சாப்பிடும் போது இடது கையால் தண்ணீர் அருந்தலாமா?
வலது கையால் சாப்பிடும் போது இடது கையால் தண்ணீர் அருந்தலாமா?
பதில்:
சாப்பிடுவதற்கும் பருகுவதற்கும் வலது கையை மட்டுமே பயன்படுத்த வேண்டும். இக்காரியங்களை இடது கையால் செய்யக் கூடாது என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
صحيح مسلم (3/ 1598)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
உங்களில் ஒருவர் உணவு உண்ணும் போது வலக் கையால் உண்ணட்டும்; பருகும் போது வலக் கையால் பருகட்டும். ஏனெனில், ஷைத்தான் இடக் கையால் தான் உண்கிறான்; இடக் கையால் தான் பருகுகிறான். இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நூல் : (முஸ்லிம்: 4108)
صحيح مسلم (3/ 1599)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
உங்களில் யாரும் இடக் கையால் உண்ண வேண்டாம்; இடக் கையால் பருக வேண்டாம். ஏனெனில், ஷைத்தான் இடக் கையால் தான் உண்கிறான்; இடக் கையால் தான் பருகுகிறான். இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நூல் : (முஸ்லிம்: 4109)
வலது கையின் உட்புறத்தில் உணவு ஓட்டியிருக்கும் போது தண்ணீர் பாத்திரத்தை வலக் கையால் எடுத்தால் கையில் உள்ள உணவு தண்ணீர் பாத்திரத்தின் மீது படும் நிலை ஏற்படும்.
இதைத் தவிர்ப்பதற்காக இடது கையால் அந்தப் பாத்திரத்தை எடுத்து வலது கையின் மேற்புறத்தின் மீது அதை வைத்துப் பருகிக் கொள்ளலாம். பருகிய பிறகு இடது கையால் அந்தப் பாத்திரத்தை எடுத்து கீழே வைத்து விடலாம். இவ்வாறு செய்வது மேற்கண்ட நபிமொழிக்கு மாற்றமாகாது.
ஒரு பாத்திரத்தை இரண்டு கைகளால் பிடித்தால் தான் சுலபமாகப் பருக முடியும் என்றால் இந்நேரத்தில் வலது கையைப் பிரதானக் கருவியாகவும் இடது கையை துணைக் கருவியாகவும் கருதி இரண்டையும் பயன்படுத்தலாம். இதில் தவறேதுமில்லை.