சந்திப்பின் ஒழுங்குகள்

பயான் குறிப்புகள்: குடும்பவியல்

சந்திப்பின் ஒழுங்குகள்

ஒரு பெண்ணை ஐந்தாறு நபர்கள் கொண்ட, அதாவது ஒன்றுக்கு மேற்பட்ட பல ஆண்கள் சேர்ந்து ஏதேனும் ஒரு விஷயமாகப் பார்க்கச் சென்றால் அதனை மார்க்கம் அனுமதிக்கத் தான் செய்கிறது. இந்நிலையில் அந்தப் பெண் அனைவரையும் விரட்டியடிக்கத் தேவையில்லை. இதுபோன்று ஒரு ஆணை, பல பெண்கள் சேர்ந்து ஏதேனும் மார்க்கம் அனுமதித்த காரியத்தை நிறைவேற்றுவதற்குச் சந்தித்தால் தவறில்லை.

இதற்கு ஆதாரமாக நபியவர்கள் காலத்தில் நடந்த அபூபக்கர் (ரலி) அவர்களின் சம்பவத்தைக் ஆதாரமாகக் கொள்ளலாம்.

அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

பனூ ஹாஷிம் குலத்தைச் சேர்ந்த (ஆண்கள்) சிலர் அஸ்மா பின்த் உமைஸ் (ரலி) (அவர்கள் தனிமையில் இருந்தபோது) அவர்களிடம் வந்தனர். அப்போது அபூபக்ர் அஸ்ஸித்தீக் (ரலி) அவர்கள் வீட்டினுள் நுழைந்தார்கள். அஸ்மா பின்த் உமைஸ் (ரலி) அவர்கள் அப்போது அபூபக்ர் (ரலி) அவர்களின் மனைவியாக இருந்தார்கள். (தனிமையிலிருந்த தம் துணைவியாரிடம்) அவர்களைக் கண்ட அபூபக்ர் (ரலி) அவர்கள் வெறுப்படைந்தார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அது குறித்துத் தெரிவித்துவிட்டு, “(ஆயினும்) நான் (என் துணைவி விஷயத்தில்) நல்லதையே கருதுகிறேன்” என்று அபூபக்ர் கூறினார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அவரை அல்லாஹ் நிரபராதியாக்கிவிட்டான்” என்று கூறி விட்டு, பிறகு சொற்பொழிவு மேடை (மிம்பர்) மீது நின்று, “இன்றைய தினத்திற்குப்பின் எந்த ஆணும் தனிமையில் இருக்கும் எந்தப் பெண்ணிடமும் செல்ல வேண்டாம்; அவனுடன் மற்ற ஓர் ஆணோ, இரு ஆண்களோ இருந்தால் தவிர” என்று கூறினார்கள்.

(முஸ்லிம்: 4385)

அதாவது ஒரு பெண்ணுடன் ஒரு ஆண் தனித்திருக்கத் தான் தடை விதிக்கிறது மார்க்கம். ஆனால் ஒரு பெண்ணுடன் தனித்திருக்கிற அந்த ஆணுடன் இன்னும் ஒரு ஆணோ அல்லது இரண்டு ஆண்களோ சேர்ந்து மொத்தம் இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட ஆண்கள் இருந்தால் ஒரு அந்நியப் பெண்ணை சந்திக்கலாம் என்று நபியவர்கள் மிம்பரில் ஏறி நின்று மக்களுக்குச் சட்டம் சொல்கிறார்கள்.

எத்தனையோ காரியங்களில் தனித்திருக்கிற ஆணை, பல பெண்கள் சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். உதாரணத்திற்கு, பள்ளியிலும் கல்லூரிகளிலும் பாடம் நடத்துகிற ஆண்கள் ஆசிரியர்களாக இருப்பார்கள். படிப்பவர்கள் பெண்களாக இருப்பார்கள். இதை விடச் சிறந்தது பெண்ணே பெண்ணுக்கு பாடம் நடத்துவது தான். இருப்பினும் மார்க்கத்தில் ஹராம் என்கிற அளவுக்குச் சொல்ல முடியாது. மார்க்கத்தின் பிற வரம்புகளை மீறாமல் இதில் ஒரு அனுமதியை மார்க்கமே கொடுக்கத் தான் செய்கிறது.

அதேபோன்று நன்மையான காரியங்களான ஜமாஅத்தின் மூலமோ இயக்கத்தின் மூலமோ அல்லது இஸ்லாமிய அரசு இருந்தால் அதன் மூலமோ அனாதைப் பெண்களுக்கு, ஏழைப் பெண்களுக்கு தர்மத்தைச் செலுத்தும் போது இதுபோன்ற சூழல் ஏற்படலாம்.

ஃபித்ராவை வசூலிக்கின்ற போதும் ஃபித்ராவை விநியோகிக்கின்ற போதும்கூட இந்தச் சூழ்நிலைகள் ஏற்படலாம். இப்படி எத்தனையோ விஷயங்களில் தனித்திருக்கிற ஒரு பெண்ணை குழுவாக இருக்கிற ஆண்களோ அல்லது தனித்திருக்கிற ஆணை குழுவாக இருக்கிற பெண்களோ சந்திப்பதற்கு வாய்ப்பு இருக்கலாம். இதற்கு எதிர்மறையாகவும் ஏற்படலாம். குழுவாக இருப்பவர்களை தனித்திருக்கிற எதிர் பாலினர் சந்திக்கின்ற வாய்ப்புக்களும் மார்க்கத்தில் இருக்கத்தான் செய்கிறது.

பெருநாளில் நபியவர்கள் பெண்கள் பகுதிக்குச் சென்று உரை நிகழ்த்திய சம்பவத்தை இதற்கு ஆதாரமாகச் சொல்லலாம்.

ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் பெருநாள் தொழுகையில் கலந்து கொண்டுள்ளேன். அப்போது அவர்கள் உரை நிகழ்த்துவதற்கு முன்பே தொழுகை நடத்தினார்கள்; பாங்கோ இகாமத்தோ இல்லை. பிறகு பிலால் (ரலி) அவர்கள்மீது சாய்ந்துகொண்டு, இறையச்சத்தைக் கடைப்பிடிக்குமாறும் இறைவனுக்குக் கீழ்ப்படிந்து நடக்குமாறும் வலியுறுத்தி மக்களுக்கு அறிவுரையும் நினைவூட்டலும் வழங்கினார்கள்.

பிறகு அங்கிருந்து புறப்பட்டு, பெண்கள் பகுதிக்குச் சென்று அவர்களுக்கு (மார்க்க நெறிமுறைகளையும் மறுமை நாளையும்) நினைவூட்டி அறிவுரை பகர்ந்தார்கள். மேலும், பெண்களை நோக்கி, “தர்மம் செய்யுங்கள். உங்களில் அதிகம் பேர் நரகத்தின் விறகு ஆவீர்கள்” என்று கூறினார்கள்.

அப்போது பெண்கள் நடுவிலிருந்து கன்னங்கள் கருத்த ஒரு பெண்மணி எழுந்து “அது ஏன், அல்லாஹ்வின் தூதரே?” என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “நீங்கள் அதிகமாகக் குறை கூறுகின்றீர்கள்; (நன்றி மறந்து) கணவனை நிராகரிக்கிறீர்கள்” என்று கூறினார்கள். அப்போது அப்பெண்கள் தம் காதணிகள், மோதிரங்கள் உள்ளிட்ட அணிகலன்களை (கழற்றி) பிலால் (ரலி)  அவர்களின் ஆடையில் போட்டனர்.

(முஸ்லிம்: 1607)

வெள்ளிக்கிழமை தொழுதுவிட்டு ஒரு மூதாட்டியின் வீட்டிற்குக் குழுவாகச் சென்ற சஹாபாக்களின் சம்பவத்தைப் பார்ப்போம்.

சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(மதீனாவில்) எங்களிடையே பெண்மணி ஒருவர் இருந்தார். அவர் தமது தோட்டத்தின் வாயக்கால் வரப்பில் தண்டுக் கீரைச் செடியைப் பயிர் செய்வார். வெள்ளிக்கிழமை வந்துவிட்டால் அவர் அந்தக் கீரையின் தண்டுகளைப் பிடுங்கி வந்து ஒரு பாத்திரத்தில் போடுவார். அதில் ஒரு கையளவு வாற்கோதுமையைப் போட்டுக் கடைவார்.

அந்தக் கீரைத் தண்டுதான் (எங்கள்) உணவில் மாமிசம் போன்று அமையும். நாங்கள் ஜுமுஆத்தொழுகை தொழுதுவிட்டுத் திரும்பி வந்து அவருக்கு சலாம் சொல்வோம். அந்த உணவை அவர் எங்களுக்குப் பரிமாறுவார். அதை நாங்கள் ருசித்துச் சாப்பிடுவோம். அவருடைய அந்த உணவுக்காக நாங்கள் வெள்ளிக் கிழமையை (அது எப்போது வருமென) எதிர்பார்த்துக் கொண்டிருப்போம்.

(புகாரி: 938)

பெண்களுக்கும் தனியாகப் பயான் நடத்தப்பட வேண்டும் என்று நபியவர்களிடம் நபித்தோழியர்கள் கோரிக்கை வைத்ததால் அவர்களது கோரிக்கையை ஏற்று, தனியாக அந்தப் பெண்கள் சபைக்குச் சென்று பயான் செய்துள்ளார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஒரு பெண்மணி வந்து, “அல்லாஹ்வின் தூதரே! (பெண்கள்) உங்கள் உரைகளை(க் கேட்க முடியாதவாறு) ஆண்களே (அந்த வாய்ப்புகளைத்) தட்டிச் சென்று விடுகின்றனர். ஆகவே, எங்களுக்கென ஒரு நாளை நீங்களே நிர்ணயம் செய்யுங்கள். அந்நாளில் நாங்கள் தங்களிடம் வருகிறோம். அல்லாஹ் தங்களுக்குக் கற்றுக் கொடுத்தவற்றிலிருந்து எங்களுக்கு நீங்கள் கற்றுக் கொடுங்கள்” என்று கேட்டார்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இன்ன இன்ன நாளில் நீங்கள் ஒன்று கூடுங்கள்” என்று சொன்னார்கள். அவ்வாறே அவர்கள் ஒன்றுகூடினர். அந்த நாட்களில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பெண்களிடம் சென்று தமக்கு அல்லாஹ் கற்றுக் கொடுத்தவற்றிலிருந்து அப்பெண்களுக்குக் கற்றுக்கொடுத்தார்கள்.

அறிவிப்பவர்: அபூசயீத் அல்குத்ரீ (ரலி)

(முஸ்லிம்: 5130)

இதுபோன்ற சூழ்நிலைகளில் ஒரு நபர் மட்டும் தனியாகச் செல்லாமல் கூட்டாக, குழுவாகச் சென்றோம் என்றால் மார்க்கம் அதை அனுமதிக்கத் தான் செய்கிறது. எனவே பெண்கள் இருக்கின்ற வீடுகளுக்கு நாம் செல்வதாக இருப்பின் நம்முடன் இன்னொருவரையோ அல்லது இருவரையோ சேர்த்துக் கொண்டு செல்ல வேண்டும் என்று மார்க்கம் நமக்கு உணர்த்துகிறது.

இவ்வாறு இரண்டு மூன்று நபர்கள் செல்கிற போது வேறுவிதமான தவறான எண்ணங்கள் தோன்றாது. அப்படி அதையும் மீறி தவறான எண்ணங்கள் தோன்றினாலும் அதைச் செயல்படுத்துவதற்கு வாய்ப்பு அமையாது என்பது தான் உண்மை.

அதே நேரத்தில் தவறு செய்ய வேண்டும் என்றே திட்டம் செல்பவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். அதை வைத்து ஒரு கருத்தை நிலைநாட்டக் கூடாது. பத்து பேர் கொண்ட குழுவும் தவறு செய்ய வேண்டும் என்று திட்டமிட்டுச் சென்றால் ஒரு பெண் தனிமையில் இருக்க வேண்டும் என்கிற அவசியமில்லை. தவறு தான் செய்ய வேண்டும் என்றாகி விட்டால் குழுவையும் சீரழித்துவிடுவார்கள். அதை வைத்துக் கொண்டு மார்க்கம் அனுமதித்த ஒரு காரியத்தைத் தடை செய்ய முடியாது.

எனவே பொதுவான விஷயத்தைத் தான் பார்க்க வேண்டும். தனிமையில் ஒருவர் தவறு செய்வதற்கு வாய்ப்புக்கள் அதிகம். தவறு செய்தாலும் அதை மறைப்பதற்கும் வாய்ப்புக்கள் அதிகமிருக்கும். ஆனால் அதுவே இருவரோ, இருவருக்கு அதிகமானவரோ இருந்தால் தனிமையில் இருப்பதை விடவும் பாதுகாப்பும் கற்பொழுக்கத்தின் மீது சுமத்தப்படுகிற களங்கமும் நம்மீது ஏற்படாமலிருக்க உகந்தது என்று கூறலாம்.

எனவே ஒரு பெண்ணை ஒரு ஆண் சந்திப்பதாக இருந்தாலும் அல்லது ஒரு ஆணை ஒரு பெண் சந்திப்பதாக இருந்தாலும் மஹ்ரமான துணை இருக்க வேண்டும். அல்லது கணவர், மனைவி இருக்க வேண்டும். அல்லது இரண்டு ஆண்களோ இரண்டுக்கு மேற்பட்ட ஆண்களோ இருக்க வேண்டும்.

இரண்டு பெண்கள் இருக்கிற வீட்டிற்கு ஒரு ஆண் செல்வது தவறில்லை. ஆண்களுக்குரிய இந்தச் செய்தி அப்படியே பெண்களுக்கும் பொருந்தும். ஏனெனில் நபியவர்கள் ருபைஃ என்ற பெண்மனியைப் பார்க்கச் சென்ற போது அங்கு நிறைய பெண்கள் இருந்தார்கள். அப்படியிருக்கும் நிலையில் தான் அந்தப் பெண்மணியை நபியவர்கள் சந்தித்தார்கள்.

ருபய்யிஉ பின்த் முஅவ்வித் (ரலி) அவர்கள் கூறியதாவது:

எனக்குத் திருமணம் நடந்த அன்று காலை நபி (ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள். – (இந்த ஹதீஸைக் கேட்டுக் கொண்டிருந்த காலித் பின் தக்வான் -ரஹ்- அவர்களிடம்) “எனக்கருகில் நீங்கள் அமர்ந்திருப்பது போல நபி (ஸல்) அவர்கள் எனது விரிப்பின் மீது அமர்ந்தார்கள்” (என்று ருபய்யிஉ கூறினார்கள்)- அங்கு சில (முஸ்லிம்) சிறுமிகள் (சலங்கையில்லா) கஞ்சிராக்களை அடித்துக் கொண்டு பத்ருப் போரில் கொல்லப்பட்ட தங்கள் முன்னோர்களைப் புகழ்ந்து (இரங்கல்) பாடிக் கொண்டிருந்தனர்.

அவர்களில் ஒரு சிறுமி, “எங்களிடையே ஓர் இறைத்தூதர் இருக்கிறார். அவர் நாளை நடக்கவிருப்பதையும் அறிவார்” என்று கூறினாள். உடனே நபி (ஸல்) அவர்கள், “இப்படிச் சொல்லாதே. (இதை விடுத்து) முன்பு நீ சொல்-க் கொண்டிருந்ததை (வேண்டுமானால்) சொல்” என்று கூறினார்கள்.

(புகாரி: 4001, 5147)

நிறைய பெண்கள் முன்னிலையில் ஒரு பெண்ணுக்கு அருகில் நின்று பேசுவது தவறு கிடையாது என்பதை இந்தச் செய்தியிலிருந்து புரியலாம். அந்தப் பெண்ணின் தந்தைமார்கள் பத்ருப் போரில் இறந்துவிட்டதால், குடும்பத்தில் மூத்த பெரியவர்கள் இல்லை என்பதால் நபியவர்கள் தந்தை அந்தஸ்தில் தான் ஒரு பொறுப்பாளராக இருந்ததால் இந்தத் திருமணத்திற்கு முக்கியத்துவம் கொடுத்துப் போனார்கள்.

சிறுமிகளும் பெண்களும் கூட்டமாக நின்று கொண்டிருக்கையில் அந்தப் பெண் அமர்ந்திருந்த விரிப்பில் நபியவர்களும் அமர்ந்து அவர்களுக்குத் தேவையான செய்திகளைப் பேசுகிறார்கள். இதைத் தனிமை என்று யாரும் வாதிட்டுவிட முடியாது.ஏனெனில் கல்யாணத்தில் சிறுமிகள் நிற்க, குடும்பத்தினர் வருகைக்கு முன்னால் பலர் இருந்து பார்த்துக் கொண்டிருக்கும் போது தான் நபியவர்கள் அந்தப் பெண்ணிடம் பேசினார்கள். இதுபோன்ற தனிமைக்கு மார்க்கத்தில் அனுமதியிருக்கிறது என்பதை இந்தச் சம்பவம் நமக்குணர்த்துகிறது.

இன்னும் சொல்லப் போனால் இது தனிமையே கிடையாது. இன்னொருவர் கண் பார்வையில் படும் விதமாக நாம் நடந்து கொண்டாலேயே அது தனிமையாகாது. எனவே இவை தவிர ஆணும் பெண்ணும் மட்டும் தனிமையில் இருக்கும் சூழ்நிலைகளை அறவே தவிர்த்துக் கொள்ள வேண்டும் என இஸ்லாம் நமக்கு அறிவுறுத்துகிறது.