11) சுத்ரா மற்றும் நிய்யத்
சுத்ரா – தடுப்பு
இமாமும், தனியாகத் தொழுபவரும் தமக்கு முன் தடுப்பு வைத்துக் கொள்வது அவசியமாகும்.
‘சுத்ராவை (தடுப்பை) நோக்கியே தவிர நீங்கள் தொழாதீர்கள்! உங்களுக்கு முன்னால் யாரையும் நடக்க விடாதீர்கள்! மீறினால் அவருடன் சண்டையிடுங்கள்! அவருடன் ஷைத்தான் இருக்கிறான்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்கள்: இப்னுஹுஸைமா 800, இப்னுஹிப்பான்2362,(ஹாகிம்: 921), பைஹகீ 3261
தடுப்பாக ஏதாவது ஒரு பொருளை வைத்துக் கொள்ளலாம். இன்ன பொருள் தான் இருக்க வேண்டும் என்ற நிபந்தனை இல்லை. தூணோ அல்லது சுவரோ இருந்தால் அதைத் தடுப்பாக்கிக் கொண்டு தொழலாம். தடுப்பாக வைத்துள்ள பொருளுக்கு நெருக்கமாக இருந்து தொழ வேண்டும்.
كَانَ بَيْنَ مُصَلَّى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَبَيْنَ الجِدَارِ مَمَرُّ الشَّاةِ
நபி (ஸல்) அவர்கள் தொழுமிடத்துக்கும் சுவற்றுக்குமிடையே ஒரு ஆடு நடக்குமளவுக்கு இடைவெளி இருக்கும்.
அறிவிப்பவர்: ஸஹ்ல் பின் ஸஅத் (ரலி)
நூல்கள்: (புகாரீ: 496),(முஸ்லிம்: 786)
… பிலால் (ரலி) அவர்கள் ஒரு கைத்தடியை எடுத்து நாட்டினார்கள். நபி (ஸல்) அவர்கள் ஒரு சிவப்பு நிற மேல் அங்கியை அணிந்து ஆயத்தமாகி அந்தக் கைத்தடியை(த் தடுப்பாக) வைத்து இரண்டு ரக்அத்கள் மக்களுக்குத் தொழுவித்தார்கள். அந்தக் கைத்தடிக்கு அப்பால் மனிதர்களும் ஆடு, மாடுகளும் குறுக்கே செல்வதை நான் பார்த்தேன்.
அறிவிப்பவர்: அபூஜுஹைஃபா (ரலி)
நூல்கள்: (புகாரீ: 376),(முஸ்லிம்: 778)
‘நபி (ஸல்) அவர்கள் தமது ஒட்டகத்தைக் குறுக்கே நிறுத்தி அதை நோக்கித் தொழுவார்கள்’ என்று இப்னு உமர் (ரலி) கூறினார்கள். ‘ஒட்டகம் மிரண்டு ஓடி விட்டால்?’ என்று கேட்டேன். ‘ஒட்டகத்தின் மீது அமைக்கப்படும் சாய்மானத்தை எடுத்து அதைத் தமக்கு நேராக வைத்துக் கொண்டு அதை நோக்கித் தொழுவார்கள்’ என்று இப்னு உமர் (ரலி) கூறினார்கள்.
அறிவிப்பவர்: நாஃபிவு
நூல்: (புகாரீ: 507)
தடுப்பு வைத்துக் கொண்டு தொழுபவருக்கு குறுக்கே செல்வது குற்றமாகும்.
‘தொழுபவருக்குக் குறுக்கே சொல்பவர், அதனால் தமக்கு ஏற்படும் பாவத்தைப் பற்றி அறிந்திருந்தால் அவருக்குக் குறுக்கே செல்வதற்குப் பதில் நாற்பது (நாட்கள் அல்லது மாதங்கள் அல்லது வருடங்கள்) நின்று கொண்டிருப்பது அவருக்கு நல்லதாகத் தேன்றும்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஜுஹைம் (ரலி)
நூல்கள்: (புகாரீ: 510),(முஸ்லிம்: 785)
தொழும் முறை
கஅபாவை முன்னோக்குதல்
தொழுபவர் எந்தத் திசையை நோக்கியும் தொழக் கூடாது. மக்கா நகரில் உள்ள கஅபா என்ற ஆலயம் இருக்கும் திசை நோக்கித் தான் தொழ வேண்டும். கஅபா ஆலயம் தமிழகத்தின் வடமேற்குத் திசையில் இருக்கிறது. இதைக் கண்டுபிடிக்க பல நவீன சாதனங்களும் உள்ளன.
(முஹம்மதே!) உம்முடைய முகம் வானத்தைநோக்கி அடிக்கடி திரும்புவதைக் காண்கிறோம். எனவே நீர் விரும்புகிற கிப்லாவை நோக்கி உம்மைத் திருப்புகிறோம். எனவே உமது முகத்தை மஸ்ஜிதுல் ஹராமின் திசையில் திருப்புவீராக! நீங்கள் எங்கே இருந்தாலும் உங்கள் முகங்களை அதன் திசையிலேயே திருப்பிக் கொள்ளுங்கள்!
‘இதுவே தமது இறைவனிடமிருந்து வந்த உண்மை’ என்று வேதம் கொடுக்கப்பட்டோர் அறிவார்கள். அவர்கள் செய்பவற்றை அல்லாஹ் கவனிக்காதவனாக இல்லை.
…நீ தொழுகைக்குத் தயாரானால் (முதலில்) முழுமையாக உளூச் செய்! பின்னர் கிப்லாவை (கஅபாவை) முன்னோக்கு! பின் தக்பீர் கூறு!.. என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்கள்: (புகாரீ: 6667),(முஸ்லிம்: 602)
திசை தெரியவில்லையானால்…
சில நேரங்களில் கஅபா உள்ள திசை தெரியாமல் போகலாம் அப்போது ஏதாவது ஒரு திசையை நோக்கி நாம் தொழுது கொள்ள வேண்டும். ஏனெனில் எந்த ஒரு மனிதனையும் அவரது சக்திக்கு மீறி அல்லாஹ் சிரமப்படுத்த மாட்டான்.
எவரையும் அவரது சக்திக்குட்பட்டே தவிர அல்லாஹ் சிரமப்படுத்த மாட்டான்.
கிழக்கும், மேற்கும் அல்லாஹ்வுக்கே. நீங்கள் எங்கே திரும்பினாலும் அங்கே அல்லாஹ்வின் முகம் உள்ளது. அல்லாஹ் தாராளமானவன்; அறிந்தவன்.
நிய்யத் (எண்ணம்)
முஸ்லிம்கள் எந்த வணக்கத்தைச் செய்வதாக இருந்தாலும் வணக்கம் செய்கின்றோம் என்ற எண்ணத்துடன் தான் செய்ய வேண்டும். இந்த எண்ணமில்லாமல் வணக்கத்தின் அனைத்துக் காரியங்களையும் ஒருவர் செய்தாலும் அது வணக்கமாக அமையாது.
உடற்பயிற்சி என்பதற்காகவோ, அல்லது வேறு ஏதோ ஒரு காரணத்துக்காகவோ தொழுகையில் கடைப்பிடிக்கும் அனைத்துக் காரியங்களையும் ஒருவர் செய்கின்றார்; ஆனால் தொழுகின்றோம் என்ற எண்ணம் அவருக்கு இல்லை என்றால் இவர் தொழுகையை நிறைவேற்றியவராக மாட்டார்.
எல்லா வணக்கங்களுக்கும் நிய்யத் எனும் எண்ணம் அவசியம் என்பதற்குப் பின்வரும் ஹதீஸ் சான்றாக அமைந்துள்ளது.
‘அமல்கள் யாவும் எண்ணங்களைப் பொறுத்தே’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: உமர் பின் கத்தாப் (ரலி)
நூல்கள்: (புகாரீ: 1),(முஸ்லிம்: 3530)
நிய்யத் என்பதை முஸ்லிம்களில் சிலர் தவறாக விளங்கி வைத்துள்ளனர். குறிப்பிட்ட வார்த்தைகளை அரபு மொழியில் வாயால் மொழிவது தான் நிய்யத் என்று எண்ணுகின்றனர்.
உஸல்லீ ஸலாத்தஸ் ஸுப்ஹி… என்பன போன்ற சில அரபிச் சொற்களைக் கூறுவது தான் நிய்யத் என்று கருதுகின்றனர். இதற்கு நபிவழியில் எந்த ஆதாரமும் இல்லை.
நிய்யத் என்ற சொல்லுக்கு வாயால் மொழிதல் என்று பொருள் இல்லை. மனதால் நினைத்தல் என்பதே அதன் பொருளாகும்.
மேலும் உளூச் செய்யும் போதோ, தொழும் போதோ, நோன்பு நோற்கும் போதோ நபி (ஸல்) அவர்கள் எதனையும் வாயால் மொழிந்து விட்டுச் செய்ததில்லை.
ஹஜ் கடமையை நிறைவேற்றும் போது மட்டுமே வாயால் மொழிந்துள்ளனர். மற்ற எந்த வணக்கத்திற்கும் வாயால் மொழிந்ததில்லை.
நான் இப்போது தொழப் போகின்றேன் என்ற எண்ணம் உள்ளத்தில் இருக்குமானால் அதுவே நிய்யத் ஆகும். வாயால் எந்தச் சொல்லையும் மொழியக் கூடாது. அவ்வாறு மொழிவது பித்அத் ஆகும். இது அவசியம் என்றால் நபி (ஸல்) அவர்கள் வாயால் மொழிந்து நமக்கு வழி காட்டியிருப்பார்கள்.