சீரழிவை நோக்கி..!

பயான் குறிப்புகள்: பொதுவான தலைப்புகள் - 3

கண்ணியத்திற்குரிய எல்லாம் வல்ல ஏக இறைவனின் நல்லடியார்களே! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் சாந்தியும், சமானதானமும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன்.

இறைவன் இந்த உலகத்தில் மனிதர்களைப் படைத்து, அவர்கள் எவ்வாறு வாழ வேண்டும் என்பதைப் பற்றி அற்புதமான முறையில் கற்றுத் தருகின்றான். குறிப்பாக அல்லாஹ்வையும், அவனது தூதரையும் நம்பிக்கை கொண்டு, இஸ்லாத்தை வாழ்க்கை நெறியாக ஏற்று வாழ்கின்ற முஸ்லிம்கள் தங்களுடைய வாழ்க்கையில் எவ்வாறு வாழ வேண்டும் என்பதைப் பற்றியும் எவ்வாறு வாழக்கூடாது என்பதைப் பற்றியும் இஸ்லாம் அற்புதமான முறையில் எச்சரிக்கையோடு வழிகாட்டித் தருகின்றது.

இன்றைய காலகட்டத்தில் நவீன கருவிகளின் வளர்ச்சிகள் நாளுக்கு நாள் ஒவ்வொரு விதமாக, ஒவ்வொரு வடிவத்தில் வளர்ந்து கொண்டிருக்கின்றது. நவீன கருவிகளின் வளர்ச்சி, மனிதர்களை எந்தளவிற்கு முன்னேற்றப் பாதையை நோக்கி அழைத்துச் செல்கின்றதோ, அதற்குச் சற்றும் குறைவில்லாத அளவுக்கு வழிகேட்டின் பாதையை நோக்கி அழைத்துச் செல்கின்ற வாசல்களும் திறந்து விடப்பட்டிருப்பதைப் பார்க்கின்றோம்.

இன்றைய நவீன காலகட்டம் என்பது முஸ்லிமான ஆண்களையும் பெண்களையும் இன்னபிற மனிதர்களையும் இலகுவான முறையில் நரக நெருப்பில் தள்ளி விடக்கூடிய மோசமான கால கட்டமாகவும், வழிகேட்டில் விழுந்து விடக்கூடிய வாசலைத் திறந்து விடக் கூடியதாகவும் ஷைத்தானுடைய சேட்டைகள், தூண்டுதல்கள் அதிகமதிகம் இருப்பதையும் பார்க்கிறோம்.

இன்றைய நவீன யுகத்தில் நல்லவனாக வாழ்வதே மிக மிகக் கடினம் என்று சொல்கின்ற அளவுக்கு, இன்றைய காலச் சூழ்நிலையின் விபரீதத்தைப் பார்க்கின்றோம். அந்த அளவிற்கு நவீனத்தின் விளைவுகள் சமுதாயத்தில் பரவி கிடக்கின்றன. அந்த நவீனத்தின் விளைவுகளைப் பற்றி இந்த உரையில் காண்போம்.

மனிதர்களை மேம்படுதியுள்ளோம்

உலகில் இறைவனால் படைக்கப்பட்டுள்ள மற்ற உயிரினங்களை விட மனிதகுலத்தை இறைவன் மேன்மைப்படுத்தியிருக்கின்றான். மற்ற உயிர்களைக் காட்டிலும் இறைவன் மனிதர்களை மேன்மைப்படுத்தியிருப்பது சிந்தனை அறிவு என்ற பகுத்து உணர்கின்ற அறிவை வழங்கியிருப்பதன் காரணத்தினால் தான்.

 وَلَـقَدْ كَرَّمْنَا بَنِىْۤ اٰدَمَ

ஆதமுடைய மக்களை மேன்மைப் படுத்தினோம்.

(அல்குர்ஆன்: 17:70)

இறைவன் மனிதர்களை மற்ற உயிர்களை விட வேறுபடுத்தி, சிறப்புப்படுத்தி, மேன்மைப் படுத்தியிருக்க, மனிதர்களோ இறைவன் வழங்கியிருக்கின்ற கண்ணியத்தையும், மகத்துவத்தையும் மறந்தவர்களாக, சீரழிவின் பாதையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

فَلَمَّا نَسُوْا مَا ذُكِّرُوْا بِهٖ فَتَحْنَا عَلَيْهِمْ اَبْوَابَ كُلِّ شَىْءٍ ؕ حَتّٰٓى اِذَا فَرِحُوْا بِمَاۤ اُوْتُوْۤا اَخَذْنٰهُمْ بَغْتَةً فَاِذَا هُمْ مُّبْلِسُوْنَ‏

அவர்களுக்குக் கூறப்பட்ட அறிவுரையை அவர்கள் மறந்தபோது, அவர்களுக்கு அனைத்துப் பொருட்களின் வாசல்களையும் திறந்து விட்டோம். அவர்களுக்கு வழங்கப்பட்டதில் மகிழ்ச்சியடைந்திருந்த போது திடீரென அவர்களைத் தண்டித்தோம். அப்போது அவர்கள் நம்பிக்கை இழந்தனர்.

(அல்குர்ஆன்: 6:44)

இறைவன் புறத்திலிருந்து வழங்கப்பட்டிருக்கின்ற அறிவுரையையும் கண்ணியத்தையும் சிறப்பையும் மறந்து தன்னுடைய மனம் போன போக்கில், மனோ இச்சைக்குக் கட்டுப்பட்டு யார் நடக்கின்றார்களோ அவர்களுக்கு வழிகேட்டின் வாசல்கள் அனைத்தையும் இறைவன் திறந்து விட்டு சீரழிய விட்டு விடுவான். பிறகு அவர்களுக்குத் திடீரென்று தண்டனை இறங்கி விடும்.

டிக்-டாக்கும், சீரழியும் இளைஞர்களும்

இன்றைய காலத்தில் இளமைப்பருவத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற ஆண்களையும், பெண்களையும் வேகமாக சீரழிவை நோக்கி இழுத்துச் செல்கின்ற பல்வேறு நவீன கண்டுபிடிப்புகளும் அறிவியல் சாதனங்களும் வளர்ந்துள்ளன. இந்த அறிவியல் கண்டுபிடிப்புகளின் மூலம் ஏராளமான நன்மைகள் விளைந்தாலும் மனிதர்களுடைய உள்ளங்கள், குறிப்பாக இளைஞர்களுடைய உள்ளங்கள் தீமையைத் தான் அதிகம் தூண்டுகின்றன.

சமீப காலமாக இளம் வயதினரிடம் காட்டுத் தீயாய் பரவிக் கொண்டிருக்கின்ற செயலி டிக் டாக்  (Tik-Tok) இந்தச் செயலி பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அத்தனை நபர்களையும் தனக்கு அடிமையாக்கி விட்டது என்று சொன்னால் அது மிகையாகாது. அந்தளவிற்கு இந்தச் செயலியின் தாக்கம் சமூகத்தில் அதிகப்படியாக உலா வருவதைப் பார்க்க முடிகின்றது.

எத்தனையோ ஆபாச இணையதளங்கள் தடை செய்யப்பட்டிருக்கின்ற வேளையில், எந்த சப்தமும் இல்லாமல் அமைதியாக, சென்சார் கூட இல்லாத அளவுக்கு டிக் டாக் செயலி மக்களிடத்தில் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கின்றது.

15 நொடிகள் இதில் என்ன வேண்டுமானாலும் பேசலாம், நடிக்கலாம், ஆடலாம், பாடலாம். ஆனால் இந்த 15 நொடிகளில் காட்டப்படுகின்ற ஆபாசம் எல்லை தாண்டிப் போய்க் கொண்டிருக்கின்றது. இந்த வீடியோ காட்சிகளைப் பார்க்கும் போது, இதில் ஏற்பட்டுள்ள அதிக ஆர்வத்தின் காரணமாக தன்னைத்தானே ஒரு ஹீரோவாகவோ அல்லது ஹீரோயினாகவோ கற்பனை செய்து கொண்டு அதே போன்று வீடியோ எடுத்து அதை டிக் டாக் செயலியில் பதிவு செய்கின்றனர். 

இதை சமூக வலைதளங்களில் இளம் வயதினர் முதல் பெரியவர்கள் வரை பகிர்கின்றனர். இதில் பல வீடியோக்கள் வைரலாகி வருகின்றன. இந்நிலையில் டிக் டாக் வீடியோ செயலியில் வரும் சில வீடியோக்கள் ஆபாசமாக இருப்பதாகத் தெரியவருகிறது. இதற்கு பலத்த எதிர்ப்பு எழுந்துள்ளது.

டிக் டாக் செயலி மூலம் வெளியாகும் இளம் பெண்களின் சில வீடியோக்கள் ஆபாசமாக இருப்பதாகவும், அதனால் பாலியல் துன்புறுத்தல் போன்ற பிரச்சினைகள் ஏற்படுவதாகவும் செயலியை விமர்சிக்கும் நிபுணர்கள் கூறுகின்றனர்.

டிக் டாக் செயலி, இந்த ஆண்டின் முதல் பாதியில் ஆப்பிள் ஸ்டோரில் இருந்து அதிகமாக பதிவிறக்கம் செய்யப்பட செயலி என்று சென்சார் டவர் நிறுவனம் ஒரு ஆய்வறிக்கையை சமர்ப்பித்திருக்கின்றது. ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், ஸ்நாப்சேட் போன்ற செயலிகளையெல்லாம் பின்னுக்குத் தள்ளி விட்டு டிக் டாக் முதல் இடத்தைப் பிடித்துள்ளது.

சீனாவின் (Byte Dance) என்ற நிறுவனத்துக்கு சொந்தமானது இந்த டிக் டாக் அப்ளிகேஷன். இது ஒரு குறிப்பிட்ட நபரின் தனித்திறமையை வெளிப்படுத்தும் செயலி என்று இதை உருவாக்கியவர்கள் கூறுகின்றார்கள்.

மேலும் இந்தச் செயலி அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு ஒழுக்கத்தை விரும்புகின்ற மக்களிடத்தில் கடுமையான விமர்சனத்தை ஏற்படுத்தி இருக்கின்றது. பண்பாடு, நாகரிகம், கலாச்சாரம் இதுபோன்ற மனிதர்களிடத்தில் இருக்க வேண்டிய மிக முக்கியமான குணநலன்களை டிக் டாக் செயலி குழிதோண்டிப் புதைத்திருக்கின்றது.

டிக் டாக் (Tik Tok) ஓர் அதிர்ச்சி ரிப்போர்ட்

இந்த டிக்டாக் செயலி எவ்வளவு மோசமான பாதையின்பால் அழிவை நோக்கி மக்களை அழைத்துச் செல்கின்றது என்பதைப் பற்றியான ஆய்வறிக்கை இந்த ஆப் பயன்பாட்டாளர்களுக்கும், பயன்படுத்துகின்ற பிள்ளைகளை கவனிப்பாரற்று விட்டு விடக்கூடிய பெற்றோர்களுக்கும் கடுமையான அதிர்ச்சியை ஏற்ப்படுத்தி இருக்கின்றது.

இந்த ஆப் முன்வைக்கும் சுதந்திரக் கோட்பாடு,(“Raw, Real and without Boundaries”) அதாவது கட்டுப்பாடுகள் கிடையாது என்பதே. 12 வயது குழந்தைகள் முதல் அனைத்து வயதினரும் இதைப் பயன்படுத்தலாம் எனக் கூறுகிறது. இந்த அப்ளிகேஷன் இந்திய சமூகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. காரணம் இளம் பெண்கள் ஆபாசம் பொதிந்த பாடல் வரிகளை சர்வ சாதாரணமாகப் பாடி, ஆடி மகிழ்கின்றனர்.

இவற்றில் பெரும்பாலும் பெண்களின் மானத்தைக் காற்றில் பறக்க விட்டு சீர்குலைப்பதாக இருந்தாலும் கூட அதைப் பற்றி எவ்வித நெருடலும், கூச்சமும் இல்லாமல் பாடுகின்றனர். கடந்த ஆண்டு, இந்தோனேசிய அரசாங்கம் இந்த அப்ளிகேஷனைத் தடை செய்தது. அந்நாட்டில் 1,70,000 பேர் டிக் டாக் அப்ளிகேஷனைப் பதிவிறக்கம் செய்த நிலையில் அது குழந்தைகளுக்கு உகந்ததாக இல்லை எனக் கூறி இந்தோனேசிய அரசு இந்த அப்ளிகேஷனைத் தடை செய்தது.

பின்னர் சீனாவில் இருந்து டிக் டாக் பிரதிநிதிகள் ஜகார்தாவுக்கு விரைந்தனர். டிக் டாக் செயலியில் இருந்து ஆபாச கன்டன்ட்டை நீக்குவதாக உறுதியளித்த பின்னரே இந்தோனேசியா தடையை நீக்கியது. அமெரிக்காவின் இணைய கண்காணிப்புத் தளமான காமன் சென்ஸ் (Common Sense) டிக் டாக் செயலியில் உள்ள வயது வந்தோருக்கான உள்ளீடுகளும் தனிநபர் சுதந்திரம் அத்துமீறப்படுவதற்கான அபாயமும் கண்காணிக்கப்பட வேண்டியது என்கிறது.

எனவே, 16 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு டிக் டாக்கில் செயல்பட அனுமதி அளிக்கக்கூடாது எனப் பரிந்துரைக்கிறது. ஆனால், வயது வரம்பைக் குறைப்பது டிக் டாக்கின் அசுர வளர்ச்சியைக் கட்டுப்படுத்தும் என்பதால் டிக் டாக் நிறுவனம் இதில் தயக்கம் காட்டுகிறது.

பிரான்ஸ் நாட்டில், 11 வயது முதல் 14 வயதுக்கு இடைப்பட்டவர்களில் 38% பேர் டிக் டாக்கில் கணக்கு வைத்துள்ளதாக அந்நாட்டின் இணயப் பயன்பாடு கண்காணிப்பு அமைப்பான ஜெனரேஷன் நியூமரிக் கூறுகிறது. அதேபோல் 58% பெண் பிள்ளைகள் டிக் டாக்கில் கணக்கு வைத்துள்ளனர் என்றும் அந்த அறிக்கை கூறுகிறது.

இதனால், கடந்த மாதம் பிரான்ஸ் நாட்டு போலீஸார் பெற்றோருக்கு எச்சரிக்கை செய்துள்ளனர். டிக் டாக் செயலியால் உங்களது பிள்ளைகள் பாலியல் ரீதியான தொல்லைகளில் சிக்கலாம் என எச்சரித்துள்ளனர். இதுமாதிரியாக குழந்தைகள் சமூக வலைத்தளங்களுக்கு அடிமையாகும் சூழல் என்பது பெற்றோர், கல்வியாளர்கள், மருத்துவர்களுக்கு புதியதொரு சவால். சமூக வலைத்தளங்களுக்கு அடிமையாகும் குழந்தைகள் மற்றும் இளம் வயதினரை எப்படி மீட்டெடுப்பது என்பதில் இன்னும் தெளிவான வரைமுறைகளை நிபுணர்களே வகுக்க முடியாத சூழலே நிலவுகிறது.

புதிய தொழில்நுட்பங்கள் இளம் தலைமுறையினருக்கு பெரும் அச்சுறுத்தலாகவே இருக்கின்றன. மேலும், பள்ளிச் சீருடைகளை அணிந்து கொண்டு, தங்களைத் தாங்களே மிகப்பெரிய சினிமாக் கதாநாயகிகளாக எண்ணிக் கொண்டு டிக்டாக் செயலியில் தங்களின் முகத்தைக் காட்டுகின்றார்கள். இதுவே ஆபாச இணயதளத்தில் தங்களைத் தள்ளி விடுகின்ற ஒரு காரியமாக அமைந்து விடுகின்றது.

மேலும், இதில் வேதனைக்குரிய காரியம் என்னவென்றால், கண்டிக்க வேண்டிய இடத்தில் இருக்கின்ற பெற்றோர்களும், ஆசிரியர்களும் இந்த செயலியைப் பயன்படுத்துபவர்களோடு சேர்ந்து கூத்தும், கும்மாளமும் அடித்துக் கொண்டிருப்பதைப் பார்க்கின்றோம்.

மேலும் குத்துப்பாடல்கள், கேடுகெட்ட இரட்டை அர்த்தத்தை தருகின்ற பாடல்களுக்கு நாவசைக்கின்ற பெண்களின் முகங்கள் அப்படியே ஆபாச இணையதளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றது என்ற அதிர்ச்சி தகவல்களும் வெளியாகி உள்ளது.

ஷைத்தானின் வலையில் விழுந்து சீரழியாதீர்

இதுபோன்ற செயலிகளின் மூலமாகவும் வலைத்தளங்களின் மூலமாகவும் செல்ஃபோன்களின் மூலமாகவும் சீரழிவின் பாதையை நோக்கி அழைத்துக் கொண்டிருப்பது ஷைத்தான் தான். ஆனால் இதை உணராதவர்களாக கேடுகெட்ட காரியங்களை செய்து அதற்குப் பலியாகி அடிமையாகக்கூடிய அவலநிலையைப் பார்க்கின்றோம்.

قَالَ فَبِمَاۤ اَغْوَيْتَنِىْ لَاَقْعُدَنَّ لَهُمْ صِرَاطَكَ الْمُسْتَقِيْمَۙ‏
ثُمَّ لَاَتِيَنَّهُمْ مِّنْۢ بَيْنِ اَيْدِيْهِمْ وَمِنْ خَلْفِهِمْ وَعَنْ اَيْمَانِهِمْ وَعَنْ شَمَآٮِٕلِهِمْ‌ؕ وَلَاٰ تَجِدُ اَكْثَرَهُمْ شٰكِرِيْنَ‏

“நீ என்னை வழிகெட்டவனாக ஆக்கியதால் அவர்களுக்காக உனது நேரான பாதையில் அமர்ந்து கொள்வேன்’’ என்று கூறினான். “பின்னர் அவர்களின் முன்னும், பின்னும், வலமும், இடமும் அவர்களிடம் வருவேன். அவர்களில் அதிகமானோரை நன்றி செலுத்துவோராக நீ காண மாட்டாய்’’ (என்றும் ஷைத்தான் கூறினான்).

(அல்குர்ஆன்: 7:16,17)

اِلَّا عِبَادَكَ مِنْهُمُ الْمُخْلَصِيْنَ‏

“என் இறைவா! என்னை நீ வழிகேட்டில் விட்டதால் பூமியில் (தீமைகளை) அழகாக்கிக் காட்டுவேன். அவர்களில் உன்னால் தேர்ந்தெடுக்கப்பட்ட உனது அடியார்களைத் தவிர (மற்றவர்கள்) அனைவரையும் வழிகெடுப்பேன்’’ என்று கூறினான்.

(அல்குர்ஆன்: 15:40)

நாம் செய்துவருகின்ற அனைத்துக் கெட்ட காரியங்களும், அருவருக்கத்தக்க காரியங்களும் தீமைகளை நன்மைகளைப் போன்று ஷைத்தான் அலங்கரித்துக் காட்டுவது தான் என்று இறைவன் கடுமையாக எச்சரிக்கை விடுக்கின்றான்.

துரோகியைத் தெரிந்து கொள்வோம்!!

மனிதர்களை வெற்றியடைய விடாமல் நரகத்திற்கு அழைப்பது ஷைத்தானுடைய குறிக்கோள் என்பதால் அல்லாஹ் திருக்குர்ஆனில் பல இடங்களில் ஷைத்தானைப் பற்றி நமக்கு எச்சரிக்கை செய்கிறான். அவன் மனிதர்களுக்குப் பகிரங்கமான விரோதி என்றும் குறிப்பிடுகிறான்.

اِنَّ الشَّيْطٰنَ لَـكُمْ عَدُوٌّ فَاتَّخِذُوْهُ عَدُوًّا ؕ اِنَّمَا يَدْعُوْا حِزْبَهٗ لِيَكُوْنُوْا مِنْ اَصْحٰبِ السَّعِيْرِؕ‏

ஷைத்தான் உங்களுக்கு எதிரியாவான். அவனை எதிரியாகவே ஆக்கிக் கொள்ளுங்கள்! நரகவாசிகளாக ஆவதற்காகவே அவன் தனது கூட்டத்தாரை அழைக்கிறான்.

(அல்குர்ஆன்: 35:6)

 يٰٓاَيُّهَا النَّاسُ كُلُوْا مِمَّا فِى الْاَرْضِ حَلٰلًا طَيِّبًا ۖ  وَّلَا تَتَّبِعُوْا خُطُوٰتِ الشَّيْطٰنِؕ اِنَّهٗ لَـكُمْ عَدُوٌّ مُّبِيْنٌ‏

மனிதர்களே! பூமியில் உள்ளவற்றில் அனுமதிக்கப்பட்ட தூய்மையானதை உண்ணுங்கள்! ஷைத்தானின் அடிச்சுவடுகளைப் பின்பற்றாதீர்கள்! அவன் உங்களுக்குப் பகிரங்க எதிரி.

(அல்குர்ஆன்: 2:168)

 اِنَّ الشَّيْطٰنَ لِلْاِنْسَانِ عَدُوٌّ مُّبِيْنٌ‏

ஷைத்தான் மனிதனுக்குப் பகிரங்க எதிரியாவான்.

(அல்குர்ஆன்: 12:5)

وَكَانَ الشَّيْطٰنُ لِلْاِنْسَانِ خَذُوْلًا‏

ஷைத்தான் மனிதனுக்குத் துரோகம் செய்பவனாகவே இருக்கிறான்.

(அல்குர்ஆன்: 25:29)

يٰبَنِىْۤ اٰدَمَ لَا يَفْتِنَـنَّكُمُ الشَّيْطٰنُ كَمَاۤ اَخْرَجَ اَبَوَيْكُمْ مِّنَ الْجَـنَّةِ يَنْزِعُ عَنْهُمَا لِبَاسَهُمَا لِيُرِيَهُمَا سَوْءاٰتِهِمَا ؕ اِنَّهٗ يَرٰٮكُمْ هُوَ وَقَبِيْلُهٗ مِنْ حَيْثُ لَا تَرَوْنَهُمْ‌ ؕ اِنَّا جَعَلْنَا الشَّيٰطِيْنَ اَوْلِيَآءَ لِلَّذِيْنَ لَا يُؤْمِنُوْنَ‏

ஆதமுடைய மக்களே! உங்கள் பெற்றோர் இருவரையும் ஷைத்தான் சொர்க்கத்திலிருந்து வெளியேற்றியது போல் உங்களையும் அவன் குழப்பிவிட வேண்டாம். அவர்களின் வெட்கத்தலங்களை அவர்களுக்குக் காட்ட ஆடைகளை அவர்களை விட்டும் அவன் கழற்றினான்.

நீங்கள் அவர்களைக் காணாத வகையில் அவனும் அவனது கூட்டத்தாரும் உங்களைப் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். நம்பிக்கை கொள்ளாதோருக்கு ஷைத்தான்களை உற்ற நண்பர்களாக நாம் ஆக்கி விட்டோம்.

(அல்குர்ஆன்: 7:27)

இன்னும் இதுபோன்ற ஏராளமான உபதேசங்களில் ஷைத்தான் மனிதர்களுக்கு கேவலத்தையும் அவமானத்தையும் பெற்றுத் தருகின்ற பகிரங்க எதிரியாகவும் துரோகியாகவும் இருக்கின்றான் என்று இறைவன் எச்சரிக்கை விடுக்கின்றான்.

ஆண்ட்ராய்ட் சீரழிவுகள்

அறிவியல் சாதனங்களில் முன்னணியில் இருப்பது ஒவ்வொருவருடைய கரங்களிலே தவழ்கின்ற ஆண்ட்ராய்ட் செல்போன்கள். இந்த செல்போன்களின் வளர்ச்சி அபரிமிதமான வளர்ச்சியாக வளர்ந்து அதிகமான நன்மைகளை வழங்கினாலும், அதிகமான தீமைகளின் காரணத்தினால் பல நபர்களுடைய வாழ்க்கை சீரழிந்து சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கின்றது.

குறிப்பாக இளைஞர்கள் ஆண்ட்ராய்ட் அபத்தங்களினால் சீரழிவின் உச்சத்தில் விழுந்து விடுகின்றார்கள். சர்வ சாதாரணமாக வாட்ஸ்அப், முகநூல், யூ-டியூப் போன்ற வலைதளங்களின் மூலமாக ஆண்கள் அந்நியப் பெண்களிடத்தில் பேசுவதும், பெண்கள் அந்நிய ஆண்களிடத்தில் பேசுவதும், கொஞ்சிக் குலாவுவதும், காதல் என்ற பெயரில் கேடுகெட்ட காரியத்தில் விழுந்து சீரழிவதையும், கேவலமான ஆபாசப்படங்கள் பார்த்துச் சீரழிவதையும் பார்க்கின்றோம்.

நம்முடைய உடல் உறுப்புகளை விபச்சாரத்திலிருந்து தற்காத்துக் கொள்வதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அற்புதமான முறையில் சில உபதேசங்களை நமக்குக் கற்றுத் தந்திருக்கின்றார்கள்.

عَنِ ابْنِ مَسْعُودٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ
«الْعَيْنَانِ تَزْنِيَانِ، وَالْيَدَانِ تَزْنِيَانِ، وَالرِّجْلَانِ تَزْنِيَانِ، وَالْفَرْجُ يَزْنِي»

நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்:
மனிதனுடைய இரண்டு கண்கள் விபச்சாரம் செய்கின்றது. மனிதனுடைய இரண்டு கைகள் விபச்சாரம் செய்கின்றது. மனிதனுடைய இரண்டு கால்கள் விபச்சாரம் செய்கின்றது. இவைகள் அனைத்தையும் மறைஉறுப்பு உணமைப்படுத்துகிறது அல்லது பொய்ப்படுத்துகின்றது.

அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி)
நூல்: (அஹ்மத்: 3912) 

إِنَّ اللَّهَ كَتَبَ عَلَى ابْنِ آدَمَ حَظَّهُ مِنَ الزِّنَا، أَدْرَكَ ذَلِكَ لاَ مَحَالَةَ، فَزِنَا العَيْنِ النَّظَرُ، وَزِنَا اللِّسَانِ المَنْطِقُ، وَالنَّفْسُ تَمَنَّى وَتَشْتَهِي، وَالفَرْجُ يُصَدِّقُ ذَلِكَ كُلَّهُ وَيُكَذِّبُهُ»

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
விபச்சாரத்தில் மனிதனுக்குள்ள பங்கை இறைவன் எழுதியுள்ளான். அதை மனிதன் அடைந்தே தீருவான். (மர்ம உறுப்பின் விபச்சாரம் மட்டுமல்ல; கண்ணும் நாவும் கூட விபச்சாரம் செய்கின்றன.) கண் செய்யும் விபச்சாரம் (தவறான) பார்வையாகும். நாவு செய்யும் விபச்சாரம் (பாலுணர்வைத் தூண்டும்) பேச்சாகும். மனம் ஏங்குகிறது; இச்சை கொள்கிறது. மர்ம உறுப்பு இவை அனைத்தையும் உண்மையாக்குகிறது. அல்லது பொய்யாக்குகிறது.

ஆதாரம்: (புகாரி: 6243) 

இந்த ஹதீஸில் சொல்லப்பட்டிருக்கின்ற கடைசிக் கட்டத்தைத் தவிர மற்ற அனைத்து விதமான செயல்பாடுகளும் செல்ஃபோன்களில் உள்ள ஃபேஸ்புக், வாட்ஸ்அப், யூ-டியூப் போன்ற பல்வேறு வலைத்தளங்களில் உடல் உறுப்புகளின் விபச்சாரம் சர்வ சாதரணமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

இன்றைக்கு சினிமா பாடல்களைப் பார்ப்பதிலும், கேட்பதிலும், இரசிப்பதிலும் முக்கியத்துவம் கொடுக்கின்றனர். மேலும், சினிமா பாடல்களில் ஆபாசக் கருத்துக்களும், இரண்டு அர்த்தத்தைத் தரக்கூடிய வார்த்தைகளும் உலாவந்து சீரழிக்கின்றன.

 عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
«لَأَنْ يَمْتَلِئَ جَوْفُ رَجُلٍ قَيْحًا يَرِيهِ خَيْرٌ مِنْ أَنْ يَمْتَلِئَ شِعْرًا»

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு மனிதரின் வயிற்றில் புரையோடும் அளவுக்குச் சீழ் சலம் நிரம்பியிருப்பது, அது கவிதையால் நிரம்பியிருப்பதை விட மேலானதாகும்.

ஆதாரம்: (புகாரி: 6155) 

ஒரு மனிதன் தன்னுடைய உள்ளத்தில் கவிதை, பாடல் போன்ற பல்வேறு விஷயங்களால் நிரம்பியிருப்பதை விட, ஒரு மனிதனுக்கு உடலில் காயம் ஏற்பட்டால் அந்தக் காயம் ஆறாமல், அதிலிருந்து சீழ், சலம் வெளிப்படும். சீழ், சலத்தைப் பார்த்தாலே வாந்தி வருமளவுக்கு அதனுடைய துர்வாடை வீசும். அப்படிப்பட்ட சீழ், சலத்தால் தங்களுடைய உள்ளங்களை நிரப்பிக் கொள்வது சிறந்தது என்று நபி (ஸல்) அவர்கள் கடுமையாக எச்சரிக்கின்றார்கள்.

அற்ப சுகத்திற்கு ஆசைப்பட்டு நேரத்தையும், காலத்தையும் வீணாக்கி, நரக நெருப்பின் பக்கம் இழுத்துச் செல்லக்கூடிய சினிமாக்களையும், கூத்தாடிகளையும் ரசிப்பதன் பக்கம் சென்று, தன்னுடைய தலையில் தானே மண்ணை வாரிக் கொட்டக்கூடியவர்களுக்கு அல்லாஹ்வின் கடுமையான எச்சரிக்கை:

 وَلَا تَقْرَبُوا الزِّنٰٓى اِنَّهٗ كَانَ فَاحِشَةً  ؕ وَسَآءَ سَبِيْلًا‏

விபச்சாரத்திற்கு நெருங்காதீர்கள்! அது வெட்கக்கேடானதாகவும் தீய வழியாகவும் இருக்கிறது.

(அல்குர்ஆன்: 17:32)

لَا تَقْرَبُوا الْفَوَاحِشَ مَا ظَهَرَ مِنْهَا وَمَا بَطَنَ

வெட்கக்கேடான காரியங்களில் வெளிப்படையானதையும் இரகசியமானதையும் நெருங்காதீர்கள்!

(அல்குர்ஆன்: 6:151)

   وَالَّذِيْنَ هُمْ عَنِ اللَّغْوِ مُعْرِضُوْنَۙ

அவர்கள் வீணானதைப் புறக்கணிப்பார்கள்.

(அல்குர்ஆன்: 23:3)

இறைவனின் எச்சரிக்கை
وَمَنْ اَعْرَضَ عَنْ ذِكْرِىْ فَاِنَّ لَـهٗ مَعِيْشَةً ضَنْكًا وَّنَحْشُرُهٗ يَوْمَ الْقِيٰمَةِ اَعْمٰى‏
قَالَ رَبِّ لِمَ حَشَرْتَنِىْۤ اَعْمٰى وَقَدْ كُنْتُ بَصِيْرًا‏
قَالَ كَذٰلِكَ اَتَـتْكَ اٰيٰتُنَا فَنَسِيْتَهَا‌ۚ وَكَذٰلِكَ الْيَوْمَ تُنْسٰى‏
وَكَذٰلِكَ نَجْزِىْ مَنْ اَسْرَفَ وَلَمْ يُؤْمِنْۢ بِاٰيٰتِ رَبِّهٖ‌ؕ وَلَعَذَابُ الْاٰخِرَةِ اَشَدُّ وَاَبْقٰى‏

எனது போதனையைப் புறக்கணிப்பவனுக்கு நெருக்கடியான வாழ்க்கை உண்டு. அவனை கியாமத் நாளில் குருடனாக எழுப்புவோம். “என் இறைவா! நான் பார்வையுடையவனாக இருந்தேனே? ஏன் என்னைக் குருடனாக எழுப்பினாய்?’’ என்று அவன் கேட்பான்.

“அப்படித் தான். நம்முடைய வசனங்கள் உன்னிடம் வந்தன. அதை நீ மறந்தாய். அவ்வாறே இன்று மறக்கப்படுகிறாய்’’ என்று (இறைவன்) கூறுவான். தனது இறைவனின் வசனங்களை நம்பாமல் வரம்பு மீறி நடப்பவனுக்கு இவ்வாறே கூலி கொடுப்போம். மறுமையின் வேதனை கடுமையானது; நிலையானது.

(அல்குர்ஆன்: 20:124-127)

இந்த வசனங்களை ஆழமாகப் படித்துப் பார்த்தால், இறைவனின் கடுமையான எச்சரிக்கையை நம்முடைய கண்களுக்கு முன்னால் படம் பிடித்துக் காட்டுகின்றது. இறைவனின் வரம்புகளையும் போதனைகளையும் அறிவுரைகளையும் மீறி நடப்போரை மறுமை நாளில் இறைவன் குருடர்களாக எழுப்புவான்.

இந்த உலகத்தில் இறைவனுக்காகவே கஷ்டப்பட்டு வாழ்ந்து, கடும் சிரமத்திற்கு மத்தியில் அதிகமான நல்லமல்களைச் செய்து வந்த நாம், சில முட்டாள்தனமான செயல்களின் காரணத்தினால் நம்முடைய பார்வைப்புலன்களையும், செவிப்புலன்களையும், இன்னபிற உடல் உறுப்புகளையும் செம்மையாக, சரியாகப் பயன்படுத்தாமல், கேடுகெட்ட காரியத்திற்குப் பயன்படுத்திய காரணத்தினால், மறுமைநாளில் இறைவனைக் காண்கின்ற அற்புதமான பாக்கியத்தையும் கூட இழக்க நேரிடலாம்.

பெற்றோர்களின் கையில்…

மாணவர்கள், இளைஞர்கள், குழந்தைகள் சீரழிந்து சின்னாபின்னமாகி விடாமல் ஒழுக்கமான முறையில் வாழ வேண்டும் என்றால், ஒவ்வொரு பெற்றோரும் தங்களின் பிள்ளைகளை பேணிப் பாதுகாக்கக் கடமைட்டுள்ளோம். குறிப்பாக இன்றைய நவீன காலத்தில் பெண் குழந்தைகளைப் பெற்றெடுத்தவர்கள் மிகுந்த கவனத்தோடும் எச்சரிக்கை உணர்வோடும் தங்களின் பிள்ளைகளை பாதுகாக்கக் கடமைப்பட்டுள்ளார்கள்.

முன்னொரு காலம் இருந்தது. பெண்கள் கண்ணியமாகவும், ஒழுக்கமாகவும், வெட்க உணர்வோடும் வாழ்ந்து வந்த காலம் அது. ஆனால் இன்றைய காலகட்டத்தில் சில நல்ல பெண்களைத் தவிர, பெரும்பாலான பெண்கள் பெருமைக்காகவும், பகட்டுக்காகவும், ஆபாச உணர்வுகளை தூண்டுவதற்காகவும் தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொள்கின்றார்கள்.

பெண் குழந்தைகளைப் பெற்றெடுத்த பெற்றோர்கள் இஸ்லாமிய மார்க்கத்தின் பார்வையில் பாக்கியம் பெற்றவர்கள். பெண் குழந்தைகள் இறைவனின் அருட்கொடை, பரக்கத், ரஹ்மத், நற்செய்தி. தங்களுக்கு ஏற்படுகின்ற சிரமங்களை, கஷ்டங்களை சகித்துக் கொண்டு ஒழுக்கமுள்ள பிள்ளைகளாக நம்முடைய பிள்ளைகள் வளர்க்கப்பட்டால் நாம் அடைகின்ற நன்மைகள் ஏராளம்! ஏராளம்!

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

…«مَنِ ابْتُلِيَ مِنَ الْبَنَاتِ بِشَيْءٍ، فَأَحْسَنَ إِلَيْهِنَّ كُنَّ لَهُ سِتْرًا مِنَ النَّارِ»

யார் பெண் குழந்தைகளில் ஒன்றின் மூலம் சோதிக்கப்பட்டபோதும் அவர்களுக்கு நன்மை புரிவாரோ அவருக்கு அக்குழந்தைகள் நரகத்திலிருந்து காக்கும் திரையாக இருப்பார்கள்’’ என்றார்கள். (ஹதீஸ் சுருக்கம்)

ஆதாரம்:(முஸ்லிம்: 5125)

عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
«مَنْ عَالَ جَارِيَتَيْنِ حَتَّى تَبْلُغَا، جَاءَ يَوْمَ الْقِيَامَةِ أَنَا وَهُوَ» وَضَمَّ أَصَابِعَهُ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “யார் இரு பெண்குழந்தைகளை, அவர்கள் பருவ வயதடையும் வரை பொறுப்பேற்று கருத்தாக வளர்க்கிறாரோ அவரும் நானும் மறுமை நாளில் இப்படி வருவோம்‘’ என்று கூறிவிட்டு, தம் விரல்களை இணைத்துக் காட்டினார்கள்.

ஆதாரம்: (முஸ்லிம்: 5127) 

பெண்குழந்தைகள் மூலமாக பல்வேறு சோதனைகள், கஷ்டங்கள், சிரமங்கள் ஏற்பட்டாலும், அந்தச் சோதனைகளையெல்லாம் சகித்துக் கொண்டு மார்க்க அடிப்படையில், ஒழுக்கத்தோடு நம்முடைய பிள்ளைகளை வளர்த்தெடுத்தால் அந்தக் குழந்தைகள் தங்களைப் பெற்றெடுத்த பெற்றோரை நரகத்திலிருந்து காப்பாற்றும் திரையாக இருக்கும்.

இன்றைய காலத்தில் பெண்குழந்தைகள் நரக நெருப்பில் விழுகின்ற காரியங்களை சர்வ சாதாரணமாகச் செய்து வருகின்றார்கள். பள்ளிக்கூடங்களிலும், கல்லூரிகளிலும், ஆண் – பெண் இருவரும் சேர்ந்து படிக்கின்ற கல்வி நிலையங்களிலும், அலுவலகங்களிலும் ஒரு சிலர் சீரழிந்து சின்னாபின்னமாகி தங்கள் வாழ்க்கையைக் குழிதோண்டி புதைப்பதைப் பார்க்கின்றோம்.

பெற்றோர்களின் அலட்சியத்தின் காரணத்தினால், நம்முடைய பிள்ளைகள் நல்ல பிள்ளைகள் என்று நம்பி கண்டுகொள்ளாமல் அலட்சியமாக இருந்ததன் காரணத்தினால் இவர்கள் தாங்களும் கெட்டு, பெற்றோருக்கும் அவப்பெயர் வாங்கிக் கொடுத்து விடுகின்றார்கள். எல்லாக் குழந்தைகளும் நல்லவர்களாகத்தான் வாழ்வதற்கு முயற்சி செய்கின்றார்கள்.

ஆனால், காலச்சூழல் அவர்களைக் கெட்டவர்களாக மாற்றி விடுகின்றது. இன்ஷா அல்லாஹ் இனிவரும் காலங்களில் ஒவ்வொரு பெற்றோரும் தங்களுடைய பிள்ளைகளை கவனத்துடனும், கூரிய பார்வையுடனும் கவனித்து வந்தால் அந்நிய ஆண்களோடு தொடர்பு வைப்பது, காதலிப்பது, செல்ஃபோன்களில் ஆபாசப் பேச்சுக்களைப் பேசுவது, வீட்டை விட்டு ஓடிப் போவது போன்ற பல்வேறு கேடுகெட்ட காரியங்களுக்கு மரணஅடி கொடுத்து விடலாம்.

பெற்றோர்களே! சீரழிவைத் தடுத்து நிறுத்துவது உங்களுடைய கரங்களிலே இருக்கின்றது. பிள்ளைகளுக்கு மார்க்க விஷயங்களை அதிகம் கற்றுக் கொடுத்து அவர்களை நரக நெருப்பிலிருந்து காப்பாற்றுங்கள்.

يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا قُوْۤا اَنْفُسَكُمْ وَاَهْلِيْكُمْ نَارًا وَّقُوْدُهَا النَّاسُ وَالْحِجَارَةُ عَلَيْهَا مَلٰٓٮِٕكَةٌ غِلَاظٌ شِدَادٌ لَّا يَعْصُوْنَ اللّٰهَ مَاۤ اَمَرَهُمْ وَيَفْعَلُوْنَ مَا يُؤْمَرُوْنَ‏

நம்பிக்கை கொண்டோரே! உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் நரகை விட்டுக் காத்துக் கொள்ளுங்கள்! அதன் எரிபொருள் மனிதரும் கற்களுமாகும். அதன் மேல் கடுமையும் கொடூரமும் கொண்ட வானவர்கள் உள்ளனர். தமக்கு அல்லாஹ் ஏவியதில் மாறு செய்ய மாட்டார்கள். கட்டளையிடப்பட்டதைச் செய்வார்கள்.

(அல்குர்ஆன்: 66:6)

يَعِدُهُمْ وَيُمَنِّيْهِمْ‌ ؕ وَمَا يَعِدُهُمُ الشَّيْـطٰنُ اِلَّا غُرُوْرًا‏

அவர்களுக்கு ஷைத்தான் வாக்களிக்கிறான். ஆசை வார்த்தை கூறுகிறான். ஷைத்தான் அவர்களுக்கு ஏமாற்றத்தையே வாக்களிக்கிறான்.

(அல்குர்ஆன்: 4:120)

உங்கள் பிள்ளைகள் ஷைத்தானின் வலையில் விழுந்து விடாமல் பாதுகாப்பது உங்கள் கைகளில் தான் உள்ளது. எனவே சீழிவை நோக்கிய வாழ்விலிருந்து அல்லாஹ் நம்மை பாதுகாக்க வேண்டும். அப்படிப்பட்ட நன் மக்களாக அல்லாஹ் நம்மை ஆக்கி அருள் புரிவானாக.!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹு.