5) சுயமரியாதை இழத்தல்
4. சுயமரியாதைக்குப் பங்கம் ஏற்படுத்துதல்
கடவுளை நம்பி அவனை வழிபடச் சொல்லும் மதவாதிகள் படிப்படியாக தங்களையும் கடவுள் தன்மை பெற்றவர்கள் என அப்பாவிகளை நம்ப வைத்து, மக்களைத் தங்களின் கால்களில் விழுந்து வழிபடச் செய்து வருகின்றனர்.
மானத்தோடும், மரியாதையோடும் வாழ வேண்டிய மனிதன், தன்னைப் போலவே மனிதனாக உள்ள மற்றொருவனுக்குத் தலை வணங்கும் நிலையை மதங்கள் தான் ஏற்படுத்தி விட்டன.
எனவே மதங்கள் யாவும் அர்த்தமற்றவை என்பதும் சிந்தனையாளர்களின் வாதம்.
இஸ்லாத்திற்கு எதிராக இந்த விமர்சனத்தையும் செய்ய முடியாது. ஏனெனில் மனிதனை மனிதன் வழிபடுவதை இஸ்லாம் எதிர்க்கும் அளவுக்கு சீர்திருத்த இயக்கங்கள் கூட எதிர்த்ததில்லை.
முஸ்லிம்கள் தங்களின் உயிரை விடவும் மேலாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை நேசிக்கின்றனர்.
எந்த மதத்தவரும், கட்சியினரும், இயக்கத்தினரும் தமது தலைவர்களை நேசிப்பதை விட நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை முஸ்லிம்கள் அதிகம் நேசிக்கின்றனர்.
அப்படி இருந்தும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை முஸ்லிம்களில் யாரும் வணங்குவதில்லை. அவர்களுக்காகச் சிலை வடிக்கவில்லை. அவர்களை ஓவியமாகத் தீட்டவில்லை. தங்களுக்கு வழிகாட்ட வந்த தலைவர் என்று மதிக்கிறார்களே தவிர அவர்களை முஸ்லிம்கள் ஒருக்காலும் வழிபட மாட்டார்கள்.
தம்மையும் கூட வழிபடக் கூடாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கடுமையாக எச்சரிக்கை செய்து சென்று விட்டார்கள்.
எனக்கு இறைவனிடமிருந்து செய்தி வருகிறது என்பதைத் தவிர மற்ற படி நானும் உங்களைப் போன்ற ஒரு மனிதன் தான்’ என்று அழுத்தம் திருத்தமாக அவர்கள் கூறினார்கள். அவ்வாறு கூறவேண்டும் என்று இறைவனே தமக்குக் கட்டளையிட்டதாகக் கூறினார்கள்.
இந்தக் கட்டளையை(அல்குர்ஆன்: 18:110, 41:6) ➚ஆகிய வசனங்களில் காணலாம்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு மண விழாவுக்குச் சென்றார்கள். அங்குள்ள சிறுமிகள் பாட்டு பாடிக் கொண்டிருந்தனர். நபிகள் நாயகத்தைக் கண்டதும் ‘நாளை நடப்பதை அறியும் நபி நம்மிடம் இருக்கிறார்’ என்று கூறினார்கள். இதைக் கேட்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ‘இவ்வாறு கூறாதே! முன்னர் பாடியதையே பாடு’ என்றார்கள்.
நான் ஹியரா என்னும் நகருக்குச் சென்றேன். அங்குள்ள வர்கள் தமது தலைவருக்குச் சிரம் பணிந்து கும்பிடு வதைப் பார்த்தேன். ‘இவ்வாறு சிரம் பணிவதற்கு நபிகள் நாயகமே அதிகத் தகுதியுடையவர்கள்’ என்று (எனக்குள்) கூறிக் கொண்டேன். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து ‘நான் ஹியரா என்னும் ஊருக்குச் சென்றேன். மக்கள் தமது தலைவருக்குச் சிரம் பணிவதைக் கண்டேன். நாங்கள் சிரம் பணிந்திட நீங்களே அதிகம் தகுதியுடையவர்’ என்று கூறினேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ‘(எனது மரணத்திற்குப் பின்) எனது அடக்கத் தலத்தைக் கடந்து செல்ல நேர்ந்தால் அதற்கும் சிரம் பணிவீரோ?’ எனக் கேட்டார்கள். ‘மாட்டேன்’ என்று நான் கூறினேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ‘ஆம்; அவ்வாறு செய்யக் கூடாது. ஒரு மனிதன் இன்னொரு மனிதனுக்குச் சிரம் பணியலாம் என்றிருந்தால் கணவனுக்காக மனைவியை அவ் வாறு செய்யச் சொல்யிருப்பேன்’ என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: கைஸ் பின் ஸஅத் (ரலி)
தமது காலில் விழுவதற்கு அனுமதி கேட்கப்பட்ட போது ‘எந்த மனிதரும் எந்த மனிதரின் காலும் விழக் கூடாது’ என்று பொதுவான விதியை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காரணம் காட்டுகிறார்கள்.
காலில் விழுபவரும், விழப்படுபவரும் இருவருமே மனிதர்கள் தான் என்று கூறி சிரம் பணிதல் கடவுளுக்கு மட்டுமே உரியது எனக் கூறுகிறார்கள்.
உலகம் முழுவதும் கணவர் காலில் மனைவியர் விழுவது அன்றைக்கு வழக்கமாக இருந்தது. அதையே நான் அனுமதிக்காத போது என் காலில் எப்படி விழலாம் என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.
எத்தனையோ சீர்திருத்தவாதிகள் தங்கள் அபிமானிகளால் இது போன்ற மரியாதை தங்களுக்குச் செய்யப்படும் போது அதை இன்முகத்துடன் ஏற்றுக் கொள்வதை நாம் பார்க்கிறோம்.
வாழும் போதே தமக்குச் சிலை அமைத்த சீர்திருத்தவாதி களையும், அறியாத மக்கள் தமக்குச் சிலை வைக்கும் போது அதைத் தடுக்காமல் மகிழ்ச்சியடைந்த தலைவர்களையும், தமது மரணத்திற்குப் பின் தமக்குச் சிலை அமைக்க வலியுறுத்திச் சென்றவர்களையும் பார்க்கிறோம். இவர்கள் எதை எதிர்த்தார்களோ அதே காரியம் தமக்குச் செய்யப்படும் போது ஏற்றுக் கொண்டனர். நம்பகத் தன்மையை இதனால் இழந்தனர்.
எனது அடக்கத்தலத்தை வணக்கத் தலமாக ஆக்கி விடாதே’ என்று மக்களுக்குத் தெரியும் வகையில் இறை வனிடம் நபிகள் நாயகம் (ஸல்) பிரார்த்தனை செய்தார்கள்.
எனது அடக்கத்தலத்தில் எந்த நினைவு விழாவும் நடத் தாதீர்கள்! எனவும் நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.
நூல்கள்:(அபூதாவூத்: 1746)(அஹ்மத்: 8449)
யூதர்களும், கிறித்தவர்களும் தங்கள் இறைத் தூதர்களின் அடக்கத்தலங்களை வணக்கத் தலங்களாக ஆக்கி விட்டனர். இதனால் அவர்களுக்கு அல்லாஹ்வின் சாபம் ஏற்படும் என்று தமது மரணப் படுக்கையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எச்சரிக்கை செய்தனர்.
(புகாரி: 436, 1330, 1390, 3454, 4441, 4444, 5816)
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வாறு எச்சரிக்கை செய்யாவிட்டால் அவர்களின் அடக்கத் தலத்தையும் உயர்த்திக் கட்டியிருப்பார்கள் என நபிகள் நாயகத்தின் மனைவி ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார்கள்.
பதினான்கு நூற்றாண்டுகள் கடந்த பின்னரும் நபிகள் நாயகம் அவர்களின் அடக்கத்தலத்தில் இன்று வரை எந்த நினைவு நாளும் அனுசரிக்கப்படுவதில்லை. அடக்கத்தலத்தில் எவரும் விழுந்து கும்பிடுவதில்லை.
மனிதன் சுய மரியாதையை விட்டு விடக் கூடாது என்று அழுத்தமாகக் கூறிய நபிகள் நாயகம் அவர்கள் தமக்காகக் கூட மற்றவர்கள் சுயமரியாதையை இழக்கக் கூடாது என்று கூறினார்கள்.
சிலைகளுக்கு எந்தச் சக்தியும் இல்லை என்று பிரச்சாரம் செய்த பலர் தமது தலைவரின் சிலைகளுக்கு இன்று மாலை மரியாதை செய்து தங்கள் சுயமரியாதையை இழப்பதைக் காண்கிறோம்.
தமது தலைவர் அடக்கம் செய்யப்பட்ட திசை நோக்கி வணங்குவதாக வெளிப்படையாக அறிவிப்பதைக் காண்கிறோம்.
இறந்து போனவர் உணர மாட்டார் என்பது நன்றாகத் தெரிந்தும் அவரது நினைவிடத்தில் மலர் தூவுவதைப் பார்க்கிறோம்.
இவையெல்லாம் பகுத்தறிவுக்கும், சுயமரியாதைக்கும் அப்பாற்பட்டது என்று நன்றாகத் தெரிந்திருந்தும் அதைச் செய்வதைப் பார்க்கிறோம்.
நபிகள் நாயகம் அவர்கள் மீது உயிரையே வைத்திருக்கும் முஸ்லிம் சமுதாயம் அவர்களுக்குச் சிலை வடிக்கவில்லை.
அவர்களின் சமாதியில் விழுந்து கும்பிடவில்லை.
அவர்களுக்காக எந்த நினைவு விழாவும் நடத்தவில்லை.
அவர்களின் அடக்கத்தலத்தில் மலர் தூவுதலும் இல்லை. மலர்ப் போர்வையும் சாத்தப்படுவதில்லை.
எந்த முஸ்லிமுடைய சுயமரியாதைக்கும் அவர்களால் எள்ளளவும் பங்கம் ஏற்படவில்லை.
காலில் விழுந்து கும்பிடுவது கிடக்கட்டும்! அதற்கும் குறைவான மரியாதையைக் கூட நபிகள் நாயகம் ஏற்கவில்லை.
நபிகள் நாயகத்துக்குப் பின் முஸ்லிம் சாம்ராஜ்யத்தின் ஐந்தாவது அதிபராகத் திகழ்ந்தவர் முஆவியா(ரலி). அவர் வெளியே வந்த போது அவரைக் கண்ட அப்துல்லாஹ் பின் ஸுபைர் அவர்களும், இப்னு சப்வான் அவர்களும் எழுந்து நின்றனர். உடனே முஆவியா (ரலி) அவர்கள் ‘அமருங்கள்!’ என்றனர். ‘தனக்காக மக்கள் எழுந்து நிற்க வேண்டும் என்று யார் விரும்புகிறாரோ அவர் தனது தங்குமிடத்தை நரகத்தில் ஏற்படுத்திக் கொள்கிறார்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியதை நான் செவியுற்றுள்ளேன் என்றும் முஆவியா (ரலி) கூறினார்கள்.
நூல்கள்: திர்மிதி 2769(அபூதாவூத்: 4552)
உலகத்தில் நபிகள் நாயகத்தை விட எங்களுக்கு விருப்பமான ஒருவரும் இருந்ததில்லை. ஆயினும் அவர்கள் எங்களை நோக்கி வரும் போது நாங்கள் அவர்களுக்காக எழ மாட்டோம். இதை அவர்கள் கடுமையாக வெறுப்பார்கள்’ என்பதே இதற்குக் காரணம்.
நபிகள் நாயகத்துக்கு பத்தாண்டுகள் பணிவிடை செய்த அனஸ் (ரலி) அவர்கள் இதை அறிவிக்கிறார்கள்.
நூல்கள்:(அஹ்மத்: 12068, 11895)(திர்மிதீ: 2678)
ஒரு முறை நபிகள் நாயகம் (ஸல்) நோய் வாய்ப் பட்டார்கள். அப்போது அவர்கள் உட்கார்ந்த நிலையில் தொழுகை நடத்தினார்கள். நாங்கள் அவர்களுக்குப் பின்னால் நின்று தொழுதோம். அவர்கள் திரும்பிப் பார்த்த போது நாங்கள் நின்று கொண்டிருப்பதைக் கண்டார்கள். சைகை மூலம் எங்களை உட்காரச் சொன்னார்கள். நாங்கள் உட்கார்ந்த நிலையில் அவர்களைப் பின்பற்றித் தொழுதோம். தொழுகையை முடித்தவுடன் ‘பாரசீக, ரோமாபுரி மன்னர்கள் அமர்ந்திருக்க மக்கள் நிற்பார்களே அது போன்ற செயலைச் செய்ய முற்பட்டு விட்டீர்களே! இனிமேல் அவ்வாறு செய்யாதீர்கள். உங்கள் தலைவர்களைப் பின்பற்றித் தொழுங்கள்! அவர் நின்று தொழுகை நடத்தினால் நீங்களும் நின்று தொழுங்கள்! அவர் உட்கார்ந்து தொழுகை நடத்தினால் நீங்களும் உட்கார்ந்து தொழுகை நடத்துங்கள்’ என்று கூறினார்கள்.
யாருக்கேனும் நிற்க இயலாத அளவுக்கு உடல் உபாதை ஏற்பட்டால் அவர் உட்கார அனுமதி உண்டு.
அந்த அடிப்படையில் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உட்கார்ந்து தொழுவித்தார்கள். ஆனால் பின்னால் தொழுதவர்களுக்கு எந்த உபாதையும் இல்லாததால் அவர்கள் நின்று தொழுதார்கள்.
அவர்கள் நபிகள் நாயகத்துக்கு மரியாதை செய்வதற்காக நிற்கவில்லை. தொழுகையில் அது ஒரு நிலை என்பதற்காகவே நின்றார்கள். எனவே, அவர்களைக் கண்டிக்க வேண்டிய அவசியம் இல்லை.
ஆனாலும் முன்னால் நபிகள் நாயகம் (ஸல்) அமர்ந்திருக்க பின்னால் மற்றவர்கள் நிற்பதைப் பார்க்கும் போது ‘நபிகள் நாயகத்தின் முன்னே யாரும் அமரக் கூடாது’ என்பதற்காக நிற்பது போன்ற தோற்றம் ஏற்படுகிறது. ஏனைய நாட்டு மன்னர்களுக்கு முன் மக்கள் நிற்பது போல் இது தோற்றமளிக்கின்றது. அந்த வாடை கூட தம் மீது வீசக் கூடாது என்பதற்காக அனைவரையும் அமர்ந்து தொழுமாறு நபிகள் நாயகம் ஆணையிடுகிறார்கள்.
தமக்கு மரியாதை செலுத்துவதற்காக அம்மக்கள் நிற்கவில்லை என்பது நன்றாகத் தெரிந்திருந்தும் அப்படியொரு தோற்றம் கூட ஏற்படக் கூடாது என்று கருதி இதற்கும் தடை விதித்தார்கள்.
தமக்காக நிற்பதையும், குனிவதையும் கூட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்து விட்டதால் தான் உண்மையான முஸ்லிம்கள் பெற்ற தாய் உள்ளிட்ட எவரது காலிலும் விழுவதில்லை. எந்த முஸ்லிம் பெண்ணும் கணவனின் காலில் விழுந்து கும்பிடுவதில்லை. எந்தத் தலைவருக்கும் சிலை வடித்து அவர்களை வழிபடுவதுமில்லை.
எனவே மனிதனின் சுயமரியாதையை இஸ்லாம் பேணுமளவுக்கு எந்த இஸமும் பேணியதில்லை.
சுயமரியாதைக்காக இயக்கம் கண்டவர்கள் கூட தமது தலைவருக்கு சிலை வடித்து மாலை அணிவித்து மரியாதை செய்கிறார்கள்.
கற்சிலைகளுக்கு எந்த சக்தியும் இல்லை எனக் கூறி பகுத்தறிவு இயக்கம் கண்டவர்கள் தமது தலைவரின் கற்சிலைக்கு மாலை அணிவிப்பது எப்படிப் பகுத்தறிவாகும்?
வழிபடும் சிலைகளை மாற்றிக் கொண்டார்கள். வழிபடும் முறையை மாற்றிக் கொண்டார்கள். பூஜைப் பொருட்களை மாற்றிக் கொண்டார்கள். வழிபாட்டை மாற்றிக் கொள்ளவில்லை.
எனவே சிந்தனையாளர்கள் எதிர்பார்ப்பதை விட இஸ்லாம் மனிதனின் சுயமரியாதையை அதிகமாகவே காப்பாற்றுகிறது.
மத குருமார்களின் கால்களில் விழுவதைப் போலவே சுய மரியாதை இயக்கத்தின் வழிவந்த தலைவர்களின் கால்களில் அவர்களின் தொண்டர்கள் விழுந்து பணிகிறார்கள்.
ஆனால் மத குருமார்களின் கால்களில் விழுந்து பணிவதைக் கூட இஸ்லாம் அடியோடு தடை செய்து விட்டது.
எனவே இந்தக் குற்றத்தையும் இஸ்லாம் செய்யவில்லை.