சமூகத்தை சீரழிக்கும் சினிமாவிற்கு தமிழக அரசு ஆதரவா…?

பயான் குறிப்புகள்: தற்காலிக நிகழ்வுகள்

சமூகத்தை சீரழிக்கும் சினிமாவிற்கு தமிழக அரசு ஆதரவா?

சமூகத்தை சீரழிக்கும் சினிமாவிற்கு தமிழக அரசு ஆதரவா?திரையுலகில் நன்மைகள் இருப்பதை விட தீமைகள் அதிகமாக நிறைந்து காணப்படுகிறது என்பதை கடந்த காலங்களிலும் நிகழ் காலங்களிலும் கண்டுகொண்டிருக்கிற நிதர்சனமான உண்மை! இதை அறிய ஆரம்பித்த மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக அதிலிருந்து தங்களை விடுவித்துக் கொண்டு இருக்கிறார்கள். இப்படிப்பட்ட சாரார் ஒரு பக்கம் இருக்க, இந்த நாட்டை காப்பாற்றக்கூடிய பொறுப்பை சுமந்திருக்கிற அரசாங்கமே இந்த திரையுலகை ஆதரிக்கிற அவல நிலையையும் நாம் பார்க்கிறோம்.

கடந்த 29.6.2018 அன்று சிவாஜி கணேசனின் பிறந்த நாள் ஆண்டுதோறும் அரசு விழாவாக கொண்டாடப்படும் என, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விதி எண் 110-ன் கீழ் அறிவிப்பு வெளியிட்டிருக்கிறார். இந்த அறிவிப்பு நாம் அரசாங்கத்தின் மீது வைத்துள்ள கொஞ்ச நஞ்ச நம்பிக்கையும் சிதைத்திருக்கிறது! உண்மையிலேயே சிவாஜி கணேசனுடைய பிறந்தநாளை விழா போன்று கொண்டாடுவதற்கு அவசியம் என்ன ஏற்பட்டது? இந்த நாட்டிற்கும் நாட்டு மக்களுக்கும் அவரால் ஏற்பட்ட பயன்கள் என்ன? மக்கள் இவரை கொண்டு திருப்தி அடைந்தார்களா?

சமூகத்திற்கு என்ன மாற்றத்தை இவர் ஏற்படுத்தினார்? இவருக்காக சிலை எதற்கு? அரசாங்கத்தின் மூலமாக இரண்டு லட்சத்து 80 ஆயிரம் மதிப்புள்ள மணிமண்டபம் எதற்கு? இதிலே ஒரு பக்கம் இவரை சுதந்திரப் போராட்டத் தியாகி என்று கூட பேசத் தொடங்கியிருக்கிறார்கள் இதையெல்லாம் கேட்கும்போது நகைச்சுவையாக இருக்கிறது. இவர் இன்னும் இவரைப்போன்ற நடிகர்களால் இந்த சமூகத்திற்கு ஏற்பட்ட நன்மைகளைவிட இழப்புகளும் பாதிப்புகளுமே அதிகமாக ஏற்பட்டிருக்கிறது. இவர் இந்த நாட்டுக்கு கொடுத்த ஒன்றே ஒன்று இவருடைய நடிப்பு தான்!

ஒருவருடைய நடிப்பை வைத்து அரசாங்கம் இவ்வளவு சன்மானங்களையும் பரிசுகளையும் விருதுகளையும் வழங்குகிறதென்றால் நம் நாட்டினுடைய நிலை என்ன? நம் நாட்டு அரசாங்கம் எங்கே சென்று கொண்டிருக்கிறது? ஏழைகளுக்கு உதவி செய்தல், இல்லாத மக்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குதல், தங்குவதற்குக் கூட இல்லாத மக்கள் நம் நாட்டில் ஏராளம் இருக்கிறார்களே அவர்களுக்கு வீடு கட்டுவதற்கான ஏற்பாடுகளை செய்தல், நாட்டு வளங்களை காப்பாற்றுவதற்கான வேலைகளில் ஈடுபடுதல் இன்னும் எதை பாதுகாக்கலாம் இதை பராமரிக்கலாம்? நாட்டை சீர்படுத்துவதற்காக வேலை என்ன?

இப்படி பல யோசனைகளும் பல திட்டங்களும் இருக்க அரசாங்கம் இவற்றையெல்லாம் கண்டுகொள்ளாமல் ஒரு சினிமா கூத்தாடிக்கு இவ்வளவு பெருமை சேர்ப்பது நம் நாட்டு அரசாங்கத்திற்கு தகுமா? இது சரி தானா? உண்மையிலேயே நம் இந்திய நாட்டு அரசாங்கம் மக்களுக்கான ஆட்சி செய்கிறதென்றால் அது உண்மையாக இருந்தால் சிவாஜி கணேசன் சம்பந்தமாக வெளியிடப்பட்டிருக்கிற இந்த அறிவிப்பை மறுபரிசீலனை செய்து அதை வாபஸ் பெற வேண்டும்! நடிப்பை பொறுத்தவரை நீங்களும் நானும் நடிக்கலாம்,உங்களுக்கும் எனக்கும் ரசிகர்கள் சேரலாம்! இது எதார்த்தம் தான்!

அந்த அடிப்படையில் அவர் நடித்தார் தனக்கென்று சில ஆதாயங்களைப் பெற்றுக் கொண்டார், ரசிகர்களையும் தனக்கென்று சேர்த்துக் கொண்டார், சொத்துகளையும் சேர்த்துக் கொண்டார், இத்தனையும் சேர்த்தவர் இந்த சமூக மக்களுக்கு அவர்களுடைய நன்மை கருதி என்ன செய்தார்? இப்படிப்பட்ட இந்தக் கேள்விகளுக்கெல்லாம் அரசாங்கம் பதில் தருமா? சினிமாவால் சமூகத்திற்கு கிடைத்த பெயர் என்ன?

சினிமா பாணியில் திருட்டு

சென்னை குரோம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் கட்டுமான தொழிலதிபர் ரீனா (35). இவர் குரோம்பேட்டை ராஜேந்திர பிரசாத் சாலையில் உள்ள எச்டிஎப்சி வங்கியில் கடந்த 7 வருடங்களாக சேமிப்பு கணக்கு வைத்துள்ளார். இந்நிலையில் நேற்று மதியம் அவருடைய செல்போனுக்கு ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளது. அதில் சேமிப்பு கணக்கில் இருந்து ரூ.57,000 பணம் எடுக்கப்பட்டதாக       குறிபபிடப்பட்டுள்ளது. புதிய {தலைமுறை 29 ஜூன் 2018} சினிமா பாணியில் குளிர் பானத்தில் மயக்க மருந்து கொடுத்து மாணவியை கற்பழித்த மாணவர்கள். வீடியோ எடுத்து மிரட்டிய கொடுமை !! {1 ஜூலை 2018} சினிமா பாணியில் பல் மருத்துவரை மிரட்டிய ரவுடி!

வெளியான ஆடியோ! கார் வாங்க வந்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி: சினிமா பாணியில் மோசடி {புதிய தலைமுறை 30 ஜூன் 2018} விஜய் கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்த ரசிகர் பலி! { 23 அக்டோபர் 2014 } இங்கே நாம் குறிப்பிட்டிருக்கிற தகவல்கள் சிறிய உதாரணத்திற்காக தான்! இது மட்டுமல்ல தமிழகத்தில் இதுபோன்ற செயல்கள் ஏராளம் ஏராளம் அரங்கேறுகிறது. அதுவெல்லாம் அரசாங்கத்தினுடைய பார்வைக்கு வரவில்லையா? அல்லது அத்தனை செயல்களைப் பார்த்தும் மௌனியாக இருப்பது ஏன்?

இப்படி கொலை கொள்ளை விபச்சாரம் கற்பழிப்பு ஆட்கடத்தல் பண மோசடி அரசாங்கத்தை ஏமாற்றுவது போன்ற காரியங்களை சினிமா தான் சொல்லிக்கொடுக்கிறது… ஆகையால் சினிமாவை பொறுத்தவரையில் அதில் நன்மைகள் இருப்பதை விட மிக அதிகமான முறையில் தீமைகள் நிறைந்து காணப்படுகிறது என்பதை அரசாங்கத்திற்கு சொல்லித்தர வேண்டிய அவசியமில்லை!.

எனவே சினிமாவால் ஏற்படக்கூடிய பாதகங்களையெல்லாம் அறிந்திருக்கிற அரசாங்கம் அதை மீண்டும் மீண்டும் ஆதரிக்கிற விதமாக சிவாஜி கணேசனுடைய பிறந்த நாளை ஆண்டுதோறும் விழாவாகக் கொண்டாட வேண்டும் என்று சொல்கிற இந்த பேச்சு அத்தனை குற்றத்தையும் ஆதரிப்பதற்கு சமமாக இருக்கிறது என்பதை விளங்கி அரசாங்கம் இது போன்றவர்களோடு சங்காத்தம் வைக்காமல் இந்த சினிமாவை ஒழித்துக் கட்டுவதற்கான வேலைகளில் இறங்க வேண்டும் அதுதான் ஒரு நாட்டு அரசாங்கத்தினுடைய நேர்மைக்கு உகந்ததாக இருக்கும்!

 

Source : unarvu ( 13/7/18 )