சுருக்கித் தொழுவதின் சட்டம் என்ன?
சுருக்கித் தொழுவதின் சட்டம் என்ன?
கேள்வி
எனது பெயர் பைரோஸ் நான் இலங்கை நாட்டை சேர்தவன் நான் இப்போது கத்தாரில் இருக்கிறேன் எனது கேள்வி இங்கு நான் பயனிகள் தொழுவது போன்று தான் தொழ வேண்டுமா இந்த சட்டத்தை விரிவாக விளக்கவும்.
பைரோஸ் இலங்கை
பதில் :
ஒருவர் சுமார் 25 கி.மீ. தொலைவுக்குப் பயணம் செய்தால் அவர் ஜம்வு, கஸ்ர் செய்யலாம்.
கஸ்ர் தொழுகையைப் பற்றி அனஸ் (ரலி) அவர்களிடம் கேட்கப்பட்ட போது, ”நபி (ஸல்) அவர்கள் மூன்று மைலோ அல்லது மூன்று பர்ஸக் அளவோ பயணம் செய்தால் (நான்கு ரக்அத் தொழுகைகளை) இரண்டு ரக்அத்களாக (சுருக்கித்) தொழுவார்கள்” என்று பதிலளித்தனர்.
அறிவிப்பவர்: யஹ்யா பின் யஸீத்
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர், நபி (ஸல்) அவர்கள் கஸ்ர் செய்த அளவைக் குறிப்பிடும் போது மூன்று மைலோ அல்லது மூன்று பர்ஸக் அளவோ என்று ஐயத்துடன் அறிவிக்கிறார். இதில் மூன்று பர்ஸக் என்பது ஒன்பது மைல்களாகும். எனவே பேணுதலின் அடிப்படையில் கூடுதல் அளவை நாம் எடுத்துக் கொள்ள வேண்டும். அன்றைய கால மூன்று பர்ஸக் என்பது இன்றைய கால அளவின் படி சுமார் 25 கி.மீ. ஆகும்.
ஒருவர் எத்தனை நாட்கள் பயணத்தில் இருந்தால் ஜம்வு, கஸ்ர் செய்யலாம் என்பதில் நபி (ஸல்) அவர்கள் வரையறை எதுவும் கூறவில்லை. எனவே இத்தனை நாள் தங்கினால் மட்டுமே கஸ்ர் செய்ய வேண்டும்; அதற்கு மேல் தங்கினால் கஸ்ர் செய்யக் கூடாது என்று கூறுவதற்கு மார்க்கத்தில் யாருக்கும் அதிகாரம் இல்லை.
நபி (ஸல்) அவர்கள் (மக்காவில்) பத்தொன்பது நாட்கள் தங்கினார்கள். அந்நாட்களில் கஸ்ர் செய்தார்கள். நாங்களும் பத்தொன்பது நாட்களுக்குப் பிரயாணம் செய்தால் கஸ்ர் செய்வோம். அதிகமானால் முழுமையாகத் தொழுவோம்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
இந்த ஹதீஸில் நபி (ஸல்) அவர்கள் பத்தொன்பது நாட்கள் தான் கஸ்ராகத் தொழுதுள்ளார்கள் என்பதால் அதற்கு மேல் தங்குபவர்கள் முழுமையாகத் தொழ வேண்டும் என்று சிலர் வாதிடுகின்றனர். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் கூற்றை இதற்கு ஆதாரமாகக் காட்டுகின்றனர்.
ஆனால் பத்தொன்பது நாட்களுக்கு மேல் முழுமையாகத் தொழுவோம் என்பது இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் சொந்தக் கூற்றாகவே கூறப்பட்டுள்ளது.
நபி (ஸல்) அவர்கள் வெளியூரில் அதிகப்பட்சமாகத் தங்கியது பத்தொன்பது நாட்கள்; அவர்கள் தங்கிய அத்தனை நாட்களிலும் சுருக்கித் தொழுதுள்ளார்கள் என்பதைத் தான் இந்த ஹதீஸிலிருந்து விளங்க முடியும்.
அதற்கு மேல் தங்கினால் சுருக்கித் தொழக் கூடாது என்றால் அதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விளக்கியிருப்பார்கள். அவ்வாறு வரையறை எதையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறாததிருந்து, இதற்குக் காலவரை இல்லை என்பதை அறியலாம். எனவே வெளிநாட்டில் இருக்கும் நீங்கள் இந்த சலுகையை பயன்படுத்தி நான்கு ரக்அத் தொழுகைகளை சுருக்கி இரண்டு ரக்அத்களாக தொழுதால் அதில் தவறில்லை.
அதே சமயம் வெளியூரில் தங்குபவர்கள் சுருக்கித் தொழுவது கட்டாயமில்லை. ஒருவர் விரும்பினால் முழுமையாகத் தொழுவதற்கும் அனுமதியுள்ளது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
நான் நபி (ஸல்) அவர்களுடன் மதீனாவிலிருந்து மக்கா நோக்கி உம்ரா செய்யப் புறப்பட்டேன். நான் மக்காவை அடைந்த போது, ”அல்லாஹ்வின் தூதரே! எனது தாயும், தந்தையும் உங்களுக்கு அர்ப்பணமாகட்டும். நீங்கள் கஸ்ர் செய்கிறீர்கள்; நான் முழுமையாகத் தொழுகிறேன். நீங்கள் நோன்பு நோற்கவில்லை; நான் நோன்பு நோற்கிறேன்” என்று நான் கேட்ட போது ”ஆயிஷாவே! சரியாகச் செய்தாய்!” என்றார்கள். என்னைக் குறை காணவில்லை.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: நஸயீ 1439