சிறுவயது ஆயிஷாவை நபி திருமணம் செய்தது ஏன்?

கேள்வி-பதில்: திருமணம்

சிறுவயது ஆயிஷாவை நபி திருமணம் செய்தது ஏன்?

சிறுமிகளைத் திருமணம் செய்யக் கூடாது என்ற தடை விதிக்கப்படுவதற்கு முன் அந்த வழக்கப்படி நபிகள் நாயகம் ஸல் அவர்களும் சிறு வயதுடைய ஆயிஷா (ரலி) அவர்களைத் திருமணம் செய்தார்கள்.

ஆயிஷா (ரலி) அவர்களுக்கு ஆறு வயது இருக்கும் போது அவர்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மணமுடித்தார்கள் என்று ஆதாரப்பூர்வமான செய்திகளில் கூறப்பட்டுள்ளது.

5133 حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ حَدَّثَنَا سُفْيَانُ عَنْ هِشَامٍ عَنْ أَبِيهِ عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تَزَوَّجَهَا وَهِيَ بِنْتُ سِتِّ سِنِينَ وَأُدْخِلَتْ عَلَيْهِ وَهِيَ بِنْتُ تِسْعٍ وَمَكَثَتْ عِنْدَهُ تِسْعًا رواه البخاري        

நான் ஆறு வயதுடையவளாய் இருந்த போது என்னை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மணந்து கொண்டார்கள். எனக்கு ஒன்பது வயதான போது என்னுடன் தாம்பத்திய உறவைத் தொடங்கினார்கள். நான் அவர்களுடன் ஒன்பது வருடங்கள் (மனைவியாக) வாழ்ந்தேன்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)

நூல் : புகாரி (5133)

நபிகள் நாயகம் ஸல் அவர்கள் இறைத்தூதராக நியமிக்கப்பட்ட உடன் இஸ்லாத்தின் அனைத்து சட்டங்களும் ஒரே நேரத்தில் அருளப்படவில்லை. சிறிது சிறிதாக 23 ஆண்டுகளில் ஒவ்வொரு சட்டமாகவே அவர்களுக்கு அருளப்பட்டது. எனவே இறைவனிடம் இருந்து எது குறித்து சட்டம் அருளப்படவில்லையோ அந்த விஷயங்களில் அந்த சமுதாயத்தில் நிலவிய பழக்க வழக்கங்களின் படியே நடந்து கொண்டனர். அன்றைய மக்கள் மதுபானம் அருந்தக் கூடியவர்களாக இருந்தனர். அது குறித்து இறைவனின் தடை உத்தரவு வருவது வரை இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவர்களும் தங்களின் பழைய வழக்கத்தையே தொடர்ந்தனர். இறைவன் தடை செய்யாததால் நபிகள் நாயகம் ஸல் அவர்களும் அதைத் தடை செய்யவில்லை.

அது போல் தான் சிறுவயதுப் பெண்ணை திருமணம் செய்வது அன்றைய அரபுகள் மத்தியில் சாதாரணமாக நடந்து வந்தது. சிறுமிகளைத் திருமணம் செய்யக் கூடாது என்ற தடை விதிக்கப்படுவதற்கு முன் அந்த வழக்கப்படி நபிகள் நாயகம் ஸல் அவர்களும் சிறு வயதுடைய ஆயிஷா (ரலி) அவர்களைத் திருமணம் செய்தார்கள்.

பின்னர் திருமணத்திற்கான ஒழுங்குகள் இறைவன் புறத்தில் இருந்து அருளப்பட்டன. விபரமில்லாத சிறுமிகளைத் திருமணம் செய்வதை இஸ்லாம் முற்றாகத் தடை செய்தது.  திருமண வயது என்று ஒரு குறிப்பிட்ட வயதை இஸ்லாம் குறிப்பிடாவிட்டாலும் ஒரு பெண் திருமணம் செய்து கொள்ள வேண்டிய தருணம் எது என்பதை மிகத் தெளிவாக குறிப்பிடுகிறது.

திருமணம் என்பது கடுமையான உடன்படிக்கை என்றால் கணவன் மனைவி ஆகிய இருவரும் திருமணம் என்றால் என்ன? எதற்காகத் திருமணம் செய்யப்படுகிறது? ஆணுக்கும் பெண்ணுக்கும் உள்ள வேறுபாடு என்ன? என்பதையெல்லாம் அறிந்தால் தான் அதை ஒப்பந்தம் என்று கூற முடியும். எனவே இதை எல்லாம் அறிய முடியாத பருவத்தில் உள்ள ஆணுக்கோ பெண்ணுக்கோ திருமணம் செய்விப்பதற்கு இப்போது அனுமதி இல்லை. இந்தச் சட்டம் நடைமுறையில் இலலாத காலத்தில் நடந்த திருமணம் குறித்து நாம் அலட்டிக் கொள்ளத் தேவை இல்லை.