சிறுவர்களுக்கு வணக்கங்கள் அவசியமா?

கேள்வி-பதில்: தொழுகை

சிறுவர்களுக்கு வணக்கங்கள் அவசியமா?

எட்டு வயதுப் பிள்ளை சுபுஹு தொழுகைக்கு எழுந்திரிக்கா விட்டால் எழுந்தவுடன் தொழுகச் சொல்லலாமா?

பதில் :

பொதுவாக மார்க்கக் கடமைகள் யாவும் பருவ வயதை அடைந்தவர்கள் மீதே சுமத்தப்பட்டுள்ளது. தொழாமல் உறங்கிவிட்டால் விழித்தவுடன் தொழுகையை நிறைவேற்றுவது பருவ வயதை அடைந்தவர்கள் மீது தான் கடமை.

எட்டு வயதுப் பிள்ளை இது போன்று செய்தால் அத்தொழுகையைத் திரும்ப நிறைவேற்றுவது அதன் மீது கடமையில்லை என்றாலும் இவ்விஷயத்தில் பெரியவர்களைப் போன்று இவர்களைப் பழக்குவதற்காக தொழுகையைத் திரும்ப தொழச் சொன்னால் அது நல்ல காரியமே.

ஏனென்றால் பொதுவாகக் குழந்தைகளை வணக்க வழிபாடுகளிலும் ,நற்காரியங்களிலும் ஈடுபடுத்துவது வரவேற்கத்தக்க அம்சமாகும்.

குழந்தைகள் தொழுகை, நோன்பு போன்ற வணக்கங்களைச் செய்வதற்குப் பயிற்சி அளிக்க வேண்டும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் நபித்தோழர்கள் தங்கள் குழந்தைகளுக்கு இவ்வாறு பயிற்சி அளித்துள்ளனர்.

(ஒரு நாள்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பாதி இரவு வரை) இஷாத் தொழுகையைப் பிற்படுத்தினார்கள். உமர் (ரலி) அவர்கள் அவர்களை அழைத்து, (தொழுகைக்கு வந்திருந்த) பெண்களும் சிறுவர்களும் உறங்கி விட்டனர் என்று கூறியதும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தமது அறையிலிருந்து) புறப்பட்டு வந்து, “பூமியில் வசிப்போரில் உங்களைத் தவிர வேறு யாரும் இந்தத் தொழுகையைத் தொழவில்லை” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)

(புகாரி: 862)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முஹர்ரம் பத்தாம் நாள் (ஆஷூரா தினத்தன்று) காலையில் அன்ஸாரிகளின் கிராமங்களுக்கு ஆளனுப்பி, “யார் நோன்பு நோற்காதவராகக் காலைப் பொழுதை அடைந்து விட்டாரோ அவர் இன்றைய தினத்தின் எஞ்சிய நேரத்தை (நோன்பாக) நிறைவு செய்யட்டும்! யார் நோன்பாளியாகக் காலைப்பொழுதை அடைந்தாரோ அவர் நோன்பைத் தொடரட்டும்!” என்று அறிவிக்கச் செய்தார்கள். நாங்கள் அதன் பின்னர் அந்நாளில் நோன்பு நோற்கலானோம்; எங்கள் சிறுவர்களையும் நோன்பு நோற்க வைப்போம். கம்பளியாலான விளையாட்டுப் பொருட்களை அவர்களுக்காக நாங்கள் செய்வோம்; அவர்கள் (பசியால்) உணவு கேட்டு அழும் போது நோன்பு முடியும் நேரம் வரை (அவர்கள் பசியை மறந்திருப்பதற்காக) அவர்களிடம் அந்த விளையாட்டுப் பொருட்களைக் கொடுப்போம்.

அறிவிப்பவர் : ருபய்யிஉ பின்த் முஅவ்வித் (ரலி)

(புகாரி: 1960)

நான் ஏழுவயதுச் சிறுவனாக இருந்த போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் ஹஜ்ஜுக்கு அழைத்துச் செல்லப்பட்டேன்!

அறிவிப்பவர் : ஸாயிப் பின் யஸீத் (ரலி)

(புகாரி: 1858)

ஒரு பெண், தன் குழந்தையைத் தூக்கி, “இவனுக்கும் ஹஜ் உண்டா?” என்று கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், “ஆம்; (அதற்காக) உனக்கும் நற்பலன் உண்டு” என விடையளித்தார்கள்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)

(முஸ்லிம்: 2596)