சஹாபாக்களின் அழுகை

பயான் குறிப்புகள்: பொதுவான தலைப்புகள் - 2

முன்னுரை

மதிப்பிற்குரிய சகோதர, சகோதரிகளே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே!

நபி (ஸல்) அவர்கள் எந்த ஒரு இறைச் செய்தியாக இருந்தாலும் தனது தோழர்களுக்கு உடனே அதைப் பற்றி அறிவித்துவிடுவார்கள். நபித் தோழர்கள் சில நேரங்களில் உணர்ச்சிப் போங்க அழுதுள்ளார். எதற்க்காக அப்படி அழுதுள்ளார்கள்.? என்ன காரணம்.? போன்ற சம்பவங்களை இந்த உரையில் காண்போம்..

அபூபக்கரின் அழுகை

அபூபக்ருடைய வாசலைத் தவிர (மஸ்ஜிதுந் நபவிக்கு வரும்) அனைத்து வாசல்களையும் அடைத்து விடுங்கள் என்னும் நபிமொழி. இதை நபி (ஸல்) அவர்களிடமிருந்து இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக் கிறார்கள்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (இறப்பதற்கு முன் நோய்வாய்பட்டிருந்த போது) மக்களுக்கு உரை நிகழ்த்தினார்கள் அதில், ‘அல்லாஹ் ஓர் அடியாருக்கு இந்த உலகம் அல்லது தன்னிடமிருப்பது – இவ்விரண்டில் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும்படி கூறினான். அந்த அடியார் அல்லாஹ்விடம் இருப்பதையே தேர்ந்தெடுத்தார்’ என்று கூறினார்கள்.

உடனே, அபூ பக்ர்(ரலி) நபி(ஸல்) அவர்களின் இறப்பு நெருங்கிவிட்டதை உணர்ந்து) அழுதார்கள். ‘இறைத்தூதர்(ஸல்) அவர்கள், விரும்பியதைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள சுயாதிகாரம் அளிக்கப்பட்ட அடியாரைப் பற்றிக் குறிப்பிட்டதற்கு இவர் ஏன் அழுகிறார்?’ என்று நாங்கள் வியப்படைந்தோம்.

இறைத்தூதர் தாம் அந்த சுயாதிகாரம் அளிக்கப்பட்ட அடியார். (நபி (ஸல்) அவர்களின் இறப்பையே இது குறிக்கிறது என்பதை அபூபக்கர் (ரலி) அறிந்து கொண்டார். ஏனெனில்,) அபூபக்கர் (ரலி) எங்களில் மிகவும் அறிந்தவராக இருந்தார்கள். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘தன் நட்பிலும் தன் செல்வத்திலும் எனக்கு மக்களிலேயே பேருதவியாளராக இருப்பவர் அபூபக்ரேயாவார். என் இறைவனல்லாத வேறெவரையாவது நான் உற்ற நண்பராக ஆக்கிக் கொள்ள விரும்பியிருந்தால் அபூபக்ர் அவர்களையே ஆக்கிக் கொண்டிருப்பேன்.

ஆயினும், இஸ்லாத்தின் சகோதரத்துவமும் அதனால் ஏற்படும் பாச உணர்வும் (எனக்கும் அவருக்குமிடையே ஏற்கெனவே) இருக்கத் தான் செய்கின்றன. (என்னுடைய இந்தப்) பள்ளி வாசலில் எந்த வாசலும் அடைக்கப்படாமல் இருக்க வேண்டாம்; அபூ பக்ரின் வாசலைத் தவிர’ என்று கூறினார்கள்.

(அறிவிப்பவர் : அபூ ஸயீத் அல்குத்ரீ (ரலி)

புஹாரி 3654)

உமர் (ரலி) அவர்களின் அழுகை

நாங்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் இருந்து கொண்டிருந்தபோது அவர்கள், ‘நான் தூங்கிக் கொண்டிருந்தபோது (கனவில்) என்னை சொர்க்கத்தில் கண்டேன். அப்போது (அங்கிருந்த) அரண்மனை ஒன்றின் பக்கத்தில் ஒரு பெண் (உலகில் இறைவணக்கம் புரிபவளாய் இருந்து வந்ததைக் குறிக்கும் வகையில் தன் அழகையும் பொலிவையும் இன்னும் அதிகரித்துக் கொள்ளவும்) உளூச் செய்து கொண்டிருந்தாள். நான், ‘இந்த அரண்மனை யாருடையது?’ என்று (ஜிப்ரீலிடம்) கேட்டேன்.

‘உமர் இப்னு கத்தாப் அவர்களுடையது’ என்று (ஜிப்ரீல் அவர்களும் மற்றும் அங்கிருந்த வானவர்களும்) பதிலளித்தார்கள். அப்போது எனக்கு உமரின் ரோஷம் நினைவுக்கு வந்தது. உடனே, அங்கிருந்து திரும்பிச் சென்று விட்டேன்’ என்று கூறினார்கள். இதைக் கேட்ட உமர்(ரலி) அழுதார்கள். பிறகு, ‘இறைத்தூதர் அவர்களே! தங்களிடமா நான் ரோஷம் காட்டுவேன்?’ என்று கேட்டார்கள்.

(அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி)

புஹாரி 3242)

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் அழுகை

(ஒரு முறை) இப்னு அப்பாஸ் (ரலி), ‘(அன்று) வியாழக்கிழமை எந்த வியாழக்கிழமை (தெரியுமா?)’ என்று கேட்டுவிட்டு, அவர்களின் கண்ணீர் சரளைக் கல் பூமியை நனைத்து விடும் அளவிற்கு அழுதார்கள். பிறகு கூறினார்கள். வியாழக்கிழமையன்று இறைத்தூதர்(ஸல்) அவர்களின் (நோயின்) வேதனை கடுமையாயிற்று. அப்போது அவர்கள், ‘ஓர் ஏட்டை என்னிடம் கொண்டு வாருங்கள். உங்களுக்கு ஒரு மடலை நான் எழுதித் தருகிறேன். அதன் பிறகு நீங்கள் ஒருபோதும் வழி தவற மாட்டீர்கள்’ என்று கூறினார்கள். அப்போது மக்கள் (உரத்த குரலில்) சச்சரவிட்டார்கள்.

ஆனால், ஓர் இறைத் தூதரின் முன்னால் சச்சரவு செய்வது முறையல்ல. மக்கள், ‘இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கடுமையாக நோயுற்றுவிட்டார்கள்’ என்று கூறினார்கள். எனவே, நபி(ஸல்) அவர்கள், ‘என்னைவிட்டு விடுங்கள். நீங்கள் எதற்கு என்னை அழைக்கிறீர்களோ அந்த (மரண சாசனம் எழுதும்) பணியை விட நான் இப்போதுள்ள (இறை நினைவில் லயித்திருக்கும் இந்த) நிலையே சிறந்தது?’ என்று சொல்லிவிட்டார்கள். (எதையும் எழுதித் தரவில்லை).

(அறிவிப்பவர் : ஸயீத் இப்னு ஜுபைர் (ரஹ்),

புஹாரி 3053)

நரகம் தடை செய்யப்பட்டவர்

உபாதா பின் அஸ்ஸாமித் (ரலி) அவர்கள் மரணப் படுக்கையில் இருந்தபோது நான் அவர்களிடம் சென்று அழுதேன். அப்போது அவர்கள் “அமைதியாயிருங்கள். ஏன் அழுகிறீர்கள்? அல்லாஹ்வின் மீதாணையாக! சாட்சியம் கூறுமாறு எனக்கு வாய்ப்பளிக்கப் பட்டால் உங்களுக்காக நான் சாட்சியம் கூறுவேன். பரிந்துரை செய்ய எனக்கு வாய்ப்பளிக்கப்பட்டால் உங்களுக்காக நான் பரிந்துரைப்பேன்; எனக்கு சக்தி இருந்தால் நிச்சயமாக உங்களுக்கு நான் பயன் அளிப்பேன்” என்று கூறினார்கள். பிறகு பின்வருமாறு கூறினார்கள்:

அல்லாஹ்வின் மீதாணையாக! நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து செவியேற்ற உங்களுக்குப் பயனுள்ள எந்தச் செய்தியையும் உங்களிடம் தெரிவிக்காமல் இருந்ததில்லை. ஆனால், ஒரே ஒரு செய்தியைத் தவிர. அந்தச் செய்தியையும் இதோ என் உயிர் பிரியப்போகும் இந்நேரத்தில் உங்களிடம் நான் சொல்லப் போகிறேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்றும் முஹம்மத் (ஆகிய நான்) அல்லாஹ்வின் தூதர் என்றும் உறுதி கூறுகிறாரோ அவருக்கு அல்லாஹ் நரகத்தைத் தடை செய்துவிடுகிறான்.

அறிவிப்பவர் : அபூஅப்தில்லாஹ் அப்துர் ரஹ்மான் பின் உசைலா அஸ்ஸுனாபிஹீ (ரஹ்),

(முஸ்லிம்: 47)

உபை பின் கஅப் (ரலி) அவர்களின் அழுகை

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உபை பின் கஅப் (ரலி) அவர்களிடம் “உங்களுக்கு “லம் யகுனில்லதீன கஃபரூ…” (என்று தொடங்கும் 98ஆவது) அத்தியாயத்தை ஓதிக் காட்டுமாறு அல்லாஹ் என்னைப் பணித்துள்ளான்” என்று கூறினார்கள். “அல்லாஹ் என் பெயரைத் தங்களிடம் குறிப்பிட்டானா?” என்று உபை (ரலி) அவர்கள் கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “ஆம்” என்று பதிலளிக்க, (ஆனந்த மிகுதியால்) அப்போது உபை (ரலி) அவர்கள் அழுதார்கள்.

(அறிவிப்பவர் : அனஸ் (ரலி),(முஸ்லிம்: 1464)

நபிகளாரை சுற்றியிருந்தவர்களும் அழுதனர்

நபி (ஸல்) அவர்கள் தம் தாயாரின் அடக்கத்தலத்தைச் சந்தித்தபோது அழுதார்கள்; (இதைக் கண்டு) அவர்களைச் சுற்றியிருந்தவர்களும் அழுதனர். அப்போது அவர்கள், “நான் என் இறைவனிடம் என் தாயாருக்காகப் பாவமன்னிப்புக் கோர அனுமதி கேட்டேன். எனக்கு அனுமதி வழங்கப்படவில்லை. அவரது அடக்கத்தலத்தைச் சந்திப்பதற்கு அனுமதி கேட்டேன். எனக்கு அனுமதி வழங்கினான். எனவே, அடக்கத்தலங்களைச் சந்தியுங்கள். ஏனெனில், அவை மரணத்தை நினைவூட்டும்!” என்று கூறினார்கள்.

(அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)

(முஸ்லிம்: 1777)