சாதியைச் சொல்லி பிளேடால் கீறிய கொடூரம்
சாதியைச் சொல்லி பிளேடால் கீறிய கொடூரம்
சாதிகள் இல்லையடி ஜெகன்மோகன் உயர்த்தி சொல்லல் பாவம் என்ற பாரதியாரின் பாடலை பள்ளிக்கூடங்களின் முகப்புப் பக்கத்தில் அச்சடிக்கும் பள்ளி கல்வித்துறை, மாணவர்களுக்கு சாதியின் கொடுமைகள் குறித்து சரியான முறையில் பாடம் எடுக்காத காரணத்தால்தான் பள்ளிப் பருவத்தில் இருந்தே மாணவர்களிடம் சாதி வெறி தலை தூக்குகின்றது. கடந்த சில மாதங்களுக்கு தமிழகத்தில் உள்ள பள்ளிக்கூட ங்களில் நடைபெற்ற சாதியக் கயிறுக் கொடுமைகள் குறித்து செய்திகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பள்ளிக்கூடங்களில் பயிலும் மாணவர்கள் தங்களின் சாதியைக் குறிக்கும் வகையில் வண்ண வண்ண கயிறுகளை தங்களின் கைகளில் கட்டியிருந்த விவகாரம் நாடு முழுவதும் கொதிப்பை ஏற்படுத்தியது நினைவிருக்கலாம். ஆனால் அதையெல்லாம் தூக்கி சாப்பிடும் அளவில் கடந்த வாரம் பள்ளிக்கூடத்தில் ஒரு கொடுமையான சாதிச் சம்பவம் அரங்கேறியுள்ளது. பள்ளி மாணவர்களிடையே விளையாட்டாக நடைபெற்ற ஒரு சம்பவம் இறுதியில் வினையாக முடிந்துள்ளது.
மதுரை பாலமேடு அரசு மேல்நிலைப்பள்ளியில் சரவணகுமார் என்ற மாணவர் 9 ஆம் வகுப்பு பயின்று வருகின்றார். இவர் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர். அதேபள்ளியில் பயிலும் மகாஈஸ்வரன் என்பவர் சக மாணவரின் புத்தகப் பையை எடுத்து ஒழித்து வைத்துள்ளார். இதனை மாணவர் சரவணகுமார் தட்டிக் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மகாஈஸ்வரன், தாழ்ந்த சாதியாகிய நீயெல்லாம் என்னை எதிர்த்து பேசுகின்றாயா? என்று அவரின் சாதியின் பெயரைச் சொல்லி திட்டியுள்ளார்.
இதனால் இருவருக்கும் வாக்குவாதம் நடந்துள்ளது. இறுதியில் மாணவர் மகாஈஸ்வரன் தன் பென்சில் டப்பாவில் இருந்த பிளேடை எடுத்து சரவணகுமாரின் முதுகில் பலமாகக் கிழித்துள்ளார். இதனால் படுகாயமடைந்த சரவணகுமாரை மீட்டு அருகில் இருக்கும் அரசு மருத்துவமனயில் சேர்த்தனர். சாதி வெறியுடன் நடந்து கொண்ட மாணவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பள்ளி தலைமையாசிரியரிடம் அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
பள்ளிப்பருவத்தில் மனித நேயத்தையும் நல்லிணக்கத்தையும் போதிக்க வேண்டிய வயதில் இந்த மாணவர்களின் பிஞ்சு மனதில் சாதி என்னும் கொடிய நஞ்சு விதைக்கப்படுகின்றது. இந்த நடப்புகள் நாளைய சமூகத்தை மிகவும் கடுமையாக பாதிக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
Source: unarvu (அக்டோபர்:25 – 31, 2019.)