13) சுன்னத்தான நோன்புகள்
சுன்னத்தான நோன்புகள்
புனித ரமளான் மாதத்தில் நோன்பு நோற்பது கட்டாயக் கடமையாக்கப்பட்டிருப்பது போல் வேறு பல நோன்புகள், கட்டாயமாக்கப் படாவிட்டாலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களால் ஆர்வமூட்டப்பட்டுள்ளன. அவற்றையும் கடைப்பிடித்து நன்மைகளை அதிகப்படுத்திக் கொள்ள வேண்டும்.
அது போல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காட்டித் தராத, தவிர்க்க வேண்டிய நோன்புகள் சிலவும் நடைமுறையில் உள்ளன. அவற்றிலிருந்தும் நாம் விலகிக் கொள்ள வேண்டும்.
ஆஷூரா நோன்பு
முஹர்ரம் மாதம் பத்தாம் நாள் நோற்கப்படும் நோன்பு ஆஷூரா நோன்பு எனப்படுகிறது.
ரமலான் நோன்பு கடமையாக்கப்படுவதற்கு முன் இந்த நோன்பு கட்டாயமாக இருந்தது. ரமலான் நோன்பு கடமையாக்கப்பட்ட பின் விரும்பியவர் நோற்கலாம் என்ற நிலைக்கு வந்தது. (ஹதீஸின் கருத்து)
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆஷுரா நாளில் நோன்பு நோற்று மற்றவர்களுக்கும் கட்டளையிட்டார்கள். அப்போது நபித்தோழர்கள், அல்லாஹ்வின் தூதரே! இந்த நாளை யூதர்களும், கிறித்தவர்களும் மகத்துவப்படுத்துகின்றனரே? என்று கேட்டனர். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், அடுத்த வருடம் அல்லாஹ் நாடினால் ஒன்பதாம் நாளும் நோன்பு நோற்பேன் எனக் கூறினார்கள். ஆனால் அடுத்த ஆண்டு வருவதற்குள் மரணித்து விட்டார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது வாழ்நாளின் கடைசி வருடத்திலும் ஆஷூரா நோன்புக்குக் கட்டளையிட்டுள்ளார்கள். மேலும் யூதர்களும், கிறித்தவர்களும் இந்த நாளை மகத்துவப்படுத்துகின்றனரே என்று கேட்கப்பட்ட போது அவர்களுக்கு மாறு செய்யும் வகையில் 9, 10 ஆகிய இரு நாட்கள் நோன்பு நோற்பதாகக் கூறியுள்ளனர்.
எனவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆசைப்பட்ட இரண்டு நாட்களும் நோன்பு நோற்க வேண்டும்.
முஸ்லிம்களும், கிறித்தவர்களும், யூதர்களும் மதிக்கின்ற பெரியார் மூஸா நபியாவார். இவர்கள் ஃபிர்அவ்னிடமிருந்து இந்த நாளில் தான் காப்பாற்றப்பட்டார்கள். இந்த நாளில் தான் ஃபிர்அவ்ன் கடலில் மூழ்கடிக்கப்பட்டு அழிக்கப்பட்டான்.
இந்த நோக்கத்திற்காகத் தான் இந்த நாளில் நோன்பு நோற்கப்படுகிறது என்பதை ஏராளமான ஹதீஸ்கள் விளக்குகின்றன. மூஸா நபி காப்பாற்றப்பட்டதற்கு நன்றி தெரிவிக்கத் தான் இந்த நோன்பு நோற்கிறோம் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஆனால் சில முஸ்லிம்கள் கர்பலா எனும் இடத்தில் ஹுசைன் (ரலி) கொல்லப்பட்டது இந்த நாளில் தான்; எனவே இந்த நோன்பு நோற்கிறோம் என்று நினைக்கின்றனர்.
ஹுஸைன் (ரலி) கொல்லப்பட்டதற்கும் இந்த நோன்புக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. ஹுஸைன் (ரலி) கொல்லப்பட்டதற்காக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எப்படி இந்த நாளில் நோன்பு நோற்றிருப்பார்கள்? என்பதைச் சிந்திக்க வேண்டும்.
மார்க்கத்தில் ஒரு காரியம் கடமையாகவோ, சுன்னத்தாகவோ ஆக வேண்டுமானால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வாழும் காலத்தில் தான் ஆகுமே தவிர அவர்களுக்குப் பின்னால் உலகத்தில் என்ன நடந்தாலும் அதற்காக எந்த ஒரு வணக்கமும் மார்க்கத்தில் நுழைய இயலாது.
ஏனெனில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வாழும் காலத்திலேயே, இம்மார்க்கத்தை இன்று நான் முழுமைப்படுத்தி விட்டேன் (அல்குர்ஆன்: 5:3) ➚ என்று அல்லாஹ் பிரகடனம் செய்து விட்டான்.
ஆறு நோன்புகள்
ரமளான் மாதத்திற்கு அடுத்த மாதமான ஷவ்வால் மாதத்தில் ஆறு நோன்புகள் நோற்பதற்கு நபிகள் (ஸல்) அவர்கள் ஆர்வமூட்டியுள்ளார்கள்.
யார் ரமலான் மாதம் நோன்பு நோற்று அதைத் தொடர்ந்து ஷவ்வால் மாதம் ஆறு நோன்பு நோற்கிறாரோ அவர் காலமெல்லாம் நோன்பு நோற்றவராவார் என நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்
அறிவிப்பவர்: அபூ அய்யூப் (ரலி)
ரமளான் நோன்பைத் தொடர்ந்து ஆறு நாட்கள் என்று இந்த ஹதீஸில் கூறப்படுவதால் ஷவ்வால் மாதத் துவக்கத்திலேயே இந்த நோன்பை நோற்க வேண்டும் என்று சில அறிஞர்கள் கூறுகின்றனர்.
ரமளானைத் தொடர்ந்து என்பதற்கு இவர்கள் கூறுவது போன்று பொருள் கொண்டால் பெருநாள் தினத்திலிருந்து நோன்பு நோற்க வேண்டும். இது தான் ரமளானைத் தொடர்ந்து வரும் முதல் நாள். ஆனால் பெருநாள் தினத்தில் நோன்பு நோற்பதற்கு நமக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
எனவே ரமளானுக்குப் பின் என்பது தான் இதற்குச் சரியான விளக்கமாக இருக்க முடியும். தொடர்ந்து என்று மொழியாக்கம் செய்த இடத்தில் அத்பஅ என்ற சொல்லை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பயன்படுத்தி உள்ளார்கள். ரமளானுக்கு முன்னால் இல்லாமல் ரமளானுக்குப் பின்னால் இருக்க வேண்டும் என்பதே இதன் பொருளாகும். ஷவ்வால் என்று குறிப்பிட்டிருப்பதால் அம்மாதத்தில் வசதியான நாட்களில் நோற்று விட வேண்டும்.
அரஃபா நாள் நோன்பு
துல்ஹஜ் மாதம் பிறை ஒன்பது அன்று ஹாஜிகள் அரஃபா பெருவெளியில் தங்குவார்கள். அதனால் அந்த நாளுக்கு அரஃபா நாள் என்று குறிப்பிடுவர்.
அரஃபா நாளில் ஹாஜிகள் நோன்பு நோற்கத் தடை உள்ளது. ஆனால் ஹாஜிகள் அல்லாதவர்கள் அரஃபா நாளில் நோன்பு நோற்க நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆர்வமூட்டியுள்ளார்கள்.
அரஃபா நாளில் நோன்பு நோற்பது அதற்கு முந்திய வருடம் மற்றும் அடுத்த வருடத்திற்கான பரிகாரமாகும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூகதாதா (ரலி)
அரஃபா பெருவெளியில் தங்கியிருப்போர் அரஃபா நாளில் நோன்பு நோற்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: இப்னுமாஜா 1722
அரஃபா நாள் என்று கூறிய நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எவ்வாறு அதை நடைமுறைப்படுத்தினார்களோ அவ்வாறு தான் நாமும் நடைமுறைப்படுத்த வேண்டும்.
அரஃபா நாளில் நோன்பு நோற்கச் சொன்ன நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்காவுக்கு ஆளனுப்பி எந்த நாளில் ஹாஜிகள் அரஃபாவில் கூடுகிறார்கள் என்பதை விசாரிக்க எந்த ஏற்பாடும் செய்யவில்லை. அவர்கள் எப்போது தங்குகிறார்கள் என்பதை அறியாமலேயே மதீனாவில் காணப்பட்ட பிறையின்படி ஒன்பதாம் நாளில் நோன்பு நோற்றார்கள். மக்காவில் பிறை காணப்பட்டவுடன் அந்தத் தகவலை ஓரிரு நாட்களில் அறிந்து கொள்ள வசதிகள் இருந்தும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அந்த வசதியைப் பயன்படுத்தவில்லை.
எனவே சவூதி அரேபியாவில் அரஃபாவில் தங்கும் நாள், நாம் பிறை பார்த்த கணக்குப்படி எட்டாம் நாளாகவும் இருக்கலாம். அதைப் பின்பற்றத் தேவையில்லை. அதற்கு நபிவழியில் எந்த ஆதாரமும் இல்லை. நாம் பிறை பார்த்த கணக்குப்படி ஒன்பதாம் நாளில் நோன்பு நோற்க வேண்டும்
வியாழன் மற்றும் திங்கள் தோறும் நோன்பு நோற்பது
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் திங்கள், வியாழன் ஆகிய நாட்களைத் தேர்ந்தெடுத்து நோன்பு நோற்று வந்தார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்கள்:(திர்மிதீ: 676), நஸயீ 2321
ஒவ்வொரு வியாழன் மற்றும் திங்கட்கிழமைகளில் அமல்கள் (இறைவனிடம்) சமர்ப்பிக்கப்படுகின்றன. எனவே நான் நோன்பு நோற்றுள்ள நிலையில் எனது அமல்கள் சமர்ப்பிக்கப்படுவதை விரும்புகின்றேன் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
திங்கட்கிழமை நோன்பு நோற்பது குறித்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், அன்று தான் நான் பிறந்தேன். அன்று தான் எனக்கு இறைச் செய்தி அருளப்பட்டது என்று விடையளித்தார்கள்.
அறிவிப்பவர்: அபூகதாதா (ரலி)
மாதம் மூன்று நோன்புகள்
மாதந்தோறும் மூன்று நாட்கள் நோன்பு நோற்பதும், ரமளானில் நோன்பு நோற்பதும் காலமெல்லாம் நோன்பு நோற்றதாக அமையும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூகதாதா (ரலி)
மாதத்தில் மூன்று நாட்கள் நோன்பு நோற்பதென்றால் 13, 14, 15 ஆகிய நாட்களில் நோன்பு நோற்பீராக என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூதர் (ரலி)
மாதந்தோறும் மூன்று நாட்கள் நோன்பு நோற்பதற்கு வருடம் முழுவதும் நோன்பு நோற்ற நன்மை கிடைக்கும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆர்வமூட்டியுள்ளதால் இதில் கவனம் செலுத்த வேண்டும். முடிந்தால் 13, 14, 15 ஆகிய நாட்களைத் தேர்வு செய்து நோன்பு நோற்பது சிறப்பானது.
வெள்ளிக்கிழமை நோன்பு நோற்கலாகாது
நாட்களில் வெள்ளிக்கிழமை மிகச் சிறந்தது என்றாலும் அன்றைய தினம் நோன்பு நோற்கக் கூடாது.
வெள்ளிக்கிழமை நோன்பு நோற்க நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை விதித்தார்களா? என்று ஜாபிர் (ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கவர்கள், ஆம் என்றார்கள்.
அறிவிப்பவர்: முஹம்மத் பின் அப்பாத் (ரலி)
வெள்ளிக்கிழமைக்கு முன்பு ஒரு நாள் அல்லது இதை அடுத்து ஒரு நாள் சேர்த்தே தவிர வெள்ளிக் கிழமை நோன்பு நோற்கலாகாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)
வெள்ளிக்கிழமை நான் நோன்பு நோற்றிருந்த போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள். நேற்று நோன்பு நோற்றாயா? என்று கேட்டார்கள். நான், இல்லை என்றேன். நாளை நோன்பு நோற்கும் எண்ணம் உள்ளதா? என்று கேட்டார்கள். நான், இல்லை என்றேன். அப்படியானால் நோன்பை விட்டு விடு என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஜுவைரிய்யா (ரலி)
வெள்ளிக்கிழமையுடன் இன்னொரு நாள் சேர்த்துத் தான் நோன்பு நோற்க வேண்டும். அவ்வாறு இல்லாமல் வெள்ளிக்கிழமை நோன்பு நோற்றவர்கள் அதை முறித்து விட வேண்டும் என்பதை இந்த ஹதீஸிலிருந்து அறியலாம்