08) சாம்பலாக்கப்பட்டவர்களுக்கு கப்ரு வேதனை எப்படி?
சாம்பலாக்கப்பட்டவர்களுக்கு கப்ரு வேதனை எப்படி
கப்ரு வேதனை கடல் பயணத்தில் இறந்தவர்கள், உடலை எரித்துச் சாம்பலாக்கி பல பகுதிகளில் தூவி விடப்பட்டவர்கள், மிருகங்களால் அடித்துக் கொல்லப்பட்டு அவற்றுக்கு உணவாகிப் போனவர்கள், ஆகியோருக்கு கப்ரு வேதனை எவ்வாறு? இவர்களுக்குக் கப்ரே கிடையாது எனும் போது கப்ரு வேதனை எவ்வாறு இருக்கும்?
என்ற சந்தேகம் பரவலாக இருக்கின்றது.
கப்ரு வேதனையைக் குறிப்பிடும் போது அடக்கம் செய்யப்பட்ட இடத்தைக் கூறுவது பெரும்பான்மையைக் கருத்தில் கொண்டே சொல்லப்படுகின்றது. மண்ணுக்குள்ளே தான் அந்த வேதனை நடக்கிறது என்று கருதிக் கொள்ளக் கூடாது. இவ்வாறு நாம் கூறுவதற்கு நியாயமான காரணங்கள் உள்ளன.
முஸ்லிம்களானாலும், முஸ்லிமல்லாதவர்களானாலும் அவர்கள் அனைவரும் கப்ருடைய வாழ்வைச் சந்தித்தே தீருவார்கள். முஸ்லிமல்லாதவர்களும் கப்ரில் வேதனை செய்யப்படுவார்கள் என்பதைப் பல ஹதீஸ்கள் கூறுகின்றன.
(பார்க்க(புகாரி: 1207, 1252)
மண்ணுக்குள் அடக்கம் செய்யப்பட்டவர்கள் மட்டுமே கப்ரில் வேதனை செய்யப்படுகிறார்கள் என்று நாம் கூறினால் பெரும்பாலான முஸ்லிமல்லாதவர்கள் அந்த வேதனையிலிருந்து விடுதலை பெறுகிறார்கள் என்ற நிலை ஏற்படும். ஏனெனில் அவர்களை மண்ணில் புதைக்காமல் எரித்துச் சாம்பலாக்கி விடுகின்றனர்.
பாவம் செய்த முஸ்லிம்களை கப்ரில் வேதனை செய்யும் இறைவன் முஸ்லிமல்லாதவர்களுக்கு அத்தகைய வேதனை வழங்க மாட்டான் என்பது இறைவனின் நியதிக்கும், அவனது நியாயத்திற்கும் ஏற்புடையதாக இல்லை.
لَعَلِّىْۤ اَعْمَلُ صَالِحًـا فِيْمَا تَرَكْتُؕ كَلَّا ؕ اِنَّهَا كَلِمَةٌ هُوَ قَآٮِٕلُهَاؕ وَمِنْ وَّرَآٮِٕهِمْ بَرْزَخٌ اِلٰى يَوْمِ يُبْعَثُوْنَ
முடிவில் அவர்களில் யாருக்கேனும் மரணம் வரும் போது ‘என் இறைவா! நான் விட்டு வந்ததில் நல்லறம் செய்வதற்காக என்னைத் திருப்பி அனுப்புங்கள்!’ என்று கூறுவான். அவ்வாறில்லை! இது (வாய்) வார்த்தை தான். அவன் அதைக் கூறுகிறான். அவர்கள் உயிர்ப்பிக்கப்படும் நாள் வரை அவர்களுக்குப் பின்னால் திரை உள்ளது.
கப்ருடைய வேதனை என்பது ஒரு திரை மறைவு வாழ்க்கை என்பது இந்த வசனத்திருந்து புரிகிறது. மண்ணுக்குள் தான் அது நடக்க வேண்டும் என்று அர்த்தமில்லை.
ஓரு நல்லடியார் அடக்கம் செய்யப்பட்ட அதே இடத்தில் சில ஆண்டுகளுக்குப் பின் ஓரு கெட்டவர் அடக்கம் செய்யப்படுகின்றார். அடக்கம் செய்த இடத்திற்குள்ளேயே வேதனை நடக்கிறது என்றால் இங்கே கருத்துக் குழப்பம் ஏற்படும்.
اَللّٰهُ يَتَوَفَّى الْاَنْفُسَ حِيْنَ مَوْتِهَا وَالَّتِىْ لَمْ تَمُتْ فِىْ مَنَامِهَا ۚ فَيُمْسِكُ الَّتِىْ قَضٰى عَلَيْهَا الْمَوْتَ وَ يُرْسِلُ الْاُخْرٰٓى اِلٰٓى اَجَلٍ مُّسَمًّى ؕ اِنَّ فِىْ ذٰ لِكَ لَاٰیٰتٍ لِّقَوْمٍ يَّتَفَكَّرُوْنَ
உயிர்களை அவை மரணிக்கும் நேரத்திலும், மரணிக்காதவற்றை அவற்றின் உறக்கத்திலும் அல்லாஹ் கைப்பற்றுகிறான். எதற்கு மரணத்தை விதித்து விட்டானோ அதைத் தனது கைவசத்தில் வைத்துக் கொண்டு மற்றதை குறிப்பிட்ட காலம் வரை விட்டு விடுகிறான். சிந்திக்கிற மக்களுக்கு இதில் பல சான்றுகள் உள்ளன.
அனைத்து உயிர்களையும் இறைவன் தன் கைவசம் வைத்துள்ளான் என்பது இந்த வசனத்திலிருந்து தெளிவு. நமது புலனுக்குத் தென்படாத மற்றொரு உலகத்தில் அந்த ஆத்மாக்களுக்கு அவன் வேதனையோ, சுகமோ வழங்குவான் என்று எடுத்துக் கொண்டால் ‘எவருமே கப்ருடைய வாழ்விலிருந்து தப்பிக்க இயலாது’ என்ற கருத்து நிலை பெறும்.
கப்ருகளுக்கு நாம் ஸலாம் கூறுவதும், ஸியாரத்துக்குச் செல்வதும், கப்ரில் வேதனை செய்யப்பட்ட இருவரின் அடக்கத்தலத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பேரீச்சம் மட்டையைப் பிளந்து ஊன்றியதும் அடக்கம் செய்யப்பட்ட இடத்திலேயே வேதனை செய்யப்படுகின்றது என்ற கருத்தைத் தருவது உண்மையே.
இதை அடிப்படையாக வைத்து மண்ணுக்குள் தான் வேதனை செய்யப்படுகிறது என்று நாம் முடிவு செய்தால் முஸ்லிமல்லாதவர்கள் அந்த வேதனையிலிருந்து தப்பித்து விடுவார்கள் என்ற நிலை ஏற்படுகின்றது.
அடக்கம் செய்யப்பட்டவர்களின் கப்ரு வாழ்க்கை அடக்கத்தலத்தில் அமையும். அடக்கம் செய்யப்படாதவர்களுக்கு வேறு விதமான கப்ரு வாழ்வை அமைப்பது இறைவனுக்குச் சிரமமல்ல.
அல்லது அனைவருக்குமே மண்ணுலகம் அல்லாத மற்றொரு உலகில் கப்ருடைய வாழ்வை இறைவன் அமைக்கலாம்.
அடக்கத்தலம் அடையாளமாக இருப்பதால் அடக்கத் தலத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பேரீச்ச மட்டைகளை நட்டு வைத்திருக்கலாம். எப்படி வைத்துக் கொண்டாலும் கப்ருடைய வாழ்விலிருந்து எவரும் விதி விலக்கு பெற முடியாது என்பதில் சந்தேகமில்லை.