சமாதி கட்டலாகாது என்பது கருத்து வேறுபாடில்லாத சட்டம்
சமாதி கட்டலாகாது என்பது கருத்து வேறுபாடில்லாத சட்டம்
இறந்தவர்களின் அடக்கத்தலத்தில் வழிபாட்டுத்தலம் எழுப்புவதும், சமாதிகள் பூசப்பட்டுவதும் ஆரம்பகால முஸ்லிம்களிடம் இருக்கவில்லை. ஆரம்பகால முஸ்லிம் அறிஞர்கள் அனைவரும் இதை ஏகமனதாகக் கண்டித்துள்ளனர். இது பிற்காலத்தில் உருவான தீய செயலாகும்.
இது குறித்து ஹிஜ்ரி 1200களில் வாழ்ந்த இமாம் ஷவ்கானி அவர்கள் பின்வருமாறு கூறுகிறார்கள்.
شرح الصدور بتحريم رفع القبور (ص: 8)
فنقول: اعلم أنه قد اتفق الناس، سابقهم ولاحقهم، وأولهم وآخرهم من لدن الصحابة رضوان الله عنهم إلى هذا الوقت: أن رفع القبور والبناء عليها بدعة من البدع التي ثبت النهي عنها واشتد وعيد رسول الله لفاعلها، كما يأتي بيانه، ولم يخالف في ذلك أحد من المسلمين أجمعين، لكنه وقع للإمام يحي بن حمزة مقالة تدل على أنه يرى أنه لا بأس بالقباب والمشاهد على قبور الفضلاء، ولم يقل بذلك غيره، ولا روي عن أحد سواه، ومن ذكرها من المؤلفين في كتب الفقه من الزيدية فهو جري على قوله واقتداء به. ولم نجد القول بذلك ممن عاصره، أو تقدم عصره عليه لا من أهل البيت ولا من غيرهم.
சமாதிகளை உயர்த்துவதும், அதன் மேல் கட்டடம் கட்டுவதும் நபியவர்கள் எச்சரித்து கண்டித்த பித்அத்களில் ஒன்றாகும் என்பதில் நபித்தோழர்கள் காலம் முதல் இந்த நேரம் வரை முன்னோர்களும், பின்னோர்களும் ஒருமித்த கருத்தில் உள்ளனர். இதில் முஸ்லிம்களில் ஒருவரும் மாற்றுக் கருத்து கொள்ளவில்லை. யஹ்யா பின் ஹம்ஸா என்ற அறிஞர் ஒருவர் மட்டுமே நல்லோர்களின் சமாதிகள் மீது மாடம் அமைப்பது தவறல்ல என்று கூறியுள்ளார். இவர் ஒருவரைத் தவிர மற்ற யாரும் இவ்வாறு சொல்லவில்லை. ஷியாக்களின் ஒரு பிரிவினராகிய ஜைதிய்யா கூட்டத்தினரின் நூல்களில் இவ்வாறு கூறப்பட்டாலும் அது யஹ்யா பின் ஹம்ஸா என்பவரைப் பின்பற்றிக் கூறப்பட்டதாகும். இந்த யஹ்யா பின் ஹம்ஸா காலத்தில் வாழ்ந்தவர்களிலும், இவருக்கு முன்னர் வாழ்ந்த காலத்திலும் ஒருவர் கூட சமாதிகள் கட்டப்படுவதை அனுமதிக்கவில்லை. இவருக்கு முன்னர் அஹ்லே பைத் எனும் நபியின் குடும்பத்தினரோ, மற்றவர்களோ இக்கருத்தைச் சொன்னதில்லை என்று இமாம் ஷவ்கானி கூறுகிறார்.
மேலும் யஹ்யா பின் ஹம்ஸா என்பவர் எந்த ஆதாரத்தினடிப்படையில் இவ்வாறு கூறுகிறார் என்றால் முஸ்லிம் பொதுமக்கள் நீண்ட காலமாக தர்காக்கள் கட்டுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். எனவே அது அனுமதிக்கப்பட்டது என்கிறார். முஸ்லிம்கள் நீண்ட காலமாக ஒன்றைச் செய்து வந்தால் அது எப்படி மார்க்க ஆதாரமாகும்? மேலும் நபியவர்கள் கடுமையாகக் கண்டித்துள்ள ஒன்றை முஸ்லிம் பொதுமக்கள் நீண்டகாலம் செய்தால், நபியின் கருத்தைத் தூக்கி வீசிவிட்டு பொதுமக்களின் செயலை மார்க்கமாக்கிக் கொள்ள வேண்டும் என்ற யஹ்யா பின் ஹம்ஸாவின் வாதம் அறியாமையின் உச்சகட்டமாகும். இஸ்லாத்தில் அடிப்படையைத் தகர்த்து எறிவதாகும்.
நூல் : ஷரஹுஸ்ஸுதூர்
தர்காக்கள் கட்டுவதையும், சமாதிகள் கட்டப்படுவதையும், பூசப்படுவதையும் யஹ்யா பின் ஹம்ஸா என்பவரைத் தவிர அனைத்து அறிஞர்களும் ஏகமனதாகக் கண்டிக்கிறார்கள் என்றால் அதற்கு என்ன காரணம்?
சில விஷயங்களில் அறிஞர்கள் மத்தியில் கருத்து வேறுபாடு வந்தால் ஒவ்வொரு கருத்திலும் கனிசமான அறிஞர் பெருமக்கள் இருப்பார்கள். ஆனால் தர்காக்கள் கட்டக் கூடாது என்பதில் நல்லறிஞர்கள் அனைவரும் ஒரே கருத்தில் உள்ளனர். தர்காக்கள் கட்டக் கூடாது என்பதற்கும், சமாதிகளை உயர்த்தக் கூடாது என்பதற்கும் ஏராளமான ஆதாரங்கள் இருப்பதாலும், தர்காக்கள் கட்டலாம் என்பதற்கு ஒரு ஆதாரம் கூட இல்லாததாலும் தான் இந்த விஷயத்தில் அனைவரும் ஒருமித்த கருத்தில் உள்ளனர்.