முஃமின்களை கொலை செய்யாதீர்கள்!
முன்னுரை
அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே அனைத்துப் புகழும்.
நம்மில் சிலருக்கு கோபம் ஏற்படும் சில நேரங்களில் உடனே அவ்வாறு கோபம் ஏற்படுவதற்கு காரணமாணவர்களைச் சபித்து விடுகின்றனர். உதாரணமாக தமக்கு உபகாரம் செய்யாத பிள்ளைகளைப் பெற்றோர்களும், துரோகம் இழைத்தவர்களை பிறரும் சபிப்பதைப் காணமுடிகிறது. இன்னும் சிலர் சிறு சிறு விஷயங்களுக்கெல்லாம் மண்ணை வாறியிறைத்து சாபமிடும் பழக்கமுடையவராயிருப்பதைக் காணலாம்.
உண்மையில் சபித்தல் என்பது கொலை செய்வதற்கு சமம்!
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இஸ்லாம் அல்லாத மார்க்கத்தின் மீது சத்தியம் செய்கிறவர், தாம் சொன்னதைப் போன்றே ஆகிவிடுகிறார். தனக்கு உடைமையில்லாத ஒன்றில் நேர்ச்சை செய்வது(ம், அந்த நேர்ச்சையை நிறைவேற்றுவதும்) எந்த மனிதனுக்கும் தகாது. எதன் மூலம் தம்மைத்தாமே தற்கொலை செய்துகொள்ளும் ஒருவர் அதன் மூலம் மறுமை நாளில் வேதனை செய்யப்படுவார்.
ஓர் இறைநம்பிக்கையாளரை ஒருவர் சபிப்பது அவரைக் கொலை செய்வது போன்றதாகும். இறைநம்பிக்கையாளர் ஒருவரை இறைமறுப்பாளர் என்று அவதூறு சொல்வதும் அவரைக் கொலை செய்வது போன்றதேயாகும்.
இதை அந்த மரத்தினடியில் (பைஅத்துர் ரிள்வான்) உறுதிமொழி அளித்தவர்களில் ஒருவரான ஸாபித் இப்னு ளஹ்ஹாக் (ரலி) அறிவித்தார்.
நூல் : (புகாரி: 6047)
எனவே, இத்தகைய பண்புகள் உண்மையான முஃமின்களுக்கு உரிய பண்பு இல்லை. முஃமின்களைச் சபிப்பது குறித்து நபி (ஸல்) அவர்கள் மிகக் கடுமையாக எச்சரித்துள்ளார்கள்.
முஃமின்களின் பண்பு
‘ஒரு முஃமின் திட்டுபவனாகவோ, சபிப்பவனாகவோ, கெட்ட செயல் புரிபவனாகவோ, கெட்ட வார்த்தை பேசுபவனாகவோ இருக்க மாட்டான்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறி : இப்னு மஸ்வூத் (ரலி),
நூல் : (திர்மிதீ: 1977)
மேலும் நபி (ஸல்) அவர்கள், “அதிகம் சபிப்பது உண்மையானவர்களுக்கு அழகல்ல”என்று கூறியிருக்கிறார்கள்.
அறி : அபூஹுரைரா (ரலி),
நூல் : (முஸ்லிம்: 5062)
சபித்தவனையே சூழும் சாபம்
‘ஒரு அடியான் எதாவது ஒரு பொருளை சபித்தால் அந்த சாபம் வானத்தை நோக்கி உயரும். அப்போது வானத்தின் வாசல்கள் அடைக்கப்படும். பிறகு அந்த சாபம் பூமியை நோக்கி இறங்கும். அப்போது பூமியின் வாசல்களும் அடைக்கப்படும்.
பிறகு அது வலது இடது புறங்களின் பக்கம் திரும்பும். அங்கும் வழி கிடைக்காததால் யார் மீது சபிக்கப்பட்டதோ அவரின்பக்கம் திரும்பிச் செல்லும். அவர் அதற்கு தகுதியற்றவராக இருந்தால் சொன்னவரிடமே திரும்பிச் சென்றுவிடும்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறி : அபுத்தர்தா (ரலி),
நூல் : (அபூதாவூத்: 4905)
எனவே இனிவரும் காலங்களில், சபித்தல் எனும் இந்த பாவத்திலிருந்து விடுபட்டு இறைவசனம் மற்றும் ஹதீஸ்களின் படி நடந்து, மரணிக்கிற நல்லடியார்களாக நம் அனைவரையும் அல்லாஹ் ஆக்கி அருள்புரிவானாக!