சாப்பிடுவதின் ஒழுங்குகள்

பயான் குறிப்புகள்: பொதுவான தலைப்புகள் – 4

சாப்பிடுவதின் ஒழுங்குகள்

முன்னுரை

மனிதனின் அத்தியாவசியத் தேவைகளில் மிக முக்கியமானது உணவு. ஏதாவது ஒரு முறையில் இத்தேவை நிறைவேறாவிட்டால் மனிதனால் உயிர் வாழ முடியாது. இத்தேவை நபி(ஸல்)அவர்கள் கூறிய முறைப்படி நிறைவேறினால் தேவையும் நிறைவேறும்,சிறந்த அமல் செய்த நன்மையும் கிடைக்கும்.

இஸ்லாம் நமது வாழ்க்கை முறை சிறப்பாக அமைய ஒழுக்க முறைகளைக் கற்றுத் தருகிறது. சின்ன சின்ன விஷயங்களுக்குக் கூட நல்லொழுக்கங்களை நமது நபி (ஸல்) அவர்கள் நமக்கு கற்றுத் தந்திருக்கிறார்கள்.நாம் சாப்பிடும் போது எந்த ஒழுங்குகளை கடைப்பிடித்து சாப்பிட வேண்டும் என்பதை நபியவா்கள் நமக்கு அழகான முறையில் கற்று தந்துள்ளார்கள். அவைகளை ஒன்றன் பின் ஒன்றாக கவனிப்போம்.

தூய்மையான உணவுப் பொருட்களைத் தான் சாப்பிட வேண்டும்

தூய்மையான உணவுப் பொருட்களைத் தான் சாப்பிட வேண்டும் என்று நமது இஸ்லாமிய மாா்க்கம் வலியுறுத்துகிறது. இது குறித்து திருமறைக் குர்ஆனிலும், ஹதீஸ்களிலும் ஏராளமான அறிவுரைகள் நமக்கு சொல்லித் தரப்பட்டுள்ளன. அவை,

நம்பிக்கை கொண்டோரே! நாம் உங்களுக்கு வழங்கிய தூய்மையானவற்றை உண்ணுங்கள்! நீங்கள் அல்லாஹ்வையே வணங்குவோராக இருந்தால் அவனுக்கே நன்றி செலுத்துங்கள்!

(அல்குர்ஆன்: 2:172)➚

தமக்கு அனுமதிக்கப்பட்டவை யாவை? என்று அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர். தூய்மையானவை உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது எனக் கூறுவீராக!

(அல்குர்ஆன்: 5:4)➚

நான் உங்களுக்கு வழங்கியவற்றில் . தூய்மையானதை உண்ணுங்கள்! இங்கே வரம்பு மீறாதீர்கள்! (வரம்பு மீறினால்) எனது கோபம் உங்கள் மீது இறங்கும். எவன் மீது எனது கோபம் இறங்கிவிட்டதோ அவன் வீழ்ந்து விட்டான்.

(அல்குர்ஆன்: 20:81)➚

இந்த வசனத்தில் இரண்டு முக்கியமான விடயங்களை நாம் காணலாம். முதலாவது உங்களுக்கு வழங்கப்பட்ட உணவுகளில் நல்லதை சாப்பிடுங்கள். அதாவது ஹலாலான உணவு வகைகளை சாப்பிடுங்கள் என்பதாகவும். இரண்டாவது அந்த உணவை வழங்கிய இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள் என்று கூறப்பட்டுள்ளது.

இஸ்லாத்தில் “தூய்மையான உணவை உண்ண வேண்டும்” என்று கூறுவதன் நோக்கம், மனிதன் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும், ஆரோக்கியமாகவும், அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தும் நல்ல அடியாராகவும் வாழ வேண்டும் என்பதே. தூய்மையான உணவு ஒரு தூய்மையான வாழ்க்கைக்கு அடிப்படையாக அமைகிறது.

தூய்மையற்றதை சாப்பிட்டால்

ஒவ்வொரு முஃமினும் சாப்பிடும் முன்பு நாம் ஹலாலான உணவை உட்கொள்கிறோமா? என்பதை சற்று யோசிக்க வேண்டும். மாமிச உணவாக இருப்பின் இது முஸ்லிமால் அறுக்கும் முறைப்பேணி அறுக்கப்பட்டதா? இல்லையா? என்பதை சிந்திக்க வேண்டும். ஏனெனில் முஸ்லிமல்லாதோர் அறுத்தது, செத்த மிருகங்கள், வட்டி போன்ற ஹராமான பொருள் கொண்டு வாங்கப்பட்டவை போன்றதெல்லாம் ஹராமாகும்.

அல்லாஹ் குர்ஆனில்,

நான் உங்களுக்கு வழங்கியவற்றில். தூய்மையானதை உண்ணுங்கள்!

(அல்குா்ஆன்: 20:81) என்று கூறுகிறான்.

நாம் ஹலாலான உணவை உட்கொள்வதின் மூலம் நல் அமல்களின் வாய்ப்பும் ஹராமான உணவில் தீய அமல்களின் தூண்டுதலும் இருக்கின்றது. மேலும் ஹராமான உணவை உட்கொண்டால் நமது அமல்களும் துஆக்களும் ஏற்றுக் கொள்ளப் படுவதில்லை

நபி (ஸல்) அவர்கள் ஒரு மனிதரைப் பற்றிச் சொன்னார்கள். “அவர் தலைவிரி கோலத்துடனும் புழுதி படிந்த நிலையிலும் நீண்ட பயணம் மேற்கொள்கிறார். அவர் தம் கரங்களை வானை நோக்கி உயர்த்தி “என் இறைவா, என் இறைவா” என்று பிரார்த்திக்கிறார். ஆனால்,அவர் உண்ணும் உணவு தடைசெய்யப்பட்டதாக இருக்கிறது; அவர் அருந்தும் பானம் தடைசெய்யப்பட்டதாக இருக்கிறது; அவர் அணியும் உடை தடைசெய்யப்பட்டதாக இருக்கிறது; தடைசெய்யப்பட்ட உணவையே அவர் உட்கொண்டிருக்கிறார். இத்தகையவருக்கு எவ்வாறு (அவரது பிரார்த்தனை) ஏற்கப்படும்?” என்று கூறினார்கள்.

நூல்: (முஸ்லிம்: 1844)

தூய்மையான உணவு என்பது இரண்டு வகைகளில் அமையும் ஒன்று வெளிப்படையான அசுத்தத்தை விட்டு நீங்கி இருக்க வேண்டும். இரண்டு இறைவனால் தடுக்கப்பட்ட ஹராமை
விட்டும் நீங்கி இருக்க வேண்டும்.

மேலும் ஹராமான உணவை உட்கொண்டால் நமது அமல்களும் துஆக்களும் அல்லாஹ்வால் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை என்பதை இந்த ஹதீஸின் மூலம் நாம் அறியலாம்.

உணவு விரிப்பு

சுப்ரா என்ற பெயரில் விரிப்பு ஒன்றை விரித்து அதன்மீது உணவுப் பாத்திரத்தை வைத்து சாப்பிடுவது சுன்னத்தான வழிமுறை என்று சிலர் கடைபிடித்து வருகின்றனர்.

நபி (ஸல்) அவர்கள் உணவு விரிப்பு ஒன்றை வைத்திருந்தார்கள் என்பது உண்மை. ஆனால் அந்த விரிப்பு நேரடியாக அதிலேயே உணவைக் கொட்டி சாப்பிடும் வகையில் இருந்தது. உணவுத் தட்டுக்கு கீழே விரிக்கும் விரிப்பாக அது இருக்கவில்லை . நபி (ஸல்) அவர்களிடமிருந்த விரிப்பை பற்றி அனஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் .

நபி (ஸல்) அவர்கள் சபிய்யா (ரலி) அவர்களைத் திருமணம் செய்து இல்லறத்தில் ஈடுபட்டார்கள். அவர்களின் வலீமாவுக்காக முஸ்லீம்களை நான் அழைத்தேன். தோலால் ஆன உணவு விரிப்பை விரிக்குமாறு கட்டளையிட்டார்கள் அது விரிக்கப்பட்டது. அதில் பேரீத்தம் பழம், பாலாடைக்கட்டி, நெய் ஆகியவை போடப்பட்டது.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி), நூல்: (புகாரி: 5387)

உணவுத் தட்டின் கீழ் சுத்தமான விரிப்பு ஒன்றை விரித்து கொண்டால் கீழே சிந்தும் பருக்கையை எடுத்து சாப்பிட வசதியாக இருக்கும் என்பன போன்ற காரணங்களுக்காக விரிப்பு
வைத்துக் கொள்வதில் தவறில்லை சுன்னத் என்ற அடிப்படையில் இவ்வாறு செய்ய இயலாது.

மேலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் வஹீயின் அடிப்படையில் விரிப்பைத் தேர்ந்தெடுக்கவில்லை. அவர்கள் வாழும் காலத்தில் உள்ள சமூகப்பழக்கத்தின் அடிப்படையில் தான்
இதை செய்து வந்துள்ளார்கள் . எனவே இதை மார்க்க கட்டளை என்று கருத முடியாது.

உண்பதற்கு அமரும் முறை

நபி (ஸல்) அவர்கள் சாய்ந்து கொண்டு சாப்பிடுவதை பெருமையின் வெளிப்பாடாகக் கருதியிருக்கிறார்கள். எனவே, அவ்வாறு நான் சாப்பிடமாட்டேன் என அறிவிக்கிறார்கள் .

நான் நபி (ஸல்) அவர்களோடு இருந்தேன். அப்போது தனக்கு அருகில் இருந்தவரிடம் நான் சாய்ந்து கொண்டு சாப்பிடமாட்டேன். ஒரு அடிமை அமர்வதைப் போல் அமர்ந்து
அடிமை உண்பதைப் போல் (பணிவாக) உண்பேன் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பாளர்: அபூ ஜுஹைஃபா (ரலி), நூல்: (புகாரி: 5399)

குத்தலிட்டு அமர்தல், ஒரு காலை மடக்கி அதன் பாதங்களின் மீது பித்தட்டை வைத்து மறுகாலை மடக்கி நெஞ்சோடு சேர்த்தணைத்து அமர்தல், அத்தஹிய்யாத்தில் உட்காருவதைப் போல அமர்தல் ஆகிய முறைகளில் அமர்ந்து தான் சாப்பிட வேண்டுமென்றும் அதுவே நபி வழி எனவும் சிலர் வாதிடுகின்றனர்.

இந்த முறைகளில் அமர்ந்து சாப்பிடுவது வசதியாக இருக்கிறது என்பதற்காக ஒருவர் இவ்வாறு சாப்பிட்டால் அதில் நாம் குறை காண முடியாது. ஆனால் இவ்வாறு தான் சாப்பிட வேண்டும் என ஒருவா் வலியுறுத்துவதாக் இருந்தால் அதற்கு நபி (ஸல்) அவர்களிடமிருந்து இதற்கான கட்டளையை (ஆதாரத்தை) எடுத்துக் காட்டவேண்டும். அவ்வாறு எதுவும் இல்லை எனும்போது இதை நபி வழி கூறுவது தவறாகும்.

சாப்பிடுவதற்கு முன் கைகளைக் கழுவிக் கொள்ள வேண்டும்

நபி (ஸல்) அவர்கள் குளிப்புக் கடமையாக இருக்கும் நிலையில் சாப்பிட நாடினால் சாப்பிடுவதற்கு முன்னால் (வழக்கம் போல்) தனது இரு கைகளையும் கழுவிக் கொள்வார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: (நஸாயீ: 256)

மனிதன் கைகளை பல இடங்களில் உபயோகிப்பதால் அவற்றில் கண்ணுக்குத் தெரியாத நுண் கிருமிகள் ஒன்று சேர்ந்திருக்கும். கைகளை கழுவாமலேயே சாப்பிட ஆரம்பித்தால் அக்கிருமிகள் உள்ளே சென்று பல கோளாறுகளுக்கு அடித்தளமிடுகிறது.

பிஸ்மில்லாஹ் என்று கூறி, அருகில் இருப்பதிலிருந்து சாப்பிட வேண்டும்

பொதுவாக எல்லா சந்தா்ப்பங்களிலும் நாம் பிஸ்மில்லாஹ் சொல்லி நமது செயல்பாடுகளை ஆரம்பிக்க வேண்டும். அதே போன்று சாப்பிடும் போதும் பிஸ்மில்லாஹ் சொல்லி சாப்பிட வேண்டும்.

உமர் பின் அபீ ஸலமா (ரலி) அவர்கள் கூறியதாவது, ”நான் நபி (ஸல்) அவர்கள் மடியில் வளர்ந்து வந்த சிறுவனாக இருந்தேன். (ஒரு முறை) என் கை உணவுத் தட்டில் (இங்கும் அங்குமாக) அளாவிக் கொண்டிருந்தது. அப்போது நபி (ஸல்) அவர்கள் என்னிடம், ”சிறுவனே! (பிஸ்மில்லாஹ் என்று) அல்லாஹ்வின் பெயரைச் சொல்! உன் வலக் கரத்தால் சாப்பிடு! உனது கைக்கு அருகிலிருக்கும் பகுதியிலிருந்து எடுத்துச் சாப்பிடு” என்று சொன்னார்கள். அதன் பிறகு இதுவே நான் உண்ணும் முறையாக அமைந்தது.

(புகாரி: 5376)

இந்த ஹதீஸின் மூலம் மூன்று விஷயங்கள் விளங்குகிறது.

1. பிஸ்மில்லாஹ் என்று சொல்லி ஆரம்பிக்க வேண்டும்.

2. வலது கரத்தினால் சாப்பிட வேண்டும்.

3. தட்டில் நமக்கு அருகில் இருப்பதை சாப்பிட வேண்டும்.

அது மட்டுமல்ல செருப்பணியும் போதும், சட்டையை அணியும் போதும், இப்படி அடிக்கடி பிஸ்மியோடு அன்றாட தினத்தைக் கழிக்க வேண்டும். அந்த வரிசையில் நாம் சாப்பிடும் போது பிஸ்மி சொல்லித்தான் சாப்பிட வேண்டும்

பிஸ்மி சொல்லாத உணவில் ஷைத்தான்

அல்லாஹ்வின் பெயர் கூறாமல் உண்ணும் போது அந்த உணவின் முழு பயனையும் நம்மால் அடைந்து கொள்ள முடியாது. ஏனெனில் அந்த உணவை நாம் மட்டும் உண்ணவில்லை. அதில் ஷைத்தானும் நம்மோடு பங்கு போட்டுக் கொள்கிறான். மேலும் நம்மைக் கெடுக்கும் ஷைத்தானுக்கு நாமே உணவளிக்கும் மோசமான நிலையும் எற்பட்டு விடுகிறது.அதைக் குறித்து நபி (ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறுகிறாா்கள்,

”பிஸ்மில்லாஹ்” கூறாத உணவை ஷைத்தான் ஆகுமாக்கிக் கொள்கிறான்.

அறிவிப்பவர்: ஹுதைஃபா (ரலி), நூல்: (முஸ்லிம்: 4105)

மேலும், “நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒருவர் தமது இல்லத்திற்குள் நுழையும் போதும் உணவு உண்ணும்போதும் அல்லாஹ்வை நினைவுகூர்ந்தால், ஷைத்தான் (தன் கூட்டத்தாரிடம்), “இன்றைய இரவில் உங்களுக்கு (இங்கே) தங்குமிடமும் இல்லை; உண்ண உணவுமில்லை” என்று கூறுகிறான். ஒருவர் இல்லத்திற்குள் நுழையும் போது அல்லாஹ்வை நினைவுகூராவிட்டால் ஷைத்தான் (தன் கூட்டத்தாரிடம்), “இன்றைய இரவில் உங்களுக்குத் தங்குமிடம் கிடைத்துவிட்டது” என்று சொல்கிறான்”.

அவர் உணவு உண்ணும்போது அல்லாஹ்வின் பெயர் கூறாவிட்டால் ஷைத்தான் “இன்றைய இரவில் நீங்கள் தங்கும் இடத்தையும் உணவையும் அடைந்துகொண்டீர்கள்” என்று சொல்கிறான்.

நூல்: (முஸ்லிம்: 4106)

சாப்பிடுதல், வீட்டில் நுழைதல் மட்டுமின்றி எந்த விஷயத்தை ஆரம்பித்தாலும் அல்லாஹ்வின் பெயர் கூறி ஆரம்பித்தால் அதில் ஷைத்தானின் இடையூறு இருக்காது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

இன்று குழந்தைகளுடன் சாப்பிடும் நாம் அவர்களை பிஸ்மில்லாஹ் கூறி சாப்பிட பழக்கப்படுத்தாவிட்டால் அவர்கள் உண்ணும் உணவில் ஷைத்தானும் சாப்பிட ஆரம்பித்து அவ்வுணவு பரக்கத் இல்லாமல் ஆகிவிடும். எனவே இதை நாம் கவனத்தில் கொண்டு குழந்தைகளை பிஸ்மில்லாஹ் கூறி சாபப்பிட பழக்கப்படுத்த வேண்டும்.

பிஸ்மில்லாஹ் கூற மறந்து விட்டால்…

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ”உங்களில் ஒருவர் உணவு சாப்பிட (ஆரம்பிக்கும்) போது பிஸ்மில்லாஹ் என்று கூறட்டும். ஆரம்பத்தில் (பிஸ்மில்லாஹ்) கூற மறந்து விட்டால் ”பிஸ்மில்லாஹி ஃபீ அவ்வலஹி வ ஆகிரிஹி” என்று கூறட்டும். (பொருள்: ஆரம்பத்திலும் இறுதியிலும் அல்லாஹ்வின் பெயரைக் கூறுகிறேன்).

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: (திர்மிதீ: 1781)

வலது கரத்தால் சாப்பிடுதல்

சாப்பிடும் போதும், குடிக்கும் போதும், எடுக்கும் போதும், கொடுக்கும் போதும், வலதை தான் பயன் படுத்த வேண்டும் என்பதை பின் வரும் நபி மொழி நமக்கு வழிகாட்டுகிறது.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ”உங்களில் ஒருவர் சாப்பிடும் போது தனது வலக்கரத்தால் சாப்பிடட்டும். குடிக்கும் போதும் தனது வலக்கரத்தால் குடிக்கட்டும். ஷைத்தான் தனது இடக்கரத்தால் சாப்பிடுகிறான். தனது இடக்கரத்தால் குடிக்கின்றான்”

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி), நூல்: (முஸ்லிம்: 4108)

இடது கையால் சாப்பிடுவது கூடாது

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “உங்களில் ஒருவர் சாப்பிடும் போது தனது வலக்கரத்தால் சாப்பிடட்டும். குடிக்கும் போதும் தனது வலக்கரத்தால் குடிக்கட்டும். ஷைத்தான் தனது இடக்கரத்தால் சாப்பிடுகிறான். தனது இடக்கரத்தால் குடிக்கின்றான்”

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி), நூல்: (முஸ்லிம்: 4108)

இடது கையை அசுத்தமான மல, ஜலம் சுத்தம் செய்தல் போன்ற செயல்களுக்கு ஈடுபடுத்துவதால் அக்கரத்தால் உண்ணுவது உடலுக்கு ஆரோக்கியமல்ல. ஆகையால் தான் நம்முடைய மாா்க்கம் வலக்கரத்தால் சாப்பிட வேண்டும் என்று வலியுறுத்துகிறது.

அருகிலிருப்பதை சாப்பிடுதல்

நான் நபி ( ஸல் ) அவர்களின் பொறுப்பில் வளர்ந்த சிறுவன். எனது கை உணவுத் தட்டின் நாலாபுறத்திலும் சுற்றிக் கொண்டிருந்தது. அப்போது சிறுவனே பிஸ்மில்லாஹ் கூறு
உன் வலக் கரத்தால் சாப்பிடு உனக்கு அருகிலிருந்து சாப்பிடு என நபி ( ஸல் ) அவர்கள் கூறினார்கள் . அதன் பிறகு இந்தப் பழக்கத்தை நான் கைவிடவே இல்லை.

அறிவிப்பவர்: உமர் பின் அபீ ஸலமா ( ரலி ), நூல்: (புகாரி: 5377)

தேவைப்பட்டால் தூரத்தில் உள்ளதை சாப்பிடுதல்

பல தரப்பட்ட உணவுப் பொருட்களை கலந்து சாப்பிட நேர்ந்தால் நாலா பக்கத்திலும் எடுத்து சாப்பிடுவதில் தவறில்லை. தையர்காரர் ஒருவர் தாம் தயாரித்த உணவை சாப்பிடவருமாறு நபி (ஸல்) அவர்களை விருந்துக்கு அழைத்தார். நானும் நபி (ஸல்) அவர்களுடன் அந்த விருந்துக்கு சென்றேன்.
அவர் ரொட்டி, மற்றும் உலர்ந்த இறைச்சித்துண்டுடன், சுரைக்காய் குழம்பை நபியின் முன் வைத்தார்.

நபி (ஸல்) அவர்கள் தட்டின் பல பாகங்களிலும் இருந்த சுரைக்காயைத் தேடித் தேடி (சாப்பிடுவதை) நான் பார்த்தேன். அன்று முதல் நானும் சுரைக்காயை விரும்பக் கூடியவனாகிவிட்டேன்.

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி), நூல்: (முஸ்லிம்: 2041) , (திர்மிதீ: 1851)

உணவுப் பொருள் கீழே விழுந்தால் பேண வேண்டிய முறை

கீழே விழுந்த உணவுத் துண்டின் மீது பட்ட அழுக்கு அல்லது அசுத்தங்களை நீக்கிவிட்டு (புழுதியைத் தட்டிவிட்டு) அதைச் சாப்பிட வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் அறிவுறுத்தினார்கள்.

இது சுத்தத்தைப் பேணுவதற்கும், அதே நேரத்தில் உணவை வீணாக்காமல் இருப்பதற்கும் இடையில் ஒரு சமநிலையைக் காட்டுகிறது. சுத்தப்படுத்த முடியாத அளவுக்கு அது அசுத்தமாகிவிட்டால் மட்டுமே அதைத் தவிர்க்கலாம்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “உங்களில் ஒருவருக்கு கவள வாய் உணவு கீழே விழுந்து விட்டால் அதில் பட்ட அசுத்தங்களை நீக்கி விட்டு அவர் அதை சாப்பிடட்டும். அதை ஷைத்தானுக்காக (வீணாக) விட்டு விட வேண்டாம்”

அறிவிப்பவர்: அனஸ் (ரலி), நூல்: (முஸ்லிம்: 4138)

நபி (ஸல்) அவர்கள் உணவின் ஒவ்வொரு சிறு துளியையும் வீணாக்கக் கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருந்தார்கள். கீழே விழுந்த ஒரு கவளத்தைக் கூட ஷைத்தானுக்காக விட்டுவிட வேண்டாம் என்று கூறியது, அல்லாஹ் நமக்கு அளித்த அருட்கொடையை (உணவை) நாம் அலட்சியப்படுத்தக் கூடாது என்பதைக் குறிக்கிறது.

நின்று கொண்டு சாப்பிடுவதோ குடிப்பதோ கூடாது

நீர் அல்லது வேறு எந்த பானத்தையும் அமர்ந்து கொண்டு (உட்கார்ந்து கொண்டு) குடிப்பதே சுன்னத் (நபிவழி) ஆகும்.

நபி (ஸல்) அவர்கள் நின்று கொண்டு குடிப்பதைத் தடுத்தார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி), நூல்: (முஸ்லிம்: 4115)

நவீன மருத்துவக் கண்ணோட்டத்தின்படி, அமர்ந்த நிலையில் உணவு உட்கொள்வதும், நீர் அருந்துவதும் சில நன்மைகளை வழங்குகிறது:

சீரான செரிமானம்: அமர்ந்திருக்கும்போது, இரைப்பை மற்றும் உணவுக்குழாய் ஆகியவை நேராக இருந்து, நீர் மற்றும் உணவு சரியான வேகத்தில் செரிமானப் பாதைக்குச் செல்ல உதவுகிறது.

சிறுநீரகச் செயல்பாடு: நின்றுகொண்டு குடிக்கும்போது திரவம் விரைவாகச் செல்ல வாய்ப்புள்ளதால், சிறுநீரகம் அவற்றைச் சரியாக வடிகட்ட நேரம் கிடைப்பதில்லை. அமர்ந்து குடிக்கும்போது திரவங்கள் நிதானமாகச் செயல்பட உதவுகிறது.

எனவே, இந்த ஹதீஸின் வழிகாட்டுதல், சுகாதார மற்றும் ஒழுக்க நடைமுறை ஆகிய இரண்டையும் உள்ளடக்கியது. முடிந்தவரை அமர்ந்து சாப்பிடுவது மற்றும் குடிப்பதே இஸ்லாமியப் பார்வையில் சிறந்த முறையாகும்.

நிர்பந்தமான சூழ்நிலைகளில் நின்று கொண்டு குடித்தல்

நபி (ஸல்) அவர்கள “ஸம் ஸம்” தண்ணீரை நின்றவர்களாகக் குடித்தார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: (புகாரி: 5617)

நஸ்ஸால் பின் ஸப்ரா (ரஹ்) கூறினார்: அலீ (ரலி) (கூஃபா நகர் பள்ளிவாசலின்) விசாலமான முற்றத்தின் வாசலில் இருந்தபோது அவர்களிடம் தண்ணீர் கொண்டுவரப்பட்டது. (அதை) அவர்கள் நின்று கொண்டே அருந்தினார்கள். பிறகு “மக்களில் சிலர் நின்றுகொண்டு அருந்துவதை வெறுக்கிறார்கள். ஆனால், (இப்போது) நான் செய்ததை நீங்கள் பார்த்தைப் போன்றே நபி (ஸல்) அவர்கள் செய்ததை பார்த்தேன்” என்று கூறினார்கள்.

நூல்: (புகாரி: 5615)

அமர்ந்து கொண்டுதான் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று நபிகளார் கடமையாக்கவில்லை.அமர்ந்து கொண்டு தண்ணீர் அருந்தினால் சிறந்தது என்றும் நிர்ப்பந்தமான சூழ்நிலையில் நின்று கொண்டும் தண்ணீர் குடிக்கலாம் என்று இந்த ஹதீஸின் மூலம் நபி (ஸல்) அவர்கள் செய்ததை நாம் அறியலாம்.

பாத்திரத்தில் மூச்சு விடுவது கூடாது

நபி (ஸல்) அவர்கள் பாத்திரத்தில் மூச்சு விடுவதைத் தடை செய்தார்கள். இது சுகாதாரத்தைப் பேண வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறது.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “உங்களில் ஒருவர் (எதை) அருந்தினாலும் அந்தப் பாத்திரத்திற்குள் அவர் மூச்சு விட வேண்டாம்”

அறிவிப்பவர்: அபூ கதாதா (ரலி), நூல்: (புகாரி: 153)

பாத்திரத்திற்குள் மூச்சு விடும்போது, வாயில் உள்ள கிருமிகள் அல்லது நீர்த்துளிகள் குடிநீரில் கலந்து, அதைப் பருகும் மற்றவர்களுக்குப் பரவும் வாய்ப்புள்ளது. இது நோய்கள் பரவாமல் தடுக்கவும், அருந்தும் பானத்தின் தூய்மையைப் பாதுகாக்கவும் இது ஒரு முக்கியமான ஒழுக்க முறையாகும்.

தட்டையை வழித்து விரல்களை சூப்புதல்

நபி (ஸல்) அவர்கள் விரல்களைச் சூப்பவும், தட்டை வழித்து உண்ணவும் கட்டளையிட்டார்கள். ஏனெனில், உணவின் எந்தப் பகுதியில் பரக்கத் (அருள்வளம்) உள்ளது எனத் தெரியாது. இது வீண் விரயத்தைத் தவிர்க்கும்.

ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள், (உணவு உண்டு முடித்தவர் தம்) விரல்களை உறிஞ்சுமாறும் தட்டை வழித்து உண்ணுமாறும் உத்தரவிட்டார்கள். மேலும், “உணவின் எந்தப் பகுதியில் வளம் (பரக்கத்) உள்ளது என்பதை நீங்கள் அறியமாட்டீர்கள்” என்றும் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி), நூல்: (முஸ்லிம்: 4136)

பால் அருந்திய பின் வாய்கொப்பளித்தல்

நபி (ஸல்) அவர்கள் பால் குடித்த பின் வாய் கொப்பளித்தார்கள். பிறகு “அதிலே கொழுப்பு இருக்கிறது” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: (புகாரி: 211)

நபி (ஸல்) அவர்கள் பால் குடித்த பின் வாய் கொப்பளித்தார்கள்.

காரணம்: “அதிலே கொழுப்பு இருக்கிறது.”

இது பால் அல்லது கொழுப்புள்ள உணவின் எச்சங்கள் வாயில் ஒட்டாமல், வாய் சுகாதாரத்தையும் தூய்மையையும் பேணுவதன் அவசியத்தை நபிகளாா் இந்த ஹதீஸின் மூலம் வலியுறுத்தியுள்ளாா்.

உணவு உண்ட பின் சொல்ல வேண்டிய பிரார்த்தனை

நபி (ஸல்) அவர்கள் (சாப்பிட்டு முடித்த பின்) தம் உணவு விரிப்பை எடுக்கும்போது ‘அல்ஹம்து லில்லாஹி கஸீரன் தய்யிபன் முபாரகன் ஃபீஹி, ஃகைர மக்ஃபிய்யின் வலா முவத்தஇன் வலா முஸ்தஃக்னன் அன்ஹு ரப்பனா’ என்று பிரார்த்திப்பார்கள்.

(பொருள்: அதிகமான, தூய்மையான, வளமிக்க எல்லாப் புகழும் (நன்றியும்) அல்லாஹ்வுக்கே உரியது. இறைவா! இப்புகழ் முற்றுப் பெறாதது; கைவிடப்படக் கூடாதது; தவிர்க்க முடியாதது ஆகும்.)

அறிவிப்பவர்: அபூஉமாமா (ரலி), நூல்: (புகாரி: 5458)

வலது புறமிருந்து வினியோகிக்கத் துவக்குதல்

பொதுவாக, இஸ்லாம் நல்ல செயல்கள், உண்ணுதல், பருகுதல் போன்ற அனைத்துச் செயல்களிலும் வலது பக்கம் அல்லது வலது கைக்கு முன்னுரிமை அளிக்க வலியுறுத்துகிறது.

அனஸ் இப்னு மாலிக்(ரலி) கூறினார்: இறைத்தூதர்(ஸல்) அவர்கள் எங்கள் வீட்டுக் வந்திருந்தபோது அவர்கள் பால் அருந்தியதை பார்த்திருக்கிறேன். அப்போது நான் ஓர் ஆட்டிலிருந்து பால் கறந்து இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்காகக் கிணற்றிலிருந்து (நீர் எடுத்துக்) கலந்தேன். அவர்கள் (பால்) கிண்ணத்தை வாங்கி அருந்தினார்கள். அவர்களின் இடப் பக்கத்தில் அபூ பக்ர்(ரலி) அவர்களும் வலப்பக்கத்தில் கிராமவாசி ஒருவரும் அமர்திருந்தனர். (தாம் அருந்திய) பாலின் மிச்சத்தை அந்தக் கிராமவாசிக்குக் கொடுத்துவிட்டு, ‘வலப்பக்கத்தில் இருப்பவருக்கும், அடுத்து (அவருக்கு) வலப் பக்கத்தில் இருப்பவருக்கும் (கொடுங்கள்)’ என்று கூறினார்கள்.

நூல்: (புகாரி: 5612)

இந்தச் சம்பவத்தில், அபூ பக்ர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களின் இடப்பக்கத்தில் அமர்ந்திருந்தார்கள். அவர்கள் இஸ்லாத்தில் மிக உயர்ந்த இடத்தைப் பெற்றவர். ஆனால், வலப்பக்கத்தில் ஒரு கிராமவாசி (வயதில் இளையவரோ அல்லது அந்தஸ்தில் குறைவானவரோ) அமர்ந்திருந்தார். நபி (ஸல்) அவர்கள் சமூக அந்தஸ்து, வயது அல்லது தகுதி ஆகியவற்றைப் பார்க்காமல், சட்டப்படி வலப்பக்கத்தில் இருந்தவருக்கே முதலில் கொடுத்தார்கள்.

வலது புறத்தில் உள்ளவர் அனுமதி கொடுத்தால் இடது புறத்தில் உள்ளவருக்கு முதலில் கொடுக்கலாம்

நபி (ஸல்) அவர்களிடம் பானமொன்று கொண்டு வரப்பட்டது. அவர்கள் அதை அருந்தினார்கள். அப்போது அவர்களின் வலப்பக்கம் சிறுவர் ஒருவரும் இடப்பக்கம் முதியவர்களும் அமர்ந்திருந்தனர். ஆகவே நபி (ஸல்) அவர்கள் அந்தச் சிறுவனிடம் “(இந்தப் பானத்தை முதியவர்களான) இவர்களுக்கு அளிக்க எனக்கு நீ அனுமதி தருவாயா?” என்று கேட்டார்கள். அதற்கு அச்சிறுவன் “அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் தூதரே! தங்களிடமிருந்து எனக்குக் கிடைக்கும் இந்தப் பேற்றை (வேறு) யாருக்காகவும் நான் விட்டுத் தர மாட்டேன்” என்று பதில் கூறினார். உடனே நபியவர்கள் அதை அச்சிறுவனின் கையில் வைத்து விட்டார்கள்.

அறிவிப்பவர்: ஸஹ்ல் (ரலி), நூல்: (புகாரி: 5620)

ஒருவரது உணவு இருவருக்குப் போதும்

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “(கூட்டாகச் சாப்பிடும் போது) ஒருவருடைய உணவு இருவருக்குப் போதுமானதாகும். இருவருடைய உணவு நான்கு நபர்களுக்குப் போதுமானதாகும். நான்கு நபர்களுடைய உணவு எட்டு நபர்களுக்குப் போதுமானதாகும்”

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி), நூல்: (முஸ்லிம்: 4182)

இவ்வாறு நாம் உணவைப் பகிர்ந்துகொள்வது, குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடையே ஒற்றுமையையும், சகோதரத்துவத்தையும் பலப்படுத்துகிறது.

கூட்டாகச் சாப்பிடுவதன் ஒழுங்குகள்

உங்கள் வீடுகளிலோ, உங்கள் தந்தையர் வீடுகளிலோ, உங்கள் அன்னையர் வீடுகளிலோ, உங்கள் சகோதரர்கள் வீடுகளிலோ, உங்கள் சகோதரிகளின் வீடுகளிலோ, உங்கள் தந்தையின் சகோதரர்கள் வீடுகளிலோ, உங்கள் தந்தையின் சகோதரிகள் வீடுகளிலோ, உங்கள் தாயின் சகோதரர்கள் வீடுகளிலோ, உங்கள் தாயின் சகோதரிகளின் வீடுகளிலோ, அல்லது எதன் சாவிகளை நீங்கள் உடமையாக வைத்துள்ளீர்களோ அங்கேயோ, அல்லது உங்கள் நண்பரிடமோ நீங்கள் சாப்பிடுவது உங்கள் மீது குற்றமில்லை. நோயாளியின் மீதும் குற்றமில்லை. ஊனமுற்றவர் மீதும் குற்றமில்லை. குருடர் மீதும் குற்றமில்லை. நீங்கள் அனைவரும் சேர்ந்தோ, தனியாகவோ சாப்பிடுவது உங்கள் மீது குற்றமில்லை. வீடுகளில் நுழையும் போது அல்லாஹ்விடமிருந்து பாக்கியமிக்க தூய்மையான காணிக்கையாக உங்கள் மீதே ஸலாம் கூறிக் கொள்ளுங்கள்! நீங்கள் விளங்கிக் கொள்வதற்காக இவ்வாறே உங்களுக்கு வசனங்களை அல்லாஹ் தெளிவு படுத்துகிறான்.

(அல்குர்ஆன்: 24:61)➚

ஒரே தட்டில் உணவைப் பகிர்ந்துகொள்வது, உறவுகள் மற்றும் சமூகத்தினரிடையே உள்ள அன்பையும், சகோதரத்துவத்தையும் பலப்படுத்துகிறது.

அடுத்தவருக்குக் கொடுக்காமல் சாப்பிடக் கூடாது

பலர் ஒன்றாக அமர்ந்து சாப்பிடும்போது, ஒருவர் தனது வாய் முழுவதும் நிரம்பும் அளவுக்கு இரண்டு பேரீச்சம் பழங்களை ஒரே நேரத்தில் சேர்த்து உண்பதை நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.

(தன்னுடன் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்) தனது சகோதரரிடம் அனுமதி பெற்றே தவிர, இரண்டு பேரீச்சம் பழங்களை ஒன்றாகச் சேர்த்து உண்பதை நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி), நூல்: (புகாரி: 2455)

உணவைப் பகிர்ந்தளிக்கும்போது, சமத்துவத்தைப் பேணுவது முக்கியம். ஒருவர் தன்னுடைய தேவையைத் தாண்டி அதிகமாக எடுத்துக்கொள்வது, அருகில் உள்ளவர்களின் பசியைப் பற்றி கவலைப்படாமல் இருப்பதற்கு ஒப்பாகும்.

அதுமட்டுமல்லாமல் அனுமதி பெறுவது, உணவைப் பகிர்ந்துகொள்ளும் அந்தச் சமூகத்தில் ஒருவருக்கொருவர் இடையே உள்ள அன்பு, மரியாதை மற்றும் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை ஆகியவற்றை வெளிப்படுத்துகிறது. மற்றவர்களுக்கு ஆட்சேபனை இல்லை என்றால், அதனைச் செய்யலாம்.

சமைப்பவருக்கும் உணவு வழங்க வேண்டும்

பணியாள் உணவு கொண்டு வரும்போது, அவரைத் தன்னுடன் அமர வைத்துக்கொள்ள வேண்டும் என்பதே முதல் மற்றும் சிறந்த வழிமுறையாகும். இது முதலாளி மற்றும் பணியாளர் என்ற வேறுபாடுகளைக் கடந்து, உணவு மேசையில் மனிதர்கள் அனைவரும் சமம் என்ற உயரிய நீதியைப் நம்முடைய இஸ்லாமிய மாா்க்கம் எடுத்துரைக்கிறது.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “உங்களில் ஒருவரிடம் அவருடைய பணியாள் அவரது உணவைக் கொண்டு வந்தால் அவர் அப்பணியாளைத் தம்முடன் (அமர வைத்துக் கொள்ளட்டும். அவ்வாறு) அமர வைத்துக் கொள்ளவில்லையென்றாலும் அவருக்கு ஒரு பிடி அல்லது இரு பிடிகள் அல்லது ஒரு கவளம் அல்லது இரு கவளங்கள் உணவு கொடுக்கட்டும். ஏனெனில் அவர் (அதை சமைத்த போது) அதன் வெப்பத்தையும் அதன் சிரமத்தையும் சகித்துக் கொண்டார்”

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி), நூல்: (புகாரி: 5460)

இந்த ஹதீஸ் வெறுமனே பணியாளர்களுக்கு உணவு கொடுப்பது பற்றி மட்டும் பேசவில்லை. இது: உணவை சமைப்பதற்காக அந்தப் பணியாள் வெப்பத்தையும், சிரமத்தையும் சகித்துக் கொண்டிருக்கிறார். அவர்களின் உழைப்பு மற்றும் பங்களிப்பை அங்கீகரித்து மரியாதை அளிக்கும் விதமாகவே அவர்களைச் சேர்த்து அமரச் சொல்ல வேண்டும்.

சமைத்த பணியாளரைத் தன்னுடன் அமர வைக்க இயலாத ஒரு சூழல் இருந்தால், குறைந்தபட்சம் அவருக்கு ஒரு பிடி, இரு பிடிகள், அல்லது ஒன்று அல்லது இரண்டு கவளங்கள் உணவையாவது வழங்க வேண்டும்.

முதலாளி-பணியாளர் உறவில் கூட மனிதநேயம், எந்த ஒரு பொருளின் மதிப்பு, அதை உருவாக்கச் செலவிடப்பட்ட உழைப்பு மற்றும் சிரமத்தைப் பொறுத்தது என்பதை அங்கீகரிக்கிறது.ஈவு இரக்கம் மற்றும் நன்றி உணர்வு இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது.

பசிக்கும் போது உணவுக்கே முன்னுரிமை

உணவும், தொழுகைக்கான இகாமத்தும் ஒரே நேரத்தில் இருந்தால், உணவுக்கு முன்னுரிமை கொடுங்கள் என நபி (ஸல்) அவா்கள் கூறினாா்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “இரவு நேர உணவு வைக்கப்பட்டு தொழுகைக்காக இகாமத்தும் சொல்லப்படுமானால் நீங்கள் உணவை முதலில் அருந்துங்கள்”

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: (புகாரி: 671)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “உணவு வந்து காத்திருக்கும் போதும், சிறுநீர் மற்றும் மலத்தை அடக்கிக் கொண்டும் தொழக்கூடாது”

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: (முஸ்லிம்: 969)

பசி மற்றும் உணவு மீதான ஆர்வம் காரணமாக ஒருவரது மனம் தொழுகையில் இருந்து சிதறடிக்கப்படலாம். பசியுடன் இருக்கும்போது, மனம் உணவுக்காக ஏங்கும். எனவே, முதலில் உணவை உண்டு, மனதை அமைதிப்படுத்திய பின் நிதானத்துடன் தொழுகையை நிறைவேற்றுவதே சிறந்தது.

உணவைக் குறை கூறுதல் கூடாது

நபி (ஸல்) அவர்கள் எந்த உணவையும் ஒருபோதும் குறை கூறியதில்லை என்பது அவர்களின் மிக உயர்ந்த பண்பைக் காட்டுகிறது.

நபி (ஸல்) அவர்கள் எந்த உணவையும் குறை கூறியதில்லை . பிடித்தால் அதை சாப்பிடுவார்கள் , பிடிக்காவிட்டால் (சாப்பிடாமல்) இருந்து விடுவார்கள்.

அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபியவர்கள் எந்த உணவையும் ஒரு போதும் குறை கூறியதில்லை. அவர்கள் ஓர் உணவை விரும்பினால் உண்பார்கள். இல்லையென்றால் விட்டுவிடுவார்கள்.

நூல்: (புகாரி: 3563)

நமக்கு பிடிக்காத உணவு வைக்கப்பட்டால் இது எனக்குப் பிடிக்காது நான் இதை சாப்பிடமாட்டேன் என்று கூறி விலகிக் கொள்வது உணவைக் குறை கூறுவதாகாது . அதன்
தரமும் , ருசியும் குறைவாக இருக்கிறது என்று அதை விமர்சிப்பது தான் தவறாகும்.

நமது பார்வையில் ருசியற்றது , தரம் தாழ்ந்தது என உதாசீனப் படுத்தப்படும் உணவு , உலகில் பலருக்கு ருசிமிக்கதாகவும் , தரமானதாகவும் இருக்கக் கூடும் என்பதை சிந்தித்தால்
உணவை குறை கூறும் பழக்கம் நம்மிடமிருந்து அகன்று விடும்

ஆட்டிறைச்சியில் சுவையற்றது எனக் கருதப்படும் கால் குளம்பைக் கூட நபி (ஸல்) அவர்கள் உயர்வாகக் கருதியிருக்கிறார்கள்.

ஒரு ஆட்டின் கால் குளம்பையோ அல்லது விலா எலும்பையோ (சமைத்து வைத்துக் கொண்டு) நான் அழைக்கப்பட்டாலும் அந்த (விருந்திலும்) நான் கலந்து கொள்வேன்.
கால் குளம்போ அல்லது விலா எலும்போ அன்பளிப்பாக தரப்பட்டாலும் அதையும் நான் ஏற்றுக் கொள்வேன் என நபி (ஸல்) கூறினார்கள் .

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி), நூல்: (புகாரி: 2568)

உணவு பிடிக்கவில்லை என்றால், குறைகூறுவதற்குப் பதிலாக, அமைதியாக அதைச் சாப்பிடாமல் தவிர்ப்பதே நபிவழியாகும். இதன் மூலம், சமைத்தவரின் மனதைக் காயப்படுத்தாமல், உணவின் மீதான தங்கள் விருப்பமின்மையைத் தெரியப்படுத்தினார்கள்.

உணவை வீண் விரையம் செய்யக்கூடாது

உண்ணுங்கள்! பருகுங்கள்! வீண் விரையம் செய்யாதீர்கள்! வீண் விரையம் செய்வோரை அவன் விரும்ப மாட்டான்.

(அல்குர்ஆன்: 7:31)➚

அல்லாஹ் நமக்கு உண்ணவும் பருகவும் அனுமதி அளிக்கிறான். உணவு என்பது அல்லாஹ்வின் அருட்கொடை ஆகும். அதே சமயம், உணவை வீண் விரயம் செய்யக்கூடாது என்று கண்டிப்பாக எச்சரிக்கிறான். வீண் விரையம் செய்வோரை அல்லாஹ் விரும்ப மாட்டான் என்று கூறுவது, வீண் விரையம் செய்வது எவ்வளவு பெரிய பாவம் என்பதைக் காட்டுகிறது. மிதமிஞ்சிய செலவுகள், தேவைக்கு அதிகமாகச் சமைத்து வீணாக்குவது, அல்லது உணவை அலட்சியமாகக் கையாள்வது அனைத்தும் இதில் அடங்கும்.

விரையம் செய்வோர் ஷைத்தான்களின் உடன்பிறப்புக்களாக உள்ளனர். ஷைத்தான் தனது இறைவனுக்கு நன்றி கெட்டவனாக இருக்கிறான்.

(அல்குர்ஆன்: 17:27)➚

இந்த வசனம், வீண் விரையம் செய்பவர்களை ஷைத்தானின் உடன்பிறப்புக்கள் என்று ஒப்பிடுகிறது.

ஷைத்தான் அல்லாஹ்வின் அருட்கொடைகளுக்கும் கட்டளைகளுக்கும் நன்றி கெட்டவனாக இருக்கிறான். அதேபோல, அல்லாஹ்வின் அருட்கொடையாகிய உணவை வீண் விரையம் செய்வோரும் அல்லாஹ்வின் அருளுக்கு நன்றி செலுத்தாதவர்களாக ஆகிவிடுகிறார்கள்.

பொறுப்பாளி இறுதியில் தான் சாப்பிட வேண்டும்

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ஒரு கூட்டத்தாருக்கு (குடிபானத்தை) பங்கிட்டுக் கொடுக்கக் கூடியவர் அவர்களில் இறுதியாக குடிக்கக் கூடியவராவார்”

அறிவிப்பவர்: அபூ கதாதா (ரலி), நூல்: (முஸ்லிம்: 1213)

ஒரு விநியோகிப்பவர் தனது தேவையை விட, மற்றவர்களின் தேவைகளுக்கு முன்னுரிமை அளித்து, கடைசியாக அருந்த வேண்டும் என்பதை இது உணர்த்துகிறது.

மது,போதை தரும் பொருட்களை சாப்பிட தடை

மனித உடலுக்கு தீங்கு விளைவித்து, அறிவை மறைத்து, உணர்வுகளைக் கெடுத்து, சமூகத்தில் சண்டையையும் விரோதத்தையும் ஏற்படுத்தும் மதுபானங்கள்,போதை தரும் பொருட்களை சாப்பிட நம்முடைய இஸ்லாமிய மாா்க்கம் தடை விதிக்கிறது.

நம்பிக்கை கொண்டோரே! மது, சூதாட்டம், பலிபீடங்கள், (குறி கேட்பதற்கான) அம்புகள், ஆகியவை அருவருப்பானதும், ஷைத்தானின் நடவடிக்கையுமாகும். எனவே இதிலிருந்து விலகிக் கொள்ளுங்கள்! வெற்றி பெறுவீர்கள்!

(அல்குர்ஆன்: 5:90)➚

மது, மற்றும் சூதாட்டம் மூலம் உங்களுக்கிடையே பகைமையையும், வெறுப்பையும் ஏற்படுத்தவும், அல்லாஹ்வின் நினைவை விட்டும், தொழுகையை விட்டும் உங்களைத் தடுக்கவுமே ஷைத்தான் விரும்புகிறான். எனவே விலகிக் கொள்ள மாட்டீர்களா?

(அல்குர்ஆன்: 5:91)➚

நபி(ஸல்)கள் கூறினார்கள்: போதை தரக்கூடிய ஒவ்வொரு பொருளும் ஹராம் (விலக்கப்பட்டது) ஆகும்.

அறிவிப்பவர்: அபூ மூஸா(ரலி), நூல்: (புகாரி: 6124)

போதை, அறிவை மழுங்கடித்து, ஒரு மனிதனை மிருக நிலைக்குத் தள்ளிவிடுகிறது. போதையில் உள்ளவர்கள் சண்டை, குற்றங்கள், விபத்துகள் மற்றும் குடும்ப வன்முறைகளில் ஈடுபடுகிறார்கள். இது சமூக அமைதியைக் குலைக்கிறது. போதை தரும் பொருட்கள் மனித உடலுக்குக் கடுமையான சேதத்தை ஏற்படுத்துகின்றன. போதையால் ஒருவரது மனம் இறை வணக்கங்களில் (தொழுகை, நோன்பு போன்றவை) கவனம் செலுத்த முடியாமல் சிதறுகிறது.

முடிவுரை

நம்முடைய இஸ்லாமிய மாா்க்கம் ஒரு செயலை தடை செய்கிறது என்றால் நிச்சயமாக அது நம் உடல் நலனுக்காகவும், மன நலனுக்காகவும், சமூக மற்றும் சமூதாய நலனுக்காகவுமே அமைகிறது.

எனவே இஸ்லாம் மார்க்கம் காட்டி தந்த வழிமுறைகளை நடைமுறைப் படுத்துவோமாக! அல்லாஹ் அப்படிப்பட்ட நன்மக்களாய் நம்மை ஆக்கி அருள் புரிவனாக..!