சபித்து குனூத் ஓதியபோது வசனம் இறங்கியதா?
கீழ்காணும் ஹதீஸ் ஏற்புடையது அல்ல
நபி (ஸல்) அவர்கள் ஃபஜ்ருத் தொழுகையில் கடைசி ரக்அத்தின் போது தமது தலையை உயர்த்தி, “அல்லாஹும்ம ரப்பனா லக்கல் ஹம்து” என்று சொல்லி விட்டுப் பிறகு, “இறைவா! இன்னாரையும் இன்னாரையும் உன் கருணையிலிருந்து அப்புறப்படுத்துவாயாக!” என்று பிரார்த்தித்தார்கள். உடனே மகத்துவமும் கண்ணியமும் பொருந்திய அல்லாஹ், “(முஹம்மதே!) அதிகாரத்தில் உமக்கு ஏதுமில்லை. அவன் அவர்களை மன்னிக்கலாம். அல்லது அவர்களைத் தண்டிக்கலாம். ஏனெனில் அவர்கள் அநீதி இழைத்தவர்கள்” என்ற (3:128) வசனத்தை அருளினான்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
இந்த ஹதீஸில் நபி (ஸல்) அவர்கள் குனூத் ஓதியதை அல்லாஹ் 3:128 வசனத்தை அருளி, தடை செய்து விட்டதாகக் கூறப்படுகின்றது. எனவே இதன் அடிப்படையில் எவருக்கும் எதிராகப் பிரார்த்தனை செய்து குனூத் ஓதுவது கூடாது என்று சிலர் வாதிக்கின்றனர்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குனூத் ஓதுவது பற்றித் தான் மேற்கண்ட வசனம் அருளப்பட்டது என்று ஹதீஸ் புகாரியில் இடம் பெற்றிருந்தாலும் முஸ்லிம் மற்றும் பல நூல்களில் கூறப்படும் காரணமான, “உஹதுப் போரின் போது அருளப்பட்டது’ என்பது தான் ஏற்புடையதாக உள்ளது.
மேலும் குனூத் பற்றியே இவ்வசனம் அருளப்பட்டது என்ற ஹதீஸ் இப்னு ஷிஹாப் எனும் ஸுஹ்ரி வழியாகவே அறிவிக்கப் படுகின்றது. அவர் நபித்தோழரிடம் கேட்டு அறிவிப்பது போல் புகாரியின் வாசக அமைப்பு இருந்தாலும், முஸ்லிமில் இடம் பெற்றுள்ள இதே ஹதீஸின் வாசக அமைப்பு ஸுஹ்ரி அவர்கள் நபித்தோழர்கள் வழியாக இல்லாமல் சுயமாக அறிவிக்கின்றார் என்று தெளிவுபடுத்துகின்றது. “நபி (ஸல்) அவர்கள் மேற்கண்ட கொலையாளிகளைச் சபித்து குனூத் ஓதினார்கள். மேற்கண்ட வசனம் அருளப்பட்டவுடன் குனூத்தை விட்டு விட்டார்கள் என்று நமக்குத் தகவல் கிடைத்துள்ளது” என்று ஸுஹ்ரி கூறியதாக(முஸ்லிம்: 1082)வது ஹதீஸ் கூறுகின்றது. இவ்வசனம் குனூத் குறித்துத் தான் அருளப்பட்டது என்ற விபரத்திற்கு நபித்தோழர்கள் வழியான சான்று ஏதும் ஸுஹ்ரியிடம் இல்லை என்பதை இதிலிருந்து அறியலாம்.
இதனால் தான் “ஸுஹ்ரியின் கூற்றுடன் ஹதீஸ் கலந்து விட்டது” என்று ஹாஃபிழ் இப்னு ஹஜர் அவர்கள் தமது ஃபத்ஹுல் பாரியில் கூறுகின்றார்கள்.
எனவே நபி (ஸல்) அவர்கள் குனூத் ஓதியதாகக் கூறப்படும் செய்தி மட்டுமே ஏற்றுக் கொள்ளக் கூடியதாக அமைந்துள்ளது.
அதைத் தடை செய்து வசனம் இறங்கியதாகக் கூறப்படும் செய்திகள் ஏற்றுக் கொள்ளத் தக்கவையாக இல்லை.