75) சுமந்து செல்லும் பெட்டி – சந்தூக்

நூல்கள்: ஜனாஸாவின் சட்டங்கள்

ஜனாஸாவை எடுத்துச் செல்வதற்கு என குறிப்பிட்ட வடிவில் ஒரு பெட்டியைப் பயன்படுத்துகின்றனர். சந்தாக் அல்லது சந்தூக் என்ற பெயரால் இப்பெட்டி குறிப்பிடப்படுகிறது.

இவ்வாறு மார்க்கத்தில் வலியுறுத்தப்படவில்லை. இப்போது நடைமுறையில் உள்ள வடிவத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் ஜனாஸாப் பெட்டி இருந்ததில்லை.

ஒரு ஆண் ஜனாஸாவுக்கு நடத்தப்பட்ட தொழுகையில் அனஸ் (ரலி) அவர்களுடன் நான் கலந்து கொண்டேன். அப்போது அவர்கள் ஜனாஸாவின் தலைக்கு நேராக நின்றார்கள். பின்னர் குரைஷ் குலத்துப் பெண்ணின் ஜனாஸாவைக் கொண்டு வந்தனர். ‘அபூ ஹம்ஸாவே நீங்கள் இவருக்குத் தொழுகை நடத்துங்கள்’ என்று மக்கள் கேட்டனர். அப்போது கட்டிலின் மையப் பகுதிக்கு நேராக நின்றார்கள். ‘நபிகள் நாயகம் அவர்கள் பெண் ஜனாஸாவுக்கு நீங்கள் நின்ற இடத்திலும், ஆண் ஜனாஸாவிற்கு நீங்கள் நின்ற இடத்திலும் நின்றதைப் பார்த்தீர்களா?’ என்று அலா பின் ஸியாத் கேட்டார். அதற்கு அனஸ் அவர்கள் ஆம் என்றனர். தொழுகை முடிந்ததும் இதைக் கவனத்தில் வையுங்கள் என்றார்கள்.

நூல்கள்:(திர்மிதீ: 955), அபூ தாவூத் 2779,(இப்னு மாஜா: 1483),(அஹ்மத்: 11735, 12640)

‘நல்ல மனிதரின் உடல் கட்டிலில் வைக்கப்பட்டவுடன் என்னை முற்படுத்துங்கள்!’ என்று அது கூறும். கெட்ட மனிதனின் உடல் கட்டிலில் வைக்கப்பட்டவுடன் எனக்குக் கேடு தான்! என்னை எங்கே கொண்டு செல்கிறீர்கள்?’ என்று அது கேட்கும்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)

நூல்: நஸயீ 1882

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் கட்டிலில் வைத்து ஜனாஸா எடுத்துச் செல்லப்பட்டதற்கு ஏராளமான சான்றுகள் உள்ளன.

கட்டிலின் மேல் உடலை வைத்துத் தூக்கிச் செல்வது தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்து வழக்கம். உடலை வளையாமல் எடுத்துச் செல்வது தான் முக்கியமே தவிர குறிப்பிட்ட வடிவம் முக்கியம் அல்ல.

இப்போது நடைமுறையில் பயன்படுத்தப்படும் சந்தாக் பெட்டியில் எடுத்துச் செல்வதும் கட்டிலின் மேல் உடலை வைத்துத் தூக்கிச் செல்வதும் சமமானது தான்.