சாகடிக்கப்படும் மனித நேயம்!

பயான் குறிப்புகள்: தற்காலிக நிகழ்வுகள்

சாகடிக்கப்படும் மனித நேயம்!

விபத்தில் சிக்கி உயிருக்குப் போராடக்கூடியவர்களுக்கு உதவி செய்யாமல் சுற்றி நின்று வேடிக்கை பார்ப்பது; அதை தங்களது செல்ஃபோன்களில் படம் பிடிப்பது என்ற கொடூர செயல்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. உயிருக்காகப் பரிதவிப்போருக்கு முதலுதவி செய்யாமல் அவர்களை தங்களது செல்ஃபோன்களில் படம் பிடித்து பலரும் மனிதநேயத்தைக் கொலை செய்து வருகின்றார்கள்.

அப்படிப்பட்டதொரு கொடுமையான, கொடூரமான மூன்று மனித நேயப் படுகொலைகள் கடந்த வாரம் கர்நாடக மாநிலம் மைசூருவில் நடந்துள்ளது மிகுந்த மனவேதனையை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடக மாநிலம் மைசூருவில் குற்றத் தடுப்பு பிரிவில் மகேஷ் குமார் (வயது 38;) காவல் ஆய்வாளராகவும், லட்சுமண் (வயது 33) காவலராகவும் பணியாற்றினர். கடந்த ஜனவரி 28ஆம் தேதி மாலை இருவரும் பணி நிமித்தமாக டி.நரசிப்புராவுக்கு ஜீப்பில் சென்று கொண்டிருந்தனர்.

ஆலஹள்ளி அருகே சென்று கொண்டிருந்த போது கர்நாடக அரசு பேருந்து ஜீப் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த மகேஷ் குமாரும், லட்சுமணும் ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடினர். சாலையோர பள்ளத்தில் காயத்துடன் கிடந்த மகேஷ்குமார், காப்பாற்றுமாறு கதறினார். அப்போது அவ்வழியாக சென்ற பயணிகள் வாகனத்தை நிறுத்தி விட்டு வேடிக்கை பார்த்தனர். இன்னும் சிலர் போட்டோ எடுத்துக்கொண்டிருந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த மைசூரு மாவட்ட காவல் கண் காணிப்பாளர் ரவி சென்னமாவர், கூறும்போது,

“சம்பவ இடத்துக்கு சென்று உயிருக்குப் போராடிய இருவரையும் எனது வாகனத்தில் ஏற்றிக்கொண்டு வேகமாக மருத்துவமனைக்கு சென்றேன். இவர்களைப் பரிசோதித்த மருத்துவர்கள் இருவரும் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். அங்கிருந்தவர்கள் அவர்களை உடனடியாக மருத்துவமனையில் அனுமதித் திருந்தால் காப்பாற்றி இருக்கலாம். 2003-ம் ஆண்டு காவல் துறையில் இணைந்த அவர் மிகவும் நேர்மையாகவும், கடமை உணர்ச்சியுடனும் பணியாற்றினார். மைசூருவுக்கு வந்த ஒரு ஆண்டில் 50-க்கும் மேற்பட்ட குழந்தை கடத்தலைத் தடுத்தார். மைசூருவில் நிகழ்ந்த பல்வேறு விபத்துகளில் சிக்கியவர்களைக் காப்பாற்றியுள்ளார்.

ஆனால் அவருக்கு யாரும் உதவி செய்யவில்லை என நினைக்கும்போது கஷ்டமாக இருக்கிறது. விபத்தில் சிக்கியவர்களுக்கு பொதுமக்கள் உதவ முன்வர வேண்டும். இது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சியை மைசூரு மாநகரம் முழுவதும் நடத்த இருக்கிறோம்” என்று அவர் வருத்தத்துடன் கூறியுள்ளார். பலருக்கும் மனிதநேய அடிப்படையில் உதவி செய்த ஒரு காவலருக்கே இத்தகைய கதி ஏற்பட்டுள்ளது என்றால் நம் நாட்டில் மனித நேயம் செத்துவிட்டதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது;

உயிருக்குப் போராடிய இளைஞனுக்கு உதவாமல் போட்டோ எடுத்த கொடுமை: அதே போல கடந்த வாரம் ஒரு இளைஞனின் உயிர் இதே கர்நாடக மாநிலத்தில் இதே போன்று பரிபோனது. இரத்த வெள்ளத்தில் துடிதுடித்துக்கொண்ண டிருந்த அந்த 18 வயது இளைஞருக்கு உதவாமல் அவரை வீடியோ எடுத்துக்கொண் டிருந்ததால் குறித்த இளைஞர் பரிதாபகரமாக உயிரிழந்தார். இச்சம்பவம் கர்நாடக மாநிலம், கோப்பால் என்ற இடத்தில் கடந்த வாரம் நடந்துள்ளது.

அலி என்ற இந்த இளைஞர் தனது சைக்கிளில் சென்றுகொண்டிருந்தார். அப்போது, கர்நாடக அரசுப் பேருந்து ஒன்று அலியை மோதித் தள்ளியதுடன் அவர் மேலேயே ஏறிச் சென்றுவிட்டது. இதனால், கடும் இரத்த இழப்புக்கு ஆளான அலி, இரத்த வெள்ளத்தில் துடிதுடித்தபடி தனக்கு உதவுமாறு கண்ணீர் மல்கக் கேட்டுக்கொண்டிருந்தார். ஆனால், அவரைச் சுற்றி நின்றவர்கள் அவரைப் படம் பிடிக்கவும் வீடியோ எடுக்கவும் முயற்சித்தனரே அன்றி, அவருக்கு உதவ எவரும் முன்வரவில்லை. ஒரேயருவர் மட்டும் அலியின் வாயில் சிறிது தண்ணீரை ஊற்றினார்.

கடைசியாக சுமார் அரை மணிநேரத்திற்குப்பின் அலி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டபோதும் சிகிச்சை பலன் தராத நிலையில் அலி உயிரிழந்தார். மனித உயிர் புனிதமானது; அந்த உயிருக்காகப் போராடிக் கொண்டிருக்கும் ஒருவருக்கு உதவாமல் அதை புகைப்படம் எடுப்பது எத்தகைய மனித நேயமற்ற செயல் என்பதை நாம் சிந்திக்க கடமைப்பட்டுள்ளோம். இதற்கு முன்னதாக நமது தமிழகத்திலும் இ து போன்றதொரு கொடுமை நிகழ்ந்தது;

தீக்குளித்தவரை படம் பிடித்த கொடுமை:

மதுரை செல்லூர் பகுதியைச் சேர்ந்த ராமையா என்பவர் மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு குடும்பப்பிரசினைக்கு தீர்வு வேண்டி பெட்ரோல் கேனுடன் வந்தார். பின்னர் அங்குள்ள கருவூலப்பிரிவு அருகில் நின்றுகொண்டு உடலில் பெட்ரோலை ஊற்றி தீக்குளிக்கப்போவதாக அறிவித்தார். தீக்குளிக்கப்போவதாகச் சொன்ன அந்த நபர் பெட்ரோல் கேனுடன் நின்று கொண்டு, தான் தீக்குளிக்கப்போவதாக நீண்ட நேரம் சொல்லிக்கொண்டே இருந்துள்ளார்.

அவ்வாறு அவர் சொல்லும் போதே அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தியிருக்க வேண்டும். ஆனால் அவர்கள் அதை செய்யவில்லை. மாறாக பத்திரிக்கையாளர்களுக்கு இந்த செய்தி கொடுக்கப்பட, உடனடியாக பத்திரிக்கையாளர்கள் மற்றும் தொலைக்காட்சி சேனல் அன்பர்கள் அங்கு ஸ்டில் கேமராவுடனும், வீடியோ கேமராக்களுடனும் குவிந்தனர். நமது பத்திரிக்கைக்கு ஒரு நல்ல செய்தி கிடைத்துவிட்டது;

ஒருவர் உயிரோடு தன்னை தீவைத்துக் கொளுத்திக் கொள்வதை அப்படியே நேச்சுரலாக படம் பிடித்தோ அல்லது வீடியோ காட்சிகளாகவோ போட்டால் நமது சேனலை மக்கள் விரும்பி(?) பார்ப்பார்கள்; நமது பத்திரிக்கையை கேட்டு வாங்கிப்படிப்பார்கள் என்று ஆசை கொண்ட அந்த மனித மிருகங்கள் தீக்குளிக்கப்போகின்வரை சுற்றி கேமராக்களுடன் தயாராக நின்றுள்ளனர். அந்த நபரும் விரக்தியில் தன்மீது பெட்ரோலை ஊற்றி பற்ற வைக்கின்றார்.

அதை அப்படியே சாவகாசமாக எவ்வித சஞ் சலமும் இல்லாமல், எவ்வித மன உறுத்தலும் இல்லாமல் வரிசையாக நின்று வீடியோ கவரேஜ் செய்தனர். உடல் முழுவதும் தீ பரவி அவர் வலியால் துடித்து அங்கும் இங்கும் ஓடியுள்ளார். இவர்களும் அவர் பின்னாலேயே போய் அவர் துடிதுடித்து சாவதை எப்படியாவது கவரேஜ் செய்ய வேண்டும்; அதை தங்களது பத்திரிக்கையில் போட்டு காசு பார்த்துவிட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்து நன்றாக முழுவதுமாக அவர் உடல் எரிந்த பிறகு ஃபார்மாலிட்டிக்காக தீயை அணைத்துள்ளனர்.

மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அந்த நபர் 50 சதவீதத்திற்கும் மேலான தீக்காயங்கள் ஏற்பட்டதால் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுபோன்ற மனிதநேயப் படுகொலைகள் கண்டிக்கப்பட வேண்டும்; இதுபோன்ற விபத்தில் சிக்கி துடிதுடித்துக் கொண்டு இருப்பவர்கள் தனது தாயாகவோ தனது தந்தையாகவோ, தான் பெற்றெடுத்த பிள்ளைகளாகவோ இருந்தால் ஒருவர் என்ன செய்வாரோ அப்படி மற்றவரையும் தனது உடன்பிறந்தவர்களாக மனிதர்களாகப் பார்த்து என்றைக்கு உதவ முன்வருகின்றார்களோ அன்றைக்குத்தான் மனிதநேயம் இந்த நாட்டில் தழைத்தோங்கும்.

Source : unarvu ( 10/02/17 )