சுயமரியாதை போதித்த பகுத்தறிவு மார்க்கம்

பயான் குறிப்புகள்: பொதுவான தலைப்புகள் - 2

கண்ணியத்திற்குரிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அருளும், அன்பும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன்.

இறைவன் இந்த உலகத்தைப் படைத்து, கோடிக்கணக்கான மனிதர்களை பல்கிப் பரவச் செய்திருக்கின்றான். இந்த உலகத்தில் ஏராளமான உயிர்கள் இறைவனால் படைக்கப்பட்டிருந்தாலும், பகுத்தறிவு என்ற சிந்தனை அறிவு மனிதர்களைத் தவிர வேறு எந்தப் படைப்புக்கும் வழங்கப்படவில்லை.

மேலும், மனிதர்களை விட பிரம்மாண்டமான உடலமைப்பு கொண்ட உயிரினங்களும், மனிதர்களை விட ஆற்றல் பெற்ற உயிரினங்களும் இந்த உலகத்தில் படைக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், எத்தனை பெரிய ஆற்றலும், பிரம்மாண்டமும் இறைவனால் பிற உயிரினங்களுக்கு வழங்கப்பட்டிருந்தாலும், மனிதர்களுக்கு வழங்கப்பட்டிருகின்ற சிந்தனை அறிவின் காரணத்தினால் எல்லா உயிரினங்களையும் விட மனிதர்களே படைப்பில் சிறந்தவர்கள்!

இத்தகைய சிறப்பு வாய்ந்த படைப்பாய் கருதப்படுகின்ற மனித குலத்துக்கு இறைவன் ஏராளமான குணநலன்களை வழங்கி வாழச் செய்து கொண்டிருக்கின்றான். இறைவன் மனிதர்களுக்கு வழங்கியிருக்கின்ற குணங்களில், பல நற்குணங்களும் நிறைந்து கிடக்கின்றன. மேலும், மனிதர்களை சோதிப்பதற்காக சில தீய குணங்களையும் இறைவன் வழங்கியிருக்கின்றான்.

இறைவன் மனிதர்களுக்கு வழங்கியிருக்கின்ற மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த, சிறப்பிற்குரிய, கண்ணியத்தைப் பெற்றுத் தருகின்ற குணநலன்களில் ஒன்று சுயமரியாதை. சுயமரியாதை என்பது ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் இன்றியமையாத, அவசியம் கடைப்பிடிக்க வேண்டிய பண்பாக சுயமரியாதையை இழந்து இந்த உலகத்தில் வாழ்வதென்பது படுமோசமான வாழ்க்கையாகக் கருதப்படும். பிற மக்களால் எள்ளி நகையாடக்கூடிய, கேலி கிண்டலுக்கு உள்ளாகக்கூடிய வாழ்க்கையாக மாறிவிடும்.

மக்கள் மரியாதையின்றி நடத்தக்கூடிய அவல நிலைக்கு அவர்கள் தள்ளப்படுவார்கள். இதுபோன்ற ஏராளமான காரணங்களுக்காகத் தான் எந்த மதமும், சித்தாந்தமும், மார்க்கமும், கோட்பாடும் கற்றுத் தராத அற்புதமான வாழ்க்கைப் பாடத்தை இஸ்லாமிய மார்க்கம் அகில உலக மக்களுக்கும் சுயமரியாதையின் முக்கியத்துவத்தைப் பற்றி போதிக்கின்றது.

ஒரு மனிதன் சுயமரியாதையோடு வாழ்கின்ற காரணத்தினால் மட்டும் தான், வெட்க உணர்வோடும், தன்மானத்தோடும், மரியாதையோடும் வாழ முடியும் என்பதை ஆணித்தரமாகவும், அழுத்தந்திருத்தமாகவும் அனைத்து மக்களின் உள்ளங்களிலும் ஆழமாக இஸ்லாமிய மார்க்கம் பதிய வைக்கின்றது. அவ்வாறு இஸ்லாமிய மார்க்கம் போதிக்கின்ற சுயமரியாதைப் பற்றியும் அதன் முக்கியத்துவத்தைதைப் பற்றியும் இந்த உரையில் காண்போம். 

தன்மானத்தைக் காப்பாற்றும் சுயமரியாதை

சுயமரியாதை என்பது ஒரு மனிதனின் தன்மானத்தைக் காக்கும் கேடயமாக இருக்கின்றது. யார் சுயமரியாதையை இழந்து விடுகின்றாரோ, அவர் தன்மானத்தை இழந்து விடுவதற்குச் சமம் என்று இஸ்லாம் ஆழப்பதிய வைக்கின்றது.

திருக்குர்ஆனை விளக்க வந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சுயமரியாதைக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து, தன்னுடைய வாழ்க்கையில் வாழ்ந்ததோடு மட்டுமல்லாமல், தன்னுடைய தொண்டர் படையினர்களுக்கும், தோழர்களுக்கும் பாடம் நடத்திப் பறைசாற்றியிருக்கின்றார்கள்.

اليَدُ العُلْيَا خَيْرٌ مِنَ اليَدِ السُّفْلَى، وَابْدَأْ بِمَنْ تَعُولُ، وَخَيْرُ الصَّدَقَةِ عَنْ ظَهْرِ غِنًى، وَمَنْ يَسْتَعْفِفْ يُعِفَّهُ اللَّهُ، وَمَنْ يَسْتَغْنِ يُغْنِهِ اللَّهُ

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உயர்ந்த (கொடுக்கும்) கை, தாழ்ந்த (வாங்கும்) கையைவிடச் சிறந்தது. நீர் நெருங்கிய உறவினர்களிலிருந்து தர்மம் செய்ய ஆரம்பிப்பீராக! தேவை போக எஞ்சியதைக் கொடுப்பதே சிறந்த தர்மமாகும்.

யார் (பிறரிடம் கையேந்தாமல்) சுயமரியாதையுடன் இருக்கிறானோ அவனை அல்லாஹ்வும் அவ்வாறே ஆக்குகிறான். யார் அல்லாஹ்விடத்தில் தன்னைப் பிறரிடம் தேவையற்றவனாக ஆக்க வேண்டுமென வேண்டினானோ அவனை அல்லாஹ் பிறரிடம் தேவையற்றவனாக ஆக்கிவிடுவான்.

ஆதாரம்: (புகாரி: 1427) 

சுயமரியாதையோடு வாழ்வது தான், படைத்த இறைவனுக்கு விருப்பமானது என்றும், சுயமரியாதையோடு வாழ்பவரை இறைவன் சுயமரியாதையோடு வாழச் செய்கின்றான் என்றும் அற்புதமான முறையில் பாடம் நடத்துகின்றார்கள்.

أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ وَهُوَ عَلَى المِنْبَرِ، وَذَكَرَ الصَّدَقَةَ، وَالتَّعَفُّفَ، وَالمَسْأَلَةَ: ” اليَدُ العُلْيَا خَيْرٌ مِنَ اليَدِ السُّفْلَى، فَاليَدُ العُلْيَا: هِيَ المُنْفِقَةُ، وَالسُّفْلَى: هِيَ السَّائِلَةُ

மேலும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நபி (ஸல்) அவர்கள் சொற்பொழிவு மேடை (மிம்பர்) மீதேறி, தர்மம், சுயமரியாதை, யாசகம் ஆகியவற்றைப் பற்றி உபதேசம் செய்துவிட்டு “உயர்ந்த கை தாழ்ந்த கையைவிடச் சிறந்ததாகும்; உயர்ந்த கை என்பது தர்மம் செய்யக்கூடியது; தாழ்ந்த கை என்பது யாசிக்கக் கூடியது’’ என்றும் கூறினார்கள்.

ஆதாரம்: (புகாரி: 1429)

இந்த செய்தியை நன்றாகப் படித்துப் பாருங்கள்! தன்னுடைய மக்களுக்கு உபதேசம் செய்யும் போது, சுயமரியாதையை எந்த அளவுக்கு மனிதன் கடைப்பிடிக்க வேண்டும் என்பதைப் பற்றியும், முக்கியத்துவம் வாய்ந்த பண்பாகவும் வைத்து உபதேசிக்கின்றார்கள்.

மேலும் யாசகம், கையேந்துதல் போன்ற பண்புள்ளவர்களுக்கு அழகான முறையில் அறிவுரை பகர்கின்றார்கள். இன்றைய காலத்தில் மரியாதையை இழந்து பிறரிடத்தில் யாசகம் கேட்கும் மோசமான செயலைச் செய்து வருவதைப் பார்க்கின்றோம். அத்தகைய குணம் படைத்தவர்களின் சிந்தனையைத் தட்டி எழுப்பும் விதமாக, ஆழமான கருத்தாக சுயமரியாதையைப் பேணுங்கள் என்ற முக்கியமான அறிவுரையை எடுத்துரைக்கின்றார்கள்.

வயிற்றுப் பசிக்கு விறகு வெட்டுவது சிறந்தது

இன்றைய நவீன காலத்தில் யாசகம் கேட்பவர்கள், உழைத்து உண்ணுபவர்களை விட பணவசதி படைத்தவர்களாக வலம் வருகின்றார்கள். எந்தளவிற்கு என்றால், பிறரிடத்தில் யாசகம் கேட்டுக் கேட்டே பல இலட்சங்களையும், கோடிகளையும் சேமித்து வைத்த எத்தனையோ நபர்களைப் பார்க்கின்றோம். இதுபோன்ற செயலில் ஈடுபடுபவர்களுக்கும், தேவைக்கு அதிகமாக யாசகம் கேட்டு, அதையே பிழைப்பாகக் கொண்டவர்களுக்கும் இஸ்லாமிய மார்க்கம் அழகிய போதனையை எடுத்துச் சொல்கின்றது.

لَأَنْ يَغْدُوَ أَحَدُكُمْ، فَيَحْطِبَ عَلَى ظَهْرِهِ، فَيَتَصَدَّقَ بِهِ وَيَسْتَغْنِيَ بِهِ مِنَ النَّاسِ، خَيْرٌ لَهُ مِنْ أَنْ يَسْأَلَ رَجُلًا، أَعْطَاهُ أَوْ مَنَعَهُ ذَلِكَ، فَإِنَّ الْيَدَ الْعُلْيَا أَفْضَلُ مِنَ الْيَدِ السُّفْلَى، وَابْدَأْ بِمَنْ تَعُولُ

அல்லாஹ்வின் தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் காலையில் ஒரு கயிற்றை எடுத்துக்கொண்டு (சென்று), விறகு வெட்டி அதைத் தமது முதுகில் சுமந்து (விற்றுப் பிழைத்து), மக்களிடம் கையேந்தாமல் தன்னிறைவுடன் (சுயமரியாதையுடன்) வாழ்வதும் அதைத் தர்மம் செய்வதும், ஒரு மனிதனிடம் யாசிப்பதைவிடச் சிறந்ததாகும். அவருக்கு அவன் கொடுத்தாலும் சரி; மறுத்தாலும் சரி. மேலிருக்கும் கை, கீழிருக்கும் கையைவிடச் சிறந்ததாகும்.

ஆதாரம்: (முஸ்லிம்: 1884) 

சுயமரியாதையை ரத்தினச் சுருக்கமாக, சிறு குழந்தைகளின் உள்ளத்தில் கூட ஆழமாகப் பதிய வைக்கின்ற அளவுக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பாடம் நடத்துகின்றார்கள்.

பிறரிடத்தில் யாசிக்காதே! அவ்வாறு யாசிக்க நேரிட்டால் சிரமப்பட்டு முதுகிலே விறகு சுமந்து, அதை விற்றுப் பிழைத்த பொருளாதாரத்தில் உணவு உட்கொள்.

மேலும், வாங்குகின்ற கையை விட, கொடுக்கும் கை தான் சிறந்தது என்று ஒட்டுமொத்த சுயமரியாதையின் அம்சத்தையும் ஒரே வார்த்தையில் சாறு பிழிந்து வழங்குகின்றார்கள். எனவே, நாம் யாரிடமும் கையேந்தாமல் சுயமரியாதையோடு வாழ முயற்சி செய்ய வேண்டும்.

புரோகிதத்தின் பெயரால் சுயமரியாதை இழப்பு

இன்றைய நவீன காலத்தில் மனிதர்களின் அறிவின் வளர்ச்சி காண்போரை வியக்க வைக்கின்றது. ஏராளமான புதிய புதிய கண்டுபிடிப்புகளைக் கண்டுபிடித்து ஆச்சரியப்பட வைக்கின்றான். இப்படிப்பட்ட அறிவியலின் உச்சத்திற்குச் சென்ற மனிதன், மதம் என்று வந்துவிட்டால் தன்னிலை மறந்தவனாக சுயமரியாதையை குழிதோண்டிப் புதைத்து விடுகின்றான்.

இந்த இருபதாம் நூற்றாண்டில் அதிபயங்கரமான, அசர வைக்கின்ற கண்டுபிடிப்புகளைக் கண்டுபிடித்து, அறிவை கன கச்சிதமாகப் பயன்படுத்துகின்ற மனிதர்கள், மதத்தின் பெயரால், வழிபாட்டின் பெயரால், மதகுருமார்களின் பெயரால், சாமியார்களின் பெயரால் சுயமரியாதையை இழந்து, பகுத்தறிவு  உள்ள மனிதனா இவன் என்று கேட்கின்ற அளவுக்குத் தள்ளப்படுகின்றான். இத்தகைய குணம் படைத்த மனிதனின் நிலையை என்னவென்பது?

மேலும், மதகுருமார்கள் என்பவர்கள் மக்களை ஏமாற்றி முட்டாள்களாகவும், படுபாதாளத்தில் தள்ளி விடுபவர்களாகவும், மரியாதையை இழக்கச் செய்கின்ற செயலைத் தூண்டி விடுபவர்களாகவும் இருக்கின்றார்கள்.

கடவுளின் நேசத்தைப் பெற வேண்டுமா? கடவுளின் அன்பைப் பெற வேண்டுமா? கடவுள் உன்னைக் கண் திறந்து பார்க்க வேண்டுமா? கடவுள் உன்னுடைய கஷ்டத்தைப் போக்க வேண்டுமா? நான் உனக்கு ஒரு வழியை திறந்து வைக்கின்றேன் என்ற பெயரால் மதகுருமார்களின் அட்டூழியம், அராஜகம் கோரத்தாண்டவமாடிக் கொண்டிருக்கின்றது.

கடவுளின் நேரடிக் கண்காணிப்பில், கடவுளின் நேசத்திற்குரியவனாக இருக்கின்ற எனக்குப் பணிவிடை செய்யுங்கள்! நான் கேட்பதையெல்லாம் அன்பளிப்பாக வழங்குங்கள்! என்னுடைய காலில் விழுங்கள்! என்னுடைய காலில் உள்ள புனிதத்தை கழுவிக் குடியுங்கள் என்பது போன்ற பல்வேறு செயல்களைச் செய்ய வைத்து தன்னைக் கடவுளின் அந்தஸ்துக்குக் கொண்டு போய் சேர்க்கின்றனர். அப்பாவி மூட பக்தர்கள் சிலர் தெரிந்தும், சிலர் தெரியாமலும் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு சுயமரியாதைக்கு வேட்டு வைக்கின்றனர். சுயமரியாதையைக் காலில் போட்டு மிதிக்கின்றனர்.

எந்த மதமும், எந்த மதத் தலைவரும் சொல்லாத அற்புதமான சொல்லாடலை அகில உலகத்திற்கும் பேரருட்கொடையாக அனுப்பப்பட்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், தான் இறைவனின் எப்படிப்பட்ட தூதர் என்பதை இரத்தினச் சுருக்கமாகப் பதிய வைக்கின்றார்கள்.

நபிகள் நாயகத்தைப் பற்றி இறைவன் திருக்குர்ஆனில் கூறும்போது;

قُلْ اِنَّمَاۤ اَنَا بَشَرٌ مِّثْلُكُمْ يُوْحٰٓى اِلَىَّ اَنَّمَاۤ اِلٰهُكُمْ اِلٰـهٌ وَّاحِدٌ فَاسْتَقِيْمُوْۤا اِلَيْهِ وَاسْتَغْفِرُوْهُ‌ ؕ وَوَيْلٌ لِّلْمُشْرِكِيْنَ ۙ‏

“நான் உங்களைப் போன்ற மனிதன் தான். உங்கள் இறைவன் ஒரே இறைவனே என்று எனக்கு தூதுச் செய்தி அறிவிக்கப்படுகிறது. எனவே அவனிடம் உறுதியாக இருங்கள்! அவனிடம் மன்னிப்புத் தேடுங்கள்! இணை கற்பிப்போருக்குக் கேடுதான் இருக்கிறது’’ என்று (முஹம்மதே!) கூறுவீராக!

(அல்குர்ஆன்: 41:6)

قُلْ اِنَّمَاۤ اَنَا بَشَرٌ مِّثْلُكُمْ يُوْحٰٓى اِلَىَّ اَنَّمَاۤ اِلٰهُكُمْ اِلٰـهٌ وَّاحِدٌ‌  ۚ فَمَنْ كَانَ يَرْجُوْالِقَآءَ رَبِّهٖ فَلْيَـعْمَلْ عَمَلًا صَالِحًـاوَّلَايُشْرِكْ بِعِبَادَةِ رَبِّهٖۤ اَحَدًا‏

“நான் உங்களைப் போன்ற மனிதன் தான். (எனினும்) உங்கள் கடவுள் ஒரே ஒரு கடவுளே என எனக்கு அறிவிக்கப்படுகிறது. தமது இறைவனின் சந்திப்பை எதிர்பார்ப்பவர் நல்லறத்தைச் செய்யட்டும்! தமது இறை வணக்கத்தில் எவரையும் இணைகற்பிக்காது இருக்கட்டும்’’ என்று (முஹம்மதே!) கூறுவீராக!

(அல்குர்ஆன்: 18:110)

இந்த இரண்டு வசனங்களையும் ஆழ்ந்த சிந்தனையோடு படித்துப் பாருங்கள்! திருக்குர்ஆன் புரோகிதத்தின் பெயரால் ஏமாற்றப்படுகின்ற அத்தனை வாசல்களையும் அடைக்கின்றது.

உலகில் எந்த இடத்திலும் சிலை வைக்கப்படாத, முகநூல், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் பின்பற்றப்படுவதற்கு எந்தப் பக்கமும் இல்லாதவர் முஹம்மத் நபி (ஸல்) அவர்கள். ஆனால் கோடான கோடி மக்களின் உள்ளங்களில் தங்களின் உயிரை விட மேலாக மதிக்கத்தக்கவர். தங்களின் வாழ்க்கையில் முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் வழிகாட்டித் தந்த வாழ்க்கைப் பாடத்தை அச்சுப் பிசகாமல் பின்பற்றி நடப்பவர்கள் கோடிக்கணக்கானோர்.

இத்தகைய பெருமதிப்பிற்கும், மரியாதைக்கும் உரிய முஹம்மத் நபி (ஸல்) அவர்களே ‘நான் மனிதன் தான்’ என்று ஒரே போடாகப் போட்டு உடைக்கின்றார்கள் என்றால் மற்ற மதகுருமார்களெல்லாம் இவர்களின் கால் தூசு அளவுக்குக் கூட வருவார்களா?

நான் மனிதன் தான்; எனக்கும், உங்களுக்கும் உள்ள ஒரே வேறுபாடு இறைவனிடமிருந்து செய்தியைப் பெற்று உங்களுக்கு நான் பாடம் நடத்துகின்றேன். இந்த ஒரு அம்சத்தைத் தாண்டி வேறு ஒன்றும் இல்லை என்பதை ஆணித்தரமாகப் பதிய வைக்கின்றார்கள்.

நான் மனிதன் தான் என்ற வார்த்தைப் பிரயோகத்திலிருந்தே, மனிதனுக்கு இருக்கின்ற அத்தனை பலவீனங்களும் எனக்கும் உண்டு; தனிப்பட்ட முறையில் எந்த மிகப்பெரும் சக்தியும், ஆற்றலும் எனக்கில்லை என்பதை உலகிற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பறைசாற்றுகின்றார்கள்.

காலில் விழுந்து சுயமரியாதை இழத்தல்

மனிதனை மனிதனாகப் பார்க்க வேண்டும். ஆனால் இன்றைக்குத் தன்னுடைய காலத்தில் வாழ்கின்ற அல்லது வாழ்ந்து மறைந்த சிலரை, மனிதர்கள் என்ற பார்வையில் அணுகாமல் புனிதர்களாகக் கருதுகின்றார்கள்.

கணவனின் காலில் மனைவி விழுகின்றாள். அதிகாரம் படைத்தவனின் காலில் பாமரன் விழுகின்றான். பணக்காரனின் காலில் ஏழை விழுகின்றான். தாய், தந்தையரின் காலில் பிள்ளைகள் விழுகின்றார்கள்.

சாதாரண மலஜலத்தைச் சுமந்து கொண்டிருக்கின்ற, இயற்கைத் தேவைகளை நிறைவேற்றக் கூடிய, உணவு உண்ணுகின்ற, உறங்குகின்ற, தாகம் எடுக்கின்ற, நோய் ஏற்பட்டால் மருத்துவரை அணுகுகின்ற, உச்சகட்ட நோய் ஏற்பட்டால் அறுவை சிகிச்சை செய்து கொள்கின்ற, மரித்துப் போகின்ற இது போன்ற ஏராளமான மனிதப் பண்புகள் அடங்கிய, மனிதனுக்கு இருக்கின்ற அத்துணை பலவீனத்தையும் உள்ளடக்கியிருக்கின்ற மதகுருமார்களை, மனிதப் படைப்பைத் தாண்டி கடவுளின் அந்தஸ்துக்கு நிகராக்குகின்றார்கள்.

பல்வேறு பலவீனத்தை கொண்டிருக்கின்ற, சகமனிதர்களின் காலில் விழுவதைக் காட்டிலும் சுயமரியாதைக்கு இழுக்கு ஏற்படுத்துகின்ற ஒரு செயலைக் காட்ட முடியுமா? காலில் விழுவதென்பது சுயமரியாதைக்கு ஏற்படுகின்ற அவமானம். வெட்கித் தலைகுனிய வைக்கின்ற செயல். பகுத்தறிவை குழிதோண்டிப் புதைக்கின்ற செயல்.

கடுமையாகப் பார்க்கப்பட வேண்டிய இந்தச் செயலை சர்வ சாதாரணமாக பாமர மக்களும், படித்த மக்களும், அறிவிற் சிறந்தவர்களும், குறைமதி உள்ளவர்களும் செய்து வருவதைப் பார்க்கின்றோம். இந்தச் செயலை இஸ்லாமிய மார்க்கம் வன்மையாகக் கண்டிப்பதோடு மட்டுமல்லாமல், சுயமரியாதைக்கு இழுக்கு ஏற்படுத்தும் செயலாகப் பார்க்கின்றது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உலகிற்கு எவ்வளவு அற்புதமான கலாச்சாரத்தை, சுய மரியாதைக்குக் கண்ணியம் சேர்க்கின்ற காரியத்தைக் கற்றுத் தருகின்றார்கள் என்பதற்கு இது ஒரு அற்புதமான சான்று.

عَنْ أَنَسٍ قَالَ:
«مَا كَانَ شَخْصٌ أَحَبَّ إِلَيْهِمْ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَكَانُوا إِذَا رَأَوْهُ لَمْ يَقُومُوا لِمَا يَعْلَمُونَ مِنْ كَرَاهِيَتِهِ لِذَلِكَ»

நாங்கள் ஒரு அவையில் அமர்ந்திருப்போம். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அங்கு வருவார்கள். அவர்களின் வருகைக்காக நாங்கள் யாருமே எழுந்து நிற்க மாட்டோம். இப்படி எழுந்து நிற்பதை அவர்கள் தடை செய்து இருக்கின்றார்கள். மேலும் எழுந்து நிற்பதை அவர்கள் விரும்பவும் மாட்டார்கள் என்பதே இதற்கு காரணம்.

ஆதாரம்: (அஹ்மத்: 12345) (6545)

عنْ قَيْسِ بْنِ سَعْدٍ، قَالَ
أَتَيْتُ الْحِيرَةَ فَرَأَيْتُهُمْ يَسْجُدُونَ لِمَرْزُبَانٍ لَهُمْ فَقُلْتُ: رَسُولُ اللَّهِ أَحَقُّ أَنْ يُسْجَدَ لَهُ، قَالَ: فَأَتَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقُلْتُ: إِنِّي أَتَيْتُ الْحِيرَةَ فَرَأَيْتُهُمْ يَسْجُدُونَ لِمَرْزُبَانٍ لَهُمْ فَأَنْتَ يَا رَسُولَ اللَّهِ أَحَقُّ أَنْ نَسْجُدَ لَكَ، قَالَ: «أَرَأَيْتَ لَوْ مَرَرْتَ بِقَبْرِي أَكُنْتَ تَسْجُدُ لَهُ؟» قَالَ: قُلْتُ: لَا، قَالَ: «فَلَا تَفْعَلُوا، لَوْ كُنْتُ آمِرًا أَحَدًا أَنْ يَسْجُدَ لِأَحَدٍ لَأَمَرْتُ النِّسَاءَ أَنْ يَسْجُدْنَ لِأَزْوَاجِهِنَّ لِمَا جَعَلَ اللَّهُ لَهُمْ عَلَيْهِنَّ مِنَ الْحَقِّ»

நான் ஹியரா நகருக்கு சென்றேன். அங்குள்ளவர்கள் தமது தலைவருக்குச் சிரம் பணிந்து கும்பிடுவதைப் பார்த்தேன். “இவ்வாறு சிரம் பணிவதற்கு நபிகள் நாயகமே அதிகத் தகுதியுடையவர்கள்” என்று (என் மனதுக்குள்) கூறிக் கொண்டேன். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து “நான் ஹியரா என்னும் ஊருக்குச் சென்றேன். மக்கள் தமது தலைவருக்குச் சிரம் பணிவதைக் கண்டேன். நாங்கள் சிரம் பணிந்திட நீங்களே அதிகம் தகுதியுடையவர்” என்று கூறினேன்.

அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் “(எனது மரணத்திற்கு பின்) எனது அடக்கத்தலத்தைக் கடந்து செல்ல நேர்ந்தால் அதற்கும் சிரம் பணிவீரோ?” எனக் கேட்டார்கள். “மாட்டேன்” என்று நான் கூறினேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) “ஆம்” அவ்வாறு செய்யக் கூடாது என்று கூறினார்கள்.

ஆதாரம்: (அபூதாவூத்: 2140) (1828)

இந்தச் செய்தியை நன்றாக ஆழமாக படித்துப் பாருங்கள்! யார் இவர்? சாதாரண மனிதரா? ஒரு நாட்டின் தளபதி! ஜனாதிபதி! குடியரசுத்தலைவர்! அதிபர்! பிரதமர்! இப்படி அனைத்துப் பதவிகளுக்கும் சொந்தக்காரர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள். இன்னும் சொல்வதாக இருந்தால் அப்பழுக்கற்ற வாழ்க்கைக்குச் சொந்தக்காரர்! ஒழுக்கசீலர்! உண்மையாளர்! நம்பிக்கைக்குரியவர்! நாணயமிக்கவர்! இப்படிப் பலதரப்பட்ட நற்குணங்களை உடையவர்.

இப்படிப்பட்ட நற்குணத்திற்கு சொந்தக்காரரான நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு சாஷ்டாங்கம் செய்ய அதிகத் தகுதியும், நியாயமும் இருக்கின்றது. ஆனால் காலில் விழுவதை அவர்கள் விரும்பவில்லை; மாறாக வெறுத்திருக்கின்றார்கள்.

அண்ணலார் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உலக மக்களுக்குச் சொன்ன கட்டளை என்னவென்றால், சிரம் பணிதல் என்ற காரியத்தை, எனக்கு மட்டுமல்ல; உலகத்தில் இருக்கின்ற யாருக்கும் செய்யக் கூடாது என்பதை வலியுறுத்தி எச்சரிக்கையாகப் பதிய வைத்திருக்கின்றார்கள்.

மேலும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்களுக்குத் தொழுகை நடத்துகின்ற தலைவராக இருந்தார்கள். அவர்களுடைய கடைசி காலகட்டத்தில் நிகழ்ந்த அற்புதமான சம்பவத்தை எண்ணிப் பார்த்தால், சுயமரியாதைக்கு எந்தளவிற்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கின்றார்கள் என்பதை அறிந்து கொள்ளலாம்.

 عَنْ عَائِشَةَ، قَالَتْ
اشْتَكَى رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَدَخَلَ عَلَيْهِ نَاسٌ مِنْ أَصْحَابِهِ يَعُودُونَهُ، فَصَلَّى رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ جَالِسًا، فَصَلَّوْا بِصَلَاتِهِ قِيَامًا فَأَشَارَ إِلَيْهِمْ: أَنِ اجْلِسُوا فَجَلَسُوا ” فَلَمَّا انْصَرَفَ قَالَ: «إِنَّمَا جُعِلَ الْإِمَامُ لِيُؤتَمَّ بِهِ فَإِذَا رَكَعَ فَارْكَعُوا وَإِذَا رَفَعَ فَارْفَعُوا وَإِذَا صَلَّى جَالِسًا فَصَلُّوا جُلُوسًا

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (குதிரையிலிருந்து விழுந்ததால்) உடல் நலிவுற்றர்கள். அப்போது அவர்களுடைய தோழர்களில் சிலர் அவர்களை உடல்நலம் விசாரிக்க வந்தனர். அப்போது (தொழுகை நேரம் வந்துவிடவே) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உட்கார்ந்தபடி தொழுவித்தார்கள். மக்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குப் பின்னால் நின்றவாறு தொழுதனர். உடனே உட்கார்ந்து தொழுமாறு அவர்களை நோக்கி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சைகை செய்தார்கள்.

தொழுது முடித்ததும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “இமாம் பின்பற்றப்படுவதற்காகவே ஏற்படுத்தப்பட்டுள்ளார். எனவே, அவர் குனிந்(து ருகூஉசெய்)தால் நீங்களும்  குனியுங்கள். அவர் (ருகூஉவிலிருந்து தலையை) உயர்த்தினால் நீங்களும் (தலையை) உயர்த்துங்கள். அவர் உட்கார்ந்தவாறு தொழுதால் நீங்களும் உட்கார்ந்தவாறே தொழுங்கள்’’ என்று கூறினார்கள்.

ஆதாரம்: (முஸ்லிம்: 699) 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உடல் நலிவுற்ற நிலையில் உட்கார்ந்தவர்களாக தொழுகை நடத்துகின்றார்கள். மக்களெல்லாம் நின்ற நிலையில் தொழுவதைப் பார்த்து விட்டு, சுயமரியாதையைத் தூக்கி நிறுத்துகின்ற உபதேசத்தை எடுத்துச் சொல்கின்றார்கள். இதுபோன்ற ஏராளமான செய்திகள் சுயமரியாதையை முக்கியத்துவம் வாய்ந்த பண்பாக இஸ்லாம் வலியுறுத்துகின்றன.

பகுத்தறிவு வழங்கப்பட்டவர்கள், பிறர் காலில் விழலாமா?

சிந்தனைத்திறனைப் பெற்றிருக்கின்ற யாராக இருந்தாலும் சகமனிதர்களின் காலில் விழுவதையும், விழப்படுவதையும் வெறுப்பார்கள். அப்படித்தான் இஸ்லாமிய மார்க்கம் கற்றுத்தருகின்றது. பிறப்பின் அடிப்படையில் அனைவரும் சமமே! பிறகு ஏன் சக மனிதர்களின் காலில் விழுகின்றீர்கள்?

ஒரு மனிதன் அந்தஸ்தைப் பெற்று விட்டாலோ, உயர் பதவியில் இருந்தாலோ, மதகுருவாக இருந்தாலோ அவனது காலில் அந்தஸ்தில் குறைந்த மனிதன் விழுகின்றான். இரண்டு நபர்களுக்கும் உள்ள வேறுபாடு என்ன? அரசியல் தலைவர்களின் கால்களிலும், பண வசதி படைத்தவர்களின் கால்களிலும் விழுந்து சுயமரியாதையை இழக்கின்றார்கள். ஏன்?

போட்டி, பொறாமை, ஆசை, பேராசை, பசி, பதவியைப் பெறுதல், பொருளாதாரத்தின் மீது மோகம் என்ற இதுபோன்ற ஏராளமான பலவீனங்கள், யார் காலில் விழுகின்றோமோ அவர்களுக்கும் இருக்கின்றது. பிறகு எதற்காகக் காலில் விழுந்து மரியாதை செய்கின்றீர்கள்?

யாருடைய கால்களுக்கு பாதபூஜை செய்கின்றீர்களோ அத்தகைய மனிதனும் மலம், ஜலத்தை சுமந்து கொண்டுதான் வாழ்கின்றான். அத்தகைய மனிதர்களுக்கு பாதபூஜை செய்யலாமா? இதுபோன்று சக மனிதர்களின் காலில் விழுவது சுயமரியாதையை குழிதோண்டிப் புதைப்பதாக இல்லையா?

முடிவுரை

மனிதனை மனிதனாகப் பாருங்கள்! காலில் விழுவதோ, கால்களை கழுவிக் குடிப்பதோ, கைகளில் முத்தம் கொடுப்பதோ, கைகட்டி நிற்பதோ, தலைகுனிந்து வணங்குவதோ இதுபோன்ற சுயமரியாதையை பாதிக்கச் செய்து, தன்மானத்தை இழக்கச் செய்கின்ற எந்தச் செயலாக இருந்தாலும், அப்படிப்பட்ட இழிசெயலை ஒருபோதும் நான் செய்ய மாட்டேன். எந்தச் சூழல் வந்தாலும் யாருக்கும் அடிபணிந்து நின்று, யாருடைய கால்களிலும் விழ மாட்டேன்!

படைத்த இறைவனுக்கு மட்டுமே சிரம்பணிவேன்! படைத்த இறைவனின் சன்னிதானத்தில் மட்டுமே வீழ்ந்து கிடப்பேன் என்ற சபதத்தை ஆழமாக உள்ளத்தில் ஏந்தியவர்களாக வாழ்க்கைப் பயணத்தை சிறப்பாக்குவோம்! சுயமரியாதையைப் பேணுவோம்! தன்மானம் காப்போம்! அல்லாஹ் அப்படிப்பட்ட நன் மக்களாக நம் அனைவரையும் ஆக்கி அருள் புரிவனாக.!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹு.