ஏற்படும் என்று நம்புபவன் சொர்க்கம் செல்ல மாட்டான் என்று இந்த வாசகம் மற்ற குர்ஆன் வசனங்களுக்கு ஏற்ப மிகத் தெளிவாக அமைந்திருக்கின்றது.