சின்னஞ்சிறு அமல்களில் பென்னம் பெரும் நன்மைகள்
சின்னஞ்சிறு அமல்களில் பென்னம் பெரும் நன்மைகள்
அன்பிற்குரிய சகோதர, சகோதரிகளே!
எல்லாம் வல்ல ஏக இறைவனின் நல்லடியார்களே!
இறைவனை நம்பிக்கை கொண்டு விட்டால் மாத்திரம் போதாது. நற்செயல்களை போட்டி போட்டு செய்வதன் மூலமும் தான் சுவனத்திற்குள் இலகுவாக நுழைய முடியும் என்பது இஸ்லாத்தின் அடிப்படை. அந்த அடிப்படையில் பல்வேறு சின்னஞ்சிறு அமல்களில் பென்னம் பெரும் நன்மைகளை இஸ்லாம் வைத்துள்ளது. உதாரணமாக,
நல்ல வார்த்தைகளைப் பேசுதல்
தேவையற்ற பேச்சுக்களைப் பேசாமல் நல்ல வார்த்தைகளைப் பேசுவதால் அதிக நன்மையை அடைய முடியும்.
நல்ல வார்த்தை பேசுவது தர்மமாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறி : அபூஹுரைரா (ரலி),
நூல் : (புகாரி: 6023)
மற்றவருக்காகப் பிரார்த்தனை செய்தல்
மற்றவருக்காக நாம் துஆச் செய்தால் அதற்காக அதிக நன்மைகள் கிடைக்கின்றன. எத்தனையோ பேர் நம்மிடம் துஆச் செய்யும்படி சொல்லியிருப்பார்கள். அதை நாம் அலட்சியப்படுத்தாமல் நம்முடைய வாழ்வில் செயல்படுத்த வேண்டும்.
ஒரு மனிதன் தன்னுடைய சகோதரனுக்காக மறைவில் துஆச் செய்தால், “உனக்கும் அவ்வாறே ஏற்படட்டும்” என்று வானவர்கள் அவருக்காக வேண்டுவார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறி : அபுத்தர்தா (ரலி),
நூல் : (அபூதாவூத்: 1534)
பிற முஸ்லிமைப் பார்த்து புன்னகை செய்தல்
வழியில் நாம் சந்திக்கும் ஒரு முஸ்லிமைப் பார்த்து நல்ல எண்ணத்துடன் புன்னகைத்தால் அதற்கும் நன்மை கிடைக்கும் என்று இஸ்லாம் கூறுகின்றது. இப்படிப்பட்ட ஓர் அருமையான மார்க்கத்தில் இருக்கும் நாம் அதன் சிறப்பைப் பற்றி தெரியாமல் இருக்கின்றோம்.
உன்னுடைய சகோதரனுடைய முகத்தைப் பார்த்து நீ சிரிப்பது கூட உனக்கு நன்மையாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறி : அபூதர் (ரலி),
நூல் : (முஸ்லிம்: 5122) (4760)
குறைந்த தர்மம் அதிக நன்மை
நம்மில் அதிகமானோர் தர்மம் செய்யும் விஷயத்தைப் பற்றி தவறாகப் புரிந்து வைத்துள்ளனர். அதாவது அதிகமான பொருளைத் தான் தர்மம் செய்ய வேண்டும் என்று நினைக்கிறார்கள். அப்படியல்ல! தூய்மையான சம்பாத்தியத்தில், தூய்மையான எண்ணத்துடன் நம்மால் முடிந்ததை தர்மம் செய்தாலும் அதற்கு இறைவனிடம் கூலி உண்டு. நமக்கு அது அற்பமாகத் தெரிந்தாலும் இறைவனிடம் அது மிகப் பெரியதாக இருக்கும்.
எவர் முறையான சம்பாத்தியத்தில் ஒரு பேரீச்சம்பழத்தின் அளவு தர்மம் செய்தாரோ – அல்லாஹ் பரிசுத்தமானதைத் தவிர வேறு எதையும் ஏற்றுக் கொள்ள மாட்டான் – அதை அல்லாஹ் தனது வலக்கரத்தால் ஏற்றுக் கொண்டு, பிறகு நீங்கள் உங்கள் குதிரைக் குட்டியை வளர்ப்பது போன்று அதன் நன்மையை மலை போல் உயரும் அளவிற்கு வளர்த்து விடுவான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறி : அபூஹுரைரா (ரலி),
நூல் : (புகாரி: 1410)
இது போன்ற சின்னச் சின்னச் செயல்களை நேரம் கிடைக்கும் போதெல்லாம் செய்து, இறைவனிடத்தில் அதிக நன்மைகளை பெறும் நன்மக்களாக அல்லாஹ் நம் அனைவரையும் ஆக்கி அருள்புரிவானாக!