சிலை வழிபாடு! இறை வழிபாடா?

பயான் குறிப்புகள்: தற்காலிக நிகழ்வுகள்

சிலை வழிபாடு! இறை வழிபாடா?

சபரிமலை அய்யப்பன் கோவிலில் பெண்கள் நுழைந்து வழிபாடு செய்யலாம் என உச்சநீதி மன்றம் தீர்ப்பளித்துள்ளது. உச்சநீதி மன்றத்தின் இந்தத் தீர்ப்பை காவி அமைப்புகள் மட்டும் எதிர்த்துள்ளன. மற்ற அனைவரும் இந்தத் தீர்ப்பை ஆரவாரம் செய்து வரவேற்றுள்ளனர். சபரிமலை கோவிலில் பெண்கள் இதுவரை அனுமதிக்கப்படவில்லை.

அதனால் பெண்களின் குடி முழுகிப் போய் விட்டதா? வரும்18ஆம் தேதி முதல் இந்தக் கோவிலுக்குள் பெண்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். அதனால் பெண்களின் வாழ்வில் வசந்தம் வீசப் போகிறதா? இப்படி எதுவுமே நடந்து விடப் போவதில்லை என்பதின் மூலம் ஏன் இந்த ஆரவாரம்? என்பது தெரியவில்லை.

சபரிமலை கோவிலில் இருந்த சிலை இதுவரை சிலையாகவே இருந்தது. இந்த சிலையை பெண்கள் வழிபட ஆரம்பித்தவுடன் சிலையின் கண்கள் திறந்து விடப் போகிறதா? காதுகள் கேட்டு விடப் போகிறதா? வாய் பேசி விடப் போகிறதா? சிலைக்கு உயிர் வந்து, அது பக்தர்களுக்கு நன்மை செய்து விடப் போகிறதா? இந்த அதிசயம் எதுவும் நிகழ்ந்து விடப் போவதில்லை என்பதின் மூலம் உச்சநீதி மன்றத் தீர்ப்புக்கு ஆதரவாக கொடுக்கப்படும் ஆரவாரம் வெற்று ஆரவாரம் என்பதில் சந்தேகமே இல்லை.

சிலை வணக்கம் என்பது மூடநம்பிக்கை. இறை நம்பிக்கை என்பது பகுத்தறிவு. உச்சநீதி மன்றத் தீர்ப்பால் இந்த பகுத்தறிவு தூண்டிவிடப்படவில்லை என்பது உத்தேசமே! சபரிமலை அய்யப்பன் கோவில் வழக்கை உச்சநீதி மன்றம் சமத்துவம் என்ற அளவுகோலை வைத்து அளந்துள்ளது. அதனால் தான் இத்தகைய தீர்ப்பை அது வழங்கியுள்ளது.

டாஸ்மாக் பார்களில் பெண்கள் அமர்ந்து குடிப்பதற்கு தனி வசதி எதுவும் செய்து கொடுக்கப்படவில்லை. அது பெண்களின் சமத்துவ உரிமைக்கு எதிரான செயல் என்று உச்சநீதி மன்றம் கருதி, இதற்காகவும் உத்தரவை பிறப்பித்து விடக்கூடாது. பெண்கள் பிள்ளை பெறுகிறார்கள். இது பெண் சமத்துவத்திற்கு எதிரான செயல். எனவே பெண்களுக்கு சமமாக ஆண்களும் பிள்ளை பெற வேண்டும் என உச்சநீதி மன்றம் உத்தரவிடுமோ? என்ற அச்சம் எழுவதை தடுக்க முடியவில்லை.

சபரிமலை வழக்கை உச்சநீதி மன்றம் பகுத்தறிவு கண் கொண்டு பார்த்திருந்தால் சிலை வணக்கம் – ஒரு இணை வைப்பு. இறைவனுக்கு இணை வைக்கும் இந்த செயலை ஆண்களும் செய்யக்கூடாது. பெண்களும் செய்யக்கூடாது என தீர்ப்பு வழங்கி இருக்கும். ஆனால் இது மாதிரியான தீர்ப்பு வெளியாகவில்லை. இந்தியாவில் நிலவும் நிறைய மூடநம்பிக்கை செயல்களுக்கு சிலை வணக்கமே காரணமாக இருக்கிறது. உயிரற்ற ஒரு சிலையை வைத்துக் கொண்டு அப்பாவி மக்கள் அடிக்கும் கூத்து சொல்லிமாளாது. இதை ஏனோ உச்சநீதி மன்றம் உணரத் தவறிவிட்டது.

இந்தியா இணைவைப்பு நாடல்ல. இது ஒரு மதச்சார்பற்ற நாடு. இந்த மதச்சார்பற்ற நாட்டில் இறைவனுக்கு இணை வைக்காத 19கோடி முஸ்லிம்கள் வாழ்ந்து வருகின்றனர். இதை கருத்தில் கொண்டு இணைவைப்புக்கு ஆதரவான தீர்ப்பை உச்சநீதி மன்றம் வழங்காமல் இருந்திருக்கலாம்.

சமீப காலமாக உச்சநீதி மன்றம் அளிக்கும் தீர்ப்புகள் சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் இருக்கின்றன என்பதை ஒருவரும் மறுத்து விட முடியாது. கடந்த மாதம் ஓரினச் சேர்க்கை குற்றமல்ல என தீர்ப்பளித்த உச்சநீதி மன்றம் இந்த மாதம் திருமண உறவை மீறிய செக்ஸ் குற்றமல்ல என்றும் தீர்ப்பு வழங்கியது. இந்த சர்ச்சை தீர்ப்புகளோடு சபரிமலை குறித்த தீர்ப்பையும் எடுத்துக் கொள்ளலாம்.

முஹம்மது பின் காசிம் முதற்கொண்டு முகலாய மன்னன் பஹதுர்ஷா வரை ஆயிரம் ஆண்டுகள் முஸ்லிம்கள் இந்தியாவை ஆண்டுள்ளனர். இந்தியாவில் இப்போதும் 19 கோடிக்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் வசிக்கின்றனர். இப்படிப் பட்ட இந்தியாவில் சிலை வழிபாட்டிற்கு சட்ட அந்தஸ்து கொடுப்பது ஏற்புடையதல்ல. சிலை வழிபாட்டால் பொது மக்களுக்கு எந்த நன்மையும் இல்லை.

தீமை என்று எடுத்துக் கொண்டால் நரபலி முதற்கொண்டு சூனியம் வரை அடுக்கிக் கொண்டே போகலாம். அப்படி இருக்கும் போது இந்தியாவுக்கு கேடு தரும் சிலை வணக்கத்தை ஊக்குவிக்காமலேயே இருப்பதே தேசப்பற்றாக இருக்க முடியும். இந்த தேசப்பற்று எல்லோரிடத்திலும் மிளிர வேண்டும் என்பதே முஸ்லிம்களின் ஆதங்கம். இந்திய அரசமைப்புச் சட்டம் மதச்சார்பின்மையை போதிக்கிறது. சிலை வணக்கம் என்பது மதச்சார்பின்மைக்கு எதிரான ஒன்றாகும். இதை இந்திய மக்கள் உணர தவறி விடக் கூடாது.

இறை நம்பிக்கை என்பது வேறு. சிலை வணக்கம் என்பது வேறு. சிலை வணக்கம் ஒருக்காலும் இறை நம்பிக்கையாகாது. இதை இந்தியர்களில் அதிகமானோர் அறியாத நிலையிலேயே உள்ளனர். இந்த அறியாமை அகல வேண்டும் என்று முஸ்லிம்கள் விரும்புகின்றனர்.

மும்பையில் உள்ள ஹாஜி அலி தர்காவில் பெண்கள் அனுமதிக்கப் படவில்லை. உச்சநீதி மன்றம் இந்த விவகாரத்தில் தலையிட்டு, பெண்களுக்கு அந்தத் தடையை விளக்கியது. அதை அப்போது சங்பரிவார சக்திகள் பெரிதும் வரவேற்றனர். அதே சக்திகள் இப்போது சபரிமலை விவகாரத்தில் எதிர் நிலைப்பாடு எடுக்கின்றனர். ஆனால் முஸ்லிம்களை பொறுத்தவரை சிலை வழிபாடும் கூடாது. தர்காவில் உள்ள சமாதி வழிபாடும் கூடாது.

இந்தக் கொள்கையில் முஸ்லிம்கள் என்றும் ஒரே நிலையில் உள்ளனர். இதை தேசம் சிந்தித்துப் பார்த்து சிலை வணக்க விவகாரத்திலும் நல்லதொரு முடிவை எடுக்க வேண்டும். எடுத்து சிலை வணக்கம் என்பது வேறு. இறை நம்பிக்கை என்பது வேறு. இரண்டும் ஒன்று என்ற தீர்க்கமான முடிவுக்கு வந்து, மூடநம்பிக்கைகளும், மூட செயல்பாடுகளும் இல்லாத நாடாக இந்தியாவை உருவாக்க பாடுபட வேண்டும். அவ்வளவு தான்……

 

Source : unarvu ( 05/10/18 )