சுப்ஹுக்கு முன் நோன்புக்கான நிய்யத் அவசியமா
சுப்ஹுக்கு முன் தீர்மானிக்காவிட்டால் நோன்பாகாது என்ற ஹதீஸ் பலவீனமானது என்று சிலர் கூறுகிறார்கள். இது சரியா?
நீங்கள் குறிப்பிடும் செய்தி நஸாயீ, திர்மிதீ, தாரமீ, அபூதாவுத், அஹ்மது, பைஹகீ, தாரகுத்னீ ஆகிய நூற்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
2292 أَخْبَرَنَا عَبْدُ الْمَلِكِ بْنُ شُعَيْبِ بْنِ اللَّيْثِ بْنِ سَعْدٍ قَالَ حَدَّثَنِي أَبِي عَنْ جَدِّي قَالَ حَدَّثَنِي يَحْيَى بْنُ أَيُّوبَ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي بَكْرٍ عَنْ ابْنِ شِهَابٍ عَنْ سَالِمٍ عَنْ عَبْدِ اللَّهِ عَنْ حَفْصَةَ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَنْ لَمْ يُبَيِّتْ الصِّيَامَ قَبْلَ الْفَجْرِ فَلَا صِيَامَ لَهُ رواه النسائي
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள் :
ஃபஜருக்கு முன்பாக இரவிலேயே யார் (கடமையான) நோன்பு நோற்க நாடவில்லையோ அவருக்கு நோன்பு கிடையாது.
அறிவிப்பவர் : ஹஃப்ஸா (ரலி)
நூல் : நஸாயீ (2292)
இந்த ஹதீஸ் பலவீனமானது என்று சில அறிஞர்கள் கூறி இருந்தாலும் இந்த ஹதீஸ் தொடர்பான ஆய்வில் நடுநிலையோடு ஈடுபட்டால் இது ஆதாரப்பூர்வமான செய்தி என்பதை சந்தேகத்திற்கு இடமின்றி அறிந்து கொள்ளலாம்.
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர் வரிசை இது தான்.
இந்தச் செய்தியை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடமிருந்து ஹப்ஸா (ரலி) அறிவிக்கின்றார்.
ஹப்ஸா (ரலி) அவர்களிடமிருந்து இப்னு உமர் அறிவிக்கின்றார்.
இப்னு உமர் அவர்களிடமிருந்து சாலிம் அறிவிக்கின்றார்.
சாலிமிடமிருந்து இப்னு ஷிஹாப் ஸுஹ்ரீ அறிவிக்கின்றார்.
இப்னு ஷிஹாபிடமிருந்து அப்துல்லாஹ் பின் அபீ பக்ர் அறிவிக்கின்றார்.
அப்துல்லாஹ் பின் அபீ பக்ரிடமிருந்து யஹ்யா பின் அய்யூப் அறிவிக்கின்றார்.
இந்தச் செய்தியை அறிவிக்கும் அறிவிப்பாளர்ளின் நம்பகத்தன்மை குறித்து எந்த அறிஞரும் விமர்சனம் செய்யவில்லை. அறிவிப்பாளர் தொடரில் முறிவும் இல்லை. இந்தச் செய்தி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கூற்றாக சிலர் வழியாகவும் நபித்தோழர்களின் கூற்றாக சிலர் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இமாம் திர்மிதீ இமாம் நஸாயீ ஆகிய இருவரும் நபித்தோழரின் கூற்றாக வரும் அறிவிப்பே சரியானது என்று கருத்து கூறியுள்ளனர்.
இப்னு குஸைமா, இப்னு ஹிப்பான், ஹாகிம், பைஹகீ மற்றும் இப்னு ஹஸ்ம் ஆகியோர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கூற்றாக வரும் அறிவிப்பு சரியானது என்ற கருத்தில் உள்ளனர்.
இதை இமாம் இப்னு ஹஜர் அவர்கள் ஃபத்ஹுல் பாரி என்ற தனது நூலில் குறிப்பிட்டுள்ளார்கள். (பாகம் : 4 பக்கம் : 142)
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கூற்றாக வரும் அறிவிப்பு சரியில்லை என்பதற்கு இமாம் திர்மிதீ அவர்கள் கூறும் காரணம் என்னவென்றால் இந்தச் செய்தியை இப்னு ஹிஷாப் ஸுஹ்ரீ வழியாக அறிவிக்கும் நம்பகமானவர்கள் நபித்தோழரின் கூற்றாகவே அறிவித்துள்ளார்கள். இவர்களுக்கு மாற்றமாக யஹ்யா பின் அய்யூப் என்பவர் மட்டும் நபியின் கூற்றாக அறிவித்துள்ளார் என்பது தான்.
662 حَدَّثَنَا إِسْحَقُ بْنُ مَنْصُورٍ أَخْبَرَنَا ابْنُ أَبِي مَرْيَمَ أَخْبَرَنَا يَحْيَى بْنُ أَيُّوبَ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي بَكْرٍ عَنْ ابْنِ شِهَابٍ عَنْ سَالِمِ بْنِ عَبْدِ اللَّهِ عَنْ أَبِيهِ عَنْ حَفْصَةَ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَنْ لَمْ يُجْمِعْ الصِّيَامَ قَبْلَ الْفَجْرِ فَلَا صِيَامَ لَهُ قَالَ أَبُو عِيسَى حَدِيثُ حَفْصَةَ حَدِيثٌ لَا نَعْرِفُهُ مَرْفُوعًا إِلَّا مِنْ هَذَا الْوَجْهِ وَقَدْ رُوِيَ عَنْ نَافِعٍ عَنْ ابْنِ عُمَرَ قَوْلُهُ وَهُوَ أَصَحُّ وَهَكَذَا أَيْضًا رُوِيَ هَذَا الْحَدِيثُ عَنْ الزُّهْرِيِّ مَوْقُوفًا وَلَا نَعْلَمُ أَحَدًا رَفَعَهُ إِلَّا يَحْيَى بْنُ أَيُّوبَ وَإِنَّمَا مَعْنَى هَذَا عِنْدَ أَهْلِ الْعِلْمِ لَا صِيَامَ لِمَنْ لَمْ يُجْمِعْ الصِّيَامَ قَبْلَ طُلُوعِ الْفَجْرِ فِي رَمَضَانَ أَوْ فِي قَضَاءِ رَمَضَانَ أَوْ فِي صِيَامِ نَذْرٍ إِذَا لَمْ يَنْوِهِ مِنْ اللَّيْلِ لَمْ يُجْزِهِ وَأَمَّا صِيَامُ التَّطَوُّعِ فَمُبَاحٌ لَهُ أَنْ يَنْوِيَهُ بَعْدَ مَا أَصْبَحَ وَهُوَ قَوْلُ الشَّافِعِيِّ وَأَحْمَدَ وَإِسْحَقَ رواه الترمذي
இமாம் திர்மிதீ அவர்கள் திர்மிதியில் 662 வது ஹதீஸின் கீழ் இந்த விபரத்தைத் தெரிவித்துள்ளார். இமாம் திர்மிதீ அவர்கள் இந்தச் செய்தி நபியின் கூற்றாக ஸுஹ்ரீ வழியாக மட்டுமே வருகிறது என்று நினைத்து இதை மறுக்கின்றார். ஸுஹ்ரீ அல்லாத வேறு நபர்களின் வழியாக இவ்வாறு அறிவிக்கப்பட்டிருந்தால் அதை இமாம் திர்மிதி அவர்கள் மறுத்திருக்க மாட்டார்கள்.
ஹதீஸ் நூற்களை ஆய்வு செய்தால் இந்தச் செய்தி ஸுஹ்ரீ இடம்பெறாத அறிவிப்பாளர் தொடரின் வழியிலும் நபியின் கூற்றாக வந்திருப்பதை அறியலாம். இமாம் தாரகுத்னீ அவர்கள் இந்த ஹதீஸைப் பதிவு செய்துள்ளார்கள்.
سنن الدارقطني – كتاب الصيام
باب – حديث : 1939
حدثنا أبو بكر أحمد بن محمد بن موسى بن أبي حامد , ثنا روح بن الفرج أبو الزنباع المصري بمكة , ثنا عبد الله بن عباد أبو عباد , ثنا المفضل بن فضالة , حدثني يحيى بن أيوب , عن يحيى بن سعيد , عن عمرة , عن عائشة , عن النبي صلى الله عليه وسلم قال : ” من لم يبيت الصيام قبل طلوع الفجر فلا صيام له ” . تفرد به عبد الله بن عباد , عن المفضل بهذا الإسناد , وكلهم ثقات
சூரியன் உதிப்பதற்கு முன்பு இரவிலேயே யார் (கடமையான) நோன்பு நோற்க நாடவில்லையோ அவருக்கு நோன்பு கிடையாது.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) அவர்கள்
நூல் : சுனனுத் தாரகுத்னீ (1939)
இந்தச் செய்தியை நபி (ஸல்) அவர்களிடமிருந்து ஆயிஷா (ரலி) அறிவிக்கின்றார்.
ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்து அம்ரா அறிவிக்கின்றார்.
அம்ராவிடமிருந்து யஹ்யா பின் சயீத் அறிவிக்கின்றார்.
இவரிடமிருந்து யஹ்யா பின் அய்யூப் அறிவிக்கின்றார்.
இந்த வரிசையில் இப்னு ஷிஹாப் ஸுஹ்ரீ இடம்பெறவில்லை. இந்த அறிவிப்பாளர் தொடரில் இடம்பெற்றுள்ள அனைவரும் நம்பகமானவர்கள் என்று இமாம் தாரகுத்னீ அவர்கள் இந்தச் செய்தியின் கீழ் உறுதியளிக்கின்றார்.
எனவே இமாம் திர்மிதீ அவர்களின் விமர்சனத்தை வைத்துக்கொண்டு நபியின் கூற்றாக வரும் அறிவிப்புகள் சரியில்லை என்று கூற முடியாது. மாறாக மேற்கண்ட சரியான அறிவிப்பு உள்ளது. இதை எந்த அறிஞரும் குறை கூறவில்லை.
அடுத்து இமாம் நஸாயீ அவர்களின் விமர்சனத்துக்கு வருவோம். யஹ்யா பின் அய்யூபை நபித்தோழரின் கூற்றாக அறிவிக்கும் நபர்களுடன் ஒப்பிட்டால் இவர் அவர்களின் அளவுக்கு உறுதியான மனனத்தன்மை உள்ளவர் இல்லை என்று இமாம் நஸாயீ அவர்கள் கருதியுள்ளார்கள். எனவே நபியின் கூற்றாக வரும் யஹ்யாவின் அறிவிப்பை ஏற்க இயலாது என கூறியுள்ளார்கள்.
السنن الكبرى للنسائي – كتاب الصيام
الحث على السحور – ذكر اختلاف الناقلين لخبر حفصة في ذلك
حديث : 2607
أخبرنا أحمد بن حرب الموصلي ، قال : حدثنا سفيان ، عن الزهري ، عن حمزة بن عبد الله ، عن حفصة قالت : ” لا صيام لمن لم يجمع الصيام قبل الفجر ” قال أبو عبد الرحمن : والصواب عندنا موقوف ، ولم يصح رفعه ، والله أعلم ؛ لأن يحيى بن أيوب ليس بذلك القوي ، وحديث ابن جريج عن الزهري غير محفوظ ، والله أعلم ، أرسله مالك *
திர்மிதீ மற்றும் நஸாயீ ஆகிய இருவரும் இந்தச் செய்தி நபியின் கூற்றாக யஹ்யா பின் அய்யூப் வழியாக மட்டுமே வந்துள்ளது என்று கருதியே இந்த இருவரும் இந்த அறிவிப்பை மறுக்கின்றனர். ஆனால் ஹதீஸ் நூற்களை ஆய்வு செய்தால் யஹ்யா பின் அய்யூப் அல்லாத மற்ற நம்பகமானவர்களும் இதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கூற்றாக அறிவித்திருப்பதை அறியலாம்.
அப்துல்லாஹ் பின் அபீ பக்ரிடமிருந்து லைஸ் பின் சஅத் என்பவரும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கூற்றாக அறிவித்துள்ளார். லைஸ் பின் சஅத் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட நம்பகமானவர். இதை இமாம் தப்ரானி அவர்கள் தமது நூலில் பதிவு செய்துள்ளார்கள்.
المعجم الكبير للطبراني (23/ 196)
337 – حَدَّثَنَا أَبُو يَزِيدَ الْقَرَاطِيسِيُّ، ثنا عَبْدُ اللهِ بْنُ عَبْدِ الْحَكَمِ ، أنا اللَّيْثُ بْنُ سَعْدٍ، وَيَحْيَى بْنُ أَيُّوبَ، عَنْ عَبْدِ اللهِ بْنِ أَبِي بَكْرٍ، عَنِ ابْنِ شِهَابٍ ، عَنْ سَالِمٍ، عَنْ أَبِيهِ، عَنْ حَفْصَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ لَمْ يُجْمِعِ الصِّيَامَ قَبْلَ الْفَجْرِ فَلَا صِيَامَ لَهُ»
அப்துல்லாஹ் பின் அபீ பக்ரிடமிருந்து இஸ்ஹாக் பின் ஹாஸிம் என்பாரும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கூற்றாக அறிவித்துள்ளார். இதை இமாம் சமர்கன்தீ அவர்கள் அல்ஃபவாயித் என்ற தனது நூலில் பதிவுசெய்துள்ளார்கள்.
الفوائد المنتقاة العوالي الحسان للسمرقندي حديث : 82
وبه : ثنا خالد بن مخلد القطواني ، ثنا إسحاق بن حازم ، حدثني عبد الله بن أبي بكر بن عمرو بن حزم ، عن سالم ، عن ابن عمر ، عن حفصة قالت : قال رسول الله صلى الله عليه وسلم : ” لا صيام لمن لم يجمع الصيام من الليل ” *
எனவே இந்த ஹதீஸை யஹ்யா பின் அய்யூப் மட்டும் அறிவிக்கவில்லை. அவருடன் லைஸ் பின் சஅத், இஸ்ஹாக் பின் ஹாஸிம் ஆகிய நம்பகமானவர்களும் அறிவித்துள்ளனர். மேலும் ஸுஹ்ரீ இடம்பெறாமல் ஆயிஷா (ரலி) அவர்களின் வழியாகவும் சரியான வழியில் இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபரங்கள் இமாம் திர்மிதீ அவர்களுக்கும், நஸாயீ அவர்களுக்கும் கிடைக்காத காரணத்தால் தான் நபியின் கூற்றாக வரும் அறிவிப்பை அவ்விருவரும் மறுத்துள்ளனர். இதை அவர்கள் அறிந்திருந்தால் யஹ்யா பின் அய்யூபின் அறிவிப்பை கண்டிப்பாக ஏற்றிருப்பார்கள்.
இமாம் பைஹகீ அவர்கள் நபியின் கூற்றாகவும் நபித்தோழரின் கூற்றாகவும் வரும் அறிவிப்புக்களை முரண்பட்டதாக்க் கருதவில்லை. யஹ்யா பின் அய்யூப் தான் நபியின் கூற்றாக அறிவித்து தவறு செய்துள்ளார் என்று யஹ்யாவின் மீது பழிசுமத்துவோரின் வாதத்தை அவர் ஏற்றுக் கொள்ளவில்லை.
மாறாக யஹ்யாவின் ஆசிரியரான அப்துல்லாஹ் பின் அபீ பக்ர் தான் நபியின் கூற்றாக அறிவித்துள்ளார். இவர் நம்பகமானவர் உறுதியுள்ளவர் என்பதால் இதை ஏற்றுக் கொள்ளலாம் என்ற கருத்தில் இமாம் பைஹகீ அவர்கள் எழுதியுள்ளார்கள்.
இமாம் பைஹகீ அவர்கள் இந்த ஹதீஸை அஸ்ஸுனனுல் குப்ரா என்ற தனது நூலில் பதிவு செய்துவிட்டு அதன் கீழ் இந்த விபரத்தைத் தெரிவிக்கின்றார்கள்.
السنن الكبرى للبيهقي – كتاب الصيام
باب الدخول في الصوم بالنية – حديث : 5836
أخبرنا أبو عبد الله الحافظ ، وأبو سعيد بن أبي عمرو قالا : ثنا أبو العباس محمد بن يعقوب ، أنبأ الربيع بن سليمان ، ثنا عبد الله بن وهب ، حدثني ابن لهيعة ، ويحيى بن أيوب ، عن عبد الله بن أبي بكر بن عمرو بن حزم ، عن ابن شهاب ، عن سالم ، عن أبيه ، عن حفصة زوج النبي صلى الله عليه وسلم ، أن النبي صلى الله عليه وسلم قال : ” من لم يجمع الصيام مع الفجر فلا صيام له ” كذا قال ، ورواه أحمد بن صالح عن ابن وهب ، فقال : ” قبل الفجر ” ، وهذا حديث قد اختلف على الزهري في إسناده وفي رفعه إلى النبي صلى الله عليه وسلم ، وعبد الله بن أبي بكر أقام إسناده ورفعه ، وهو من الثقات الأثبات أخبرنا أبو عبد الرحمن السلمي ، أنبأ علي بن عمر الحافظ ، قال : رفعه عبد الله بن أبي بكر وهو من الثقات الرفعاء *
அப்துல்லாஹ் பின் அபீ பக்ர் தான் இந்தச் செய்தியை நபியின் கூற்றாக அறிவித்துள்ளார். அவர் உறுதியானவர். வலிமையானவர்.
நூல் : அஸ்ஸுனனுல் குப்ரா (5836)
எனவே நபியின் கூற்றாக வரும் அறிவிப்பு பலவீனமானது என்ற வாதம் தவறானது. இது பல நம்பகமானவர்களின் வழியாக அறிவிக்கப்படும் ஆதாரப்பூர்வமான செய்தியாகும்.
நபித்தோழர்களின் கூற்றாக வரும் அறிவிப்புகள் இதற்கு முரணானவை அல்ல. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறிய கருத்தை நபித்தோழர்களும் கூறியுள்ளார்கள் என்று முரண்பாடில்லாமல் புரிந்து கொள்ளலாம்.