சபை ஒழுக்கம் பேணுவோம்..!

பயான் குறிப்புகள்: பொதுவான தலைப்புகள் - 3
முன்னுரை

அன்பிற்குறிய சகோதர, சகோதரிகளே! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் சாந்தியும், சமானதானமும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன்.

இஸ்லாமிய மார்க்கம் மற்ற மதங்களை விட பல வகைகளில் சிறந்து விளங்கிறது. இஸ்லாம் சிறந்து விளங்குவதற்கு காரணம், அதன் கொள்கைகளும் அதில் உள்ள நல்ல அறிவுரைகளும்தான். மனிதன் பிறந்தது முதல் அவன் இறக்கும் வரை அவன் சந்திக்கும் அனைத்து விசயங்களுக்கும் அழகிய முறையில் வழிகாட்டுகிறது. அந்த வகையில் மனிதன் சிறுநீர் கழிப்பதின் ஒழுங்குகளைக் கூட இந்த மார்க்கம் சொல்லித்தருகிறது.

عَنْ سَلْمَانَ، قَالَ
قِيلَ لَهُ: قَدْ عَلَّمَكُمْ نَبِيُّكُمْ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كُلَّ شَيْءٍ حَتَّى الْخِرَاءَةَ قَالَ: فَقَالَ: أَجَلْ «لَقَدْ نَهَانَا أَنْ نَسْتَقْبِلَ الْقِبْلَةَ لِغَائِطٍ، أَوْ بَوْلٍ، أَوْ أَنْ نَسْتَنْجِيَ بِالْيَمِينِ، أَوْ أَنْ نَسْتَنْجِيَ بِأَقَلَّ مِنْ ثَلَاثَةِ أَحْجَارٍ، أَوْ أَنْ نَسْتَنْجِيَ بِرَجِيعٍ أَوْ بِعَظْمٍ»

ஸல்மான் அல்ஃபார்சீ (ரலி) அவர்களிடம், “மல ஜலம் கழிக்கும் முறை உட்பட அனைத்தையுமே உங்கள் இறைத்தூதர் உங்களுக்குக் கற்றுத்தந்திருக்கிறார்(போலும்)” என்று (பரிகாசத்துடன்) கேட்கப்பட்டது. (இணை வைப்பாளர்கள்தாம் அவ்வாறு கேட்டனர்.) அதற்கு ஸல்மான் (ரலி) அவர்கள், “ஆம் (உண்மைதான்); மல ஜலம் கழிக்கும்போது கிப்லாவை முன்னோக்க வேண்டாமென்றும், (மல ஜலம் கழித்த பின்) வலக் கரத்தால் துப்புரவு செய்ய வேண்டாமென்றும், மூன்றை விடக் குறைவான கற்களால் துப்புரவு செய்ய வேண்டாமென்றும், கெட்டிச் சாணத்தாலோ எலும்பாலோ துப்புரவு செய்ய வேண்டாமென்றும் எங்களை (எங்கள் நபி) தடுத்தார்கள்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஸல்மான் (ரலி),
நூல் : (முஸ்லிம்: 437) 

இவ்வாறு வீட்டிற்கு செல்பவர்கள், சபைக்குச் செல்பவர்கள் எவ்வாறு நடந்து கொள்ளவேண்டும் என்பதையும் இஸ்லாம் வழிகாட்டியுள்ளது. அதன் விவரங்களைப் இந்த உரையில் பார்ப்போம்.

சபை, வீட்டிற்கு செல்லும் முன் அனுமதிபெற்று ஸலாம் கூறிய பின்னர் செல்லவேண்டும்.
يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لَا تَدْخُلُوْا بُيُوْتًا غَيْرَ بُيُوْتِكُمْ حَتّٰى تَسْتَاْنِسُوْا وَتُسَلِّمُوْا عَلٰٓى اَهْلِهَا ‌ؕ ذٰ لِكُمْ خَيْرٌ لَّـكُمْ لَعَلَّكُمْ تَذَكَّرُوْنَ‏

நம்பிக்கை கொண்டோரே! உங்கள் வீடுகள் அல்லாத வேறு வீடுகளில் அவர்களின் அனுமதி பெறாமலும் அவ்வீட்டாருக்கு ஸலாம் கூறாமலும் நுழையாதீர்கள்! இதுவே உங்களுக்குச் சிறந்தது. இதனால் பண்படுவீர்கள்.

(அல்குர்ஆன்: 24:27)

أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا سَلَّمَ سَلَّمَ ثَلاَثًا، وَإِذَا تَكَلَّمَ بِكَلِمَةٍ أَعَادَهَا ثَلاَثًا

நபி (ஸல்) அவர்கள் (சபையோருக்கு, அல்லது அயலார் வீட்டுக்குள் நுழைய அனுமதி கேட்டு) சலாம் கூறினால் மூன்று முறை சலாம் கூறுவார்கள். ஏதாவது ஒரு வார்த்தை பேசினால் (மக்கள் நன்கு விளங்கிக்கொள்வதற்காக) அதனை மூன்று முறை திரும்பச் சொல்வார்கள்.

அறிவிப்பவர் : அனஸ் (ரலி),
நூல்: (புகாரி: 6244) 

பதில் இல்லையெனில் திரும்பிவிடவேண்டும்
فَاِنْ لَّمْ تَجِدُوْا فِيْهَاۤ اَحَدًا فَلَا تَدْخُلُوْهَا حَتّٰى يُؤْذَنَ لَـكُمْ‌ۚ وَاِنْ قِيْلَ لَـكُمُ ارْجِعُوْا فَارْجِعُوْا‌ۚ هُوَ اَزْكٰى لَـكُمْ‌ؕ وَاللّٰهُ بِمَا تَعْمَلُوْنَ عَلِيْمٌ‏

அங்கே எவரையும் நீங்கள் காணாவிட்டால் உங்களுக்கு அனுமதி அளிக்கப்படும் வரை அங்கே நுழையாதீர்கள்! “திரும்பி விடுங்கள்!” என்று உங்களுக்குக் கூறப்பட்டால் திரும்பி விடுங்கள்! அதுவே உங்களுக்குப் பரிசுத்தமானது. நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் அறிந்தவன்.

(அல்குர்ஆன்: 24:28)

كُنْتُ فِي مَجْلِسٍ مِنْ مَجَالِسِ الأَنْصَارِ، إِذْ جَاءَ أَبُو مُوسَى كَأَنَّهُ مَذْعُورٌ، فَقَالَ: اسْتَأْذَنْتُ عَلَى عُمَرَ ثَلاَثًا، فَلَمْ يُؤْذَنْ لِي فَرَجَعْتُ، فَقَالَ: مَا مَنَعَكَ؟ قُلْتُ: اسْتَأْذَنْتُ ثَلاَثًا فَلَمْ يُؤْذَنْ لِي فَرَجَعْتُ، وَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا اسْتَأْذَنَ أَحَدُكُمْ ثَلاَثًا فَلَمْ يُؤْذَنْ لَهُ فَلْيَرْجِعْ» فَقَالَ: وَاللَّهِ لَتُقِيمَنَّ عَلَيْهِ بِبَيِّنَةٍ، أَمِنْكُمْ أَحَدٌ سَمِعَهُ مِنَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ فَقَالَ أُبَيُّ بْنُ كَعْبٍ: وَاللَّهِ لاَ يَقُومُ مَعَكَ إِلَّا أَصْغَرُ القَوْمِ، فَكُنْتُ أَصْغَرَ القَوْمِ فَقُمْتُ مَعَهُ، فَأَخْبَرْتُ عُمَرَ أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ ذَلِكَ

நான் அன்சாரிகளின் அவையொன்றில் அமர்ந்திருந்தேன். அப்போது பதற்றமடைந்தவரைப் போன்று அபூமூசா (ரலி) அவர்கள் வந்து, “நான் உமர் (ரலி) அவர்களிடம் (அவர்களுடைய வீட்டினுள் நுழைய) மூன்று முறை அனுமதி கேட்டேன். ஆனால், எனக்கு அனுமதியளிக்கப்படவில்லை. ஆகவே, நான் திரும்பிவிட்டேன். பின்பு உமர் (ரலி) அவர்கள் (உங்களை நான் வரச்சொல்லி இருந்தேனே) ஏன் நீங்கள் வரவில்லை” என்று (என்னிடம்) கேட்டார்கள்.

அதற்கு நான், “(தங்களிடம்) மூன்று முறை அனுமதி கேட்டேன். ஆனால் எனக்கு அனுமதியளிக்கப்படவில்லை. ஆகவே, நான் திரும்பி வந்துவிட்டேன். (ஏனெனில்,) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “உங்களில் ஒருவர் மூன்று முறை அனுமதி கேட்டும் அவருக்கு அனுமதி வழங்கப்படாவிட்டால் அவர் திரும்பிவிடட்டும்’ என்று கூறியுள்ளார்கள்” என்றேன்.

அதற்கு உமர் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் மீதாணையாக! இ(வ்வாறு நபியவர்கள் கூறினார்கள் என்ப)தற்கு நீங்கள் சாட்சியைக் கொண்டு வரவேண்டும்’ என்று சொன்னார்கள். இதை நபி (ஸல்) அவர்களிடமிருந்து செவியேற்றவர் யாரேனும் உங்களில் உள்ளாரா?” என்று கேட்டார்கள்.

அதற்கு (அங்கிருந்த) உபை பின் கஅப் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் மீதாணையாக! மக்களில் மிகச் சிறியவரே உங்களுடன் (இப்போது சாட்சியம் சொல்ல) வருவார்” என்று சொன்னார்கள். அங்கு நான்தான் மக்களில் சிறியவனாக இருந்தேன். எனவே, நான் அபூமூசா (ரலி) அவர்களுடன் சென்று “நபி (ஸல்) அவர்கள் அவ்வாறு சொன்னார்கள்” என்று உமர் (ரலி) அவர்களிடம் தெரிவித்தேன்.

அறிவிப்பவர் : அபூஸயீத் அல்குத்ரீ (ரலி),
நூல் : (புகாரி: 6245) 

சபையில் மற்றவர்களுக்கு இடமளிக்க வேண்டும்

சபையில் இருக்கும் போது வெளியிலிருந்து ஒருவர் வரும் போது அவர் அமர்வதற்கு இடம் கொடுத்து அவர் இருப்பதற்கு வழிவகுக்க வேண்டும்.

   يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا اِذَا قِيْلَ لَـكُمْ تَفَسَّحُوْا فِى الْمَجٰلِسِ فَافْسَحُوْا يَفْسَحِ اللّٰهُ لَـكُمْ‌ ۚ وَاِذَا قِيْلَ انْشُزُوْا فَانْشُزُوْا يَرْفَعِ اللّٰهُ الَّذِيْنَ اٰمَنُوْا مِنْكُمْ ۙ وَالَّذِيْنَ اُوْتُوا الْعِلْمَ دَرَجٰتٍ ‌ؕ وَاللّٰهُ بِمَا تَعْمَلُوْنَ خَبِيْرٌ‏

“நம்பிக்கை கொண்டோரே! சபைகளில் (பிறருக்கு) இடமளியுங்கள்!” என்று உங்களிடம் கூறப்பட்டால் இடமளியுங்கள்! அல்லாஹ் உங்களுக்கு இடமளிப்பான். “எழுந்து விடுங்கள்!” எனக் கூறப்பட்டால் எழுந்து விடுங்கள்! உங்களில் நம்பிக்கை கொண்டோருக்கும் கல்வி வழங்கப் பட்டோருக்கும் அல்லாஹ் பல தகுதிகளை உயர்த்துவான். நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன்.

(அல்குர்ஆன்: 58:11)

عَنِ ابْنِ عُمَرَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
«أَنَّهُ نَهَى أَنْ يُقَامَ الرَّجُلُ مِنْ مَجْلِسِهِ وَيَجْلِسَ فِيهِ آخَرُ، وَلَكِنْ تَفَسَّحُوا وَتَوَسَّعُوا» وَكَانَ ابْنُ عُمَرَ «يَكْرَهُ أَنْ يَقُومَ الرَّجُلُ مِنْ مَجْلِسِهِ ثُمَّ يَجْلِسَ مَكَانَهُ

ஒரு மனிதர், அவர் அமர்ந்திருக்கும் இடத்திலிருந்து எழுப்பிவிடப்பட்டு, அந்த இடத்தில் மற்றொருவர் அமர்வதை நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள். இதற்கு மாறாக, “நகர்ந்து உட்கார்ந்து மற்றவர்களுக்கும் இடம் கொடுங்கள்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி),
நூல் : (புகாரி: 6270) , (முஸ்லிம்: 4390) , 4391

முதலில் இருந்தவருக்கே முதலிடம்

அமர்ந்திருந்த ஒருவர் ஏதோ ஒரு வேலையின் காரணமாக வெளியில் சென்று வந்தால் அந்த இடத்தை அவருக்கே வழங்கவேண்டும்.

مَنْ قَامَ مِنْ مَجْلِسِهِ، ثُمَّ رَجَعَ إِلَيْهِ فَهُوَ أَحَقُّ بِهِ

உங்களில் ஒருவர் தாம் அமர்ந்திருந்த இடத்திலிருந்து எழுந்து சென்றுவிட்டுத் திரும்பி வந்தால், அவரே அந்த இடத்திற்கு உரியவர் ஆவார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி),
நூல் : (முஸ்லிம்: 4394) 

வலது புறத்தாரே முன்னிரிமை பெற்றவர்

ஒரு சபையில் அமர்ந்திருப்பவர்களில் எதாவது வழங்க வேண்டுமானால் முதலில் அவையின் வலது புறத்திலிருந்தே துவங்க வேண்டும். வலது புறம் உள்ளவருக்கே முதலிடம் கொடுக்க வேண்டும்.

حُلِبَتْ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ شَاةٌ دَاجِنٌ، وَهِيَ فِي دَارِ أَنَسِ بْنِ مَالِكٍ، وَشِيبَ لَبَنُهَا بِمَاءٍ مِنَ البِئْرِ الَّتِي فِي دَارِ أَنَسٍ، فَأَعْطَى رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ القَدَحَ، فَشَرِبَ مِنْهُ حَتَّى إِذَا نَزَعَ القَدَحَ مِنْ فِيهِ، وَعَلَى يَسَارِهِ أَبُو بَكْرٍ، وَعَنْ يَمِينِهِ أَعْرَابِيٌّ، فَقَالَ عُمَرُ: وَخَافَ أَنْ يُعْطِيَهُ الأَعْرَابِيَّ، أَعْطِ أَبَا بَكْرٍ يَا رَسُولَ اللَّهِ عِنْدَكَ، فَأَعْطَاهُ الأَعْرَابِيَّ الَّذِي عَلَى يَمِينِهِ، ثُمَّ قَالَ: «الأَيْمَنَ فَالأَيْمَنَ»

நபி (ஸல்) அவர்கள் என் வீட்டில் இருந்த சமயத்தில் பழகிய (நாட்டு) ஆடு ஒன்றின் பாலை அவர்களுக்காகக் கறந்து, என் வீட்டில் இருந்த கிணற்றின் தண்ணீரை அதில் கலந்து, அந்தப் பால் பாத்திரத்தை நபி (ஸல்) அவர்களுக்கு நான் கொடுத்தேன். நபி (ஸல்) அவர்கள் அதிலிருந்து (பாலை) அருந்தி விட்டு, தம் வாயிலிருந்து அந்தப் பாத்திரத்தை எடுத்தார்கள்.

(அப்போது) அவர்களின் வலப் பக்கத்தில் அபூபக்ர் (ரலி) அவர்களும் இடப் பக்கத்தில் ஒரு கிராமவாசியும் இருந்தனர். ஆகவே, உமர் (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்கள் எங்கே மீதிப் பாலை அந்த கிராமவாசிக்குக் கொடுத்து விடுவார்களோ என்று அஞ்சி, “உங்களிடம் இருப்பதை அபூபக்ருக்கு கொடுத்து விடுங்கள், அல்லாஹ்வின் தூதரே!” என்று கூறினார்கள். ஆனால், நபி (ஸல்) அவர்கள் அதைத் தமது வலப் பக்கம் இருந்த கிராமவாசிக்கே கொடுத்து விட்டு, “(முதலில்) வலப்பக்கம் இருப்பவரிடமே கொடுக்க வேண்டும். வலப்பக்கமிருப்பவரே (இடப் பக்கமிருப்பவரை விட) அதிக உரிமையுடையவர்” என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர் : அனஸ் (ரலி),
நூல் : (புகாரி: 2352) 

மூவர் இருக்கும் போது இருவர் இரகசியம் பேசக்கூடாது

ஒரு சபையில் மூன்று நபர்கள் இருக்கும் போது இரண்டு நபர்கள் மட்டும் மூன்றாம் நபருக்கு தெரியாதவாறு இரசியமாக பேசிக் கொள்ளக்கூடாது. அந்த இடத்திலிருந்து தனியாக வேறு இடத்திற்கு சென்று பேசிக் கொள்ளலாம். மக்கள் கூட்டமாக இருக்கும் போது இவ்வாறு பேசிக் கொள்வதில் தவறில்லை.

عَنْ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«إِذَا كُنْتُمْ ثَلاَثَةً، فَلاَ يَتَنَاجَى رَجُلاَنِ دُونَ الآخَرِ حَتَّى تَخْتَلِطُوا بِالنَّاسِ، أَجْلَ أَنْ يُحْزِنَهُ

நீங்கள் மூன்று பேர் இருக்கும்போது மூன்றாமவரை விட்டுவிட்டு, இரண்டுபேர் மட்டும் இரகசியம் பேச வேண்டாம்; நீங்கள் (மூவரும்) மக்களுடன் கலக்கும்வரை. (அவ்வாறு மூன்றாமவரை விட்டுவிட்டு இருவர் மட்டும் பேசுவது) அ(ந்த மூன்றாம)வரை வருத்தமடையச் செய்யும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி),
நூல்கள் : (புகாரி: 6290) , முஸ்லிம் (4400)

قَسَمَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمًا قِسْمَةً، فَقَالَ رَجُلٌ مِنَ الأَنْصَارِ: إِنَّ هَذِهِ لَقِسْمَةٌ مَا أُرِيدَ بِهَا وَجْهُ اللَّهِ، قُلْتُ: أَمَا وَاللَّهِ لَآتِيَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأَتَيْتُهُ وَهُوَ فِي مَلَإٍ فَسَارَرْتُهُ، فَغَضِبَ حَتَّى احْمَرَّ وَجْهُهُ ثُمَّ قَالَ: «رَحْمَةُ اللَّهِ عَلَى مُوسَى، أُوذِيَ بِأَكْثَرَ مِنْ هَذَا فَصَبَ

நபி (ஸல்) அவர்கள் ஒருநாள் (ஹுனைன் போரில் கிடைத்த செல்வங்களைப்) பங்கிட்டார்கள். அப்போது அன்சாரிகளில் ஒருவர், “இது அல்லாஹ்வின் திருப்தி நாடப்படாத பங்கீடாகும்” என்று (அதிருப்தியுடன்) கூறினார். நான், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (இது குறித்துத் தெரிவிக்க) நிச்சயம் நான் செல்வேன்” என்று கூறிவிட்டு (அவ்வாறே) அவர்களிடம் சென்றேன்.

அப்போது அவர்கள் மக்கள் மன்றத்தில் இருந்தார்கள். அவர்களிடம் நான் (இது பற்றி) இரகசியமாகச் சொன்னேன். (அதைக் கேட்டபோது) தம்முடைய முகம் சிவக்கும் அளவுக்கு அவர்கள் கோபமடைந்தார்கள். பிறகு, “(இறைத்தூதர்) மூசாவின் மீது, அல்லாஹ்வின் கருணை உண்டாகட்டும். இதை விட அதிகமாக அவர் புண்படுத்தப்பட்டார். இருப்பினும், பொறுமை(யுடன் சகித்துக்) கொண்டார்” என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி),
நூல் : (புகாரி: 6291) 

பெண் தனியாக இருக்கும் போது அந்நிய ஆண்கள் செல்லக்கூடாது.

பெண்கள் தனியாக இருக்கும் போது அப்பெண்ணை திருமணம் செய்வதற்கு அனுமதிக்கப்பட்ட ஆண்கள் எவரும் செல்லக்கூடாது.

عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ
«إِيَّاكُمْ وَالدُّخُولَ عَلَى النِّسَاءِ» فَقَالَ رَجُلٌ مِنَ الأَنْصَارِ: يَا رَسُولَ اللَّهِ، أَفَرَأَيْتَ الحَمْوَ؟ قَالَ: «الحَمْوُ المَوْتُ»

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “(அந்நியப்) பெண்கள் இருக்குமிடத்திற்குச் செல்ல வேண்டாம் என உங்களை நான் எச்சரிக்கிறேன்” என்று கூறினார்கள். அப்போது அன்சாரிகளில் ஒருவர், “அல்லாஹ்வின் தூதரே! கணவருடைய (சகோதரன் போன்ற) உறவினர்கள் (அவள் இருக்கும் இடத்திற்குச் செல்வது) குறித்து தாங்கள் என்ன கூறுகின்றீர்கள்?” என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், “கணவருடைய (சகோதரன் போன்ற) உறவினர்கள் மரணத்திற்கு நிகரானவர்கள்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : உக்பா பின் ஆமிர் (ரலி),
நூல்கள் : (புகாரி: 5232) , (முஸ்லிம்: 4383) 

தீய சபையை புறக்கணிக்க வேண்டும்

மார்க்கத்திற்கு முரணான காரியங்கள் நடக்கும் அவைகளுக்கும் திருக்குர்ஆனின் கட்டளைகளையும் நபிமொழியின் கட்டளைகளையும் அவமதிக்கும் வண்ணம் நடக்கும் அவைகளுக்கும், வீணான காரியங்கள் நடக்கும் அவைகளுக்கும் செல்லக்கூடாது.

وَقَدْ نَزَّلَ عَلَيْكُمْ فِى الْـكِتٰبِ اَنْ اِذَا سَمِعْتُمْ اٰيٰتِ اللّٰهِ يُكْفَرُ بِهَا وَيُسْتَهْزَاُبِهَا فَلَا تَقْعُدُوْا مَعَهُمْ حَتّٰى يَخُوْضُوْا فِىْ حَدِيْثٍ غَيْرِهٖۤ‌ ‌ ۖ  اِنَّكُمْ اِذًا مِّثْلُهُمْ‌ؕ اِنَّ اللّٰهَ جَامِعُ‌‌‌الْمُنٰفِقِيْنَ وَالْكٰفِرِيْنَ فِىْ جَهَـنَّمَ جَمِيْعَاۨ ۙ‏

அல்லாஹ்வின் வசனங்கள் மறுக்கப்பட்டு, கேலி செய்யப்படுவதை நீங்கள் செவியுற்றால் அவர்கள் வேறு பேச்சுக்களில் ஈடுபடும் வரை அவர்களுடன் அமராதீர்கள்! (அவர்களுடன் அமர்ந்தால்) அப்போது நீங்களும் அவர்களைப் போன்றவர்களே என்று இவ்வேதத்தில் உங்களுக்கு அவன் அருளியுள்ளான். நயவஞ்சகர்களையும், (தன்னை) மறுப்போர் அனைவரையும் அல்லாஹ் நரகில் ஒன்று சேர்ப்பான்.

(அல்குர்ஆன்: 4:140)

وَاِذَا رَاَيْتَ الَّذِيْنَ يَخُوْضُوْنَ فِىْۤ اٰيٰتِنَا فَاَعْرِضْ عَنْهُمْ حَتّٰى يَخُوْضُوْا فِىْ حَدِيْثٍ غَيْرِهٖ‌ ؕ وَاِمَّا يُنْسِيَنَّكَ الشَّيْطٰنُ فَلَا تَقْعُدْ بَعْدَ الذِّكْرٰى مَعَ الْقَوْمِ الظّٰلِمِيْنَ

நமது வசனங்களில் (குறை காண்பதற்காக) மூழ்கிக் கிடப்பவர்களை நீர் காணும் போது அவர்கள் வேறு செய்தியில் மூழ்கும் வரை அவர்களைப் புறக்கணிப்பீராக! ஷைத்தான் உம்மை மறக்கச் செய்தால் நினைவு வந்த பின் அநீதி இழைத்த கூட்டத்துடன் நீர் அமராதீர்!

(அல்குர்ஆன்: 6:68)

وَالَّذِيْنَ لَا يَشْهَدُوْنَ الزُّوْرَۙ وَ اِذَا مَرُّوْا بِاللَّغْوِ مَرُّوْا كِرَامًا

அவர்கள் பொய் சாட்சி கூற மாட்டார்கள். வீணானவற்றைக் கடக்கும் போது கண்ணியமாகக் கடந்து விடுவார்கள்.

(அல்குர்ஆன்: 25:72)

நல்ல சபைகளுக்குச் சொல்லவேண்டும்

திருக்குர்ஆன், நபிமொழிகளை கேட்டு அதன்படி நடக்க வேண்டும் என்ற தூய எண்ணத்துடன் நல்ல விசயங்கள் நடக்கும் இடங்களுக்குச் செல்ல வேண்டும்.

إِنَّ لِلَّهِ مَلاَئِكَةً يَطُوفُونَ فِي الطُّرُقِ يَلْتَمِسُونَ أَهْلَ الذِّكْرِ …

அல்லாஹ்விடம் சில வானவர்கள் உள்ளனர். அவர்கள் அல்லாஹ்வை நினைவு கூர்ந்து போற்றுவோரைத் தேடியவண்ணம் தெருக்களில் சுற்றி வருகின்றனர். அல்லாஹ்வை நினைவு கூர்ந்து போற்றிக்கொண்டிருக்கும் ஒரு குழுவினரை அவர்கள் கண்டால் “உங்கள் தேவையைப் பூர்த்திசெய்ய வாருங்கள்” என்று அவர்கள் (தம்மில்) ஒருவரையொருவர் அழைக்கின்றனர்.

பின்னர் அந்த வானவர்கள் அல்லாஹ்வைப் போற்றுகின்றவர்களைத் தம் இறக்கைகளால் முதல் வானம் வரை சூழ்ந்து கொள்கின்றனர். அப்போது அவ்வானவர்களிடம் அவர்களுடைய இறைவன் “என் அடியார்கள் என்ன கூறுகின்றனர்?” என்று கேட்கின்றான். அவ்வானவர்களை விட அவனே தம் அடியார்களை நன்கறிந்தவனாவான். “அவர்கள் உன்னைத் தூய்மையானவன் என்று கூறி துதிக்கின்றனர். உன்னைப் பெருமைப்படுத்திக்கொண்டும், உன்னைப் புகழ்ந்துகொண்டும், உன்னைப் போற்றிக் கொண்டும் இருக்கின்றனர்” என்று வானவர்கள் கூறுகின்றனர்.

அதற்கு இறைவன், “அவர்கள் என்னைப் பார்த்திருக்கிறார்களா?” என்று கேட்பான். அதற்கு வானவர்கள், “இல்லை; உன் மீதாணையாக! அவர்கள் உன்னைப் பார்த்ததில்லை” என்று பதிலளிப்பார்கள். அதற்கு இறைவன், “என்னைப் பார்த்திருந்தால் எப்படியிருப்பார்கள்?” என்று கேட்பான். வானவர்கள், “உன்னை அவர்கள் பார்த்திருந்தால் இன்னும் அதிகமாக உன்னை வழிபடுவார்கள்; இன்னும் கூடுதலாக உன்னைப் போற்றிப் புகழ்ந்து துதிப்பார்கள்” என்று பதிலளிப்பார்கள். அதற்கு இறைவன், “என்னிடம் அவர்கள் என்ன வேண்டுகின்றார்கள்?” என்று (தனக்குத் தெரியாதது போலக்) கேட்பான்.

வானவர்கள், “அவர்கள் உன்னிடம் சொர்க்கத்தைக் கேட்கின்றனர்” என்பார்கள். அதற்கு இறைவன், “அவர்கள் அதைப் பார்த்ததுண்டா?” என்று கேட்பான். அதற்கு வானர்கள், “இல்லை; உன் மீதாணையாக! அதிபதியே! அவர்கள் அதனைப் பார்த்ததில்லை” என்பர். அதற்கு இறைவன், “அவ்வாறாயின் அதனை அவர்கள் பார்த்திருந்தால் அவர்கள் நிலை எப்படியிருக்கும்?” என்று கேட்பான். வானவர்கள், “சொர்க்கத்தை அவர்கள் பார்த்திருந்தால் இன்னும் அதிகமாக அதன் மீது ஆசைகொண்டு, அதிக வேட்கையுடன் தீவிரமாக அதைத் தேடுவார்கள்” என்று பதிலளிப்பார்கள்.

இறைவன், “அவர்கள் எதிலிருந்து (என்னிடம்) பாதுகாப்புக் கோருகின்றனர்?” என்று வினவுவான். வானவர்கள், “நரகத்திலிருந்து (பாதுகாப்புக் கோருகின்றனர்)” என்று பதிலளிப்பர். இறைவன், “அதனை அவர்கள் பார்த்ததிருக்கிறார்களா? ” என்று கேட்பான். வானவர்கள், “இல்லை; உன் மீதாணையாக! அதனை அவர்கள் பார்த்ததில்லை” என்பர்.

அதற்கு இறைவன், “அவ்வாறாயின் அவர்கள் அதைப் பார்த்திருந்தால் அவர்கள் நிலை என்னவாக இருந்திருக்கும்?” என்று கேட்பான். வானவர்கள், “நரகத்தை அவர்கள் பார்த்திருந்தால் நிச்சயம் அதிலிருந்து கடுமையாக வெருண்டோடுபவர்களாகவும் அதனை மிகவும் அஞ்சுபவர்களாகவும் இருப்பார்கள்” என்பர். அப்போது இறைவன், “ஆகவே (வானவர்களே!) அவர்களை நான் மன்னித்து விட்டேன் என்பதற்கு உங்களை நான் சாட்சிகளாக ஆக்குகிறேன்” என்று கூறுவான்.

அந்த வானவர்களிடையே உள்ள ஒரு வானவர், “(அந்தக் குழுவினரிடையே அமர்ந்திருந்த) இன்ன மனிதன், உன்னைப் போற்றுகின்ற அவர்களில் உள்ளவன் அல்லன். அவன் ஏதோ தேவை நிமித்தமாகவே அங்கு வந்தான்” என்பார். அதற்கு இறைவன், “அவர்கள் ஒன்றாக அமர்ந்துள்ள நண்பர்கள். அவர்களுடன் வந்து அமர்ந்த ஒருவன் அவர்களளால் (பாக்கியம் பெறுவானே தவிர,) பாக்கியமற்றவனாக ஆகமாட்டான்” என்று கூறுவான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி),
நூல்கள் : (புகாரி: 6408) , முஸ்லிம் (5218)

وَمَنْ سَلَكَ طَرِيقًا يَلْتَمِسُ فِيهِ عِلْمًا، سَهَّلَ اللهُ لَهُ بِهِ طَرِيقًا إِلَى الْجَنَّةِ، وَمَا اجْتَمَعَ قَوْمٌ فِي بَيْتٍ مِنْ بُيُوتِ اللهِ، يَتْلُونَ كِتَابَ اللهِ، وَيَتَدَارَسُونَهُ بَيْنَهُمْ، إِلَّا نَزَلَتْ عَلَيْهِمِ السَّكِينَةُ، وَغَشِيَتْهُمُ الرَّحْمَةُ وَحَفَّتْهُمُ الْمَلَائِكَةُ، وَذَكَرَهُمُ اللهُ فِيمَنْ عِنْدَهُ،

யார் கல்வியைத் தேடி ஒரு பாதையில் நடக்கிறாரோ அவருக்கு அதன் மூலம் சொர்க்கத்திற்குச் செல்லும் பாதையை அல்லாஹ் எளிதாக்குகிறான். மக்கள் இறையில்லங்களில் ஒன்றில் ஒன்றுகூடி, அல்லாஹ்வின் வேதத்தை ஓதிக்கொண்டும் அதை ஒருவருக்கொருவர் படித்துக்கொடுத்துக் கொண்டும் இருந்தால், அவர்கள்மீது அமைதி இறங்குகிறது. அவர்களை இறையருள் போர்த்திக் கொள்கிறது. அவர்களை வானவர்கள் சூழ்ந்துகொள்கின்றனர். மேலும் இறைவன், அவர்களைக் குறித்துத் தம்மிடம் இருப்போரிடம் (பெருமையுடன்) நினைவுகூருகிறான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
நூல் : (முஸ்லிம்: 5231) 

சபை கலையும் போது ஓத வேண்டியவை

சபையில் இருக்கும் போது நம்மை அறியாமல் கூட நாம் தவறான காரியங்களில் ஈடுபட்டிருப்போம். எனவே அந்த காரியங்களுக்கு பரிகாரமாக நபிகளார் காட்டி தந்த துஆவை ஓதி கலைய வேண்டும்.

كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: بِأَخَرَةٍ إِذَا أَرَادَ أَنْ يَقُومَ مِنَ الْمَجْلِسِ: «سُبْحَانَكَ اللَّهُمَّ وَبِحَمْدِكَ، أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا أَنْتَ، أَسْتَغْفِرُكَ وَأَتُوبُ إِلَيْكَ» فَقَالَ رَجُلٌ: يَا رَسُولَ اللَّهِ، إِنَّكَ لَتَقُولُ قَوْلًا مَا كُنْتَ تَقُولُهُ فِيمَا مَضَى، فَقَالَ: «كَفَّارَةٌ لِمَا يَكُونُ فِي الْمَجْلِسِ»

நபி (ஸல்) அவர்கள் சபையிலிருந்து எழ எண்ணும் போது: ஸுப்ஹானகல்லாஹும்ம வ பிஹம்தி(க்)க அஷ்ஹது அல்லாஇலாஹ இல்லா அன்(த்)த அஸ்தக்ஃபிரு(க்)க வஅதூபு இலைக். (அல்லாஹ்வே…! நீ மிகத்தூய்மையானவன். உன்னைப் புகழ்கிறேன். உன்னைத் தவிர வேறு கடவுள் இல்லை என நான் உறுதியாக நம்புகிறேன். உன்னிடத்தில் மன்னிப்பைக் கோருகிறேன். உன்னிடத்தில் பிழை பொறுக்கத் தேடுகிறேன்) என்று கூறுவார்கள். இது தொடர்பாக கேட்டபோது இது சபையில் நடந்தவற்றிக்கு (தவறுகளுக்கு) பரிகாரமாக அமையும் என்று கூறினார்கள்.

நூல் : (அபூதாவூத்: 4859) (4217)

சபை தொடர்பாக நபி (ஸல்) அவர்கள் காட்டிதந்த ஒழுங்களை பேணி இம்மையிலும் மறுமையிலும் வெற்றியடைவோம்.

எனவே வறுமை என்பது நமக்கொரு வரப்பிரசாதம் என்பதை உணர்ந்து சத்திய நெறி தவறாமல் வாழக்கூடிய மக்களாக அல்லாஹ் நம் அனைவரையும் ஆக்கி அருள்புரிவானாக!